உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பாண்டிய மன்னர்


“அமைச்சர்களே, அறிஞர்களே, புலவர் பெருமக்களே, குடிமக்களே, குலமக்களே, தவப்பெருஞ் செல்வர்களே, தாய்மார்களே, அன்பின் செல்வத்தில் தலைநின்ற உங்களது உதவியால் இப்பொழுது என் முன்னோர் காலம் முதல் அநேகஆயிர ஆண்டுகளாக வழி வழி வந்த இவ்வரசுரிமையை ஏற்றுக்கொண்டு, என்னால் இயல்வன செய்ய முன்வந்துளேன். அறிவாற்றல்களாற் சிறியேனாகிய யான், அறிவரும் அமைச்சரும் ஆன்றமைந்தவருமாகிய உங்கள் அபிப்பிராயங்களுக் கிணங்க நடந்து, பண்டைய தமிழ் நாடாகிய இந்நாட்டுக்கு நலம் புரிய முயல்வேனாக, முடி சூட்டுத் திருநாளாகிய இன்று நம் நாட்டுக் குடி மக்களுக்கு நான் செய்தற்குரிய சிறந்த நன்மைகள் சில உள: நமது தாய் மொழியாகிய தமிழ் மொழியைப் பயில்விக்கும் கணக்காயர்க்கும், அவர்தம் ஆதரவில் நடைபெற்றுவரும் கலாசாலைகளுக்கும் உதவுமாறு நம் நாட்டுப் பொன்னாணயத்திலே ஆறாயிரம் நன்கொடை தருகின்றேன்; வைத்தியசாலைகள் வளம்படும் பொருட்டுப் பதினாயிரம் பொன் தருகிறேன்; புலவர் பலர் கூடி அரும்பொருள்களை ஆராய்ந்து நூல்களும் உரைகளும் செய்து, உலக உபகாரம் இயற்றலாம்படி அமைந்துள்ள சங்கத்துக்குப் பதினாயிரம் பொன் வருமான முள்ள இரண்டு கிராமங்களை அளிக்கின்றேன்; நம் நாட்டில் வாழ்வாரெல்லாம், தமர் பிறர் என்ற வேறுபாடின்றி, ஒற்றுமையாய் வாழவேண்டு மென்பதே எனது நோக்கமாம். அயல் நாட்டவர் சிலர் வியாபாரத்தின் பொருட்டு இந்நாட்டுக்கு வருகின்றனர். கடல் கடந்து பிற நாடுகளிலும் நம்மவர் வியாபாரம் செய்யப்போய், அங்குள்ள சிறிய தீபாந்தரங்களில் நிலைத்து வாழ்வது முண்டென அறிகின்றேன். 'அயல் நாடுகளுக்கு நாம் போய்ப் புகுந்து அந்நாட்டவர்க்கு உரிய உரிமைகளை நமக்கும் உரிமையாக்கிக்கொண்டு வாழவேண்டும் என்ற எண்ணம் நம் நாட்டு மக்களுக்கு உண்டாவது போல, நம் நாட்-