உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

129

விளைத்ததே! இஃது என்னோ யாதுவிளையும் கொல்லோ! அறியோம்," என்று கூறி யேங்கினர்; “தெய்வம் ஏறினாள் போல இக்கற்பின் செல்வி அழுது ஏங்கி அரற்றுகின்றனளே! இஃது என்கொல்!" என்று கூறி வருந்தி ஆற்ற முயன்றனர். அரசனைத் தூற்றும் மாந்தர் மிகுந்தனர். அவ்வூரில் ஓர் இடத்திலே பிறர் காட்டத் தன் கணவன் பிணத்தைக் கண்டாள் அக்கற்பரசி. மாலைக் காலமும் வந்தது, காலையிலே வெட்டுண்டு அங்கு விழுந்து கிடந்த தன் கணவனைக் கண்ணகி மாலையிலே கண்டாள்.

பிணத்தின்மேற் புரண்டு விழுந்து புலம்பி, “தலைவரே, என் பெருந்துயர் கண்டும் இவள் துயருறுகின்றாள் என்று எண்ணுகிலீர். சந்தனாதிகளால் ஆடும் தன்மை பெற்ற நும்முடைய பொன் போன்ற திருமேனி இவ்வண்ணம் பொடியாடிக் கிடக்கத் தகுவதோ? மன்னனால் இயன்ற இக்கொலைத் தொழில் இவ்வாறு முடிந்ததென்றறியாத எனக்கு முற்பிறப்பிலே யான் செய்த தீவினைப்பயன் தான் இது என்று யாரேனும் உரையாரோ? துணையொருவரு மின்றி, மருண்ட மாலை நேரத்திலே துன்புறும் தமியேன் முன் உமது திருமார்பு தரையில் மூழ்கிக் கிடத்தலாமா? உலகமெல்லாம் பழி தூற்றப் பாண்டியன் கொடுங்கோன்மையால் யான் அடைந்த இத்துயரம் என் வினைப்பயனே யென்று எவரும் உரையாரோ? கண்ணீர் சோர்ந்து வருந்தும் கடிய தீவினையுடையேன் முன் புண்ணினின்று பொழியும் இரத்தவெள்ளத்திலே படிந்து இவ்வாறு நீர் பொடியாடிக் கிடத்தலாமா? உலகத்தார் பழி தூற்ற இவ்வண்ணம் மன்னன் செய்த தவறு இன்னவர் தீவினைப் பயன்

9