உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பாண்டிய மன்னர்

நல்லோர் போற்றும் நலத்தகை பொருந்திக்
கேள்வியிற் கிளர்ந்து வேள்விகள் இயற்றி
விண்ணவர் மண்ணவர் மிகுமகிழ் வெய்த
அரிய குணங்கட் காகர மாகி
நுதல்விழி நாட்டத் திறையோன் அருளால்
வாழி வாழி மலர்மகள்
ஊழிக் காலம் உரனொடு பொருந்தவே.'

புலவரும் அமைச்சரும் அறிவுடையார் பிறரும் இவ்வாழ்த்தின் பொருணயத்தை ஆய்ந்து மகிழ்ந்தனர். அறிவிற் சிறந்த அரசர் தலைவனும் இப்பாடல் பாடிய புலவர்க்கு நூறு பொன் பரிசில் அளித்துப் பொன்னாடை யொன்று போர்த்து, வேறு பல சிறப்புக்களும் செய்தான்; பிறகு அங்குக் கூடிய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற வண்ணம் சிறப்புக்கள் செய்தான். அதன் பின்னர் ஐம்பெருங்குழுவினர் புடை வர, அரசன் அரண்மனையிற் புகுந்து, அவர்களோடு சிறிது நேரம் மந்திராலோசனை செய்தான். மகுடாபிஷேகத்தின் பொருட்டுக் கூடிய மாந்தர் அனைவரும், மங்களப் பொருள்கள் பல பெற்றுக்கொண்டு, தத்தம் மனைக்குத் திரும்பினர்.

மந்திராலோசனை சபையில், நாட்டினர் நன்மைக் குரிய சில அவசியமான விஷயங்கள் பேசித் தீர்மானிக்கப்பட்டன. அரசன் குடிகள் நன்மையின்பொருட்டுச் செய்யக் கருதிய செயல்களெல்லாம் ஆலோசித்து அங்கீகரிக்கப்பட்டன. தாம் அன்று அங்குச் செய்தற்குரிய வினை நிறைவேறியதறிந்த அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர், மகாசனங்கள்,