ஆலமரத்துப் பைங்கிளி/கண் மயக்கம்
12
கண் மயக்கம்
“அம்மா!” என்று அழைத்தார் அப்பா. கூட்டுக் கறி செய்ய வாழைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தேன். குரல் கேட்டதும், கைவேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு ஒடினேன். ஒடும்போது என்னுடன் கூட கைவளை ஒலியும் மெட்டிகளின் ஒசையும் ஓடிவந்தன. இவ்வளவுதான? ‘அம்மா’ என்ற அந்த அன்பின் அழைப்புக் குரலுமல்லவா எனக்குப் போட்டியாக அமைந்துவிட்டது? போட்டியாவது, ஒன்றாவது? ஆமாம்; போட்டியேதான்! அது பாசத்தின் போட்டி ‘அம்மா’ என்றுதான் என்னை என் தங்தை கூப்பிடுவார். ஒருபுறம் எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வரும். “அப்பா, அப்பா! ஒரு சின்னச் சந்தேகம்! ஆமா; நானு உங்களைப் பெற்றேன்?” என்று ஒரு முறை கேட்டேன். என் சிரிப்பையும் அவர் வாங்கிக் கொண்டு அவர் வயிறு குலுங்க நகை சிந்திய நிகழ்ச்சி நான் ஒவ்வொரு தவணையும் எண்ணிக்கொள்ளுவேன்; என்னுள்ளேயே சிரித்துக் கொள்ளவும் தவறுவதில்லை. மறுபுறம், ‘அம்மா’ என்ற அச்சொல் என் கண்களைக் கிண்டிவிடும். கண் வேதனையை நெஞ்சின் ஈரப்பசை மிகுந்த இடங்களிலெல்லாம் உணர்வேன். நான் மட்டுக்தான அழுவேன்? ஊஹும், என்னுடைய உடம்பின் ரத்தநாளங்கள் ஒவ்வொன்றுமல்லவா என்னுடன் இணைந்து விம்மி வெடித்துக் கதறும்?
ஐயோ அம்மா!...
அப்பா திண்டில் சாய்ந்திருந்தார். ‘முண்டா பனியன்’ அணிந்திருந்தார். தலை முடி காற்றில் அலைந்தது. நான் கூடத்தில் வந்து நின்றதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. முகஷவரம் செய்யப் படாததுடன் மட்டுமன்று, முகத்தில் கவலை ரேகைகளும் ஒடியிருந்ததைக் கண்டேன். எனக்கு உள்ளம் பதைத்தது. மூன்று நாள் இரவு பகலாக அடித்த காய்ச்சல் இப்பொழுதுதான் கொஞ்சம் படிங்திருக்கிறது. இங்நிலையிலே, மன உளைச்சலும் கூட்டுச் சேர்ந்தால், ஒருகால் காய்ச்சல் திரும்பினாலும் திரும்பிவிடுமோ? என்ன செய்வேன்? பகவானே!
“அப்பா!...”
அப்பா கண்களை மூடி மூடித் திறந்தார். இமை இழைச் சந்திப்புக் கோடுகளிலே ஈரம் சொட்டியது. எனக்கு நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. அம்மாவின் ஞாபகம் அண்டியிருக்க வேண்டும். நகர்ந்து நடந்தேன்; தாவணித் தலைப்பைக் கொய்தேன்.
“நீ இரும்மா!...” என்று சொல்லியபடி தன்னுடைய துண்டை எறிந்தார் அவர். அது சமயம், படமொன்று கண்ணில் பட்டது. அம்மா அவரருகில்தான் இருக்கிறாள்! விழிநீரைத் துடைத்துக் கொண்டார் அப்பா.
நீ ஏன் அம்மா போய்விட்டாய்?
அப்பாவுக்கு இனி ஆறுதல் சொல்ல யார் இருக்கிறார்கள் அம்மா?.
என்னுள் நான் அழுதேன். வேறு நான் என்ன செய்யட்டும்? என்னுடைய தொடரும் வினாக்களுக்கு, தொடராத பாங்கிலே விடை அளிக்க தெரிந்தவள் என்னை ஈன்றவள், ஒருத்தியேதான்! ஆனால் அந்தத் 'தெய்வத்'தைத்தான் இந்தத் தெய்வம் பறித்துக்கொண்டு விட்டதே? கண்ணாமூச்சி ஆட்டத்தில் கண்கட்டப் பெற்றவளின் நிலையில் தத்தளித்தேன், இருளெனும் வியன்வெளி அரங்கை அமைத்துக் கொண்டு!
தெய்வமே!
"அம்மா காந்தி! நீ அழறீயாம்மா?..."
"ஊஹூம், இல்லையே!..... நான் அழலீங்களே அப்பா !..."
"இல்லே: நீ சும்மா சொல்லுறே!"
"அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க!... இந்தாப்பாருங்களேன்!"
இதழ்கள் முறுவல் கூட்டின; விழிகள் கண்ணீர் கூட்டின.
அப்பாவும் என்னைப் போலவேதான் திண்டாடினார். சுடுநீரும் சுமிழ்ச் சிரிப்பும் கண்பொத்தி விளையாடின போலும்!
"பத்தியம் சாப்பிடுறீங்களா, அப்பா?"
"கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடுகிறேன் காந்தி!"
கோடை மழைக்கு நேரம், காலம் இருக்க முடியாதல்லவா? வெய்யிலுக்கும் மழைக்கும் ஊடாக, சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு முறை துடித்து அடங்கியது.
வாசல் குறட்டில் அரவம் கேட்டது. எட்டிப் பார்த்தேன். தங்கசாலையிலிருந்து வந்திருந்தான் அவன். எங்கள் கடைப் பையன்: எடுபிடி! கும்பகோணம் அண்டா ஒன்ஙின் விலை திகையவில்லையாம்; யாரோ அயலூர் ஆள் கேட்கிறாராம். எண்பத்துநாலு சேர் நிறுவை நிற்கிறதாம். 'ஆ'விலாசம் போட்டு, 'இ' என்று மீண்டும் திருத்தப் பட்டிருக்கிறதாம். ஐயப்பாட்டைத் தீர்த்துப் போக வேண்டியது அவன் கடன். மெய்தான்! கறார்விலையைச் சொல்லி அனுப்பப்பட்டான் சிறுவன்.
"பாப்பா !..."
"அப்பா !..."
அப்பா என்னைப் பார்த்தார். மறுவினாடி. 'கடகட' வென்று சிரித்தார், "நீ என்னம்மா, இன்னும் தவழ்ந்து விளையாடுற பாப்பாவாவே இருக்கிறதுக்கே ஆசைப்படுறே" என்றார்.
சின்னஞ்சிறு பாப்பாவைப்போல தரையில் தவழ்ந்து காட்டிய நான் எழுந்தேன் தாவணியைச் செம்மையாக்கிக் கொண்டேன். எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது!... வெட்கம் என்ன வெட்கம்!.... என் அப்பாவுக்கு நான் என்றென்றும் பாப்பாதானே? பாரதியாரின் பாப்பாப் பாடல் அப்பாவுக்குத் தேன் குழல் சாப்பிடுவதுபோல இருக்குமே!
"அம்மா !..."
"ஊம்!..."
"என்னம்மா நீயே சிரிச்சுக்கிறே?"
'ஒன்றுமில்லை' என்று பாவனையைக் கைமுத்திரையில் அமைத்தேன்.
ஒரு சம்பவம்.
அப்போது, அம்மா இருந்தாள். உடன் அப்பாவும் இருந்தார். நான் ரேடியோப் பெட்டியருகில் அமர்ந்திருந்தேன். ஒரு பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தேன் அம்மா என்னிடம் வந்து, பாட்டு என்ன ராகம் என்றாள். எனக்குத் தெரியவில்லை... 'பைரவி' என்றாள். தியாகராஜர் போன்ற மகான்களை நினைப்பூட்ட வல்லதாம்
பைரவி, தெய்வாம்சப் பண்பு பொருந்தியதாம். அம்மா சொல்லுவாள். இப்போது அவை அனைத்தும் பறந்து போயின. நான் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இந்த ராகங்களும் சேர்ந்துவிட்டனவா?
ஹூம்! என்னவோ சொல்ல வந்தேனே! ஆமாம்: இப்போது நினைவு தெளிவு காண்கிறது. நான் அம்மா, அப்பா எல்லாரும் உட்கார்ந்திருக்கையில், அப்பா என்ன நோக்கி "அம்மா!" என்று விளித்தார். உடனே நான், "என்ன மகனே!” என்று கூவினேன் துடுக்கான செயல். ஆனாலும், எனக்கு ஏக மகிழ்ச்சி. பெதும்பைப் பிராயம். நல்ல வேளை; அப்பா கோபிக்கவில்லை; குதுகலம் அடைந்தார். இச்சம்பவம் நினைவுக்கு வரும்போது, சிரிப்புக்கு வழிவிடாமல் தப்புவது சாத்தியமா? நீங்களே சொல்லுங்கள்.
"காந்தி!"
அப்பாவின் வலது கையில், உறை நீங்கப்பெற்ற பெரிய கடிதமொன்று காட்சி கொடுத்தது.
"என்ன அப்பா?"
“இப்படி உட்காரு காந்தி!"
உட்கார்ந்தேன். அப்பா என் மீது ஆழிய நோக்கு ஒன்றைச் செலுத்தினார். விழிகள் கலக்கம் கண்டன.
நாள் முக்குடும் அடுப்படியிலே நின்று எனக்கு வேகவச்சுக் கொட்டிறத்துக்கே உனக்கு நேரமும் பொழுதும் சரியாகிவிடுதேம்மா?... ஐயையோ, பவுன் நிறத்திலே இருக்க உன் மூஞ்சி இப்படி கறுத்துப் போயிடுச்சேம்மா?... என்னை மன்னிச்சிடு காந்தி!.."
அப்பா இன்னும் என்னென்ன பாடம் ஒப்புவிக்க வேண்டுமென்று 'மனப்பாடம் ' செய்து வைத்திருந்தாரோ? அதற்குள் நான் இடைமறித்தேன். "அப்பா!" என்று ஓங்காரக் கூச்சலைப் பரப்பினேன். என் இதய ஒலி மண்ணில் பறந்தது; நான் விண்ணில் பறந்தேன். என் தகப்பனாரின் இந்தப் பேச்சுக்கு அம்மாவுக்கு அர்த்தம் தெரியுமல்லவா? அம்மா!... அம்மா!...நீ எங்கே இருக்கிறாய் அம்மா?...உன்னுடைய கண்ணாமூச்சி விளையாட்டுக்கு நான் தான கண்கட்டிக் கொள்ளக் கிடைத்தேன்? அம்மா!...அம்மா கண்கட்டை அவிழ்க்க மாட்டாயா தாயே?
“காந்தி, ஏம்மா அப்பிடிப்பார்க்கிறே? நான் ஒண்னும் தப்பாச் சொல்லலே அம்மா!...இந்தாப்பாரு கண்ணு! எத்தனை நாளைக்குத்தான் வயசுப் பொண்ணு நீ இப்படியே பிறந்த வீட்டிலேயே அடைஞ்சுகிடக்கிறதாம்?...ஊர் உலகம் அப்பறம் என்ன சொல்லும்?. தாயில்லாப் பொண்ணுக்கு ஒரு வழி வகை செய்யத்தெரியாத அப்பன்னு என்னை ஏசுவாங்க, காந்தி ...நீ கண்ணத் துடைச்சுக்க; அத்தோட, என் கண்ணையும் துடைச்சுவிடம்மா...இந்தாப் பாரேன்!...எங்கே சிரி!......என் ராஜாத்தியல்லே...ஆ.ஆ.சபாஷ்!...இப்ப உன்கிட்டே ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறேனாக்கும். காந்தி!...அம்மா காந்தி!...உனக்கு வைகாசி மாசத்திலே கல்யாணம்!ஆமா...இத்தாப்பாரு ! இதுதான் மகப்பிள்ளை போட்டோப் படம்!...எங்கண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளைகள்!...ம், முழிச்சுப் பாரும்மா!"
கண்களைப் பொத்திக் கொண்டு சமயலறைக்கு ஓடிவந்துவிட்டென் நான். எனக்கு நானே கண்பொத்தி விளையாடி விட்டேனா?-" அம்மா!"
நாளைக்கு என்னைப் பெண்பார்க்க வரப் போகிறார்களாம்!
அப்பாவுக்கு மனம் கொள்ளாத ஆனந்தம்; கண் கொள்ளாக் கனவுகள். அம்மா போன பிறகு-காலம் உண்டாக்கிய அதிர்ச்சி மறைந்திடத் தேவைப்பட்ட இந்த இருபது மாதங்களுக்குப் பின்னர் அப்பாவின் முகத்தில் இப்போதுதான் உண்மையான ஜீவகளையைக் காண்கிறேன். அம்மா இருந்திருந்தால், இந்நேரம் ஆடிப்பாடிக் குதித்திருப்பாள். ஒரு முறை சொன்னாள்:-எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது-உறவு வகைப் பெண் மணக்கோலம் தரித்து எங்கள் இல்லம் தேடிவந்தாள். அப்போதுதான் நான் பக்குவம் அடைந்திருந்தேன். அம்மா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். "காந்திக் கண்ணு’ என்ன அம்மா அப்படி முழிச்சுப் பார்க்கிறே?... ஒனக்குந்தான் வயசு வந்திட்டதே; நாளைக்கு இதுமாதிரி நீயுந்தான் கல்யாணப் பொண்ணு நிற்பே! அப்போ ஒன்னைப் பார்த்துப் பார்த்துப் பெத்த என் வயிறு எவ்வளவோ சந்தோஷமும் ஆறுதலும் கொள்ளும்!...” என்று உள்ளத்துச் சிரிப்பு அவ்வளவையும் ஆனந்தக் கண்ணீராக்கிப் பேசினாள் அம்மா ஆனால் இன்று அம்மா இல்லை! அவள் பேசிய வார்த்தைகள் சோகக் கண்ணீர் வடித்த வண்ணம் இப்போது நின்றுகொண்டிருக்கிறேன். நான், ஏன் அம்மா இப்படி என்னைச் சோதித்துவிட்டாய் ஆண்டவனே, என் அன்னையை ஏன் இவ்வாறு சோதனைக்கு இலக்காக்கிவிட்டாய்? விழி வெள்ளத்தை வடித்தவாறு, தலையை ஏறிட்டுப் பார்த்தேன். நிலாமுற்றத்தில் செஞ்சுடர் செல்வன் விளையாடினான். ஆனாலும் என் பார்வைக்கு ஏதும் சரிவரப் புலகைவில்லை. கண்களை இருட் திரை மறைத்தது. என்னுடைய கண்களைப் பொத்தி விளையாடினாள் அம்மா! நீ இல்லாமல் இந்த விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லையே அம்மா?...
ஆலைச் சங்கு ஊளையிட்டது; ஒலம் பரப்பிற்று.
கடையிலிருந்து அப்பா சாப்பாட்டுக்குத் திரும்பும் வேளை வந்துவிட்டது. முகத்தைச் சேலை முகத்தலைப்பினால் துடைத்துக்கொண்டே அடி அளந்து நடந்தேன். கடையில் தயக்கம். கடை குறிக்கிட்டது. நிலைக்கண்ணாடி கைதட்டி அழைத்தது. நின்றேன்; நிமிர்ந்தேன். என்ன நானே பார்த்துக்கொண்டேன். கண்ணாடியில் என்ன நான் காணவில்லை. என்னுடைய நெஞ்சில் குடியிருக்த ‘அந்த ஒர் உருவம் தான் தட்டுப்பட்டது. எனக்கு வெட்கம் வந்துவிட்டது. அழகுக்கு அரும்பதவுரை மொழியும் முகவிலாசம், கனவின் காதையைப் படித்துக் கொடுக்கும் நேத்திர அமைப்பு: ஆதரிச வாழ்வின் எதிர்கால வளப்பத்திற்கு உத்தாரம் சொல்லும் இதழ்த்தோற்றம்; சுருட்டைத் தலைமுடி! நான் சுருண்டுவிட்டேன்; என் வெட்கம் என்னையே சுருட்டிவிட்டது. வெட்கம் வராதா பின்னே? ஆமாம், இதற்குப் பெயர்தான் காதலென்று கதைகள் கூறுகின்றனவா? வாழ்க! எங்கள் ஜாதகங்கள் பேழையும் மூடியுமென பொருந்துகின்றனவாம். அப்பா பெருமிதம் காட்டினார். எங்கள் மனப்பொருத்தம் அந்த ஜாதகங்களுக்குத் தெரிந்துவிட்டதோ? என்னைப் படத்தில் கண்டதும், அவருக்குப் பிடித்துவிட்டதாம்! அப்பா பொல்லாதவர் இதைப்போய் என்னிடம் சொல்லலாமா? அம்மா இருந்திருந்தால், இது அம்மாவின் கடமையாக அல்லது அலுவலாக இருந்திருக்கும் ஆனால் நான்தான் அதற்குக் கொடுத்துவைக்காதவளாகிப் போனேனே?
அம்மா, நீ என் கல்யாணத்திற்கு வரமுடியாதா? ஏன் முடியாது! நீ கட்டாயம் வருவாய்; வரவேண்டும்! நீ வேறுயார் கண்களுக்கும் தென்படாமல் போனாலும், நீ என் கண்களுக்குக் கட்டாயம் காட்சி தருவாய்! உன்னுடைய ஆசி எனக்கு நிச்சயம் கிட்டும்! நீ என் தெய்வம்!
என்னை நானே மறந்த ஒரு நினைவில்-நிலையில் ஒடினேன். மனம் அழுதது. பத்து மாதம் சுமந்த அந்த அன்புப் பொறுமையின் தியாக சீலத்துக்கு நான் எப்பிறப்பிலே நன்றிக்கடனே அடைக்கப் போகிறேன்?
ஒரே ஒருநாள் காய்ச்சல். அம்மாவுக்கு அதைப் பொறுக்க இயலவில்லை. போய்விட்டாள். ஆனால், நானும் அப்பாவும் அல்லும் பகலும் மனக் காய்ச்சலால் அவதிப்படுகிறோமே, இது அம்மாவுக்கு எங்கனம் தெரியும்? "ஐயோ சாரதம்!...என்னையும் உன் கண்மணியை யும் தவிக்கவிட்டுப்புட்டு, நீ மட்டும் நிம்மதியாய்ப்போயிட்டீயே சாரதம்?.....தெய்வமே, அடுக்குமா இது?...... மனசறிஞ்சு நான் ஒரு பாவமும் செய்யலேயே ஈஸ்வரா!... இனிமே நான் எப்பிடி உயிர்வாழப் போறேனே?.ஐயையோ!...” என்று கூக்குரலிட்டார் அப்பா.
பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் இருந்த என்னிடம் தட்டுத் தடுமாறி நடந்துவந்த என் தந்தை எனக்குத் தேறுதல் சொன்னார். அம்மா, நீ மட்டும் இல்லாமலிருந்தாக்க, இந்நேரம் நான் செத்த இடமும் புல் முளைச்சுப் போயிருக்கும்!...ம், நீ வந்து ஒரு பிடி சாப்பிடும்மா. தவமிருந்து அவதரிச்ச மகள் .ே ரவை கண் கலங்கினாலும், நானும் உன் தாயாரும் உன் காலடியிலே பழியாக்கிடப்போம். இனி நான் தானே உனக்கு அம்மா-அப்பா எல்லாம்!....வாம்மா.!...’
என் இதயம் வெடித்துவிடாதா?."அம்மா.!...’
“அம்மா" என்ற குரல் என் நெற்றித் திட்டத்தைத் தொட்டது.
அப்பா வந்துவிட்டார்!
அம்மாவால் இந்தப்படத்தை உடைத்துக் கொண்டு வரமுடியாதா?...
கொடிக்குக் காய் கணக்காது என்பாயே?
இது பழமொழி: கனத்தால் இனமாகுமாம்; பணத்தால் ஜனமாகுமாம்!
பூர்வீகம் எங்களுக்குப் புதுக்கோட்டைச் சமஸ்தானம். அங்கிருந்து உறவினர் ஒருவர் 'விருந்தாடி' வங்திருந்தார். அப்பாவைக் காட்டிலும் மூத்தவர்; ஆனாலும், திடகாத்திரத்தில், அப்பாவைவிட மட்டம். ஆள் மாப்பிள்ளைக் கணக்காகக் காணப்பட்டார். கையிலே காப்பிக் கொட்டைச் சங்கிலி. கழுத்திலே 'மைனர் சங்கிலி!' இந்த ஒரு சலுகைதான் ஒரு வேளே அவரை மாப்பிள்ளையாக மதிக்கவைத்ததோ! இன்னெரு விஷயம். அவருக்குப் போன மாதந்தான் கல்யாணம். இரண்டாங் கல்யாணம் நடந்தது.
அப்பாவும் அவரும் விருந்து உண்டார்கள்; தாம்பூலம் தரித்தார்கள். அமெரிக்க உளவு விமானம் ஏதோ சமீபத்தில் ருஷ்ய நாட்டுக்காரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது பாருங்கள், அதைப்பற்றி ஏதோ சந்தேகத்தைக் கிளப்பினர் வந்தவர். எங்கள் அப்பாவா அந்த விமா னத்தை இயக்கிச் சென்றார்? இல்லே, சுட்டவர்தான் என் தந்தையா? ஏதோ கேட்டார். ஏதோ சொன்னர்.
எனக்குச் சிரிப்பு மூண்டது.
"ராமையா! நீ ரொம்பவும் இளைச்சுப் போயிட்டியேப்பா! நான் சொல்றேன்; கேட்டுக்க . உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்சா , அதுவும் புருசன் வீட்டுக்குத் திருச்சிக்குப் பயணப் பட்டிடும். அப்புறம் நீ கிளப்புகளிலே சாப்பிடவேணும். இன்னம் மோசமாகிவிடும் உடம்பு. பேசாமல் நீயும் என்மாதிரி இரண்டாக் தாரம் கட்டிக்கிடு!...அதான் சிலாக்கியம்!" என்றார் என் சொந்தக்காரர்.என் மனம் வீம்மித் தாழ்ந்தது. சுவர் ஒண்டலில் நின்று, ஜன்னல் கம்பிகளினூடே என் செவிகளை அனுப்பினேன்.
அப்பா இதழ் மலர்ந்தார். நீங்க ஒண்ணு, என் கவலையெல்லாம் என்னோட குழந்தை காந்திக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேணும் என்கிறதுதான். காந்தி கழுத்திலே தாலி ஏறியிருச்சுதானத்தான் எனக்கு கிம் மதி வரும். என்னோட சாரதத்தின் ஆவியும் அமைதி காணும்! அப்பாலே, என்னைப்பத்தி எனக்குத் துளிகூட கவலை இல்லிங்க. கடை கண்ணியைக் கவனிச்சுக்கிட்டு ஒட்டலிலே சாப்பிட்டுக்கிட்டு காலத்தை ஒட்டிப் பிடுவேன்...சரி, வாங்க கடைத் தெருப்பக்கம் புறப்படலாமுங்க!”
இருவரும் புறப்பட்டார்கள். காலக் கடிகாரத்தின் முள் கண்ணுக்குக் காட்டாமல் தன்னுடைய பணியினே இயற்றிக் கொண்டிருந்தது.
என்னுள் ஏதேதோ சிந்தனைகள் கிளர்ந்தெழத் துடித்தன, அந்தச் சிந்தனைகளுக்குள்ளே நான் அமிழ்ந்துத் துடிக்கத் தொடங்கிய வேளேயில், வாசற்கதவு தட்டப்பட்ட ஓசை கேட்டது. கண்களிலே படர்ந்திருந்த இருளெனும் திரையைச் சுமந்தவளாகவே கடந்து சென்றேன். தாழ்ப்பாளைத் திறந்தேன்.
யாரோ ஒருத்தி நின்றாள் வயசு முப்பது இருக்கலாம்; இன்னும் சொல்லப் போனல், ஒன்றிரண்டு குறைவாகக் கூட இருக்கலாம். வறுமைச் சகதியில் முளைத்துப் பூத்த அழகுத் தாமரைப் பூவின் நினைவும் உதாரணமும் எனக்கு உண்டாயின. நான் கற்பனைக் கதை புனைபவளல்லள்; இருந்தும், ஏனோ-எப்படியோ உண்டாயின!
உன்னிப்புடன் வந்தவளே நோக்கினேன். அபிஷேகத்துக்குக் காத்து நிற்கும் சிலையைப் போன்று தோன்றினாள். என்னுள் என்னையறியாமலேயே பக்தி உணர்வு தோன்றியது. எனக்கே இந்நிலை விந்தையெனப்பட்டது. மீண்டும் பார்த்தேன். பார்த்த உருவிலே இன்னோர் உருவம் நிழலாடியது.
"அம்மா!"
வந்தவள் அழைத்தாள்.
என் அம்மா என்னே ஆட்கொண்டாள். எதிரே என் தாயைக் காண்பதைப் போலவே நான் உணரலானேன். பக்தியும் பாசமும் பெருக்கெடுத்தன.
அவள் ஏழையாம். ஆதரவு பிடிப்பாய் இருந்த அன்னேயும் அப்பாவும் அண்மையில்தான் காலஞ் சென்று விட்டனராம். மாம்பலத்தில் வீடாம். பிறந்த மண் தஞ்சாவூராம். பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பிழைக்க வழி கிடைக்குமா என்று அறிந்து போக வந்திருக்கிறாள்.
"உங்களுக்குக் கல்யாணம்..."
நெற்றித் திலகம் என் கேள்விக்குத் துணை கின்றது கழுத்தின் 'வெறுமை’ எனக்கு ஆத்ம பலம் ஈந்தது.
உதடசைத்தாள். கன்னி கழியாப் பெண் அவள் “உங்க மாதிரி இன்னும் அஞ்சாறு இடம் கிடைச்சால் என் வயிற்றுக்கும் குடக் கூலிக்கும் கட்டுபடியாகும். வறுமையை என்னலே தாளவே முடியலே. உயிரை மாய்ச்சிக் கிடலாம்னு கூட சில சமயங்களிலே தோணுது அம்மா" கண்ணீரின் வரலாறு.
அப்பாவை அழைத்தேன்; தோன்றினர்-மனக் கண்ணிலே வந்த உறவுக்காரர் சொன்ன ஆலோசனையும் வந்து நின்றது. இதோ, இந்த அபலப் பெண் . ஒன்றை நினைத்தேன். அபலைப் பெண்ணுக்குக் கொழுகொம்பான அப்பாவையே அளித்துவிட எண்ணினேன்.
நானும் அவளும் உண்டோம்.
சங்கீத அப்பியாசம் குறித்துத் தந்தையின் யோசனையைக் கேட்டுச் சொல்வதாகத் தெரிவித்தேன். பத்து ரூபாய்த்தாள் ஒன்றையும் நீட்டினேன். நாளைக்கு அவள் வந்து விடுவாள்!
“ஆமா, உங்க பேரு”
“நீலாட்சி”
மணவினை அழைப்புக்களில் விலாசம் எழுதுவதில் முனைந்திருந்தார் அப்பா.
சீதளக் கதிர்கள் புள்ளிக் கோலம் இட்டுக் கொண்டிருந்தன.
“அப்பா.”
“என்னம்மா”?
‘உங்க உடம்பு ரொம்ப இளைச்சுப் போச்சு அப்பா,’ சிணுங்கல் இருமல் ஒன்றை முதலில் வெளிப்படுத்திய பின், மெல்லிய சிரிப்பைக் கொட்டினர் அவர். “அதாலே இப்ப என்னம்மா?”.. என்றார்.
“நீங்க என்னப்பா இப்படிக் கவலை இல்லாமப் பேசுறீங்களே?”
“எங்கவலயெல்லாம் உம்மேலேதாம்மா! நீ சந்தோஷமா இருந்தா, அதாம்மா எனக்குச் சந்தோஷம், நிம்மதி! நீ குடியும், குடித்தனமுமா இருக்கிறதை உன்னோட புகுந்த வீட்டிலே வந்து பார்த்து மகிழ்ந்து திரும்புற
திலே உண்டாகக் கூடிய நிம்மதி ஒண்ணிலேயே நான் என் சொச்சக் காலத்தையும் கழிச்சிப்பிடுவேன் காந்தி!...”
"அப்படின்னா, நீங்க என்னைப் பார்க்கிறதுக்கு எப்ப வாச்சுந்தான் வருவீங்களா அப்பா?..."
"பின்னே என்னம்மா?...அது தானே அம்மா முறை?...நானும் உன்னோடவே வந்திட்டா, அப்புறம்ஊர் உலகம் என்னை இழிவாப் பேசாதா?...மகள் வீட்டுக்கு அப்பன்காரன் விருந்தாடியாட்டம் வந்து திரும்புறதுதான் கடை முறைப் பழக்கம்! ...நான் அங்கே வந்தா, இந்தக் கடையை யார் பார்த்துக்கிடுவாங்களாம்?"
"உங்களுக்குச் சாப்பாடு.”
“பட்டணத்திலே ஆயிரம் ஒட்டல் கடை இருக்கே காந்தி?”
"அந்தச் சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்கிடாது அப்பா!"
“அதெல்லாம் நாளா வட்டத்திலே சரிப்பட்டுப் போயிடும் காந்தி!"
"ஊஹூம்! ..."
"சரி; இப்ப என்ன என்ன காந்தி செய்யச் சொல்லுறே...?”
நான் எப்படிச் சொல்லப் போகிறேன்? நேற்று அப்பா வீட்டில் இருக்கையிலேயே நீலாட்சி வந்தாள். அப்பா அவளைப் பார்த்தார். சங்கீதப் பயிற்சியின் விவரத்தை மட்டிலும் அப்போதைக்குச் சொல்லி, வைத்தேன். அதுக்கென்ன, திருச்சிக்கே அழைச்சிட்டுப் போயிடேன். நேரமிருந்தா, மாப்பிள்ளையையும் சங்கீதம் கத்துக்கச் சொல்லேன். அவரும் பெரிய பண்ணையார்
வீட்டுப் பிள்ளை. சங்கீதத்தாலே பயிர் பச்சை செழிப்பமா வளரும்னு வேறே பேப்பர்க்காரன் சொல்றான்!” என்றார்.
ஆனால், நீலாட்சியிடம் நான் உரையாடல் நிகழ்த்திய அந்தரங்கம் குறித்து அப்பாவிடம் எப்படித் தெரிவிப்பது?
அம்மாவை எண்ணித் தொழுதேன்; தந்தையின் கலம் காணவேண்டுமென்ற ஒரே குறிக்கோளில் நான் சுழன்றேன்.
“அப்பா”!
“அம்மா”!
வியர்வை வழிந்தது. நாசுக்காகச் சொல்லிவிட்டேன்.
அப்பா விரக்தி தொடுத்துச் சிரித்தார். “பணம் காசு நூறு இருநூறு கொடுத்திடலாம், வேணுமானால் வேறிடத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செஞ்சு வைக்கலாம், பாவம் நீலாட்சி!”
அப்பாவைப் பார்த்தேன். ஒப்புக்குச் சிரித்த முகம் ஏந்தியிருந்தார். சோகம் தவழ்ந்த முகத்தோடு சதா சர்வ காலமும் திகழும் அவரை நான் மறக்க முடியுமா? அம்மாவின் படத்தையே வெறித்துப் பார்த்த வண்ணம் வேதனையின் மடியில் சிரம் பதித்துக் கிடந்த நிகழ்ச்சிகள் ஒன்றா, இரண்டா?
வேளைக்கு ஒரு பேணுதலும் நாளைக்கு ஒரு போஷனையுமாகக் கவனித்து வந்த அம்மாவின் ஸ்தானத்தில் இருக்கத் தகுதி வாய்ந்தவள் லோட்சி ஒருத்திதான்! அதிருஷ்டம் தேடி வந்திருப்பதாகவே அவள் கருதுகிறாள்!
"அப்பா, நீங்க நீலாட்சியைக் கல்யாணம் கட்டிக்கிற தாய் வாக்குக் கொடுத்தால்தான் நான் மணவறையில் குந்துவேன்!”வீறு கொண்டு பேசினேன் நான்.
‘அம்மா!’
அலறினார் அவர்.
"நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் அம்மா! முதலிலே உன்னோட கல்யாணம் நடந்திடட்டும்!”
அப்பான்னா அப்பா...நல்ல அப்பா...தங்க அப்பா. நான் ' பேபி' ஆனேன்!
பெற்றவள் வாழ்த்தினாள். உடல் பதித்து மனம் பதித்துக் கை தொழுதேன். என் கழுத்தில் "மங்கல நாண்” விளங்கியது.
அத்தோநோடு நான் திருச்சிக்குப் புறப்பட வேண்டுமாம்!-நாள், நட்சத்திரம் பார்த்துவிட்டார்கள். புது மணமும் புது மனமும் பெற்ற நான் அந்த ஒரு கட்டத்தை நினைவுக்குக் கொணர்ந்தேன். ரத்தம் முழுவதும் மண்டைக்கு ஓடி மண்டை வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது 'என் அப்பாவைப் பிரிஞ்சு நான் எப்படி இருக்கப் போகிறேன்? அம்மாவை இழந்த நான் அப்பாவையும் பிரிஞ்சு அனாதையாக இருக்க வேணுமா? இதுதான் என்னுடைய தலை விதியா?...என்னுடைய கண்கட்டு இனிமே அவிழவே அவிழாதா? ' கடவுளே!.-புலம்பினேன்!
வீடு 'ஜே ஜே' என்றிருந்தது.
அப்பா வந்தார். அந்தி சந்திப் பொழுதின் அந்தமே தனிப் பண்பு கொண்டது. தம்முடைய திருமணத்துக்கு நாள் குறிப்பதற்குக் குறித்திருந்த கெடு இன்றுதான். லோட்சியை நான் மறக்கவே முடியாது! சின்னம்மா!... சித்தி!...இரண்டாவது அம்மா!'-மேனி சிலிர்த்தது.
“அப்பா" என்று நானே கூப்பிட இருந்தேன். அதற்குள் அவர் முக்திக் கொண்டார். "அம்மா காந்தி கொஞ்சம் இப்படி வாம்மா!" அமைதி கனிந்தது.
உறை ஒன்றைத் தந்தார்.
"அம்மா!
என்னை மன்னித்து விடு. என்னில் உயிர் வாழும் உன் அம்மாவைப் பிரித்து விடாதே தாயே!..உன்னைப் பிரிந்தும் நான் வாழச் சக்தியற்றவன். இன்றிரவு, நம்முடைய பாத்திரக் கடையை விலைபேசி முடிக்கப் போகிறேன். இனி எப்போதும் உன்னுடனையே இருப்பேன். ஆண்டவன் நல்ல வழி காட்டிவிட்டான். மாப்பிள்ளைக்கும் இதில் பெருமையுண்டு. நீலாட்சி நல்ல பெண். அவளைத் தகுந்த இடத்கில் வாழ வழி செய்கிறேன்.
இப்படிக்கு,
உன் அப்பா!
‘அப்பா!’ அப்பாவின் தோள்களில் சாய்ந்தேன்; கண்ணீர் ஓடியது. நிமிர்ந்தேன். விழிகளே விரித்தேன். அப்பாவின் உருவிலே அம்மாவையூம் தரிசித்தேன்! "அப்பா!... அம்மா"-புத்தொளியின் புத்துணர்வு படர்ந்தது. கண்களை விரித்து விழித்துப் பார்த்தேன். ஆமாம்; புது ஒளி! "கண்கட்டு" அகற்றப்பட்டுவிட்டதா? "கண்மயக்கம்" அகன்று விட்டதா?..
ஆஹா...!
ஈஸ்வரா...!