உள்ளடக்கத்துக்குச் செல்

தம்ம பதம்/புப்ப வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் நான்கு

புஷ்பங்கள்


44. இந்த உலகத்தையும், தேவர்களுடைய எமலோகத்தையும் வெற்றி கொள்பவர் யார்? (பூந்தோட்டத்திலே) பழக்கமுள்ளவன் நல்ல மலர்களைக் கண்டுபிடிப்பதுபோல், தெளிவாக விளக்கியுள்ள தரும மார்க்கத்தைக் கண்டு பிடிப்பவர் யார்? (1)

45. இந்த உலகத்தையும், தேவர்களுடைய எமலோகத்தையும் பயிற்சியுள்ள சீடன்[1] வெற்றி கொள்வான். பழக்கமுள்ளவன் நல்ல மலர்களைக் கண்டு பிடிப்பது போல், தெளிவாக விளக்கியுள்ள தரும மார்க்கத்தைப் பயிற்சியுள்ள சீடன் கண்டு பிடிப்பான். (2)

46. நீரில் குமிழி போலவும், கானல் நீர் போலவும் உள்ள இந்த உடலின் தன்மையை உணர்ந்து கொண்டு, அவன் மாரனின் மலர் அம்புகளை அழித்து விட்டு, எமராஜனின் கண்ணுக்குப் புலனாகாத இடத்திற்குப் போய்விடுவான். (3)

47. உறக்கத்தில் ஆழ்ந்துள்ள கிராமத்தைப் பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகிறது; அது போல் மனிதன் (வாழ்க்கையில் இன்பங்களாகிய) மலர்களைப் பறித்துக் கொண்டு அதிலே ஈடுபட்டிருக்கும் போதே மரணம் அவனை அடித்துக் கொண்டு போய்விடுகிறது. (4) 48. மனிதன் (இன்ப) மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவன் தன் இன்பங்களில் திருப்தியடையுமுன், மனம் கலக்க முற்றிருக்கும் போதே, மரணம் அவனை வென்றுவிடுகிறது. (5)

49. மலரிலிருந்து தேன் சேர்க்கும் தேனீ, மலருக்குச் சேதமில்லாமல், அதன் வண்ணமும் மணமும் சிதையாமல், தேனை மட்டும் கொண்டு செல்வது போலவே, முனிவன் கிராமத்தில் நடமாட வேண்டும். (6)

50. முனிவன் தன் குறைகளையும், தான் செய்யத் தவறியவைகளையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்; பிறருடைய குறைகளையும், பாவச் செயல்களையும் அவன் கவனிக்க வேண்டாம். (7)

51. செய்கையில் காட்டாமல் ஒருவன் வாயால் மட்டும் மதுரமாகப் பேசுதல், அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனை யற்றிருப்பதுபோல், பயனற்ற தாகும். (8)

52. சொல்லிய வண்ணம் செயல்புரியும் ஒருவனுடைய மதுரமான பேச்சு, அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனையும் பெற்றிருப்பது போல், பயனளிப்பதாகும். (9)

53. புஷ்பக் குவியலிலிருந்து பலவித மாலைகள் தொடுக்கப் படுவதுபோல், அநித்தியமான மனிதனும் இந்தப் பிறவியில் பலவித நற்கருமங்களைச் செய்ய முடியும். (10)

54. புஷ்பத்தின் வாசனை காற்றை எதிர்த்து வீசாது; சத்னம், தகரம்,[2] மல்லிகை முதலிய (எல்லா) மலர்களின் மணமும் அப்படித்தான். ஆனால் நன்மக்களின் (புகழ்) மணம் காற்றையும் எதிர்த்து வீசுகிறது. நல்ல மனிதனின் புகழ்மணம் நாலு திசையிலும் பரவி நிற்கிறது. (11)

55. சந்தனம், தகரம், தாமரை, ஜவந்தி ஆகிய புஷ்ப வகைகளின் நறுமணம் நற்குணத்தின் நறுமணத்திற்கு ஈடாகாது. (12)

56. தகரம் அல்லது சந்தனத்தின் வாசனை அற்பமானது; நற்குணமுடையவர்களின் உத்தமமான உயர் மணம் தேவர்களிடத்தும் சென்று வீசுகிறது.

57. இத்தகைய சீலங்களுடையவர்களாய், விழிப்புடன் கருத்தோடு வாழ்பவர்களாய், பூர்ண ஞானத்தால் பொலிவுற்று விளங்குவோர்களிடம் செல்ல மாரனுக்கு வழி தெரியாது.

58. வழியிலே கொட்டிய குப்பைக் குவியலிலிருந்து மனத்திற்கினிய மணத்துடன் தாமரை மலர்கிறது.

59. அதுபோலவே, குப்பை போலுள்ள குருட்டு மக்களிடையே மெய்ஞ்ஞானச் சுடரான புத்தரின் சீடன் தனது ஞானத்தால் ஒளி வீசி விளங்குகின்றான். (16)

  1. பௌத்த தருமத்தில் பயிற்சி பெறும் சீடர்களின் தகுதிக்குத் தக்க நான்கு படிகள் உண்டு. முதற்படியிலுள்ளவன் சரோதபன்னன்; இரண்டாம் படியிலுள்ளவன் ஸக்ருரதகாமி; மூன்றாம் படியிலுள்ளவன் அநாகாமி; நான்காம் படியிலுள்ளவன் அருகத்து. இங்கு சீடன் என்றது கடைசியிலுள்ள அருகத்துப் படியை அடைந்தவனைக் குறிக்கும். அருகத்து ஜீவன் முக்தனுக்கு நிகரானவன்.
  2. தகரம்–மணமுள்ள ஒரு வகைச் செடி: இதிலிருந்து வாசனைப் பொடி தயாரிப்பதுண்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/புப்ப_வக்கம்&oldid=1381526" இலிருந்து மீள்விக்கப்பட்டது