உள்ளடக்கத்துக்குச் செல்

கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 16

விக்கிமூலம் இலிருந்து

16


“யக்கோ! உங்கள அவங்க கையோடக் கூட்டியாரச் சொன்னாங்க!” என்று கன்னியப்பன் வந்து நின்றான்.

அன்றாடம் இந்த வயலுக்கும் அந்த வயலுக்குமாக நடந்து கால்கள் வலிக்கின்றன. அதுவும் முதல் நாள்தான் இவர்கள் வயலில் நடவு செய்தார்கள். எட்டு பேர் நடவு. அரிசியும், வெஞ்சனமும் கொடுத்து, அத்தனை ஆட்களுக்கும் மீசைக்காரர் வீட்டிலேயே சமையல் ஏற்பாடு செய்தார்கள். சாந்திதான் உதவினாள். மீசைக்காரர் வயலில் வாரம் முன்பே நட்டு விட்டார்கள்.

அவர்களுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகம். ஏதேனும் சிறு சந்தேகம் வந்தாலும் லட்சுமி சிட்டுக் குருவி போல் ஓடி வந்து விடுகிறாள்.

"அக்கா, திரம் மருந்து எவ்வளவு போடணும்? தீப்பெட்டிலதான அளந்து போடணும் ? மாமா இல்லேங்கறாரு... அக்கா நீங்களே வந்து காட்டுங்கக்கா...”

இவள் கை வேலையாக இருப்பாள். பொழுது போயிருக்கும். மீசைக்காரர் வாயிலில் நிற்பார். சிநேகங்களில் இப்படிச் சிறு சிறு முட்கள் இருக்கத்தான் இருக்கின்றன. என்றாலும் அம்மா அவர்கள் சாதியைப் பற்றிய குத்தலைப் பேச்சில் இழையோட விடுவது ரசிக்கும்படி இல்லை.

எலும்பில்லா நாக்கு எதுவும் பேசும். அப்படி அந்தத் தெரு பேசும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்குள், அந்தத் தெரு உறவுகளில் அரச பொரசல் விழுந்து விட்டது. அவர் பணம் கொடுத்திருக்கும் செய்திக்கும் கண் மூக்கு காது முளைத்திருக்கும்.

"ஏம்பா, நேத்துத்தான பார்த்தன். நல்லாதான இருந்திச்சி? என்ன சேதி இப்ப?”

“அங்க ஓரிடத்தில நட்ட பயிரில வைரஸ் நோய் வந்திருக்குமோன்னு பயப்படுறாரு. மோனாகுரோட்டபாஸ் அடிக்கணும்னு விவசாய ஆபிசில சொன்னாங்களாம்...”

“நிசமாலுமா? நீதா பெரி அனுபவமுள்ள ஆளாச்சே? நோயா வந்திருக்கு?”

"இல்லிங்க வேப்பம் புண்ணாக்கு யூரியாவில் கலந்து வச்சா சரியாப் போயிடுங்க. கொஞ்சம் அந்த எடத்தில குத்து கம்மியாக இருந்திச்சி. ரெண்டு நாக்கழித்து அந்தப் பொண்ணு வந்திச்சி. ஆபீசிலேந்து கத்தையா நோட்டீசு வாங்கிப் படிச்சிட்டு ஒண்ணொண்ணாப் பாக்குறாரு...” என்று சிரிக்கிறான்.

“இப்ப வாரதுக்கில்ல. வேலை முடிச்சிட்டோ, பொழுதோடயோ வந்து பாக்குறேன்னு சொல்லப்பா. யூரியாவும் வேப்பம் புண்ணாக்கும் கலந்து அடுத்த வாரம் வைக்கணுமில்ல... நீ ஒன்னு செய்யி. என்ன வுட சாந்தி அனுபவப்பட்டவ. அவங்க வூடும் இவ்வளவு தொலுவில்ல. அவளைக் கூப்பிட்டுக் காட்டு” என்று அனுப்புகிறாள். பிள்ளையே பெற்றிராதவள் ஒரு கைப்பிள்ளையை வைத்துக் கொண்டு தடுமாறுவது போலிருக்கிறது!

வீட்டு வேலை முடிய மணி பன்னிரண்டாகிறது. காலையில் பழைய சோறு உண்டது திம்மென்றிருக்கிறது. வடித்த கஞ்சியில் உப்புக் கல்லைப் போட்டு அருந்துகிறாள். விடுவிடென்று கொல்லைக்கு நடக்கிறாள். கடலைப் பயிர் பரந்து சிறுசிறு இலைகளுடன் கண் கொள்ளாக் காட்சியாகப் பசுமை விரித்திருக்கிறது. ஊடுபயிர்... பயிறு, உயரமாக அகன்ற பெரிய இலைகளுடன் தன்னை இனம் காட்டிக் கொள்கிறது. அடுத்த வாரம் களை எடுத்து மண் அணைந்து ஜிப்சம் போட வேண்டும். இது அப்பன் பொறுப்பு. அவரே வண்டி ஒட்டிச் சென்று எடுத்து வந்து விடுவார். இப்போதெல்லாம் உடம்பு அவ்வளவு மோசம் இல்லை...

வெயில் உரைக்கவில்லை. உடமையாளில்லாமல் எழுத்துக் குத்து இல்லாமல், யாரோ ஒருவர், வீட்டுக்குக் கொண்டுவந்து பணம் கொடுத்தார். பிரியமாக, உரிமையுடன் அவளை வந்து பார்க்கச் சொல்கிறார். கால்கள் மனோ வேகமாக இழுத்துச் செல்கின்றன. எங்கே தரிசு, எங்கே பச்சை, எங்கே ஆடு மேய்கிறது என்று எதையும் பார்க்காமல் அவள் நடக்கிறாள்.

கழனிப்பக்கம் யாருமே இல்லை. பம்ப் ரூம் பூட்டிக் கிடக்கிறது. நாற்றுக்கள் பிடித்து, தலை நிமிர்ந்து நன்றாகத்தானே வளர்ந்திருக்கிறது.

வரப்பிலே நடந்து பார்க்கிறாள். முழுப் பரப்பையும் பார்க்கும் பொறுமை இல்லை. நோயொன்றும் இல்லை. கன்னியப்பன் சொன்னாற் போல் விட்டுப்போன இடத்தில் மூன்று நாட்களான பின் விட்டு வைத்திருந்த நாற்றுக்களை ஊன்றியிருக்கிறாள்.

அது வளர்ச்சி குறைந்து தெரிகிறது. களைக்கொல்லி போட்டு, நாற்றுக்களை அஸோஸ்பைரில்லத்தில் நனைத்து நன்றாகவே நடவு செய்தார்கள் இருபது ஆட்கள். கிணற்றடிக்கு வருகிறாள். கிணற்றில் தண்ணீர் தெளிந்து இருக்கிறது. ஒராள் ஆழம் இருக்கும். நான்கடி கூட இல்லை கைப்பிடிச் சுவர். இத்தச் சுவருக்கும் பூசவில்லை. இந்தத் தண்ணீர் கற்கண்டு போல் இருக்கிறது. உப்பு, சவர், எதுவும் இல்லை. இங்கே வந்தால் தண்ணீர் குடிக்கத் தோன்றுகிறது. இவர்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணீர் கூட இவ்வளவு நன்றாக இருக்காது. கிணற்றில் இறங்கப் படி வைத்திருக்கிறார்கள். ஆனால், செவந்திக்கு அந்த நேரத்தில் இறங்கத் தோன்றவில்லை.

அப்படியே நடந்து, செல்லியம்மன் கோயில் பக்கம் வருகிறாள். அது புளியந்தோப்பாக இருந்த காலம் அவளுக்கு நினைவு இருக்கிறது.

கோயில் முன் மைதானம். பெரிதாக இருந்தது. இப்போதுபோல் பஸ் போகும் சாலை இல்லை. ஒற்றையடிப் பாதைதான். கோயில் முன் ஆடி மாசம் விழா நடக்கும். கூத்து நடக்கும். வாணுவம் பேட்டைக்காரர் ஒருவர் வந்து ஆஞ்சநேயர் வேசம் கட்டுவார். அண்ணன் அவரே மாதிரி வீட்டில் வந்து எல்லோர் முன்பும் ஆடிக்காட்டுவான். அண்ணன் எவ்வளவு வாஞ்சையாக இருந்தான்.

இங்கு புளியம் பிஞ்சு உதிர்ந்து கிடக்கும். .. பொறுக்கித் தின்று கொண்டு ஸி.எஸ்.ஐ. ஸ்கூலுக்கு நடந்து செல்வார்கள். அம்சு, அவள் அக்கா பாக்கியம், தணிகாசலம் என்ற பையன். வெட வெட என்று எல்லோரும் கீழத் தெருவில் இருந்து பள்ளிக் கூடம் சென்றார்கள். முட்டக் கண்ணு டீச்சர், மூன்றாவதில், இவள் முடி சீவிக் கொண்டு வரவில்லை என்றால் தண்டனை கொடுப்பாள். சின்னம்மா போன பிறகு அம்மா இவளுக்கு ஒழுங்காக முடி சீவி விட்டதே இல்லை. இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கிறது?

சரோ முதல் வகுப்புக்குப் போகும்போதே, முடி சீவி, இரட்டைப் பின்னல் போட்டு ரிப்பன் பூப்போல் கட்டிக் கொள்ள வேண்டும் என்பாள். இவளுக்கு அந்த முடிச்சு சரியாக வராது. பள்ளிக்கூட நாட்களில் பூ வைத்துக் கொள்ள மாட்டாள். மற்ற நாட்களில் கனகாம்பரம், மல்லிகை வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாள். அம்மாவுக்குக் கூடக் கொடுக்கக் கூடாது. இரட்டைப் பின்னல்களிலும் வளைத்து வைத்துக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பாள். சிறிது விவரம் தெரிந்ததும் தானே சிங்காரித்துக்கொள்ளப் படித்துவிட்டாள். அதே சி.எஸ்.ஐ ஸ்கூலில் பத்து வகுப்புக்கள் வந்திருக்கின்றன. அப்பாவைக் கேட்டு மை, பல வண்ணப் பொட்டுகள், கீரிம், பவுடர், நகச்சாயம் எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பாவாடை, தாவணிதான் சீருடை. நீலமும் வெள்ளையும். அந்தத் தாவணியும் சட்டையும், அன்றாடம் சோப்புப் போட்டுத்துவைத்து மடிக்க வேண்டும். தாவணி மடிப்பும், தொங்கவிடும் மேலாக்கும் சிறிது கூடக் கலையக் கூடாது. முகம் திருத்தி மை இழுத்துக் கொள்வதற்கும் முடி வாரிப் பின்னல் போட்டு முடிந்து கொள்வதற்குமே அரை மணியாகிறது. லீவு நாட்களில் உச்சியில் ஆணி அடித்துப் பூவைத் தொங்க விட்டாற் போல் ஊசியில் செருகிக் கொண்டு போகிறாள். இன்று காலை சைக்கிளில் சென்றிருப்பது நினைவில் வருகிறது.

ஊடே இனம்புரியாத ஒரு கவலை பரவுகிறது. அவள் சாலையைக் கடக்கையில் விர்ரென்று நாலைந்து சைக்கிள்கள் போட்டாப் போட்டியாய்ப் போவது போல் தோன்றுகிறது. பையன்களும், ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள் என்று புரிகிறது. கண்களை ஊன்றிப் பார்க்கிறாள். லாரிகளும் கார்களும் பஸ்ஸும் போகும் சாலை அது.

பூத் தொங்கினதும், பெரிய பூப் போட்ட தாவணியும் தெரிந்தன. காலையில் சரோ இதே உடைதான் போட்டிருந்தாளா? பள்ளிக் கூடம் இல்லை என்றால், இப்படி விடலைகளுடன் சைக்கிளில் சுற்றுகிறாளா?

சின்னம்மா பெண் இங்கு வந்து அழுததும் சின்னம்மா கெஞ்சியதும் துருத்திக் கொண்டு நினைவுச் செதில்களிடையே காட்சிப் படங்களாய் எழும்புகின்றன.

'யாரோ தொட்டுட்டாப் போல. அடிச்சி வெரட்டிட்டாங்க. இங்க கொண்டாந்துவுட என்ன தைரியம்?'

“இவளே நடத்த இல்லாதவ. மகளையும் அதே வழிக்கு வுட்டுட்டா...” அன்று சின்னம்மாவின் முதுகில் விழுந்த சாட்டையடி தன் மீதே விழுந்து விட்டாற்போல் குலுங்குகிறாள். சின்னம்மா கண்ணகி போல் தலையை விரித்துக் கொண்டு மண்ணைவாரி வீசிய காட்சி அவளை ஒரு சாணாகக் குறுகச் செய்கிறது.

இந்தப் பெண் என்ன கலகத்துக்கு வழி செய்கிறாள்? புளிய மரத்தில் புளி உலுக்குகிறார்கள் போலும்?

வருடத்துக்குப் புளியம் பழம் இந்தக் குத்தகைக்காரியிடம்தான் அவள் வாங்குவாள். இது தித்திப்பும் புளிப்புமாக மிக ருசியாக இருக்கும்.

“புளியம்பழம் வாங்குறீங்களா? உலுக்குறாங்க..?”

மேலத்தெரு சிங்காரத்தம்மா கேட்கிறாள். இவளுக்கு அது காதிலேயே விழாமல் தேய்ந்து போகிறது. புளியாவது புளி? இங்கே குடி முழுகுவது போலல்லவோ காரியங்கள் நடக்கின்றன. சரோவுக்குச் சைக்கிள் பழக்குவதிலேயே அவளுக்கு உடன்பாடில்லை. ஆனால், எல்லாம் அவள் பார்வைக்கு மீறியதாகவே நிகழ்கின்றன. எட்டு வயசிலேயே குட்டி சைக்கிளை அப்பா கடையில் இருந்து எடுத்து வந்து பழகிவிட்டாள். ஏழாவதிலிருந்து சைகிளில்தான் பள்ளிக்கூடம். இவளுக்கென்று, குறுக்குப் பார் இல்லாத வளைவான கைப்பிடி, சீட்டு எல்லாம் உள்ள சைக்கிள். இப்போது சரவணனும் அதில் போகிறான். அடுத்த வருசம் தனக்குப் புதிய சைக்கிள் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

கீழத் தெருவில், மூக்காயிப்பாட்டி பேத்தி ரஞ்சிதம் எட்டுவரை படித்து நின்றுவிட்டாள். எந்தப் பெண்ணும் சைக்கிளில் போகவில்லை.

வேகு வேகென்று வீட்டுக்கு வருகிறாள்.

சரோதாவணியை எடுத்து மடித்து விட்டு, வெறும் மேல் சட்டையும், பாவாடையுமாக இருக்கிறாள். வெளியில் செல்லும் போது தாவணி அணிய வேண்டும் என்பது பாட்டியின் சட்டம்.

“ஏண்டி? ரோட்டுல அத்தினி வேகமாக சைக்கிள்ள வந்தீங்க... அந்தப் பய்யங்க ஆருடீ?” “ஆ... எந்தப் பய்யங்க?”

“உங்கூட சைக்கிள்ள வந்தவங்க?”

“எங்கூடயா? ரோட்டுல ஆயிரம் பேரு போவாங்க. அவங்க கூட வர்றவங்களா? இது கதயாருக்குதே?”

“சீ. பேசாதே! ஏதோ சினிமால வர்றாப்புல வேகமாக விட்டுப்போட்டுப் போனிங்க, எங்கண்ணு பொய்யா?”

“ஆமா... காத்து இந்தப் பக்கம் அடிச்சிச்சி. வேகமாகப் போனே... அதுக்கென்ன?”

“நிசமா அவனுவள உனக்குத் தெரியாது?”

“இதென்னம்மா, உங்கூட பேஜாராருக்குது! அவங்க யாரோ பாய்ஸ்... போனாங்க. நா அவங்கள ஏன் பாக்குறே?”

“சரோ, அம்மாக்கிட்டப் பொய் சொல்லாதே! உனக்கு நிச்சயமாத் தெரியாது?”

“ஐயோ, என்னம்மா இது? நா அந்தப் பக்கம் நித்தியானந்தம் மாஸ்டர் வீட்டுக்குப் போயி கொய்ச்சின் ஆன்சர் மாடல் வாங்கிட்டு வந்தேன். இதபாரு உனக்கு ஒரெளவுந் தெரியல.. சொன்னாலும் புரியல. என்ன விட்டுடு!”

செவந்திக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கனக்கிறது. கிணற்றடியில் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். சேலை அழுக்கு, கசமாக இருக்கிறது. அவிழ்த்து வேறு மாறிக் கொள்கிறாள். பகலில் ஒன்றும் சரியாகச் சாப்பிடவில்லை. தட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு சோற்றையும் குழம்பையும் ஊற்றிக் கொள்கிறாள்.

கையில் ஒரு புத்தகத்துடன் சரோ முற்றத்தில் குந்தியிருக்கும் பாட்டியிடம், “பாட்டி எனக்குப் பசிக்கிது...” என்று சொல்கிறாள்.

“ஏ, பாட்டிக்கிட்ட கேப்பானே? சோறு இருக்கு. போட்டுக்கிட்டுத் தின்ன வேண்டியதுதான?”

“நா உங்கிட்டக் கேக்கல. எப்பப் பார்த்தாலும் சோறு சோறு சோறு... ஒரு பூரி கிழங்கு சப்பாத்தி ஒன்னும் பண்ணுறதல்லை. உக்கும்” என்று மகள் முகத்தைத் தூக்கிக் கொண்டு போகிறாள்...

நீலவேணி டிபன் கடையில் நினைத்த போது போய்க் கேட்கக் கூடாது என்று ஒரு கண்டிப்பு உண்டு. கையில் காசில்லாமல் போனால் அவள் கணக்கு வைக்க மாட்டாள்தான் என்றாலும் அப்படிச் செய்யலாமா?

“சோறு என்ன அவ்வளவு கொறஞ்சிப்போச்சா? தண்ணில வேவுற சோற்றுக்கே உழைக்க வேண்டி இருக்கு. நெதம் எண்ணயில வேவுற பூரிக்கு நா எங்க போவம்மா? உங்கப்பா ரோக்க ரோக்கா பணம் கொண்டாந்து குடுத்தா, நானும் சொகுசா குந்திக்கிட்டு உனக்கு விதவிதமாச் செஞ்சித் தரலாம். இதா அரிசி ஊறப் போட்டிருக்கு. ராவுல உக்காந்து அரப்பே. இதுக்கு மேல எனக்குச் செய்யத் தெரியாது. யாரு செய்வாங்களோ செஞ்சித்தரச் சொல்லு..."

ஆத்திரத்துடன் கூறிவிட்டுத் தட்டுச் சோற்றை உருட்டிப் போட்டுக் கொள்கிறாள். தண்ணீரைக் கடகட வென்று குடிக்கிறாள். சரோ புத்தகத்தை வைக்காமலே வெளியேறப் போவதைப் பார்த்து,

“டீ. சரோ..." என்று கத்துகிறாள். “வேணி வீட்டில் போயி டிபன் காசில்லாம கேக்கக் கூடாது?” -

"நா ஒன்னும் அங்க போவல!”

“பின்ன எங்கப் போற சொல்லிட்டுப் போ.”

“எங்கியோ போற. உனக்குத்தா அக்கர இல்லியே? இந்த வூட்டுக்கு ஏண்டா வரோமின்னு இருக்கு சே".

"அக்கற இல்லாமத ஆண் பாடு பெண்பாடுன்னு உழக்கிறனா? யாருக்கடி நான் பாடுபடுறதெல்லாம்? பொம்புளப் புள்ள, தாய் சொல்லுக்கடங்கணும்டீ எதானும் சிலும்பிடிச்சின்னா, வெளில தல காட்ட மூஞ்சியில்ல. இந்தத் தெருக்காரங்களே நார் நாராக் கிழிச்சிடுவாளுவ கண்ணு, மூஞ்சி சுண்டிப் போச்சி. வா, தயிரு வச்சிருக்கு, நல்ல கெட்டியா. சோறு போட்டுக் கொண்டாற சாப்பிடும்மா... காலம நாலு இட்டிலி சாப்பிட்டுப்போனது. படிப்பு படிப்புன்னு... என்ன படிப்போ... ஒடம்பு கருத்து எளச்சி போச்சி.... வா கண்ணு...”

அவளை உள்ளே கூட்டி வந்து சோறு போடுகிறாள்.

இரண்டுங்கெட்டான் வயசு, இவளுக்குப் புரியாத படிப்பு. ஒரு புறம், இவளோடு பிணைந்திருக்கும் மரபின் அழுத்தங்கள்....

“அடுத்த வாரம் பரிட்சை முடிஞ்சதும், பாட்டியோடு திருவள்ளுர் அத்தை வீட்டில் போயி ஒரு வாரம் இருந்திட்டு வாங்க. அந்த அத்ததா, வரல வரலன்னு குறைப்படுறாங்க...”

“அங்க போயி என்ன செய்யட்டும்? கொல்லை கழனி சாணி சகதின்னு இதே கதைதான். நா மாமா கூப்பிட்டிருக்காங்க, மதுரைக்குப் போகப் போறேன்.”

“அவன் சும்மா வாய்ச் சொல்லுக்குச் சொல்லிருப்பா... போயிப்பார்த்தாத் தெரியும். சரோ அதெல்லாம் நெஞ்சிலேந்து வந்ததில்லை?”

"இல்ல அங்க அவரு சுலபமா என்ன பாலிடெக்னிக்ல சேர்த்திடுவாரு. மூணு வருசம் எலக்ட்ரிகல் எல்க்ட்ரானிக்ஸ், இல்லாட்டி மெக்கானிக்கல் படிப்பே. நல்ல மார்க் எடுத்தா. ப்ளஸ் டு சேர்ந்து பி.இ. கூட படிக்கலாம்னு மாமா நிச்சயமாச் சொல்லிருக்கார். படிச்சு முடிச்சா, அஞ்சாயிரம் சம்பளம் வாங்குவேன்....”

“அதும் அப்படியா? சரிம்மா! எனக்கு ரொம்ப சந்தோசம்... நீங்க நல்லாயிருகிறத நா வாணான்னு ஏன் தடுக்கிறேன்? அப்படியே உங்க மாமனையே மாப்பிள்ளை பாத்துக் கட்டிக் குடுக்கச் சொல்லு. எனக்கு இந்த மண்ணு போதும்” என்று முடிக்கிறாள். பாட்டி எதுவும் பேசவில்லை.