உள்ளடக்கத்துக்குச் செல்

கண் திறக்குமா/கண்ணன் வந்தான்!

விக்கிமூலம் இலிருந்து

17. கண்ணன் வந்தான்!

நானும் பார்த்திருக்கிறேன்; நீங்களும் பார்த்திருக்கலாம் - சில சமயம் நமக்குப் படித்தவர்களைவிட, பாமரர்கள் பகுத்தறிவுள்ளவர்களாகத் தோன்றுகிறார்கள். தீர்க்க தரிசனத்துக்குப் பெரிய பெரிய ராஜதந்திரிகள்கூட அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் போலிருக்கிறது. கண்ணனைப் பற்றி அவனுடைய தாயாரும் தந்தையும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றிற்று.

ஆம், பெற்றெடுத்த பிள்ளை அவர்களுக்குப் பிடிக்கவில்லை; அவனை மாலையிட முன்வந்த பெண்ணைத் தான் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை; பிடித்திராவிட்டால்தான் ஆச்சரியமாயிருந்திருக்கும் ஏனெனில் வெளி அழகோடு உள்ளழகும் சித்ராவிடம் பொருந்தியிருந்தது. ஆசைக் கனவுகள் பல கண்டு, ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்க வேண்டிய அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவள் போதுமான அளவுக்குப் பிரபஞ்ச ஞானம் பெற்றிருந்தாள். முக்கியமாகக் காதலைப் பற்றி அவள் கொண்டிருந்த அபிப்பிராயம் இலக்கியத்துக்கு ஒத்ததாயில்லாமல் இருந்தாலும் வாழ்க்கைக்கு ஒத்ததாயிருந்தது. அனுபவமில்லாமலே அந்த விஷயத்தில் தன் அறிவைக் கொண்டு அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தது எனக்கு வியப்பாயிருந்தாலும் விரும்பத்தக்கதாயிருந்தது. அதைப் பற்றி அவளைப் பார்க்க வந்திருந்தவர்களிடம் அன்று நான் வேடிக்கையாகத் தெரிவித்தேன். அவர்களும் அதை வெகுவாக அனுபவித்து அவளைப் பெரிதும் பாராட்டினார்கள்.

கல்யாண வியாபாரத்துக்கு வேண்டிய பேரமெல்லாம் ஒருவாறு பேசி முடிந்தபிறகு, "பெண்ணை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அத்துடன், நீங்கள் சொல்வதிலிருந்து அவள் புத்திசாலியாகவும் இருப்பாள் என்றுத் தெரிகிறது. ஆனால் பிள்ளையாண்டான் அவளுக்கு ஏற்றபடி இருக்கவேண்டுமே என்று தான் எங்களுக்குக் கவலையாயிருக்கிறது! என்றாள் கண்ணனின் தாயார்.

"ஆரம்பித்து விட்டாயா?" என்றார் அவள் கணவர்.

"அதனாலென்ன, சொல்ல வேண்டியதை நாம் சொல்லிவிடுவோம். அதற்குப் பின் அவன்பாடு; அவள் பாடு!" என்றாள் அவள்.

"ஏன், பிள்ளையாண்டானுக்கு என்ன?" என்று கேட்டார் பாரிஸ்டர் பரந்தாமன்.

"அவன் என்னமோ நல்லவன்தான்; கொஞ்ச நாட்களாக அவன் நடந்து கொள்ளும் முறைதான் எங்களுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை!"

"ஏன், ஏதாவது தவறான வழியில்..."

"ஆமாம்; அது என்னவோ எங்களுக்குத் தவறான வழியாகத்தான் படுகிறது. ஆனால் அவனோ அதுதான் நல்ல வழி என்று சாதிக்கிறான்!"

"அது என்ன, அப்படிப்பட்ட வழி?"

"அதுதான் - காங்கிரஸ் காந்தின்னு கொஞ்ச நாட்களாக எங்கே பார்த்தாலும் அடிபட்டுக் கொண்டிருக்கிறதே, அந்த வழிதான்!"

"இதுதானா, சரியாய்ப்போச்சு; நாங்கள் என்னமோ ஏதோ என்று பயந்தே போய்விட்டோம் - ஏன், அது நல்ல வழிதானே?" என்றேன் நான்.

"நல்ல வழியுமாச்சு, கெட்ட வழியுமாச்சு! யாராவது தான் சாக மருந்து தின்பார்களா? - காங்கிரஸ் கீங்கிரஸ் எல்லாம் ஏதோ காரியார்த்தமாகத்தான் நடக்கிறது என்று தோன்றுகிறது எனக்கு!"

"காரியமில்லாமல் எதுதான் நடக்கும்? வெள்ளைக் காரனிடமிருந்து நம்முடைய தேசம் விடுதலையடைய வேண்டாமா? அந்தக் காரியத்துக்காகத்தான் காங்கிரஸ் நடக்கிறது!"

"விடுதலை அடையாவிட்டால் என்னவாம்?"

"அந்நியனுக்கு நாம் என்றும் அடிமையாயிருப்போம்!"

"விடுதலையடைந்துவிட்டால் நம் ஊரானுக்கே நாம் அடிமையாயிருப்போம்; அவ்வளவுதானே விஷயம்?"

"ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியுமா? இப்பொழுது நம்முடைய பணத்தையெல்லாம் வெள்ளைக்காரன் கொள்ளையடித்துக் கொண்டு போகிறான்; இதனால் எத்தனையோ கஷ்ட நஷ்டத்துக்கு நாம் உள்ளாகிறோம். தேசம் விடுதலையடைந்துவிட்டால்..."

"நம் ஊரானே நம்முடைய பணத்தைக் கொள்ளையடிப்பான்! ரொம்ப அழகுதான், போங்கள். விடுதலையாவது கிடுதலையாவது! ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அரசாங்கம் அரசாங்கந்தானே? - அதற்கு ஓரளவு கட்டுப்பட்டு நாலு பேரைப்போல நாமும் நன்றாக வாழ வழி என்ன என்று பார்ப்பதை விட்டுவிட்டுத் தறுதலையாகத் திரிவதில் என்ன அர்த்தமிருக்கிறது?"

அவ்வளவுதான்: "பேஷ்! சொல்லுங்கள்; அதையே இன்னொரு முறை அடித்துச் சொல்லுங்கள்!" என்று கைகொட்டி ஆரவாரித்தார் பரந்தாமனார்.

அவருக்கு மட்டுமா? இந்த விஷயத்தில் சித்ராவுக்கும் பரம சந்தோஷம்; பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் 'களுக்'கென்று சிரித்துவிட்டாள்!

சாந்தினியோ என்னை அனுதாபத்துடன் பார்த்தாள். அந்த அம்மாளோ அத்துடன் விடுவதாயில்லை; "இன்னொரு முறை என்ன, எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன். வீடு வாசலைப் பார்த்துக் கொள்ளாமல், பயிர் பச்சையைக் கவனித்துக் கொள்ளாமல் கட்சி என்ன வேண்டிக் கிடக்கிறது, கட்சி? ஒருவன் தலைவனாயிருக்க ஓராயிரம் பேரையாவது தொண்டர்களாக்குவது தானே கட்சி?" என்று மேலே ஏதேதோ சொல்ல ஆரம்பித்து விட்டாள் அவள்.

"நன்றாய்ச் சொன்னீர்கள், நன்றாய்ச் சொன்னீர்கள்! இவர்கள் தான் சமதர்மத்தைப் பற்றிப் பேசுகிறார்களம்மா. இவர்கள் தான் சமதர்மத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்!" என்றார் பரந்தாமனார்.

"அதுமட்டுமா? கொல்லைக்குத் தொல்லை கொடுக்கிறது என்பதற்காகக் குரங்கினத்தையே அழித்துவிட வேண்டும் என்று சொல்பவன் அஹிம்ஸையைப் பற்றிப் பேசுகிறான்; 'எல்லார்க்கும் நல்லவன்' என்று பெயரெடுப்பதற்காக எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்பவன் சத்தியத்தைப் பற்றிப் பேசுகிறான் - இதெல்லாம் வேடிக்கையாயில்லையா?"

"வேடிக்கைதான், வேடிக்கைதான்; வேண்டுமானால் அதைப் பற்றி அழகாகப் புத்தகம் எழுதி, அழகாக அச்சிட்டு, அழகாக வியாபாரம் செய்யலாமே?" "அதையும் சொல்லிப் பார்த்தேன்; கேட்டால் தானே? 'சோறு, சோறு' என்று அடித்துக் கொள்பவர்களிடம் போய், 'தேசம், தேசம்' என்கிறான்; 'வேலை, வேலை, என்று அடித்துக் கொள்பவர்களிடம் போய் 'விடுதலை விடுதலை' என்கிறான்; 'கட்டத் துணி இல்லையே? என்று கதறுபவர்களிடம் போய், 'கதரை வாங்கிக் கட்ட வில்லையே!' என்கிறான்; 'வாங்கக் காசில்லையே!' என்று வாடுபவர்களிடம் போய், 'வருகிறது சுதந்திரம்!' என்கிறான். இப்படிப்பட்டவனைக் கட்டிக்கொண்டு அவள் என்னதான் செய்யப்போகிறாளோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை!" என்றாள் அவள்.

"அந்தக் கவலை இனிமேல் உங்களுக்கு வேண்டாம்; சித்ரா அவனைப் பார்த்துக் கொள்ளவேண்டிய விதத்தில் பார்த்துக்கொள்வாள்!" என்றார் பரந்தாமனார்.

"அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்; அவள் தான் அவனுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி நல்ல வழிக்குத் திருப்ப வேண்டும்!"

"ஆஹா! சொல்வாள்; சொல்வதைக் கேட்காவிட்டால் கன்னத்தில் அறைந்துகூடச் சொல்வாள்!"

"அறையட்டும்; நன்றாய் அறையட்டும். எப்படி யாவது அவர்கள் இருவரும் நன்றாயிருந்தால் சரி!" என்று சொல்லிவிட்டு அவர்கள் எழுந்தார்கள்.

நானும் பாரிஸ்டர் பரந்தாமனும் வாசல் வரை சென்று அவர்களை வழி அனுப்பிவிட்டு வந்தோம்.

"சித்ராவின் விஷயம் முடிந்தது; உம்முடைய விஷயம் என்ன?" என்றார் பரந்தாமனார்.

"எந்த விஷயத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள்?" என்றேன் நான்.

"கல்யாண விஷயத்தைப் பற்றித்தான்!"

"முதலில் சுதந்திரம்; பிறகுதான் கல்யாணம்!" என்றேன் நான்.

"அதுவும் சரிதான்; வெள்ளைக்காரனுக்கு அடிமையாயிருந்து கொண்டு, சாந்தினிக்கும் அடிமையாயிருக்க முடியுமா?" என்றார் அவர் சிரித்துக்கொண்டே.



சித்ராவின் கல்யாணம் நடந்து முடிந்ததும் நான் பத்திரிகாசிரியனானேன். அப்படியென்றால் அதன் கடைசிப் பக்கத்தில் என்னுடைய பெயரை அச்சிட்டுக் கொள்வதோடு நான் நின்றுவிடவில்லை; தீனபந்து என்றால் நான், நான் என்றால் தீனபந்து என்று சொல்லும் அளவுக்கு அதற்காக அல்லும் பகலும் அனவரதமும் உழைத்தேன். வாசகர்களின் ஆரம்ப உற்சாகத்தை நம்பி, என் அறிவை நான் அவர்களிடம் அடகு வைத்தேன்.

ஒரு நாட்டின் வளத்துக்கு வாணிபம் அவசியம்; அந்த நாடு தன்னைக் காத்துக்கொள்வதற்கு ராணுவமும் அவசியம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களிலும் விசேஷமாகக் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த அரசாங்கம் எந்தக் கட்சியின் நிர்வாகத்தில் இருந்தாலும் சரி; மேற்கூறிய இரண்டிலும் அவர்கள் கவனம் செலுத்தக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். அவ்வாறு கவனம் செலுத்தும் போது அவர்கள் வியாபார விஷயத்தில் சத்தியமாகச் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாது; அப்படியே ராணுவத்தின் விஷயத்திலும் அஹிம்சையைக் கடைப் பிடிக்க முடியாது. 'முடியும்' என்றால் அது அரசியல் பித்தலாட்டமாகும்; பொதுமக்களை ஏமாற்றுவதாகும்; கேட்பவர்கள் நகைக்கக் கூடியதாகும்.

இந்த உண்மையை இன்று நான் உணர்கிறேன். ஆனால் அன்றோ? அவ்வாறு உணர்ந்து சொன்ன திரு.வ.உ.சி., வாஞ்சி போன்ற ஓரிரு தீர்க்கதரிசிகளை நான் வெறுத்தேன்; சத்தியத்திலும் அஹிம்ஸையிலும் பெரிதும் நம்பிக்கை வைத்தேன். வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் அவற்றைக் கடைப்பிடிக்கலாம் என்று மனமாரப் பொய் சொன்னேன்; அவற்றையே என்னுடைய பத்திரிகையின் தர்மமாகவும் கொண்டேன்.

அதற்குப் பின் கேட்க வேண்டுமா? 'எடு, ஜாமீன்!' என்றால், 'இதோ ஜாமீன்!' என்று எடுத்துக் கொடுத்தேன்; 'பிடி வாரண்ட்!' என்றால், 'எங்கே போலீஸ் லாரி?' என்று  விழுந்தடித்துக் கொண்டுவந்து கேட்டேன்; 'லாரி இல்லை, நடந்துதான் வரவேண்டும்!' என்றால், 'இதோ வந்து விட்டேன்!' என்று சொல்லிக்கொண்டே எழுந்து நடையைக் கட்டினேன்.

இந்த நிலையில் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த என்னால் முடியவில்லை. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையும் என்னால் சமாளிக்க முடிய வில்லை.

விளம்பர வருவாயின் மூலம் ஒருவாறு சமாளிக்கலா மென்றால் அதற்கும் என் மனச்சாட்சி விரோதமாயிருந்தது. ஒரு பக்கம், 'அந்நிய நாட்டுப் பொருட்களைப் பகிஷ்கரியுங்கள்!' என்று பிரசாரம் செய்து கொண்டு, இன்னொரு பக்கம், 'அந்நிய நாட்டுப் பொருட்களை அவசியம் வாங்குங்கள்!' என்று பிரசாரம் செய்யும் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பிரசுரித்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அது மட்டுமல்ல; இன்னொரு சங்கடமும் அதில் இருந்தது. அதாவது, சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் சங்கடந்தான் அது!

உதாரணமாக, வனஸ்பதி உடம்புக்குக் கெடுதல் என்பது மகாத்மாவின் அபிப்பிராயம்; ஆனால் தயாரிப்பாளர்களோ அதற்கு விரோதமாக விளம்பரம் செய்கிறார்கள். பணத்துக்காக அதைப் பக்கம் பக்கமாக வெளியிடும் பத்திரிகை எப்படிக் காங்கிரஸ் பத்திரிகையாகும்? எப்படிக் காந்தி மகானைப் பின்பற்றும் பத்திரிகையாகும்?

எனவே, நான் கைவிடுவதற்கு முன்னால் தீனபந்து என்னைக் கைவிட்டு விட்டது. இருந்த வீட்டையும் கடன் கொடுத்தவன் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு விட்டான். வாடகைக்கு ஏதாவது ஓர் இடத்தைப் பிடிக்கவும் அந்தச் சமயம் எனக்கு வழியில்லை. இதனால் என்னுடைய நண்பர்களுக்கு நான் அடிக்கடி தொந்தரவு கொடுக்க நேர்ந்தது; அவர்களுடைய தயவில் கிடைத்தபோது உண்பதும், நினைத்தபோது உறங்குவதுமாகக் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்தது.

பாரிஸ்டர் பரந்தாமனிடம் சென்று உதவி கோரவும் என்னுடைய சுயமரியாதை இடங்கொடுக்கவில்லை; சித்ராவிடமும் சாந்தினியிடமும் என்னுடைய நிலையைப் பற்றி சொல்லிக்கொள்ளவே நான் விரும்பவில்லை. 'இந்தக்' கஷ்டமெல்லாம் தேசம் விடுதலையடையும் வரைதானே? என்று சகித்துக் கொண்டு, அடுத்தடுத்து நடந்து வந்த ஜவுளிக்கடை மறியல், கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றிலெல்லாம் நான் கலந்து கொண்டேன். ஆயினும் எதிர்பார்த்ததற்கு விரோதமாக அரசாங்கத்தார் என் மண்டையை உடைத்து ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்பினார்களே தவிர, சிறைக்கு அனுப்பவில்லை!

இதனால் என்னைப் போன்றவர்களுடைய உணர்ச்சி குன்றிவிடுமென்று எதிர்பார்த்த அதிகார வர்க்கம் கடைசியில் ஏமாற்றமடைந்தது. அதற்குப் பதிலாகத் காந்திஜியின் சரித்திரப் பிரசித்தி பெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தின்போது அது உச்ச நிலையை அடைந்தது. வடக்கே காந்திஜியின் தண்டியாத்திரை; தெற்கே ராஜாஜியின் வேதாரண்ய யாத்திரை, இந்த இரண்டு போராட்டங்களிலும் மக்களின் உணர்ச்சி கட்டுக்கடங்காமற் போய் விடவே, பிரிட்டிஷ் சர்க்காரின் அடக்கு முறை தலை விரித்தாடியது.

இந்த நிலையில் ஒரு நாள் சென்னை தினசரியொன்றில் நான் குற்றாலலிங்கத்தின் பெயரைக் கண்டேன். ஆச்சரியம் தாங்கவில்லை எனக்கு; விஷயம் என்னவென்று பார்த்தேன். வேதாரண்யத்திற்குச் செல்லும் தொண்டர்களுக்கு வேண்டிய வசதிகளை அவர் செய்து கொடுப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தது. ஒரு வேளை அவருடைய பெயரைக் கொண்ட வேறு யாராவது அவ்வாறு செய்கிறார்களோ என்று எண்ணி, அவருக்குத் தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்துப் பார்த்தேன். சந்தேகமில்லை; சாட்சாத் அவரேதான்!

ஆஹா! பணத்தின் சக்தியைத்தான் என்னவென்பேன்? எவ்வளவு சீக்கிரத்தில் அது சிலரைத் தேச பக்தர்களாக மாற்றிவிடுகிறது! எவ்வளவு சீக்கிரத்தில் அது சிலரைத் தியாக சீலர்களாக, புண்ணிய புருஷர்களாகப் போற்ற வைத்து விடுகிறது!

அந்தப் பணத்துக்குப் பதிலாக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய எத்தனை தேசபக்தர்களை அது இருந்த இடம் தெரியாமல் மறைத்து விடுகிறது! ஊர் ஊராகத் தெருத் தெருவாக அலைய விடுகிறது!

தன்னலமற்ற அந்தத் தியாகிகளில் எத்தனை பேர் தலைவர்களின் புகழுரைக்கும் பொது மக்களின் பாராட்டுரைக்கும் இதுவரை பாத்திரமாகியிருக்கிறார்கள்?

திருப்பூர் குமரன் எங்கே; தீரன் பகத்சிங் எங்கே, எங்கே? வாஞ்சி எங்கே, வ.உ.சி. எங்கே, எங்கே?

இவ்வாறு எண்ணி நான் வியந்துகொண்டிருந்த போது, “சிக்கவில்லை, என் கையில் அவன் இன்னும் சிக்கவில்லை!” என்று கருவிக்கொண்டே வந்தான் பாலு.

அவனை நான் அனுதாபத்துடன் பார்த்தேன். அதற்குள், “சிக்கட்டும், அவன் மட்டும் என் கையில் சிக்கட்டும்!” என்று மறுபடியும் கருவிக்கொண்டே அவன் வெளியே சென்றான்.

அவனைத் தடுத்து நிறுத்தி, “எங்கே போகிறாய்?” என்றேன் நான்.

“அவனைத் தேடிக்கொண்டுதான் செல்வம், அவனைத் தேடிக்கொண்டுதான்!” என்றான் அவன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை; “அவன் எதற்கு இங்கே வரப் போகிறான்?” என்று குழம்பினேன்.

"அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது? பாரிஸ்டர் பரந்தாமனும் அவனும்தான் இப்போது பரம நண்பர்களாயிற்றே?" என்றான் அவன்.

"நண்பர்களா!"

"ஆம், தங்களைக் காத்துக்கொள்வதற்காக அவர்கள் இருவரும் இப்போது தேசத்தைக் காக்கத் துணிந்து விட்டார்கள் செல்வம், தேசத்தைக் காக்கத் துணிந்து விட்டார்கள்!" என்று அவன் இரைந்தான்.

"அப்படியானால் இப்போது அவன் இங்கே வந்திருக்கிறானா, என்ன?"

"அப்படித்தான் சொல்கிறார்கள்!"

அதற்குமேல் அவனை நான் ஒன்றும் கேட்கவில்லை; "கலக்கட்டும், சமுத்திரத்தில் சாக்கடைகள் கலக்கட்டும்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

அவன் போய்விட்டான். அதற்குப் பின் நான் அவனைச் சந்திக்கவில்லை; அன்றே சென்னைக் கடற்கரையில் நான் கைது செய்யப்பட்டு விட்டதுதான் அதற்குக் காரணம்!