உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலமரத்துப் பைங்கிளி/ஓடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

11
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

“ஒம், முருகா!" என்னும் எழுத்துக்கள் பளிச்சிட்டு மின்னின. வெள்ளி நிலவிலே அந்த வெள்ளைக் கட்டடம் மிதந்து கொண்டிருந்தது. பங்களாவின் வெளிப்புற வாசற்கதவில் பிணைக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலியில் ஒசையை உண்டாக்கியவாறு இருந்தது ஒரு காய். ஒரு கணம் அது தரையில் முகம் பதித்து மோப்பம் பிடித்தது. மறுகணம், கால்களை உதறிய வண்ணம் தலையை உலுக்கிக் குரைக்க எத்தனித்தது.

தானா நிலையத்தில் 'டாண், டாண்’ என்று மணி ஒலி பரவி எழுந்தது. அப்போது மணி பன்னிரண்டு. நட்ட நடுநிசி!

மண்ணில் பதிந்தெழுந்த பாதங்களின் மெல்லிய ஓசை இலேசாகக் கேட்டது. அதற்கு நேர் எதிரிடையாக நாயின் சத்தம் புறப்படத் தொடங்கியது. "ளொள்!. ளொள்!”

வந்த உருவம் பங்களாவை அண்டியது; பிணைக்கப்பட்டிருந்த பிராணியினைப் பற்றி லவலேசமும் கவலை கொள்ளாமல், அந்த உருவம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தது. திறந்த கதவை மூட ஓடியது இடது கை, வலது கையில் ஒரு பழைய பை ஊசலாடியது. காருக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த 'போர்டிகோ'வையும் முகப்பு மண்டபத்தையும் கோட்டம் விட்ட அந்த உருவம் சுவரில் பதித்திருந்த பொத்தானை அழுத்தி விட்டது.

தாழ்ப்பாள்களைத் திறந்து கொண்டு, 'யாரது?’ என்ற அதிகாரக் குரல் கேட்டது. கேட்டவன், அந்தப் பங்களாவின் சமையற்காரன். வெளித் தாழ்வாரத்தின் மின்சார விளக்கைப் பொருத்தினான்.

அந்த உருவத்தின் முழுச் சித்திரத்தை எடுத்துக் காட்டியது, மின்சார விளக்கின் ஒளி. வாரிக் கலைக்கப் பெற்ற கிராப்பு முடி; சலவை செய்து கசங்கிப் போன உடைகள்; வேளைகெட்ட வேளையின் தூக்கக் கலக்கம் கொண்ட முக விலாசம்.

"யோரு நீங்க?”

‘என் பெயர் கந்தப்பன். ஒரு அவசரக் காரியமாகச் செட்டியார் ஐயாவைப் பார்க்கவேண்டும்!” என்றான் இளைஞன்.

அவன் பேசி நிறுத்துவதற்கும் மாடியிலிருந்த செட்டியார் தட்டுத் தடுமாறிய வண்ணம் இறங்கி வருவதற்கும் கணக்காக இருந்தது. செட்டியார் கண்களைத் துடைத்துவிட்டுக் கந்தப்பனை ஏறிட்டு நோக்கினார்.

கந்தப்பன் கைகூப்பி வணங்கினான்: கை கால்களில் நடுக்கம் ஏற்பட்டது. "எசமான்" என்றான் அவன்,

“திருட்டுப் பயலே... நீ ஏன் இங்கே வந்தாய்? திரும்பவும் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு போகவா இப்படி நேரங்கெட்ட நேரத்திலே வந்திருக்கிறாய்; நம்பிக்கைத் துரோகி!என் கண்முன்னால் நிற்காதே. இங்கிருந்து ஓடிப் போய்விடு!...” என்று இரைந்தார்.

கந்தப்பனின் விழிகள் கண்ணீரைச் சிந்திக்கொண்டே "எசமான்!"

அடுத்த வினாடி செட்டியாரின் விரல்கள் கந்தப்பனின் கன்னங்களில் ஆழப் பதிந்தன. அவனே வெளியே தள்ளிக் கதவை மூடித்தாளிட்ட பெருமை சமையலறை அதிகாரியையே சாரும்!

கந்தப்பனின் உருவம் ராமலிங்கம் செட்டியாரின் மனக் கண்ணைவிட்டு விலகவே இல்லை. அதுபோலவே, அந்தச் சம்பவமும் அவர் நெஞ்சத்தை விட்டு அகலாமல், நினைவில் கிலேத்துப் புனர்ஜன்மம் எடுத்தது.

ஏறத்தாழப் பத்து மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அது.

அறந்தாங்கியில் சந்தைப்பேட்டை என்பது பர பரப்பு மிகுந்த பகுதி. அங்கேதான் ராமலிங்கம் செட்டியாரின் ஜவுளிக்கடை இருந்தது. ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஜவுளிகள் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தன. ஆயிரக் கணக்கில் பணம் புரண்டது. திருமுருகன் முன் நிற்க!’ என்கிற வாசகத்தை எழுதாமல் எந்த ரசீதிலும் அவர் பேணு ஒடமாட்டாது. “ஓம் முருகா!" என்ற உச்சரிப்பு அவரது இதழ்களில் சதா மணம் பரப்பி நிற்கும். வேளை கூடி வரும்போதுதானே தனலட்சுமியின் கருணையும் கிடைக்கிறது! வெறும் இரண்டாயிரம் ரூபாய் மூலதனத்தைக் கொண்டு ஆரம்பித்த "ரெடிமேட் கடை இன்று இவ்வளவு பெரிய அளவுக்கு வளர்ந்திருந்தது. இடையில் வந்துபோன ஆண்டுகள் ஆறே ஆறுதான்.

இப்படிப்பட்ட நிலையிலே ஒருநாள், செட்டியார்ப் பூட்டிப் பூட்டை ஆறுதரம் நன்றாக இழுத்துப் பார்த்துவிட்டுச் சர்வீக்கொத்தை இடுப்பில் செருகிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட தருணத்திலே, "ஐயா!"

என்று குரல் தந்து முன்வந்து வணங்கி நின்றான் ஒர் இளைஞன். அவன்தான் இந்தக் கந்தப்பன். தான் யாரு மற்ற அநாதை என்றும், ஏதாவது வேலை கொடுத்தால் நாணயமாகச் செய்வதாகவும், கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிக் கண்ணீரும் கம்பலையுமாக நின்று வேண்டினாள் அவன்.

‘கடையிலே ஆறேழு பேர்கள் வேலைக்கு இருக் காங்க. வீட்டிலே என் பெண்சாதிக்கு உடம்பு சரி யில்லை. அதனுலே எனக்கு இப்போதைக்குத் தேவையா னது சமையல் ஆள் மட்டுக்தான்!” என்றார் செட்டியார், இரண்டு நிமிஷச் சிந்தனைக்குப் பிறகு,

“எஜமான்! உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும். நான் இதற்கு முன்னால் சமையல் வேலை செய்திருக்கிறேன். செட்டிகாட்டில் பள்ளத்தூரில் உ. அ. மு. வீட்டிலே வேலை பார்த்திருக்கேனுங்க. ஒரு வாரம் பாருங்க. பிடித்தால் வச்சுக்கிடுங்க இல்லையானல் என்னைத் துரத்திப்பிடுங்க!’ என்று மன்றாடினன் கந்தப்பன்.

"சரி, உன் ஊர் எது?”

"எனக்குச் சிவகெங்கைச் சீமைங்க!"

“சரி. ஒரே பேச்சாகச் சொல்லுகிறேன். மூன்று வேளையும் இங்கேயே சாப்பிட்டுக்கொள். சம்பளம் பதினேஞ்சு ரூபாய் தாரேன்!"

"ரொம்ப நல்லதுங்க, முதலாளி!"

முதலாளியின் நாணயமான ஏவலாக கந்தப்பன் இயக்கத் தொடங்கிச் சுவர் காலண்டரில் தினத் தாள்களில் முன்னூற்று இருபத்தைந்து கிழித்தெரிந்தான். இரண்டு முறை மாத்திரம் ஒவ்வொரு நாள் லீவு எடுத்துக்கொண்டு போய் தெரிந்தவர்களுக்கு சென்று வந்

தான். மற்றபடி, கந்தப்பன் அந்தப் பங்களாவின் ஒரு நபராகவே மாறிவிட்டான்.

ஒருநாள், மதுரைக்குச் சரக்குப் போட்டு வரத் திட்டமிட்டு விடியற்காலை வண்டிக்குப் புறப்பட எண்ணித் துணிமணிகளுடன் ஐந்நூறு ரூபாய் மட்டும் பிரயாணப் பையில் எடுத்து வைத்துக்கொண்டு படுத்துக் கொண்டார் ராமலிங்கம். ஆபத்துச் சம்பத்துக்கெனக் கைச்செலவுக்கு எடுத்துச் செல்லும் வழக்கமான தொகை அது. சரக்குக் கொள்முதல் ஆயிரக் கணக்கில் நடைபெறும். அது கடன். சரக்கு இவருடைய கடைக்கு வந்த கையோடு உரிய பணம் உரிமைக்காரருக்குச் சேர்ந்து விடும். வியாபார ஒப்பந்தத்தின் மாமூல் நடப்பு இது!

கந்தப்பன் கொடுத்த சூடான பாலைக்குடித்துவிட்டுப் படுத்தவர் மீண்டும் அலாரத்தின் ஒலி கேட்டு விழித்தார். காருக்குப் புறப்பட்ட நேரத்தில், பையைப் பிரித்துப் பணத்தை எண்ணியபோது, அவரது இரத்தம் கொதித்தது. உடனே "கந்தப்பா டேய், கந்தப்பா!" என்று கூச்சல் போட்டார் செட்டியார், கந்தப்பனைத் தேடிப் பார்த்தார். அவன் அங்கு காணப்படவில்லை. "கடவுளே! இந்தப் பயல் கந்தப்பன் நூறு ரூபாயைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டானே!" என்று முணுமுணுத்தார். கடைசியில் அவரது படுக்கைத் தலையணைக்கு அடியில் ஒரு கடிதம் இருக்கக் கண்டார்.

“முதலாளி அவர்களுக்கு, உங்களுடைய பணத்தில் நூறு ரூபாயை மட்டுமே எடுத்துப் போகிறேன் நான். இந்தப் பணத்தை உங்களிடம் மறுபடியும் திருப்பிக் கொடுத்துவிடுவேன். இது நிச்சயம்.

இப்படிக்கு

கந்தப்பன்

இந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க அவருடைய ஆத்திரம் வேகமாக வளர்ந்தது. பற்களைக் கடித்துக் கொள்வதைத் தவிர அப்போதைக்கு வேறு வழியில்லை.

அன்று சென்றவன் இன்று நடுராத்திரியில் திரும்பியிருக்கிறான். அவன் திரும்பி வருவான் என்று அவர் கனவிலும் எண்ணியவரல்லர். அவருக்கு மட்டும் உடல் நலம் செம்மையாக இருந்திருந்தால், இந்நேரம் அவனே அடித்து கொறுக்கியிருப்பார். புதிய சமையற்காரனைக் கொண்டு பழைய சமையல் ஆளை வெளியேற்றி விட்டு மாடிக்கு வந்து படுக்கையில் சாய்ந்தார் ராமலிங்கம். ஆ! என்ன தப்பு செய்துவிட்டேன்!... அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்து போலீசிலே ஒப்படைத்திருக்கலாமே...!” என்று ஒருகணம் நினைத்தார். மறு விநாடிதான் அவன் முன்பு எழுதி வைத்துப் போன கடிதத்தின் வாசகம் நினைவில் ஓடியது. உடனேயே அது வந்த வழியே திரும்பியது. ‘ம் இந்தப் புயலாவது பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்து தருவதாவது...! அடுத்த விநாடி என்ன தோன்றியதோ,படுக்கையிலிருந்து எழுந்தார் செட்டியார். கந்தப்பனைத் தேடிப் பிடித்துத் தானாவில் ஒப்படைக்க வேண்டுமென்ற புதிய துடிப்பு அவரை உலுக்கியது. எழுந்து கதவைத் திறந்தபோது, அவருடைய காலில் பட்டு விலகிய ஒரு புகைப்படத்தைக் கண்ணெடுத்துப் பார்த்தார். அவ்வளவுதான்; அவர் அந்தக்கணமே மயங்கித் தரையில் சாய்ந்துவிட்டார். அப்போது ‘திருப்பதி’ என்று அவர் வாய் உச்சரித்தது

“திருட்டுப் பயலே. நம்பிக்கைத் துரோகி"

ராமலிங்கத்தின் உள்ளம் அவரையும் மீறிய வண்ணம் இவ்வாறு கொக்கரித்தது. சில நாழிகைப் பொழுதுக்கு முந்தி அவர் கந்தப்பனை இகழ்ந்த சொற்களல்லவா இவை? மீண்டும், மீண்டும் இவை ஏன் செவிகளிடையே ரீங்காரம் செய்கின்றன..? அவரது முகம் ஏன் இப்படி விகாரமடைந்து வருகிறது? தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஏன் அவர் வேதனையின் எல்லை வரம் பில் நின்று தவியாய்த் தவிக்கவேண்டும்?

பட்டு மெத்தையில் அலுங்காமல், குலுங்காமல் கிடந்த அந்த நிழற்படம் செட்டியாரின் மனத்தில் நிழலாக அப்பிக்கொண்டிருந்தது. உள்ளம் சிலிர்த்தது போலவே, உடலும் சிலிர்த்தது. ஊனக் கண்கள் திறந்திருந்த மாதிரியே மனத்தின் கண்களும் விழித்திருக்கத் துடித்தன. மனம் துடித்தது; மனச் சாட்சி துடிக்கச் செய்தது; உன்னுடைய நூறு ரூபாய்ப் பணத்தைத் திருடிய கந்தப்பனை நீ திருடன் என்றாய், நம்பிக்கைத் துரோகி என்று ஏசினாய், பேசினாய்; அடித்து விரட்டச் செய்தாய்! ஆனால், நீ செய்த கம்பிக்கைத் துரோகத்தை மறந்துவிட்டாயா...?

கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த மனச் சாட்சியை ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் தளத்தில் அவர் தம் இன்ப வாழ்வை நிர்மாணித்துக் கொண்டிருந்தாரோ, அந்த வாழ்வு, வளம், வனப்பு அனைத்தும் இப்பொழுது ஆட்டம் காணத் தொடங்கின. எந்த ஒரு புகைப்படத்தைப் பார்க்கவும் மனத் துணிவை இழந்து அதை எங்கோ ஓரிடத்தில் போட்டுப் பூட்டி வைத்திருந்தாரோ, அதே படத்தை அவர் ஏன் தேடிப் பிடித்து எடுத்தார். பாதத்தில் சிக்கிய அந்தப்படம் அவர் மனத்தின் மனத்தையும் மிதித்துவிட்டதோ...? தெய்வத்தின் திருவிளையாடலா இது...?

மறைத்து மூடப்பட்ட ஆருண்டு இரகசியம்;

காரைக்குடியில் 'திருப்பதி மளிகைக் கடையின் முதலாளி திருப்பதியே தான். கல்லுக்கட்டி வட்டாரத் தில் நாலு பேருக்குப் பழக்கமான மண்டி அது. பிறந்த மண்ணில் வரித்த மனைவியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ராமலிங்கத்தைப் பிறிதோரிடத்தில் கைகட்டிச் சேவகம் புரிய வைத்தது. திருப்பதியைக் கண்டார்; கணக்கு வழக்குகளிலிருந்த திறமையைச் சாங்கோபாங்கமாக எடுத்துக் கூறினார். கல்லாப் பெட்டியடியில் இருந்த திருப்பதி மனம் இரங்கி ராமலிங்கத்திடம் கணக்குப் பொறுப்புகளையெல்லாம் ஒப்புவித்தார்.

திருப்பதியின் வியாபாரம் கூடி வந்தது. நாட்கள் கூடி வந்தன. தீபாவளி வந்து போயிற்று. பக்கத்து ஊர்களில் அங்கங்கே நிலுவை தங்கியது. வசூல் பண்ணி வருமாறு ராமலிங்கம் அனுப்பப்பட்டார். கானடுகாத்தானில் அ. முத்தையா அம்பலம் என்ற புள்ளியின் பேரில் இரண்டாயிரம் ரூபாய் பற்று நின்றது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட அந்த மனிதர் கையில் இருந்த பணத்துடன் கடன் உடன் வாங்கி இரண்டாயிரத்தை 'மால்’ பண்ணி ராமலிங்கத்தினிடம் கொடுத்தார். முதலாளி கைப்படவே ரசீது போட்டு அனுப்புவதாகச் சொல்லி விட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார் ராமலிங்கம். காரில் ஏறப்போன போது, முத்தையா அம்பலத்தின் வாழ்வு திடுதிடுப்பென்று முடிந்த கதையைக் கேள்விப்பட்டார். மனித மனத்தில் மிருகத்தன்மை ஓடியது. காரைக்குடியை மிதித்தார் ராமலிங்கம். முத்தையா அம்பலத்தின் அநியாய முடிவைச் சொன்னர். அந்தப் பணம் இனி வராதுங்க!’ என்றார். திருப்பதி நம்பினர். மறுதினம் ராமலிங்கம் மனைவிக்கு உடல்நிலை அபாயமாயிருக்கிறதாகத் தகவல் கிடைத்திருப்ப்தாகவும், புறப்பட அனுமதி வேண்டுமென்றும் வேண்டினார். புறப்பட்டார் அவர். அவருடன் புறப்பட்டது. இரண்டாயிரம் ரூபாய். அது 'ரெடிமேட்' கடைத்திறப்பு விழாவை கடத்தியது. இன்று ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு

மேல் துணிமணிகள் குவிந்திருக்கின்றன! சில மாதங்களுக்கு முன்னதாகத் திருச்சி இரயில் நிலையத்தில் எலும்பும் தோலுமாக வறுமைக் கோலத்தில் காட்சி தந்த ‘பழைய தெய்வத்'தின் பார்வையில் படக்கூடப் பயந்து மறைந்த சம்பவம் அவர் வரை என்றென்றும் பசுமை கொண்டதாகும். நம்பிக்கைத் துரோகம் எனும் மூலதனத்தைக் கொண்டு ஆரம்பமான தம் வியாபாரத்தைப் பற்றியோ, இரண்டாயிரம் ரூபாய்க்கு உடைமையாயிருந்தவர் குறித்தோ ராமலிங்கம் மறந்துபோனார்ர்! ஆனால் அதே மறதிதான் இன்று அவரைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது!

வள்ளி மணவாளன ஏறிட்டுப் பார்த்தார் செட்டியார், ஓவியம் உயிர் பெற்றுப் பேசியது: ராமலிங்கம் நீ இப்போது உன்னையே எண்ணிப்பார்...!” என்ற குரல் எதிரொலித்துக் கிளம்பியது.

ராமலிங்கம் எண்ணினார். பங்களாவும், கடையும் நினைவில் ஓடின. இரும்புப் பெட்டியிலிருந்த 'நிதி' முன் வந்தது. ஆனால் அவரது மனத்தின் 'நிதி'அவரைச் சாறு பிழிந்து வதைத்தது. பங்களாவைச் சுற்றிலும் நோக்கினா. அவர் உயிர் பதைத்தது.

ராமலிங்கம் கவரில் மோதிக் கொண்டார். முருகனின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். உள்ளே சென்றார் செட்டியார். நூறு ரூபாய்த் தாள்கள் இருபதை எண்ணினார்; எடுத்துப் பையில் வைத்துக் கொண்டார்: ம்பினர். திருப்பதியின் படம் அவரது கைகளில் தவழ்ந்தது. வடித்த கண்ணீர் வழிந்து படத்தில்ஓடியது. " முதலாளி! என் தப்பை மன்னித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை ஒப்படைத்து விடுகிறேன். அப்பொழுதுதான் என் மனசாட்சி என்னை மன்னிக்கும்.

வேலன் மன்னிப்பான், இனி நீங்க என் நிழலிலே-இல்லை, உங்கள் அன்பு நிழலிலே இனிமேல் நான் இருப்பேன்!” என்று தம்முள் கூறிக்கொண்டார் ராமலிங்கம்.

உதயம் கண் மலர்ந்தது: உலகமும் துயில் நீத்தது.

"எசமான்!” என்று கூப்பாடு போட்டு வந்தான் சமையற்காரன்.

ராமலிங்கம் முருகன் முகத்தில்தான் கண் விழித்தார். “ஓம் முருகா!’ என்று ஒதினார். என்றும் அடைந்திராத அமைதி அவர் மனத்தில் பிறந்தது. ஒடுங்கக் கண்ட யோகியர் உள்ளம் மாதிரி செட்டியாரின் உள்ளம் பக்குவம் அடைந்திருந்தது.

"எசமான்!”

"தவசிப்பிள்ளை, சீக்கிரம் வெந்நீர் போடும். வெளியூர் போகவேண்டும்!" என்று கூறினர் ராமலிங்கம்.

“எசமான்! ராத்திரி வந்த அந்தப் பையன் உங்ககிட்டே கொடுக்கச் சொல்லி நூறு ரூபாய் பணம் தந்துச்சுங்க!”

ராமலிங்கம் திக்பிரமை அடைந்தார். நூறு ரூபாய்ப் பணத்தின் பின்னணியில் கந்தப்பனின் உருவம் மாத்திரமல்ல, உள்ளமும் பளிச்சிட்டது. ஐந்நூறு ரூபாய்ப் பணத்தில் நூறு ரூபாயை மட்டும் எடுத்துச் சென்ற ‘விந்தை நிகழ்ச்சி' புத்துயிர் பெற்றது.

"அவன் எங்கே?"

"காலையிலேயே போயிடுச்சுங்க, அந்தத் தம்பி. இந்தாப் பாருங்க, இதையும் உங்கக் கிட்டே கொடுக்கும் படிசொல்லிச்சு!"

கடிதத்தின் உறை கழன்றது. உரை வாய் திறந்து கொண்டது.

“அன்புடைய ராமலிங்கம்,

என்னை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்; மறந்திருக்கவும் முடியாது. ஆம்; உங்களுடைய மாஜி முதலாளியான திருப்பதியே தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தவறுகளே மன்னிப்பவனே மனிதன் என்பதன் உண்மையை உணர்ந்தவன் நான். அன்று நீங்கள் செய்த குற்றத்தை என்றாே மன்னித்த நான், இப்போது உங்களிடம் என் தப்பை மன்னிக்கும்படி கெஞ்சுகிறேன். புதிராகத்தான் தோன்றும். உங்களிடம் சில காலம் வேலை பார்த்த கந்தப்பன் என் மகன். நானேதான் உங்களிடம் அனுப்பினேன். அவன் என் மகன் என்ற உண்மையையும் மறைக்குமாறு எச்சரித்தவனும் நானேதான். ஊழ்வினைப் பயனாக என் நிலை தலைகீழானது. வறுமை ஆட்டிப் படைத்தது. மனைவியை இழந்த எனக்குக் கடைசிக் காலத்தில் என் மகனே ஐந்து, பத்து அனுப்பி உதவினான். ஆனால் உங்கள் பணத்திலிருந்து நூறு ரூபாயைத் திருடி வந்து என் நோயைப் போக்கப் பிரயத்தனப்பட்ட நடப்பு நேற்று முன் தினம்தான் எனக்குத் தெரிந்தது. என் நெஞ்சே என்னைச் சுட்டது. மணச்ச நல்லூரில் என் பூர்வீகச் சொத்தாக மிஞ்சி நின்ற என் வீட்டை விற்று, உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை அனுப்பியிருக்கிறேன். மிகுதிப் பணத்தில் என் மகனுடைய எதிர்கால வாழ்வுக்கு அடிகோலும் வகையில் சிறிய மளிகைக் கடை ஒன்றையும் தொடங்கிக் கொடுத்துள்ளேன். என் மைந்தன் செய்த தவற்றுக்குத் தண்டனையை நான் அன்றே அளித்துவிட்டேன். நீங்களும் மன்னித்து விடுவீர்களல்லவா? உங்கள் பணம் உங்களிடம் வந்து சேர்ந்த சேதி கிடைத்ததும்தான், என் ஆவி அமைதியாக அடங்கும்,

இப்படிக்கு,

க. திருப்பதி.’”

“எஜமான்......! கந்தப்பா!...” என்று கதறிக் கொண்டே பிரயாணப் பையும் கையுமாகப் புறப்பட்டார் ராமலிங்கம்செட்டியார். மூடியிருந்த அவருடைய மனக் கண்கள் மலர்ந்து கொண்டிருந்தன!