கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 22
கரும்பாக்கம் பெண்கள் உயர் நிலைப் பள்ளி விழாக் கோலம் கொண்டிருக்கிறது.
சின்னச்சின்ன நுணுக்கங்கள்... பெரிய லாபங்கள்.. வருக வருக... என்று ஆட்சியாளரையும் டேனிடா திட்ட அலுவலரையும் விரிவாக்கப் பணியாளரையும் வரவேற்கும் வாசகங்கள். காலையில் இருந்து மாநாடு நடைபெறுகிறது. வழக்கமான வரவேற்பு உரை, அலுவலர் ஆட்சியாளரின் வாழ்த்துக்கள் எல்லாம் முடிந்தாயிற்று. அரிமாசங்கத்தலைவி லாவண்யா அம்மாள், இந்த மாநாட்டுப் பெண்களுக்குப் பகலுணவாகச் சோற்றுப் பொட்டலம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த அம்மையார் தாம் வரவேற்புக் குழுத் தலைவர். முன் வரிசையில் பல முன்னணிப் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரும் பூமியுடனும் பெண்கள் முன்னனேற்றத்துடனும் தொடர்பு கொண்டவர்கள். கூட்டு முயற்சியில் நம்பிக்கை வைத்து ஊக்கியவர்கள்.
வானொலிக்காரர்கள் ஒரு புறம் இந்த நடவடிக்கைகளைப் பதிவு செய்கிறார்கள். சரோ... சரோ.. அங்கே நிற்கிறாள். உயரமாக ஒரு வெளிர் நீல சல்வார் அணிந்து குட்டையான முடியைச் சீவி ஒரு வளையத்தில் இறுக்கிக் கொண்டு நிற்கிறாள். எப்படி வளர்ந்து விட்டாள். தன்னம்பிக்கையின் வடிவாக நிற்கிறாள்.
கரும்பாக்கம் மகளிர் பால் உற்பத்திச் சங்கம் காண எப்படிப்பாடுபட்டு பெண்களைச் சேர்த்தாள். பங்குத் தொகை பிரித்து மூலதனம் திரட்டி முப்பத்தைந்து பேருக்கு பால் மாடு வாங்கி பால் உற்பத்தி தொடங்கி நடக்கிறது. நூறு மாடுகள் என் இலட்சியம் என்று நிற்கிறாள். யூரியா தெளித்து வைக்கோலுக்கு ஊட்டமேற்றும் வித்தை இப்போது பலன் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!” என்ற வாசகம் செவந்தியின் கண்களில் படுகிறது. முன் வரிசையில் அவள் பிற்பகல் நடவடிக்கைகளில் பங்கு பெறுபவளாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் ஏதோ கனவு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது. இன்னும் பிற்பகல் விவாதங்கள் தொடங்கவில்லை. அறிவொளிக்காரர்களின் இசை நிகழ்ச்சி மேடையேறி இருக்கிறது. இந்த இளைஞர்கள் எல்லாம் சரோவின் தோழர்கள். 'டிரம்’ என்று சொல்லும் தாளம் கீ போர்டு கிட்டார் எல்லாம் செவந்திக்குப் புதுமையானவை.
சரோவும் இன்னும் மூன்று பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.
பட்டா-படி கற்போம் பாட்டா-படி... கற்போம் பாட்டி-படி மாமா-படி என்று பல்லவியைச்சொல்லி அவர்கள் பாடப்பாட தாளங்களும் குரல்களுமாக மகிழ்ச்சி அலைகள் பரவுகின்றன. “கண்ணுக்கு மை அழகு. கட்டை விரலுக்கு அழகாகுமா? பெண்ணுக்கு கல்வி கொடு. பெருமையை தேடிக் கொள்ளு!” சாந்தி, ஜனாபாய், பாப்பம்மா, எல்லாரும் இந்த மாநாட்டுக்கு எத்தனை நாட்கள் பாடுபட்டிருக்கிறார்கள். இதோ பெரிய மேடம் உட்கார்ந்து பாட்டை அனுபவிக்கிறார். அவ்வப்போது ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சரோ முனையவில்லை என்றால் இது சாத்தியமா என்று தோன்றுகிறது. கன்னியப்பனுக்குக் கட்டி வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது எத்தனை மடத்தனம் என்று தோன்றுகிறது.
கூடை நிறைய பழத்தில் ஓர் அழுகல் இருந்தால் மணம் இருக்காது. நாற்றம்தான் பரவும் என்ற கருத்தைத்தான் இதுவரை இவர்கள் வாழ்க்கையில் கற்றிருந்தார்கள். குறைகள் குற்றங்கள் ஆற்றாமைகள் புகார்கள். "புருசஞ் சொத்து அவ உள்பாடி ரவிக்கை போட்டுட்டு திரியறா” என்ற செய்தி எங்கோ யாரையோ பற்றிக் காற்றில் மிதந்து வரும். உடனே எல்லாப் பெண்களும் விதிமீறி கோடு தாண்டுபவர்கள் என்று கடித்துக் குதறுவார்கள். நாற்று நடும்போது பேசமாட்டார்கள். ஆனால், புளி கொட்டை எடுக்கும் போதோ, உளுந்து பருப்பு உடைத்துப் புடைக்கும் போதோ, இந்த மாதிரி அவதூறுகள் வேலையைச் சுவாரசியமாக்கும். படி தாண்டிப் போன பெண்ணை வீட்டுல சேத்துப்பாங்களா? அது கழண்டு போனதுதா...?
“அதுக்குத்தான் ஆளாயி ஒரு வருசத்துக்குள்ள கேக்க வந்தவங்க கிட்டச்சாட்டி வுடணும்ங்கிறது?” என்பார்கள்.
இப்போது அந்தக் கருத்துக்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. கோடுகள் இன்று அழிக்கப்பட்டிருகின்றன.
பாட்டு நின்று, ஜனாபாய் மேடை மீதேறி மைக்கின் முன் நின்று பேசுவது கூடச் சிந்தையைக் கிளப்பவில்லை.
பெரிய மேடத்தை அவர்கள் மேடைக்கு அழைக்கிறார்கள். அவர் மறுக்கிறார். “நான் இங்கேயே உட்கார்ந்து நீங்கள் பேசுவதைக் கேட்பேன்.”
"கரும்பாக்கம் தான்வா மகளிர் அணி இப்போது மேடைக்கு வருகிறது. இவர்கள் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்துவிட்ட சாதனையாளர்கள். சோதனையில் சாதனை செய்து காட்டிய முன்னணிப் பெண்மணி செவந்தி இப்போது தன் அநுபவங்களைக் கூறுவார்.” செவந்திக்கு தன்னைத்தான் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகிறது.
“செவந்தி!”
சரோ ஒடிவந்து அவள் தோளைப் பற்றி உசுப்புகிறாள். “எல்லாம் நினைப்பிருகில்ல? நல்லாப் பேசு.”
செவந்தி மேடைக்கு ஏறுகையில் முழங்கால்கள் நடுங்குவனபோல ஒரு பிரமை.
“பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய” என்று சொல்ல வேண்டும் என்று சரோ சொல்லிக் கொடுத்து சொல்லச் சொன்னதெல்லாம் சுத்தமாக நினைவில் வரவில்லை. புளிச்சோற்றின் மிளகாய் பெருங்காய் நெடிமட்டும் நெஞ்சில் நிற்பதாக உணருகிறாள்.
என்ன பேச...?
பெண்கள் மட்டுமில்லை... ஆண்கள்... ஒரமாக நிறைய பேர் நிற்கிறார்கள். பட்டாளத்தார் மீசையை முறுக்கிக் கொண்டு, மூத்த பேத்தியைப் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டு கன்னியப்பன்...அங்கே... துணுக்கென்று ஒரு குலுக்கல். யாரது? வெள்ளைச்சேலையில் சிறு சிவப்புக்கரை போட்ட சேலை புள்ளிப்போட்ட ரவிக்கை... முடி நரைத்து காது மூக்கு மூளியாக... ஆனால் மலர்ந்த முகத்துடன் சின்னம்மாவா அது?
செவந்தி தன் மனவெழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுயலுகையில்,
"பேசும்மா பேசு” என்று சரோ மைக்கை சரி செய்வது போல் உசுப்புகிறாள்.
யாரையும் கூப்பிடாமல் பட்டென்று துவங்கி விடுகிறாள்.
“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. நான் ஆறாவது வரைதான் படிச்சேன். அதற்குப்பிறகு பொம்புள புள்ளக்கி படிப்பு எதுக்குன்னு நிறுத்திட்டாங்க. அப்பல்லாம் அப்படிதாங்க. இப்ப நா எங்க பொண்ணப் படிக்க வைக்கணும்னு படிக்க வச்சிட்டேங்க. அது காஞ்சிபுரம் போயி மூணு வருசம் இன்ஜினியர் படிச்சிருக்குங்க. அதுனாலதா ரொம்ப முன்னேற்றம்.” சரோ தலையில் கை வைத்துக் கொள்கிறாள்.
இவளுக்குச் சட்டென்று தான் தப்பு பண்ணுவதாகப் படுகிறது."தான்வா மேடம்தாங்க எங்களுக்கு மொத ஊக்கம். அவங்க வூடு தேடி வந்து சொல்லிக் கொடுத்தாங்க. பயிர் பண்ணப்புறமும் வந்து வந்து பார்த்தாங்க. அதுக்கு மின்ன இந்த யூரியாவ வேப்பம் பிண்ணாக்கில் கலந்து போடணும்னு தெரியாது. எங்கப்பா நெறய யூரியா வாங்கிப் போடுவாரு...” பேசிக் கொண்டே போகிறாள். உள்ளுணர்வு சரியாகப் பேசவில்லை என்று சொல்லுகிறது.
ஜனாபாய் மேடை மீதிருக்கும் மணியை அடிக்கிறாள்.
“சரிம்மா நல்லா பேசனிங்க” என்று சொல்லுகிறாள். கடைசியில் நினைவு வந்து விடுகிறது. “ஏதானும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிக்குங்க. வணக்கம்.”
சரோ வெளி வராந்தாவில் அழைத்து வந்து கடிந்து கொள்கிறாள். “ஏம்மா எழுதிக் குடுத்தத்தான படிக்க சொன்ன. அத்தப் படிக்க வேண்டியதுதான. என்னமோ திண்ணையில உக்காந்து கத பேசற மாதிரி பேசுற!”
“அத்த நா அங்கியே பைக்குள்ளே வச்சிட்டே சரோ...”
“போகட்டும் போ அடுத்த தடவை நல்லாப் பேசுவ போயி உக்காந்துக்கோ...”
“சரோ ராசாத்தி சின்னம்மா போல இருக்காங்க. வந்திருக்காங்க. கடாசில வெள்ள சீல உடுத்திட்டு நோட்டீசு குடுத்தியா.”
“அவங்க ஆஸ்டல் நடத்துறாங்களே சொர்ணவல்லியம்மா அவங்க மகதா இந்த லயன்ஸ் லாவண்யாம்மா. நாமதாவரச் சொல்லியிருந்தோமே. வந்திருப்பாங்க போல. இரு நான் பாத்திட்டு முன்ன கூட்டி வாரேன்.”
இதற்குள் செவந்தியை சாந்தி கூப்பிடுகிறாள். “நீங்க இங்க வந்து உக்கர்ந்துக்குங்க. அப்புறம் பேசப் போங்க மககிட்ட..”
சரோவெளியில் சென்று வானொலிக்காரர்களுக்குத் தேநீர் கொண்டு வருகிறாள்.
மேடையின் மீது பெரிய குங்குமப் பொட்டும் பெரிய - மூக்குத்தியுமாக குட்டை குஞ்சம்மா கணீரென்று பேசுகிறாள்.
“எங்களுக்கு ஏரித்தண்ணிர்தான் பாசனம். முன்னெல்லாம் ஏரியில் ஒரு போகத்துக்கு நிச்சியமாத் தண்ணிர் கிடைக்கும் பயிர் வைப்போம். மூணு வருசமா தண்ணி சரியாக இல்லை. போன வருசந்தான் நான் தான்வா பயிற்சி எடுத்தேன். கடல போட்டு நல்லா விளைஞ்சிச்சி. ஏரி தண்ணிதா பிரச்னை. ஒரு பக்கம் ஏரி மண்ண வெட்டி வெட்டி மண்ணெடுத்திட்டுப் போறாங்க. இன்னொரு பக்கம் ஏரிய தூத்து மேடு பண்ணி பிளாட் போட்டு வூடு கட்டுறாங்க. போனவருசம் பெரிய மழ வந்தப்ப அங்க கட்டியிருக்கிற மூணு ஆடும் தண்ணிக்கு நடுவ நின்னிச்சி. எங்களுக்குத் தண்ணி வார பக்கம் காவாயில தண்ணி வாரதில்ல. மதகு மேலும் தண்ணி கீழும் இருந்தா எப்படித் தண்ணி வரும்? நாங்க தான்வா பெண்கள் ஏழெட்டுப் பேர் தாசில்தார் ஆபிசிற்குப் போனோம். கூட்டம் போட்டுச் சொன்னோம். எல்லாம் பார்க்கிறோம். சத்தம் போடாதீங்கன்னிட்டாங்க. இதுக்கு நாமெல்லாம் சேர்ந்து ஒரு முடிவு கட்டணும். இங்க வந்து பிறகு நிறைய ஊரில இது போல ஏரி பராமரிக்காம உதவாம போறதா தெரியுது. தனித்தனியா அரசாங்கத்துல கேட்டுப் பிரயோசனமில்ல. இதுக்குக் கூட்டா சேரணும். நன்றி. வணக்கம்.”
குஞ்சம்மா உட்காருவதற்கு முன்பே இன்னொருத்தி நெடியவள் ஆத்திரத்துடன் மேடையேறுகிறாள்.
“அவங்க சொல்றது மெய்தாங்க. எங்கூரிலும் இது நடக்குது..”
“பேர் சொல்லுங்க. எந்தக் கிராமம் சொல்லுங்க?”
“என் பேரு சக்குபாய். எலக்கூரு எங்க ஊரு. திருவள்ளுர் வட்டம். எங்களுக்கு நஞ்செய்ப் பயிர் போடுற நிலந்தாங்க. ஏரிப்பாசனம். இப்ப கேணியும் தோண்டியிருக்கிறோம். மண்ணெடுத்து மண்ணெடுத்துதண்ணி கீழே போயிட்டது. ஏரி பாதியும் குப்பையும் அதும் இதும் கொட்டி தூத்து பிளாட் போட்டு வித்திட்டாங்க. கேட்டா, நகர்ப்புற அபிவிருத்தின்னு சொல்றாங்க. விளைச்சல் நிலமெல்லாம் பிளாட்டாகுதுங்க. எங்கூட்டுக்காரரும் சேர்ந்து, பஞ்சாயத்துப் போர்டு, தாசில் தார்னு முறையிட்டுப் பார்த்தோம். இப்ப எங்கூட்டுக்காரரு பிடிசன் போட்டு வயல்ல வூடுகட்டக் கூடாதுன்னு ஸ்டே வாங்கியிருக்காரு. இதுக்குன்னு செலவுக்கு என் நகையக் கழட்டிக் குடுத்திருக்கேங்க. இது மாதிரி விளைச்சல் நெலம் தண்ணி எல்லாம் போயிட்டா, நம்ம விவசாயத் தொழில் என்ன ஆவுதுங்க? இதுக்கு எல்லாம் சேந்து நடவடிக்கை எடுக்கணும். தரிசு நிலத்தில வூடு கட்டலாம். விளையற நிலத்தக் குடுக்காம பாத்துக்கணுங்க.. அதா.”
செவந்திக்குத் தன்னை விட எல்லோரும் குறிப்பாக விசயத்தை நல்லபடியாகப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. வியாபாரிகள் விலை வைக்கும் பிரச்னை, உழவர் பிரச்னை, இதெல்லாம் அவள் குறித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவள் முறை முடிந்த பிறகு எப்படிப் பேசுவது?
அடுத்தவள் யார் என்று பெயரைக் கவனிக்கவில்லை. ஆங்காங்கே பேச்சுச்சத்தம் அமைதியைக் குலைக்கிறது. ஜனா பாய் மேசையைத் தட்டுகிறாள். அரிமா லாவண்யா அம்மாளும் பெரிய மேடமும் எழுந்திருக்கின்றனர். “நீங்க உக்காந்துக்கங்க. நான் வாரேன்” என்று அவர் மட்டும் எல்லோரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே விடை பெறுகிறார். மேடையில் கரண்ட் பிரச்னை அடிபடுகிறது.
“நஞ்சவயல்தான். கிணற்றில் தண்ணிர் கிடக்கு. ஆனால் கரண்ட் கிடைக்கல்ல. மின்ன பதினாலு மணி நேரம் கரண்ட் கிடைச்சிச்சி.இப்ப பத்து மணி நேரமா குறைச்சிட்டாங்க. பேசுறாங்க. எல்லாரும் விவசாயிக்கு மின்சாரம் ப்ரீன்னு. ஆனா, அது எங்கே கிடைக்குது. தொழிற்சாலைக்கு முன்ன குடுக்கறாங்க. எங்களுக்கு பக்கத்துல ஃபாக்டரி இருக்கு. இரும்பு பீரோ செய்யிறாங்க. அதுக்கு எப்பவும் கரண்ட் போகுது. இரும்பு பீரோவவுட பயிரு முக்கியமில்லீங்களா? பயிரு விளஞ்சாத்தான பீரோவுல வச்சுப் பூட்டலாம்.”
எல்லோரும் கைதட்டிச்சிரிக்கிறார்கள்.
“தண்ணியில்லாம முளவாச் செடி காஞ்சி போச்சிங்க. அப்படியே நஷ்டம். போயிப் போயி ஈபி ஆபீசில் இன்ஜினியருங்களப் பார்த்தோம். தான்வா மகளிர் சங்கம் சேந்துபோயிப் பிடிசன் கொடுத்தோம். சில பேரு சொல்றாங்க. திருட்டுக் கரண்டு எடுக்கிறதாம். இல்லாட்ட 'சம்திங்’ குடுக்கிறதாம். அதெல்லாம் நேர்மையா? தான்வா பொண்ணுங்க அப்படியெல்லாம் குறுக்கு வழிக்குப் போகக் கூடாதுன்னு தீர்மானம் வச்சிட்டோம். நமக்கு விவசாயம் முக்கியம்னு கரண்டுக்கு கவர்மெண்ட் வழி செய்யணும்.”
அடுத்து வருபவள் அபிராமவல்லி. மதுராந்தகம் பக்கம். பொத்தேரி கிராமம். “ஏம்மா நாம கஷ்டப்பட்டு நெல்லு பயிர் பண்ணுறோம். அதை வித்தாத்தான் நமக்கு எல்லாத்துக்கும் காசு. நமக்கு எப்படி விலை கிடைக்கிது? மூட்டை முன்னூறு முன்னூத்தம்பதுன்னு வச்சிருக்காங்க. ஆனா அரிசியாக்கிட்டா அது கிலோ பத்து ரூபாய்க்கு மேல போகுது. சரி நாமே நெல்லக் காய வச்சு ஆறவச்சி அரிசியாக்கி விக்கலான்னா முடியிதா? உடனே களத்து மேட்டிலேயே வியாபாரிங்க நம்ம மூடையைச் சாதகமாக்கிக் குறைச்ச விலை நிர்ணயிக்கிறாங்க. நாம கடனை அப்பத்தான் உடனே அடைக்க முடியும். இல்லாட்டி வட்டி கட்டணும். சர்க்கார் விற்பனைக் கூடம் வச்சிருக்காங்க. ஆனா, இங்கே வெளியே இருக்கிற வியாபாரிங்கதான் அங்கேயும் விலையை கம்மியா நிர்ணயிக்கிறாங்க. யாருமே அதிக விலைன்னு ஏற்றாமல் பாத்துக்கறாங்க.”
செவந்தி இதே பிரச்னையை இவ்வளவு நன்றாகச் சொல்லியிருக்க முடியாது என்று நினைக்கிறாள்.
இப்படி வரிசையாக ஒவ்வொருவரும் வந்து பிரச்னைகள், அநுபவ பாடங்கள் என்று பேசுகிறார்கள்.
ஒரு பெண் சுற்றுப்புறச் சூழல் பற்றிப் பேசுகிறாள். குப்பையை, சாணி கூளங்களை அப்படியே மேடாகக் கொட்டுவதில்லையாம். எட்டடிக்கு ஆறடி பள்ளம் தோண்டி அதில் குப்பையும், கூளமும் அடுக்கடுக்காகப் போட்டு மண்புழு விட்டிருக்கிறார்களாம். ஊட்டச் சத்து மிகுந்த உரமாகிறதாம். அதை விதைக்கும் கொடுக்கிறாளாம். பால் மாடு பராமரிப்பு, அதன் பிரச்னைகள்...
ஒரு வயசு முதிர்ந்த உழைப்பாளிப் பெண் எழுந்து நிற்கிறாள். கீச்சுத் தொண்டையில் கேட்கிறாள்.
“ஏம்மா, பொண்டுவளா, எல்லாம் சரித்தா, இந்த ஆம்புளங்க சாராயம் குடிக்காம, ஒழுங்கா இருக்க எதனாலும் வழி சொல்லுவீங்களா?”
கொல்லென்று அமைதி படிகிறது. பிறகு மற்றவளைப் பார்ப்பதும், நமட்டுச் சிரிப்புச் சிரிப்பதுமாக மழுப்புகிறார்கள். “ஏண்டி சிரிக்கிறாயா? எங்க காலத்துல இப்படி எதும் பேசத் தெரியாது; படிக்கத் தெரியாது. குடிச்சிட்டு வந்தா, அடிச்சு மொத்தினா, சோறெடுத்து வைடீன்னான். வச்சோம். உழச்சிட்டு வரவன், காவாயில குளிச்சிட்டு கள்ளுத்தண்ணிய ஊத்திட்டுத்தா வீட்டுக்கு வருவா. இப்ப என்னன்னா, நெலத்து வேல கேவலம்னு கொத்துக் கரண்டி புடிக்கிறான். ரிஸ்ட் வாட்ச், சர்ட்டுன்னு ஆபீசர் கணக்க ஒரு நாளக்கி நுத்தம்பது சம்பாதன பண்றான். அத்தயும் குடிச்சி, பொண்டாட்டி தாலியையும் உருவிட்டுப் போயிக் குடிக்கிறான். அதென்ன எளவுடி! ஆயிர ரூவாக்கு ஒரு பாட்டிலாம். படிக்கிற புள்ள குடிக்கிறான். வெள்ளயும் சுள்ளயுமா உடுப்புப் போட்டுகிட்ட ஆபீசரும் குடிக்கிறானுவ இதெல்லாம் உனுக்கு எப்படித் தெரியும்னு கேக்குறியளா? கைப்பூணுக்குக் கண்ணாடி வேனுமா? இந்தப் பொம்புளக, படிச்சி என்ன பிரயோசனம்? நாலு காசுசேத்து காதுல மூக்குல தொங்க விட்டுக்கிட்டு என்ன பிரயோசனம்? எங்க பெரிய பண்ண வூட்டில, புறா போல பொண்ணு, நூறு சவரன் போட்டு, காணி எழுதி வச்சி, பட்டணத்துல போயி கலியாணம் செஞ்சி வச்சாங்க. ஆறாம் மாசம் பொண்ணு வூட்டுக்கு வந்திரிச்சி. ஒரு நகை இல்ல. உடம்புல பாவி சிகரெட்டால சுட்டிருக்கறா. இப்படி எல்லாம் நாங்க கேட்டதில்லம்மா! புள்ள இல்லன்னா தள்ளி வச்சிட்டு ரெண்டாவது கட்டுவாங்க. அப்பம் படிக்கல. இப்ப படிச்ச பொண்ணுக்கு இப்பிடி மதிப்பின்னா, இது என்னாடிம்மா மின்னேத்தம்!” ஜனாபாய் மணி அடிக்கிறாள்.
“பெரியம்மா, ரொம்பக் குறிப்பாக விஷயங்களை முன் வைக்கிறார். படித்த பெண்கள் இதற்குப் பதில் சொல்ல வரவேண்டும்!”
சரோ, அவர்களுக்குக் காரா பூந்திப் பொட்டலமும், தம்ளரில் தேநீரும் வழங்கும் பணியில் இருக்கிறாள்.
பதிலாக விஜயலட்சுமி, இரண்டு பெண்களுக்குத் தாய் மேடையேறுகிறாள். பெண்கள் இருவரும் பத்து முடித்திருக்கிறார்கள். நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். ஆனால், பெண் கேட்டு வருபவர்கள் அதை மதிக்கவில்லை. பத்துக் கூடப் படிக்காத தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் முறை மாப்பிள்ளை, முப்பது சவரன் கேட்கிறான். அம்பத்தூர் ஃபாக்டரியில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிள்ளை, பைக் வாங்கித் தரச் சொல்கிறான். விசாரித்ததில் அவன் குடிகாரன். ஒழுக்கம் இல்லாதவன் என்று தெரிகிறது. முன்பெல்லாம் நிலம், உழைப்பு, ஆடு, மாடு, உறவு எல்லாம் மதிப்பாக இருந்தன. இப்போது உயிரில்லாத பொருட்கள் டி.வி., பைக், கிரைண்டர், மிக்ஸி அதோடு கூரை தாலியும் பெண் வீட்டிலிருந்தே கேட்கிறார்கள்...”
ஜனாபாய் மணியடிக்கிறாள். “இன்னும் யாரேனும் பேச இருக்கிறார்களா?”
ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். செவந்தி எழுந்து நிற்கிறாள். மறுபடி மேடை ஏறலாமா? அநுமதி தருவார்களா?
இவள் தயங்கும்போதே ஓர் அற்புதம் நிகழ்கிறது. “நா ரெண்டு வார்த்தை சொல்லட்டுங்களா?”
வெள்ளைச்சீலையில் சிவப்புக்கரை... வெள்ளை ரவிக்கை... சின்னம்மா..
காது மடல்கள் குப்பென்று சிவப்பது போல் செவந்திக்குத் தோன்றுகிறது.
“தலைவி அம்மா அவர்களே சகோதரிகளே, பெண்களே! சம்பந்தப்பட்ட எல்லா விசயமும் பேசினர்கள். குடிபற்றி, வரதட்சணை பற்றி எல்லாரும் சொன்னிர்கள். மிகப் பெரிய கொடுமையை இங்கே சொல்லணும்னு நினைக்கிறேன். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழனும். அதற்குதான் ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைச்சிருக்கிறார். கலியாணம்னு சேத்து வைக்கிறாங்க. பொம்பிளகிட்ட வாழ்நாள் முழுதும் இருக்கப் போற, வாழப் போற ஆண், புடிச்சிருக்கான்னு கேக்கிறதில்ல. கலியாணமே ஆம்பிளக்குத்தா. அவ ஏதோ விதி வசத்தால முன்னாடி செத்திட்டா அவ பாவியாயிடறா. அவ செத்திட்டா, இல்ல இருக்கறப்பவே கூட அவன் வேற கலியாணம் செய்யிற கொடுமை...இன்னிக்கு நடக்குது. புருசன் செத்து போகலன்னாலும் உழைக்கிறா. அவன் செத்தா பத்தாம் நாள் அவள உக்காத்தி வச்சி பூ முடிச்சி புதுசு உடுத்தி கை நிறய வளயல அடுக்கி அத்த ஒடச்சி பொட்ட அழிச்சி, பூவப் பிச்சி இதே பொம்பிளங்க எதுக்கு அவமரியாதை பண்ணணும். புருசன் செத்து போனா அவ உலகத்திலே இருக்கக் கூடாதா? அவ பேரில் அத்தினி நாக்கும் அபாண்டம் போடக் காத்திருக்கும்.
“அவளுக்கு ஒரு பொண்ணு இருந்தா அது மேலயும் அந்த பாவம் விடியும். அதுக்கு ஏதானும் தவறு நேந்திச்சின்னா, தாய நடு வீதில நிக்க வச்சி, உறவு சனமின்னு சமுதாயம்னு நாட்டாம பண்ணுறவ அடிப்பா. இந்த பொம்பிளங்க ஏன், சொந்த அக்கா தங்கச்சியே பாத்திட்டிருப்பா. அவ புருசன் இல்லாததால எப்பவும் யார் குடியும் கெடுக்கவே நினைச் சிட்டிருப்பாளாம். அவ சொந்த அப்பாவே அவளுக்குன்னு சேர வேண்டிய சொத்தக் கூட அவ பேருக்குக் குடுக்க மாட்டா. ஏன்னா அவ சாதி இல்லாம யாரையும் தேடிட்டுச் சொத்தக் கொண்டு போயிடுவாளாம். அவ்வளவு பயம் புருசனில்லாதவகிட்ட!"
“நீங்க எல்லாம் விவசாயம் செய்யிறவங்க பயிர்த் தொழில் செய்யிறவங்க! உங்கள்ல எத்தினி பேருக்கு உங்க பேரில பட்டா நிலம் இருக்கு? அண்ட கட்டுறதிலேந்து அறுப்பு அறுக்கிற வரை நீங்க வேலை செய்யிறீங்க. நிலம் மட்டும், புருசன் பேரிலோ, அப்பா பேரிலோ, மாமன், மச்சான் பேரிலோ இருக்கும்."
"இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, பெண்ணுகளப் படிக்க வச்சிடறோம். வரதட்சணை கேக்கறாங்கங்கறது மட்டும் பிரச்னை இல்ல. அடிப்படையில் நாமே நம்ம பொண்ணுகளே, அக்கா, தங்கச்சி, அண்ணி, நாத்தின்னு ஒருத்தருக்கொருத்தர் விரோதமாப் பார்க்கிறோம். புள்ள குடிகாரனா இருப்பா. கலியாணம் கட்டினாதான் திருந்துவான்னு கட்டி வைப்பா. பிறகு இந்த தாயே இவ வந்ததாலே அவன் குடிச்சிக் கெட்டுப் போறாம்பா. அவ, அம்மாளப் பத்தி பொண்டாட்டிட்டச் சொல்லி அவள ஏமாத்தி நகை நட்டு வாங்குவா. அவள் பத்தி அம்மாக்கிட்டச் சொல்லி அவ ஏதானும் நாத்துநட்டு கள எடுத்தும் சம்பாதிச்சிட்டு வந்தா அத்தப் புடுங்கிட்டுப்போவா. எத்தினி குடும்பங்கள்ள இப்படி நடக்குது?
"நீங்க..ஏ. நாம எல்லாம் முதல்ல ஒத்துமையா இருந்து, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும். பொண்ணா பிறந்திட்டா அவளுக்குச் சாதி மதம் ஏதும் இல்ல. நாம ஒத்துமையா இருந்தாத்தா, நம் முன்னேற்றத்துக்குப் பாடுபட முடியும்.”
படபடவென்று கைத்தட்டல் வெகு நேரம் ஒலிக்கிறது.
“குடியை எதிர்த்து நாம போராடலாம். வரதட்சனையை எதிர்த்தும் நாம போராடலாம். பெண்களால் எல்லாம் செய்ய முடியும். நாம ரொம்ப ஒத்துமையா இருக்கணும். ஒரு பொண்ணு அவளா கெட்டுப் போகமாட்டா. ஆனா அப்படி முத்திரை போட்டுட ஆணுக்கு ஒரு அதிகாரமா உரிமை கொடுத்திருக்காங்க. இதெல்லாம் நாம ஒத்துமையா நின்னுதான் மாத்தணும். எனக்கு இதப் பேசணும்னு தோணிச்சி. வந்தேன், வணக்கம்.”
கைகுவித்துவிட்டு அவள் படி இறங்கப் போகுமுன் ஜனாபாய் அவளை நிறுத்துகிறாள்.
"அம்மா ரொம்ப நல்லாப் பேசினிங்க. நாங்க இதெல்லாமும் தீர்மானம் போடுகிறோம். உங்க பேரு, நீங்க எந்த கிராமம்னு சொல்லுங்க..”
செவந்தி விலுக்கென்று எழுந்து மேடைக்குப் போகிறாள். “இவங்க அதே ஊர்தா. எங்க சின்னம்மா”
கைத்தட்டல் அதிருகிறது.