உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/043-383

விக்கிமூலம் இலிருந்து

39. பழயராஜரீக அநுபவமறியாதவர்கள் புது ராஜரீகத்தைப் போற்றமாட்டார்கள்

நமது இந்துக்களின் முற்கால ராஜரீகத்தில் குடிகளின் சுகமும், அவர்களின் ஆதிபத்தியமும் எவ்வகையிலிருந்தது. அதன்பின் மகமதியர் ஆளுகையில் குடிகளின் சுகமும், அவர்கள் ஆதிபத்தியமும் எவ்வகையிலிருந்தது. தற்காலம் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜரீகத்தில் குடிகளின் சுகமும், அவர்கள் ஆதிபத்தியமும் எவ்வகையிலிருக்கின்றதென்று தேற விசாரித்துத் தெளிவோமாயின் இந்துக்கள் ராஜரீகத்தில் இராயன் எதிர்வருகையில் எத்தகையப் பிரபுவாயிருப்பினும் வஸ்திரத்தை இடுப்பில் இருகக்கட்டிக் கொண்டு அரயன்ரதம் ஏகுமளவும் கைகூப்பி ஓரமாக நிற்கவேண்டியது. மற்றும் அனந்த ஒடுக்கங்களுண்டு, எழுதவேண்டுமாயின் விரியும்.

மகமதியர் துரைத்தனத்திலோ கிஞ்சித்து பிரபுத்துவமுள்ளவர்கள் வீடுகடோரும் நாபாப்புகளுக்கு ஊழியஞ்செய்யும் யானை குதிரைகளைப் போஷிக்கவேண்டியதேயாகும். மற்றும் விசாரிணையற்ற செயல்களை விளக்கவேண்டுமாயின் விரியும்.

பிரிட்டிஷ் ராஜரீகமோ அவ்வகையின்றி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட குடிகளின் சுகத்தை தங்கள் சுகம்போல் கருதி ஆனந்திப்பதும், தங்கட் குடிகளுக்கு நேரிடுந் துக்கங்களை தங்கள் துக்கம்போல் கருதி ஆதரிப்பதுமாகிய நீதியின் செங்கோலைத் தாங்கினவர்கள்.

இத்தகைய தன்ம ராஜரீகத்தை அகற்றி தங்கள் சுயப்பிரயோசனத்தை நாடித் திரியும் சொற்ப ஜனங்களின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு பெருங்குடிகள் ஒன்றுகூடி சுயராட்சியம் வேண்டும் என்பது விசாரிணைக் குறைவேயாம்.

- 2:32; சனவரி 20, 1909 -