அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/036-383
32. முதல் மந்திரி லார்ட் மார்லியவர்களின் சீர்திருத்தத்தைப் பற்றி மற்றவர்கள் அபிப்பிராயங்களை வினவுதல்
சிற்சில பத்திராதிபர்கள் லார்ட் மார்லியவர்களின் சீர்திருத்தத்தைப் பற்றி மற்றவர்கள் அபிப்பிராயங்களைக் கேட்பதில் அவரவர்களது அனுபவங்களை ஆனமட்டிலும் வரைந்திருக்கின்றார்கள்.
அதாவது, உள்ளமக்களுக்குப் பலவகை பதார்த்தங்களை வட்டித்துப் புசிக்கச்செய்து அவை எவ்வகையதென்னில் அதிகக்கார்ப்பில் சுவை மிகுத்தவன் காரமில்லையென்பான். அதிக இனிப்பில் சுவைமிகுத்தவன் வெல்லமில்லை என்பான், அதிக உவர்ப்பில் சுவை மிகுத்தவன் உப்பில்லை என்பான், இஃது உருசி சகஜமாகும்.
பலதேச மக்கள் முன்னிலையில் பலதேச ஜந்துக்களையும், பலதேசப் பொருட்களையும் கொணர்ந்து வைத்து இவற்றுள் எவை சிறந்ததெனில்:-
நெய்தநிலவாசி மட்சங்களை சிறப்பிப்பான், முல்லை நிலவாசி பசுக்களை சிறப்பிப்பான், பாலைநிலவாசி உவர்மண்ணை சிறப்பிப்பான், குறிஞ்சி நிலவாசி கல்லுகளை சிறப்பிப்பான், மருதநிலவாசி தானியங்களை சிறப்பிப்பான்.
ஓர் அரசனை சங்கத்தில் நிறுத்தி உழைப்பாளியை அழைத்து ஐயன்செயல் எப்படி எனில் தன்னைப்போல் உழைப்பாளியாகக் காணில் அரசன் யானையேற்றங் குதிரையேற்றம் முதலியவைகளில் மிக்க வல்லவர் என்பான். சோம்பேரியாகக்காணில் இவர் யாதொரு தேகப்பியாசமும் அற்றவரென்பான்.
ஓர் வியாபாரிக்கு அவ்வரசனைக் காண்பித்து ஐயன்செயல் எவ்வகைத் எனில் தனது சரக்குகளை மிக்க வாங்கவும் கொள்ளவும் உள்ளவராயின் இவர் மெத்தப் பிரபு, சகல வஸ்துக்களின் சுகமும் அநுபவிக்கக்கூடியவரென்பான்.
தனது சரக்குகளை வாங்காதவராயின் இவர் ஒரு வஸ்துவையும் சுகிக்கவறியாராதலின் சோம்பி என்பான்.
பிச்சையேற்று சீவிப்போனுக்கு அரயனை சுட்டிக்காட்டி ஐயன்செயல் எவ்வகைத்தென்று கேட்க, இவன் சென்ற நேரம் எல்லாம் அரசன் பொருளுதவி செய்திருப்பானாயின் இவர் மகாப்பிரபு, சகலமும் உணர்ந்தவர், தாதாவென்பான்.
இவன் யாசகத்திற்குச் சென்ற நேரம் எல்லாம் தூறக்கொண்டேயிருப்பானாயின் இவன் நீச்சன், சண்டாளன் தாழ்குலத்தோனென்பான்.
பல வித்துவான்களையும் அழைத்து ஓர் செய்யுளைக்கொடுத்து இதனமைப்பு எவ்வகை எனில், எழுத்திலக்கணம் மிக்க கற்றவன் ஒற்றுமிகுத்துள்ளதென்பான். சொல்லிலக்கணம் மிக்க கற்றவன் கூறியதைக் கூறியுள்ளான் என்பான்.
இத்தகைய பேதாதாரங்களால் ஒருவருக்குள்ள அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு பேதமாகவும், மற்றவர்கள் அபிப்பிராயங்கள் தங்களுக்கு பேதமாகவும் மாறி நிற்கும்.
எவ்வகையதென்னில், இந்து தேசத்தை இதுவரையுஞ் சீர்திருத்தி சுகநிலைக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர் தங்கள் சுயதேயத்திற்குப் போய்ச்சேர்ந்து நம்மிடத்தில் சுயராட்சியத்தை கொடுத்து விட்டால் சுகமாக அநுபவிக்கலாம் என்பார் ஒருவகுப்பார்.
ஆங்கிலேயர்களே இத்தேசத்திருந்து இராட்சியபாரஞ் செய்வார்களாயின் சகலகுடிகளும் சுகம்பெற வாழலாம் என்பார் பலவகுப்பார். இவற்றுள் ஒருவர் வாக்கு செல்லுமா, பலர் வாக்கு செல்லுமா என்பதை பகுத்தறிய வேண்டியதே பதமன்றி ஒருவரெண்ணத்தில் மற்றோரை இணங்கச்செய்தல் இழிவேயாகும்.
- 2:29; டிசம்பர் 30, 1908 -