உள்ளடக்கத்துக்குச் செல்

கண் திறக்குமா/தியாக சிகரம்!

விக்கிமூலம் இலிருந்து

18. தியாக சிகரம்!

ழக்கம்போல் விசாரணை முடிந்து வேலூர் சிறை வாசலில் நான் போலீஸ் லாரியை விட்டுக் கீழே இறங்கியதும், "வாரும் ஐயா, வாரும். தீனபந்துவின் 'மூடுவிழா'வுக்குப் பிறகு உம்மை நான் பார்க்கவேயில்லையே!" என்று என்னை வரவேற்றார் பாரிஸ்டர் பரந்தாமன்.

"சரியாய்ப் போச்சு; இங்கேயும் வந்துவிட்டீர்களா?" என்றேன் நான்.

அதைப் பொருட்படுத்தாமல், "என்ன இருந்தாலும் நீர் இப்படிச் செய்திருக்கக்கூடாது!" என்றார் அவர்.

"என்ன செய்திருக்கக் கூடாது என்கிறீர்கள்?"

"வேறொன்றுமில்லை; எங்கள் வீட்டுக்கு வராமல் இருந்திருக்கக் கூடாது என்கிறேன்!"

"என்னால் உங்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்பட்டுவிடக் கூடாதல்லவா? அதனால்தான் வரவில்லை!"

"சிரமம் என்ன சிரமம்! நீர் ஒரு விதத்தில் எனக்குச் சிரமம் கொடுத்தால், இன்னொரு விதத்தில் நான் உமக்குச் சிரமம் கொடுத்துவிட்டுப் போகிறேன். ஆனால் ஒன்று; ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் சிரமம் உபயோகமுள்ளதாயிருக்கவேண்டும் - அவ்வளவுதான் லிஷயம்!"

"அதாவது, முடிந்தவரை ஒருவரையொருவர் உபயோகித்துக் கொண்டு காரியவாதிகளாக வாழவேண்டும். அப்படித்தானே?"

"பேஷ்! இவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய 'உலக மகா தத்துவ'த்தை நீர் எப்படியோ புரிந்து கொண்டுவிட்டீரே?"

"இத்தனை நாட்களாக உங்களுடன் பழகும் நான் இதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாதா, என்ன?"

"ரொம்ப சந்தோஷம், இம்மாதிரி விஷயங்களில் உண்மையை ஒப்புக் கொள்பவர்கள் உலகிலேயே ஒரு சிலர்தான் இருக்கமுடியும். அவர்களில் ஒருவனே நான் என்பதை நீர் இப்பொழுதாவது உணர்ந்தீரே, அதுவே போதும் எனக்கு!"

"நான் மட்டும் உணர்ந்தால் போதுமா? மக்கள் உணர வேண்டாமா? அவர்களிடமும் நீங்கள் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு விடலாமே?"

"என்னைப் பொறுத்தவரை நான் அதற்குத் தயாராய்த் தான் இருக்கிறேன். ஆனால் உண்மையைச் சொன்னால் அவர்கள் என்னை நம்பமாட்டார்களே. பரம்பரை பரம்பரையாகப் பொய்யையே நம்பி அவர்களுக்குப் பழக்கமாய்ப் போய்விட்டதே!"

"அதற்காக நாமும் பொய்யே பேசவேண்டுமா, என்ன ?"

"அரசியல் உலகத்தில் பொய் பேசாமல் யாரும் வெற்றியடைந்து விடமுடியாது. உதாரணத்துக்கு இந்தச் சிறை வாழ்க்கையைத்தான் எடுத்துக் கொள்வோமே! இங்குள்ள கஷ்ட நஷ்டங்களைப் பற்றி வெளியே பல தேசபக்தர்கள் கண்ணீரும் கம்பலையுமாகக் கரடி விடுவதை நான் காதாரக் கேட்டிருக்கிறேன். இங்கே வந்து பார்த்தால் அப்படியொன்றும் இது மோசமானதாகத் தெரியவில்லை. முதன்முதலாகச் சிறைக்கு வந்திருக்கும் எனக்கே இப்படித் தோன்றுகிறதென்றால், உம்மைப் போல் பலமுறை வந்தவர்களுக்கு இதில் ஒன்றும் கஷ்டமே தோன்றாது. ஏதோ ஒரு காலத்தில் சிறையில் கஷ்ட நஷ்டங்கள் இருந்திருக்கலாம்; இப்பொழுது அப்படியொன்றையும் காணோம். இன்னும் சொல்லப்போனால் ஏழைபங்காளர்கள் என்று சொல்லிக்கொண்டு இங்கே வருபவர்கள், இந்த அற்ப சொற்பமான கஷ்டத்தைக்கூட அனுபவிக்கவில்லையென்றால் அதில் அர்த்தமேயில்லை. ஆயினும் அவர்கள் ஏன் அப்படிக் கரடி விடுகிறார்கள்? பொது மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஐயா, பெறுவதற்காக!" "சரி, அந்தக் கரடியை நான் விடப்போவதில்லை; அப்புறம்?"

"சாட்சாத் குற்றாலலிங்கந்தான் எனக்குத் துணை!"

"கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டேன்!"

"ஆஹா! அவரும் நானும் சந்தித்த அந்த நாள் இருக்கிறதே - அற்புதம், அபாரம்!"

"அப்படி என்ன நடந்தது, அங்கே?"

"அதை ஏன் கேட்கிறீர், 'பி.ஏ., பி.எல்.' குவாலிபிகேஷன் இருந்தால் போதுமா? 'சிறை சென்ற தியாகி' என்ற குவாலிபிகேஷன் வேண்டாமா, ஊரை ஏமாற்ற? அதற்காகச் சென்னைக் கடற்கரைக்கு நானும் உம்மைப்போல் உப்புக் காய்ச்சச் சென்றேன். அங்கே துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது - அவ்வளவுதான்; அதைத் திரும்பிப்பார்க்காமல் எடுத்தேன் ஓட்டம், வேதாரண்யத்துக்கு! அங்கே எங்களுக்கெல்லாம் சாப்பாட்டு வசதி செய்து கொடுத்த புண்ணியாத்மா யார் என்று பார்த்தால், சாட்சாத் குற்றாலலிங்கம்!"

"ஆமாம். நான்கூடப் பத்திரிகையில் பார்த்தேன்; அதற்கென்ன?"

"அதற்கென்னவா! சாப்பாட்டு வசதி செய்து கொடுத்ததோடு அவர் நின்றிருந்தால் ஒன்றுமில்லைதான்! ஆனால் அந்த மனுஷனுக்கோ எனக்கு வேண்டியிருந்தது போல் 'சிறை சென்ற தியாகி' என்ற குவாலிபிகேஷன் வேண்டியிருந்தது. அதற்காக வேதாரண்யம் செல்லவோ அவர் விரும்பவில்லை. இத்தனைக்கும் சென்னைக் கடற்கரையில் கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்தங்கூட அங்கே கேட்கவில்லைதான்! இருந்தாலும் உயிராசை விடுகிறதா? மனுஷன் தவியாய்த் தவித்தார். அதற்குமேல் வேதாராண்யத் துக்குச் செல்லாமல் அவரைத் தியாகியாக்குவது எப்படி என்று நான் தீவிரமாக யோசித்தேன்; ஒன்றும் தோன்ற தோன்றவில்லை. நல்ல வேளையாக அப்போது எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான் - அவனும் அரசியல் வாதிதான். ஏதோ ஒரு சதி வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக அவன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான்; போலீஸார் அவனைத் 'தேடு, தேடு' என்று தேடிக்கொண்டிருந்தார்கள். இதனால் தலைமறைவாகத் திரிந்துகொண்டிருந்த அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதுகூடக் குற்றம் என்று சர்க்கார் அப்போது அறிவித்திருந்தார்கள். இந்த லட்சணத்தில் அவன் எத்தனை நாட்கள் தலைமறைவாயிருக்க முடியும்? அலுத்துப் போய்ப் போலீஸாரிடம் சரணடைந்து விடப் போவதாக அவன் என்னிடம் சொன்னான். கிடைத்த சந்தர்ப்பத்தை நான் நழுவ விடுவேனா? அவனைக் கொண்டு போய்க் குற்றாலலிங்கம் வீட்டில் சேர்த்து விட்டுப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே அவர்கள் வந்தார்கள்; அவனைப் பிடித்துக்கொண்டு சென்றதோடு, குற்றாலலிங்கத்தையும் பிடித்துக்கொண்டு சென்றார்கள். அவருடைய கனவு நனவாயிற்று; என்னுடைய கவலையும் தீர்ந்தது. அன்று மாலை வெளியான பத்திரிகைகளிலெல்லாம் அப்பழுக்கற்ற அந்தத் தியாகியின் பெயர் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாயிற்று!"

"அட பாவிகளா!"

"கேளப்பா, புண்ணியவானே! குற்றாலலிங்கத்தை எனக்குப் பிடித்திருந்ததற்கு இது மட்டும் காரணமல்ல; இன்னொரு காரணமும் இருந்தது!"

"அது என்ன காரணம்?"

"அவருடைய செல்வக் குமாரனான சிவகுமாரன், யாருடைய கற்பையோ அழிக்கப்போய்ச் செத்தொழிந்தான் என்றல்லவா பத்திரிகைகளில் போட்டிருந்தது? ஆனால் குற்றாலலிங்கம் தாம் பேசும் கூட்டங்களிலெல்லாம் என்ன சொல்கிறார், தெரியுமா? தம்முடைய அருமை மகன் தேசத்துக்காக அதைச் செய்தான், இதைச் செய்தான் மாகச் சொல்லிவிட்டு, கடைசியில் ஒரு பேதைப் பெண்ணின் கற்பைக் காக்கப் போய்த் தன் உயிரையே அவன் தியாகம் செய்துவிட்டான் என்கிறார்!"

"ஊரார் சிரிக்கவில்லை?"

"அவர்கள் சிரித்தார்களோ என்னவோ, ஒரே ஒருத்தி மட்டும் சிரித்ததை நான் பார்த்தேன்!"

"அந்த மட்டும் ஒரு புத்திசாலிப் பெண்ணாவது அந்த ஊரில் இருந்தாளே?"

"அவள் வேறு யாருமில்லை; தன் கற்பைக் காக்க வந்த சிவகுமாரனை அநியாயமாகக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் சென்று வந்தவள்தான்!"

"அப்படிச் சொல்லுங்கள்; உண்மை அவளைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லையாக்கும்?"

"அதனால்தானே அவளுக்குப் பைத்தியம் பிடித்தது"

"என்ன, அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?"

"ஆமாம், உண்மை தெரிந்தால் பைத்தியம் பிடிக்காமல் வேறு என்ன பிடிக்குமாம்?"

"ஐயோ , பாவம்!"

"பாவமாவது! சிறையிலிருந்து வெளியே வந்ததும் செய்யாமங்கலத்தில் தம்முடைய அருமைக் குமாரனுக்காக, அல்லும் பகலும் 'தேசம், தேசம்' என்று அடித்துக் கொண்டிருந்தவனுக்காக அவர் ஞாபகச் சின்னம் வேறு நிறுவப் போகிறாராம்! அவரல்லவா அரசியல் ஞானி! அவரல்லவா தியாக சிகரம்!" என்று விஷமத்தனமான புன்னகையுடன் அடுக்கிக் கொண்டே போனார் அவர்.

நான் பொறுமையிழந்து, "போதும், நிறுத்துங்கள்!" என்று கத்தினேன்; 'கலகல'வென்று நகைத்துக்கொண்டே அவர் வெளியே போய்விட்டார்.



றுநாள் சாந்தினி வந்தாள், "என்னைப் பார்ப்பதற்காக இல்லை; செல்வத்தைப் பார்ப்பதற்காக?" என்றார் பாரிஸ்டர் பரந்தாமன்.

"இருவரையுந்தான்!" என்றாள் அவள். அடுத்தாற்போல் அப்பா 'ஏ' வகுப்புக் கைதியாகவும், நான் 'பி' வகுப்புக் கைதியாகவும் இருந்தது அவள் கவனத்தைக் கவர்ந்தது. "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்று வெளியே பிரசாரம் செய்கிறீர்களே, அந்தப் பிரசாரத்தை இங்கு ஏன் ஆரம்பிக்கவில்லை ?" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

"அது வேறு விஷயம், இது வேறு விஷயம்" என்றேன் நான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை, வெளியே சமதர்மப் பிரசாரம் செய்தால் அது சொந்த விஷயத்தைப் பாதிக்காது; இங்கே செய்தால் பாதிக்கும்!" என்றார் பரந்தாமனார் குறுக்கிட்டு.

இதைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது. "அப்படியானால் உயிரைத் துச்சமாக மதித்துப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு போராடும் நம் அருமைத் தலைவர்கள்கூடவா சுயநலத்தைக் கருதிச் சிறைக்குள் சமதர்மம் பேசாமல் இருக்கிறார்கள்?" என்று கன்னத்தில் அறைந்தாற்போல் கேட்டேன்.

"சந்தேகமென்ன, நாமும் காங்கிரஸ்காரர்களாதலால் அதைப்பற்றிப் பத்திரிகைகளில் எழுத முடியாமலும் பொதுக் கூட்டங்களில் பேசமுடியாமலும் இருக்கிறோம்!" என்றார் அவர் அப்பொழுதும் விடாமல்.

"தலைவர் களைப் பற்றி நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!" என்றேன் நானும் விடாமல்.

"நீர்தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்! உண்மையைச் சொல்லப்போனால் நம்முடைய தலைவர்கள் பொது ஜனத் தலைவர்களே அல்ல - ஏன் தெரியுமா? - அவர்களில் பெரும்பாலோர் பிறவித் தலைவர்கள்; பரம்பரை பரம்பரையாகப் பணத்திலே ஊறித் திளைத்தவர்கள்; சுகபோகத்தின் எல்லையையும் இறுதியையும் கண்டவர்கள்; அவர்களுக்கும் ஜனங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது - கை தட்டுவதைத் தவிர!"

"என்ன! மகாத்மா காந்தியைக் கூடவா நீங்கள் அப்படிப்பட்டவர் என்கிறீர்கள்?"

"அவரை எப்படி அரசியல் தலைவர் என்று சொல்ல முடியும்? அரசியல் சந்நியாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்!"

"அப்படித்தான் இருக்கட்டுமே! அரசியல் தலைவர் களால் சாதிக்க முடியாத காரியத்தை அரசியல் சந்நியாசிகளால் சாதிக்க முடியும் என்று நான் சொல்கிறேன்!"

"சொல்லும் சொல்லும். ஆனால் நான் மட்டும் சொல்லத் தயாராயில்லை; ஏனெனில் அவர் அஹிம்ஸா வாதி!"

"அஹிம்ஸை வெற்றியடைய முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நம் கண்ணுக்கு முன்னாலேயே அது எத்தனையோ வெற்றிகளை அடைந்திருக்கிறதே!"

"ஆமாம், மகாத்மா காந்திக்கு முன்னால் இயேசுவும் புத்தருங்கூட அஹிம்ஸையில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வெற்றியெல்லாம் ஆரம்ப வெற்றியாகத்தான் இருந்திருக்கிறது, என்பதை நீர் மறந்துவிடக் கூடாது!"

"ஏன், இன்றளவும் அவர்களுடைய பெயர் நிலைத்துத் தானே இருக்கிறது?"

"பெயர் நிலைத்துத்தான் இருக்கிறது: கொள்கை நிலைக்கவில்லை?"

"அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? மக்கள் அவர்களைக் கடவுள்களாக்கி விட்டதோடு நின்று விட்டார்கள்!"

"அதையேதான் நானும் சொல்கிறேன்; மகாத்மா காந்தியைக்கூட இன்னுங் கொஞ்ச நாட்களுக்கெல்லாம் மக்கள் கடவுளுடைய ஜாபிதாவில் சேர்த்துவிட்டு வழக்கம் போல் தங்கள் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!"

"அதனால் அவருக்கென்ன நஷ்டம்? மக்களுக்கல்லவா நஷ்டம்?"

இந்தச் சமயத்தில் சாந்தினி இடைமறித்து, "அந்த நஷ்டம் ஒரு பக்கம் இருக்கட்டும்; இப்போது எனக்கு நேரம் நஷ்டமாகிக்கொண்டே இருக்கிறதே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.

"இப்போதெல்லாம் என்னுடன் பேசினால் உனக்கு நேரம் நஷ்டமாவதுபோல்தான் இருக்கும்; நான் வேண்டுமானால் வெளியே போய்விடட்டுமா?" என்றார் பாரிஸ்டர் பரந்தாமன்.

"நீங்கள் போனால் நானும் போய்விடுவேன்!" என்றாள் சாந்தினி.

‘'நீ மட்டுமா, செல்வத்தையும் அழைத்துக் கொண்டா?’' என்றார் அவர்.

‘'போங்கள், அப்பா! நான் அழுவேன்!’' என்றாள் அவள்.

‘'இப்படித்தான் சித்ராவும் சொன்னாள்; இப்போது அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்’' என்றார் அவர்.

அவ்வளவுதான்; ‘'அவளை நீங்கள் பார்த்தீர்களா, அப்பா?’' எப்போது பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறாள்?” என்று ஆவலுடன் கேட்க ஆரம்பித்துவிட்டாள் சாந்தினி.

‘'வேதாரண்யத்துக்குச் செல்லும் வழியில் பார்த்தேன். அவள் எவ்வளவு தூரம் விஷயம் தெரிந்தவள் என்பதை என்னால் அப்பொழுதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்தில் அக்கம் பக்கம் தெரியாமல் தொண்டு செய்து வருகிறார்கள். ஹரி ஜனங்களுக்கு அவர்கள் கோயிலைத் திறந்துவிடவில்லை; அதற்குப் பதிலாகத் தங்கள் வீட்டைத் திறந்து விட்டு அதில் ஒரு பக்கத்தில் அவர்களைக் குடியிருக்கச் செய்திருக்கிறார்கள். தங்களுக்குச் சொந்தமாயிருந்த நிலத்தில் பெரும் பகுதியைத் தங்களிடம் வேலை செய்து வந்த விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். தங்களால் இயன்றவரை அங்குள்ளவர்கள் எழுத்தறிவு பெறவும் வழிகாட்டியிருக்கிறார்கள்!’'

‘'சரிதான், காந்தி மகானின் நிர்மாணத் திட்டமே அதுதானே?’ என்றேன் நான்.

‘'அதுதான் இல்லை; அவள் அதைக் கட்டை வண்டித் திட்டம் என்கிறாள். அது மட்டுமல்ல; மனிதன் ஆகாய விமானத்தில் பறக்கும் இந்த நாளில் அது வெறுங் கேலிக்கூத்து என்பதும் அவள் அபிப்பிராயமாகும்.’'

“என்ன! "ஆமாம். 'சுயராஜ்யம், சுயராஜ்யம்' என்று நாம் அடித்துக்கொள்கிறோமே, அந்த விஷயத்தில்கூட அவளுடைய அபிப்பிராயம் மாறுபடுகிறது. 'சுயராஜ்யம்' வெறும் அதிகார மாற்றமாய்த்தான் இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். ஒடுக்கப்பட்ட - ஏன், ஒதுக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புபவன் சட்டத்தை மீறவேண்டுமென்ற அவசியம் இல்லை; மீறாமலே தொண்டு செய்யலாம். புரட்சி சட்டத்தில் வேண்டியதில்லை; மனத்தில் தான் வேண்டும் என்பது அவள் கட்சி. அந்தக் கட்சியில் இப்போது அவள் கணவனான கண்ணனும் சேர்ந்துகொண்டு விட்டான்; சேர்க்கப்பட்டு விட்டான்!" என்றார் பரந்தாமனார்.

அதைக் கேட்டதும், "அப்பா, அப்பா! நானும் ஒரு மாத காலம் சித்ராவுடன் போய் இருந்துட்டு வரட்டுமா, அப்பா?" என்றாள் சாந்தினி.

"கட்டாயம் போ, அம்மா! நீ அவசியம் அவளைப் பார்க்க வேண்டும் அவளிடம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!" என்றார் அவர்.

"தெரிந்து கொள்ளுங்கள்; யார், யாரிடம் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ, தெரிந்து கொள்ளுங்கள்!" என்றேன் நான்.