அந்தி நிலாச் சதுரங்கம்/பொன் அந்தி

விக்கிமூலம் இலிருந்து
 
அந்தி நிலாச் சதுரங்கம்

6. பொன் அந்தி!


பொன் அந்தி மாலைப் பொழுது!

அரசியலைக் கசடறக் கற்று, அதற்குத்தக நிற்கக்கூடிய உண்மையுள்ள அரசியல்வாதியைப் போலே, நிதானமான அமைதியுடன் அழகாகத் தரிசனம் தருகிறது அந்திமாலை; மஞ்சள் கிரணங்கள் மனோகரமாகப் பளிச்சிடுகின்றன.

புல்வெளிப் பூங்காற்று பதமாகவும் இதமாகவும் வீசுகிறது.

ரஞ்சனிக்கு வெட்கம் வந்துவிட்டது. வெட்கம்!

பின்னே, என்னவாம்?

“அவளே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்!” என்கிற பாவனையில் தன்னுடைய உயிரின் மறுபாதியான பிரியமானவளை - பிரியமானவளான ரஞ்சனியை வைத்த கண் வாங்காமல், ரஞ்சித் அப்படியே பார்த்தது பார்த்தபடி பார்த்துக்கொண்டே இருந்தால், அவளுக்கு வெட்கம் வருவது இயற்கைதான்!

பச்சைக் கிளி வெள்ளை வாயாகப் பேசிற்று.

“ரஞ், நான்தான் உன்னேக் கூப்பிட்டேன்!”

மோகம் தழைத்துச் செழித்துக் கடைக்கண் பணிபுரியும் மோஹினிச் சிலைக்குச் சமதையாக அழகு காட்டி, அந்தம் காட்டி, அன்பையும் காட்டிப் புன்னகை சேர்த்தாள் அன்புடையாள். அவளது மஞ்சள் முகம் பொன் மஞ்சளில் பூக்கோலம் இட்டிருக்கலாம். காஞ்சிப்பட்டின் பொன்வண்ணம், அவளுடைய பொன்மேனிக்குப் பொட்டு இட்டு அழகு பார்த்திருக்கக்கூடும்.

"ரஞ்!...”

சற்றே சரிந்த குழலே எழில் கொஞ்சும் ஆருயிர் ரஞ்சனியின் மார்பகத்திலிருந்து எழில் கெஞ்ச விலக்கி விட்டபின், சிறிதாகக் கசங்கியிருந்த சோளியின் இடது புறத்துச் சரிகைக் கரைக்கட்டைச் சரிசெய்து விட்டதில் பாங்கருக்கு நிம்மதியான நிம்மதி கனிந்தது. அந்த நிம்மதியில், ரஞ்சனியின் தாவிச்சரட்டை “நிமிண்டி’ அழகு பார்த்த சாதுரியமும் சேர்த்தி.

“இனியாச்சும் சும்மா இருக்க மாட்டீங்களா, அத்தானே?” -

கண் அடித்துக் கண் சிமிட்டி, அர்த்தமுள்ள புன்னகை யைப் பொன் நகையாக்கிச் சூட்டி மகிழ்வதில் ரஞ்சித்துக்கு நாளும் பொழுதும் ஒரு களிப்பு. கண்ணன் மட்டி லுந்தான் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டுமென்பதாக எந்த விதியும் சட்டம் படிக்கவில்லை தான்!

சோமையா மூப்புத் தெரியாத விதத்தில் ஒடி ஆடிப் பணி செய்து கொண்டிருந்தார். நந்தினி விலாசத்தில் அவருடைய அந்தரங்கபூவமான பணியும் பாசமும் கிட்டத்தட்ட பத்தொன்பது ஆண்டுகளின சரித்திரத்தைக் கொண்டது அல்லவா? அறந்தாங்கிச் சீமையிலிருந்து இங்கே சென்னைப் பட்டணத்திற்கு ஆசைக்கு ஒரு பெண்ணாக தந்தினி பிறந்த தருணத்தில் வந்தவர் அவர் ; ஆஸ்திககு ஒர் ஆனாகப் பாபு அவதரித்த நேரத்தில் அவர் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை!

“அ...த்...தான்!"

கைப்பிடி நாயகனைக் காதலாகிக் கசிந்து உருகி விளித்தாள் ரஞ்சனி.

“என்ன, ரஞ்சனி?"

"........."

"சொல், ரஞ், சொல்!"

"நம்ப பாபு.’’

"பாபு...?’’

"நம்ம பாபுவை நாம நம்ம வீட்டிலேயே எப்பவுமே வச்சிக்கிட்டால்தான், எம் மனசு என்னமோ சமாதானமும் அமைதியும் அடையும்னு தோணுதுங்க, அத்தான். உங்க ஞக்கு நான் இப்பிடிச் சொல்றது ஆச்சரியமாயிருக்கும்: ஏன், திகைப்பாகவும் இருக்கலாமுங்க! -நான் பயப்பட்டபயப்பட்டுக்கிட்டே இருக்கிற நெருப்பு, என்னேட பக்கத்திலேயே இருக்கவேணும்னு நான் ஆசைப்படுறேனுங்க: அது மட்டுமில்லே; அந்த நெருப்பைச் சதாசர்வகாலமும் தொட்டுத் தொடடு ஆனந்தப்படவேணும் என்கிற ஒரு விசித்திரமான ஆசைக்கும்கூட நான் இப்ப ஆளாகிட்டேன்: ஆளாக்கப்பட்டுவிட்டேன்!-ஆமாங்க, அத்தான் எனக்குப் பைத்தியம் கியித்தியம் பிடிச்சிடவீங்க, அத்தான்:என்னை நம்புங்க, அத்தான். நம்புங்க! என்னேட இந்தப் பேச்சை நீங்க நம்பாட்டி, அப்பறம், என்னையும் மீறி. அல்லது, உங்களையும் மீறி, தான்...நான்...?-தொடர்ந்த பேச்சினைத் தொடர மாட்டாமல், விக்கிவிக்கி-கேவிக்கேவி அழுதாள் ரஞ்சனி.

அந்த நெருப்பையே விழுங்கிவிட்டவராகத் துடித்தார்: துடிதுடித்தார் ரஞ்சனியின் ரஞ்சித் ரஞ்சனி!-நீ எங்காச்சும் போயிடப் போறியா, என்ன?’ என்று நெருப்புச் சுடுகிறமாதிரி, நீர்த்தாட்சண்யமாகவே கேட்டு விட்டார் அவர்,

மறு நோடியிலே-

“அத்தான்!” என்று ஓங்காரக் காளியென ஓலமிட்ட வளாக, அத்தானே மயிரிழை ஒட்டுறவில் ஒட்டி உறவாடி. நேருக்கு நேராக வெறித்து நோக்கியவாறு, அத்தானின் புதிதான பிஸ்கட் கலர் ஜிப்பாவை மூர்த்தண்யமான வெறியோடு பற்றினுள்: ‘'என்ன கேள்வி கேட்டுப்பிட்டீங்க, அத்தான்?-என்னைப் பார்த்து, உங்க ஆருயிர் ரஞ்சனியைப் பார்த்து, எத்தனை பயங்கரமான-மோசமான-கேவலமான கேள்வியைக் கேட்டுப்பிட்டீங்க"நீங்க?-ரஞ்சனி வெடித்து விடவில்லை; விம்மல்கள்தாம் வெடித்தன. அவளுள் கொழுந்துவிட்டெரிந்த தீக்கங்குகளில் ரஞ்சித் சமர்ப்பித்த கண்ணிர் சிந்திச் சிதறவே, மறு இமைப்பில் அவள் அடங்கி விட்டாள்; எரிந்த தீயும் அவிந்துவிட்டது போலும்:"ஆத்தான், நான் எங்கேயும் போயிடப் போறதில்லிங்க: போயிடவும் மாட்டேன்; என் உயிரை விட்டுட்டு, நான் எங்கேயும் போயிடவே மாட்டேனுங்க, அத்தான்!"... மனிதாபிமானத்தோடே நம்புங்க, அத்தான் குமுறல் வெறி அடங்கிய அவளுடைய தெய்வமணிக் கரங்கள், தன்னுடைய தங்கக் கழுத்தில் தவழ்ந்து ஊசலாடிய தங்கத்தாலியை அக்கினியைச் சாட்சி வைத்துத் தனக்கு அர்ப்பணம் செய்த ஆருயிர் ரஞ்சித்தின் சுடுவிழி வெள்ளத்தை வழித்து விடுவதில் இப்பொழுது முனைப்புடன் முனைத்திருந்தன. எனக்கு அன்றைக்குப் பாவமன்னிப்பை அருள் பாலித்த என் சுவாமி-எனக்கு அன்றைக்குப் பாவ விமோசனத்தை வழங்கின என் ரீராமபிரான் எத்தனே பயங்கரமாகச் சோதித்து என்னை உயிர்க் கழுவிலே ஊசலாடி உருக்குலையச் செய்துவிடடாரே?-ஐயையோ, தெய்வமே!...என் தெய்வமே உளளம் உள்ளுக்குள்ளாகவே செருமிப் பொருமிக் கொண்டேயிருந்தது!

ரஞ்சித் சிறுபிள்ளை மாதிரி அழுதுகொண்டே, தன்னுடைய சிவகாமியான அருமைச் சீதேவி ரஞ்சனியைசீதாப்பிராட்டியுமான ரஞ்சனியை ஏறிட்டுப் பார்த்து, அவளுடைய பார்வையை மாயத்திரையாக மறைத்த கண்ணீரைத் துடைத்தார். ஆருயிரின் அழகான தாழ் வாயை நிமிர்த்தினார்: பேசினார்:

"நீ என்னே விட்டுப்புட்டு எங்காச்சும் போயிடுவி யோன்னு, நான் கடவுள் சத்தியமாய் உன் பேரிலே சந்தேகப்படல்லே! ஊகூம்; ஒருநாளும் அப்படிச் சந்தேகப் படவேமாட்டேன்; என்ளுேட உயிருக்கே ஒரு அர்த்தமும் அன்பும், தருமமும் சத்தியமுமாக விளங்கிட்டு இருக்கிற உன்னே-எனக் குத் தெய்வமான உன்னை ஐயப்பட்டேன்ன, நான் மனுஷனுகவும் இருக்கமுடியாதே, ரஞ்சனி?-நீ கொஞ்ச முந்தி மனசொடிஞ்சு பேசின தோரணையிலே, உன்னோட அருமை பெருமையான உயிர் உன்னையும் மீறி, அல்லது, என்னையும் மீறிப் பிரிஞ்சிடுமோ என்னமோன்னு நான் கதிகலங்கித்தான். நான் அப்படி ஒரு கேள்வியை உன் கையிலே, கேட்டிருக்கேன்; வாய் தவறித்தான். நீ எங்காச்சும் போயிடப் போறீயா? அப்படின்னு கேட்க தேர்ந்திடுச்சு நான்தான் புத்திகெட்டு, கேட்கக்கூடாததை உன்கிட்டே கேட்டுப்பிட்டேன்; நீயும் துரும்பைத் துணாக்கிப் பெரிசுபடுத்தி, இல்லாததையும் பொல்லாததையும் எண்ணி எண்ணிக் குமுறிக் கொந்தளிக்கலாமா ரஞ்சனி?-மன்னிக்கப்பட்டவங்க எல்லாருமே, எப்பவுமே. சமுதாயத்தின் மத்தியிலே குற்றவாளிகளாகவே தான் காட்சி தரவேணும்னு விதி ஒண்ணும் இல்லை!-தவிரவும், மன்னிக்கிறவங்க எல்லோருமே தெய்வங்களாகத்தான் இருப்பாங்க என்கிறதுக்கும் விதியாலே சாட்சி சொல்ல வாய்க்காதுதானே?”

பேச்சு முடிந்தது.

பெருமூச்சு முடியவில்லை

அன்பைக் கொடுத்து, அன்பை வாங்கிக்கொண்டதன் விளைவாக, மனச்சுமை குறைந்த மாதிரி உணரலானார், 'கொடுக்கல்-வாங்கல்' தொழில் அதிபர் ரஞ்சித்.

பொன் மாலையில் புன்னகை மணம் கமழ்கிறது.

இப்பொழுதுதான். சோமையாவின் நடமாட்டம் தெரிந்தது.

"அத்தான், நாம பேசிக்கிட்டிருந்ததை இந்நேரம் பெரியவர் சோமையா கேட்டுக்கிட்டு இருந்திருப்பார் போலிருக்குங்க!”

“கேட்டுக்கிட்டுப் போகட்டுமே ரஞ்சனி?--சோமையா நம்ப குடும்பத்து நண்பர்களிலே ஒருத்தர் தானே?-அது போகட்டும்!-பாபுவைப் பத்தி நீ சொன்னுய்;நம்ப பாபுவை நம்மகூடவே இங்கேயே எப்போதுமே வச்சிக்கிட்டால்தான் நல்லது! இந்த முடிவுக்கு, உன்னைப்போலவே நானும் வந்து எத்தனையோ நாள் ஆயிடுச்சே, ரஞ்...?

"மெய்யாகவா, ஆத்தான்?”

"ஊம்...!”

மறுவினாடியில்;

சலசலப்புக் கேட்கிறது.

அதோ, பாபு ஒட்டமும் நடையுமாகப் பெற்றவர்களே நோக்கி வந்துகொண்டிருக்கிறான்!....

பாபு, ஆடும் கலாபமயிலாகவும், ஒடும் கவரிமானாகவும் ஒருசேரத் தரிசனம் தந்தபடி, பெற்றாேர்கள் முன்னிலையில், ஒட்டமும் நடையுமாக வந்து நின்றான்; திருச்செந்தூர்க் குமரனுக்குப் பால் அபிஷேகம் செய்யும்பொழுது, அவன்’ முகத்திலே பால் வழியாதா?-அப்படி, பாபுவின் வதனத்திலும் இப்போது, பால் வழிந்தது. மணிப்பயல் புத்தம் புதிதானதோர் அமைதியோடு காணப்படுகிறானே?

"பாபு!" என்று அன்போடும் பாசத்தோடும் அழைத்து, அருமைத் திருமகனை ஆரத்தழுவி; இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி இரண்டு முத்தங்களை வழங்கிய முதற்பெருமை அப்போதும் பெற்றவள் ரஞ்சனிக்குத்தான் கிட்டிற்று. பாபுவுக்கு இதுமாதிரி முத்தம் கொடுத்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன!-ஆனந்தக் கண்ணீர் ஆடிப்புனலென ஒடுகிறது. பாபுவை இங்கே நிலைப்பாக அமர்த்தி வைத்துக் கொள்ளுவதற்கு எப்பாடு பட்டாகிலும் வழிவகை செய்வதாக அத்தான் சற்றுமுன் உத்தாரம் கொடுத்திருந்த ஆறுதலில் அவளது பெண் மனம் நிரம்பவும் அமைதியடைந்தது.

ரஞ்சித்தின் உந்திக் கமலத்தைவிட்டுப் புறப்பட்ட பாசம் அவருடைய கண்களில் சங்கமம் ஆகவே, பாசக் கண்ணீர் ஒன்று, இரண்டு. மூன்று என்று நன்முத்துக்களாக உதிர்ந்தன. அதே சூட்டோடு, நீள்மூச்சும் நீளமாகப் பிரியத் தலைப்பட்டது. தலையும் இல்லாமல், காலும் இல்லாமல், வெறும் முண்டம் கணக்காக, ஏதோ ஒர் உறுத்தல் அவருடைய உள்ளத்தின் ஏதோ ஒரு முடுக்கில் அரித்தெடுத்துக் கொண்டேயிருந்த பயங்கரமானதோர் அவலத்தை அறிவு பூர்வமாகவும் அவரால் உணர முடிந்தது!-விதியின் வினையும், வினைபின் விதியும் வேடிக்கை மனிதர்களைப்போல் சித்திர விசித்திரமாக ஒன்று சேர்ந்து விளையாடிய, அல்லது, விளையாட்டுக் காட்டிய அந்த அந்தி நேரத்துத் துயரக் கூத்து, உச்சகட்டத்திலே, மனிதத் தன்மையின் மிகமிக மசத்தானதான திரும்பு முனையாக அமைய நேர்ந்த நேரத்திலே, மங்கலான ஒளியும் அன்பு மயமான சோகமும் காட்டி அந்த அந்தி நிலா உதயமான ஆச்சரியத்தையும் அற்புதத்தையும்கூட அவரால் மனப் பூர்வமாகவும் உணர முடிந்தது!...

அப்பாவுக்குத் தன் நினைவை ஊட்ட மகனால்தான் முடியும்; முடியவும் முடிந்தது.

அம்மாவுக்குச் சிரிப்பை ஊட்டவும் அந்த மகனாலே தான், இந்த மகனாலேதான் முடியும்; முடியவும் முடிந்தது.

ரஞ்சித் விழித்தார்: பாபு பிரச்சனையை வெற்றியோடு முடித்தால்தான், என் ரஞ்சனி உயிர்தறிப்பாள்: அந்தத் துப்பு தெளிவாகவே புரிகிறது!

ரஞ்சனியும் சேர்ந்து விழித்தாள். பாபுவை இனி இங்கேயே, எங்களுடனேயே எப்போதும் தங்கச் செய்து விட்டால்தான். நான் உயிர் பிழைப்பேன்; மீண்டும் ஒரு பிறவி எடுத்து, அதாவது, மூன்றாவது பிறவி எடுத்து, நான் பிழைக்கவும், உயிர் பிழைக்கவும் முடியும்: 'ஆமா, இது சத்தியம்!' ...

தாயையும் தந்தையையும் பார்க்கப் பார்க்கப் பாபுப் பையனுக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. மாளாத சிந்தனையிலே மீளமாட்டாமல், மாய்த்து போய்விட்டார்களே இவர்கள்?-இவர்களுக்கு அப்படி என்ன தீராத பிரச்னை ஏற்பட்டுவிட்டதாம்?-"ஒண்ணுமே விளங்கக் காணோமே?-பகவானே!”

பிஞ்சு நெஞ்சரங்கில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் விவேகானந்த சுவாமிகளும் பாபுவின் ஆதாரனையை ஏற்பதற்கும், அவனிடம் மின்சகதியாகப் புதியதொரு வல்லமைபீறிட்டுப் பாய்வதற்கும் கனகச்சிதமாக இருந்தது. மகததில் விளைந்த நெகிழ்ச்சியில், கண்களிலே முத்தங்கள் விளைகின்றனவே! காற்சட்டையின இடது பக்கப் பையை ஒரு பதட்டத்தோடு சோதித்தான். அந்தக் கடிதம் அவனைத் துறந்தோ, மறந்தோ எங்கேயும் போய்விடமுடியாது!

வாழ்க்கையே ஒரு பொம்மலாட்டம்தான்!

இளவரசுப் பட்டம் பாபு எதற்காகவோ தனக்குத் தானே-தன்னில்தானே அமர்க்களமாகவும் அட்டகாசமாகவும் புதிராகவும் சிரித்துக்கொள்கிறான்

ரஞ்சித் கவலைமிஞ்சி, மனையாட்டியை நோக்கினார்.

ரஞ்சனியோ ஆதங்கம் அலைபாய, கைப்பிடி நாயகனைப் பார்த்தாள்.

அப்பா- அம்மாவின் அந்தரங்கமான பார்வைப் பரிவர்த்தனையின் முன்கதைச் சுருக்கத்தை அறியாதவனாக, அவர்கள் இருவரையும் ஒரு விநயத்துடன் நயமாகவே பார்த்துவைத்தான் பாபு.

‘பாபு முசுடாச்சுதே? என் இஷ்டப்படி இவன் இங்கேயே இனிமேலே தங்கிறத்துக்குச் சம்மதிக்க மாட்டானே, என்னவோ?--ரஞ்சித்தின் குறை இது.

“பாபு விதியாட்டமே சிரிக்கிறதைப் பார்க்கையிலே, நெஞ்சுக்கு நீதி கிடைக்கிறதுக்குப் பதிலா, பயமில்ல கிடைச்சிடும் போலிருக்குது? எங்களோட ஆசைக்கனவுப் பிரகாரம் எங்க பாபு எங்ககூட இங்கேயே தங்கிக்கிடுறத்துக்குச் சம்மதிக்கமாட்டானே?-பித்துக்கொண்ட பெற்ற மனம் இப்படியாகத்தானே ஏங்கிற்று.

வேளைகெட்ட வேளையிலே, சாயந்தரப் பலகாரம் தயாராகிவிட்ட தகவலை அறிவிக்க எடுபிடிச் செவகி வந்து சேர்ந்தாள் .

பாபுவுக்கு இப்போதே நாக்கில் நீர் சொட்ட ஆரம்பித்தது.

வந்த காரியம் முடிந்துவிடவே, சிறுமி அங்கிருந்து நகரவேண்டியவள் ஆனாள்,

‘அக்கா...அக்கா, ’ என்று கூப்பாடு போட்டான் சிறுவன். இன்னிக்கு என்ன பலகாரம் பண்ணியிருக்கியாம்?’ என்று கேட்டான்.

“எல்லாம் ஒனக்குப் பிடிச்சதுதானாக்கும்,’ என்று 'பிகு' பண்ணினாள் சின்னப்பெண்.

“எனக்கு என்னென்னமோ பிடிக்கும்; இப்ப ரெடியாகி இருக்கிற டிஃபனைச் சொல்லப்படாதா, அக்கா?”

“சொல்றேன். சொல்றேன்: ஆமா, ஒனக்குப் பிடிக்கக் கூடிய பட்சணத்தோட பேரையெல்லாம் சொல்லு, பார்க்கலாம், பாபு!”

“அந்தப் பேர்களைச் சொன்ன, உன்னாலே எப்படிப் பார்க்கமுடியும்?-கேட்கத்தானே முடியும்?”

செவகியை வாரம் ஒருதரம் வசமாகமடக்காவிட்டால், பாபுவுக்குப் பொழுது போகாது.

அவள் 'இதோ, பார்த்துக்கொள்’ என்கிற பாவனையில், எண்ணெய் வழிந்த முகாரவிந்தத்தில் அசடும் வழிய நின்றாள். பலகாரம் சுட்ட தேங்காய் எண்ணெயில்-விருந்தினர்களுக்கென்று பிரத்தியேகமாகக் கொள்முதல் செய்திருந்த தேங்காய் எண்ணெயில், முகமும் முகமும் வைத்த மாதிரி, ஒரு கை அள்ளி, அதைத் தன்னுடைய முகத்திலே அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க மாட்டாள்தான்! காரணம் இது: அவளுக்குத் தேங்காய் எண்ணெய் கட்டோடு பிடிப்பது கிடையாது. வெட்கத்தோடு கண்களை உயர்த்தினாள: “பாபு, சொல்றேன்; கேட்டுக்கிடு. ஒனக்குப் பிடிச்ச ரவாகேசரியும் நந்தினி அக்காள் விரும்புகிற வெங்காயப் பஜ்ஜியும் செஞ்சிருக்குது; அப்பறம், மலையாள நாட்டு விருந்தாடிங்களுக்காக கீரைவடையும் காத்திருக்குது!” பாபுவின் மறு கேலிப் பேச்சுக்குக் காத்திராமல், செவகி அங்கிருந்து நடையைத் தொடர்ந்தாள்.

பாபுவுக்குப் பாதங்கள் மண்ணிடை நிலைக்கவில்லை ஒட்டமாக உள்ளே ஒடிப்போய், ரவா கேசரியை ஒருகை பார்த்துவிடவேண்டுமென்கிற ஆர்வம் மேலிட்டது. பெற்றோர்களைப் பரிதாபமாகப் பார்த்தான் “கிளம்புங்க, போகலாம்,” என்று தூண்டினான். “டிஃபன் சாப்பிட்டானதும், உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போறேன்.” என்றும் முத்தாய்ப்பு வைத்தான்.

பாபு என்ன புதிர் போடுகிறான்?

ரஞ்சனிக்கு ஒன்றுமே புரியவில்லை.

ரஞ்சித்துக்கும் பிடிபடவில்லை.

அவர்கள் இருவரும் பாபுவை ஏக்கத்துடனும் உருக்கத்துடனும் பார்த்தார்கள்! பாபுவின் தரப்பிலிருந்து அந்த முக்கியமான விஷயத்தை அப்போதே வரவழைத்துத் தெரிந்துகொண்டு விடவேண்டுமென்ற ஆர்வத்துடிப்பு அவர்களது பார்வையில் பிரதிபலித்தது.

பாபு சாமான்யமான பிள்ளையா? அசையவில்லை; அசைந்துகொடுக்கவும் இல்லை. “வாங்க, போவோம்.” என்று கூறி, பெற்ற தாய் தந்தையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு முகப்பு மண்டபத்தைக் குறி வைத்து நடக்கத் தொடங்கினான்.

முகப்பு மண்டபத்தில் முல்லை மணம் கமழ்ந்தது.

அங்கே:

மகேஷ்--ரதி இணை, இணைந்தும் பிணைந்தும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

“மகேஷ், எழுந்திருங்க; டிஃபன் சாப்பிடுவோம்,” என்றார் ரஞ்சித்.

“ரதியும் வரணும்.” என்றாள் ரஞ்சனி.

“நீங்க ரொம்ப முன்னாடியே ஏந்திருச்சிட்டீங்களா, மகேஷ்?” --- ரஞ்சித் வினவினார்.

“ஆமாங்க, ரஞ்சித்; எழுந்து குளிச்சு, ட்ரஸ் மாற்றிக் கிட்டு நானும் இங்கணே வந்தேன;: சொல்வி வச்சமாதிரி, ரதியும் வந்திட்டா; நாங்க ரெண்டு பேருமே உங்களைத் தேடி அங்கே வரலாம்னு தான் யோசிச்சோம்; ஆனா, நீங்க ரெண்டுபேரும் என்னமோ முக்கியமாய்ப் பேசிக்கிட்டு இருந்தமாதிரி தோணுச்சு; அதுதான், நாங்க இங்கேயே உட்கார்ந்திட்டோம்,” என்று விவரம் சொன்னார் மகேஷ்.

“ஒ. கே!”

முன்னே நடந்த ரஞ்சித்தைப் பின்னே தொடர்ந்தனர் மகேஷூம் ரதியும்.

ரஞ்சனி எப்போதோ உள்ளே போய்விட்டாள்!

ஆமாம்; அதுதான் சிற்றுண்டிக் கூடம்.

சந்தனம் புகைச் சுருள்கள் பின்னமடைந்து விடாமல், சன்னமாக வளைந்தும் நெளிந்தும் பரவிக்கொண்டிருந்தன.

அங்கே, பாபுதான் முதன்முதலில் ஆஜர் கொடுத்திருத்தான். ரவா கேசரி இவனை என்ன பாடு படுத்துகிறது, பாருங்கள்!

பேஷ்!-நந்தினி, பாரதப் பண்பாட்டின் பவித்திரமான குண நலன்கள் நிதானமாய்க் குலுங்கிட, அமைதியாக வந்து அமைதியாக நின்றாள். நல்லகாலம், கம்மிஸ், மாக்ஸி அது இதுவென்று பூச்சாண்டி காட்டவில்லை; அதுவரை ஷேமம்; பாவாடை-தாவணியில் பவித்திரமான அழகு பான்மையுடன் பிரகாசிக்கிறது; நெற்றிக்கும் இட்டுக் கொண்டிருக்கிறாள். நாளை, திங்களன்று 'எகனாமிகஸ்' பரிட்சையாம்; வகுப்பில் நடப்பதுதான்: படித்திருப்பாள்; சாயங்காலம் ஆறு முப்பத்தைந்துக்குத் தொலைக் காட்சி அழைக்கத் தொடங்கிவிட்டால், அப்பால் எந்தப் பட்டணம் எப்படிக் கொள்ளை போனால்கூட, அவளை யாரும் லேசில் அழைத்துவிட முடியாது. சிவாஜியோ, எம்.ஜி.ஆரோ, இல்லை, ஷோபாவோ, ராதிகாவோ, யாரோ இன்னும் கொஞ்ச நாழிகையில் நடிக்கப் போகிறார்கள், வெள்ளிக்கிழமை 'ஒளியும் ஒலி'யில் ஷோபா ஒளி கூட்டி, ஒலி கூட்டியது, மனத்தைத் தொடவில்லையா?-சுசீலாவுக்கென்று அப்படியொரு தெய்வீகக் குரல்! ஒன்று: அந்தக் காலத்திய ஔரங்கசீப் இந்தக் காலத்தில் உயிரும் உடம்புமாக இருந்திருந்தால், அந்த மனிதரும் சுசீலாவின் பாட்டுக்களில் மனத்தைப் பறிகொடுக்காமல் தப்பித்துக் கொள்ளவே முடியாது.

வழக்கப்படி, மகேஷ் தன் அருகில் ரதியை அமர்த்திக் கொண்டார்.

ரஞ்சித் நாகரிகமான மெல்லிய கனைப்புடன் அமர்ந்தார்.

ரஞ்சனி கேசரித் தட்டுடன் வந்தாள்.

உடன், செவகியும் வந்தான்.

"நீயும் உட்கார்ந்து, மத்தியான்னம் மாதிரி, எங்களோடவே டிஃபன் சாப்பிடலாமே, ரஞ்?"

"உங்க ஆசைப்படி, ராத்திரி வேணும்னா, நான் உங்ககூட உட்கார்ந்து சாப்பிட்றேதுங்க; இப்பைக்கு என்னை விட்டுடுங்களே, அத்தான்!"

தப்பிதமாக நடந்து கொண்ட விவரம் அறியாப்பாலகி, செய்த தப்பை மறைத்திட, விதரனையுடன் முந்திக் கொண்டு தந்தையைப் பரிதாபமாய்க் கெஞ்சுவது உண்டு.

இந்த உதாரணம்தான், அச்சமயத்தில் ரஞ்சித்தின் சிந்தையில் பளிச்சிட்டது. "சரி; தேவியின் இஷ்டம், என் பாக்கியம்!" அவருக்கே ஆகிவந்த படாடோபச் சிரிப்பு: அச்சிரிப்பில் அவருக்கே உரியதான பட்டவர்த்தனமான அன்பு; அந்த அன்பிலே. அவருக்கே இயல்பாக அமைந்த ஆன்ம நேயம்!-மறுபடி, சிரிப்பொலி; காந்தி நாணயங்கள் குலுங்குமே, அப்படி.

கூடத்தில், களை கூடுகிறது.

பாபு ரோஷக்காரன்!...

தட்டோடு வந்த ரஞ்சனி எடுத்த எடுப்பில் தன் அருமைச் செல்வனுக்குத்தான் முதன் முதலில் கேசரியை வைத்தாள்.

பாபுவுக்கு தாக்கில் ஊறிக் கொண்டிருந்த நீர் இப்போது வாய்க்கு மடை மாறியது. மகேஷ் பக்கம் அவன் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. "ரவாக் கேசரிக்கு மெட்ராஸ்லே ஆர்யபவன் தான் பிரசித்தம்; நாமகூட ஒருவாட்டி ஐலண்ட் க்ரவுண்டிலே சர்க்கஸ் பார்த்திட்டு அங்கே போய் எல்லாருமாய்ச் சாப்பிட்டிருக்கோம்; ஆனால் இப்ப அம்மா செஞ்சிருக்கிற இந்தக் கேசரி அதைவிடவும் அற்புதமாய் அமைஞ்சிருக்குதுங்க, அப்பா," என்று சான்றிதழ் வழங்கினான்; கையோடு இன்னொரு பிடி கேசரியையும் வாய்க்கு வழங்கினான்; 'தப்பு கொட்டிக் கொண்டான்.

ரஞ்சித்துக்கு ஆனந்தம் பிடிபடவில்லை!-வாழ்க்கையென்றால், இதுதான் வாழ்க்கை; மனைவி மக்களுடன் மன மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருப்பதற்கு உண்மையிலேயே கொடுத்துவைத்திருக்க வேண்டும்; இப்படிப்பட்ட பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறதா, என்ன?- கேசரியில் ஒரு துணுக்கு உள்ளே போனதும், குதூகலச் சிரிப்பு வெளியே வந்தது. "ரஞ்சனி. இங்கே வாயேன்; சீக்கிரம் ஓடிவாயேன்," என்று அலட்டினார். கொண்டவான்-உயிர் கொண்டவரின் ஆணைப் பிரகாரம் ஓடிவந்தளின் சோற்றுக்கையில், அத்தனை பேர் முன்னிலையில், ஒரு முத்தம் கொடுத்தார், "நிஜமாவே ரொம்ப அற்புதமாய் கேசரியைக் கிண்டியிருக்கே," என்றார்.

நாணிக் கண் புதைக்கிறாள் ரஞ்சனி.

வெங்காயப் பஜ்ஜியில் தேங்காய் எண்ணெய் வாடை அமர்க்களப்படுகிறது.

"வெங்காயப் பஜ்ஜின்னா நேக்கு ரொம்பவும் பிடிக்கும். ரஞ்சனி அம்மா; ரொம்ப நன்னாச் செஞ்சுட்டேள்!" என்றாள் ரதி.

ரஞ்சனியின் கண்களில் விஷமப் புன்னகை ஒளியாடியது: சாடை காட்டிச் சிறுமியை அழைத்தாள், "உனக்கும் ஒரு பாராட்டுக் கிடைச்சிட்டுது; இந்தா," என்று சொல்லி, அவளுக்குத் தன் பங்காக முத்தம் ஒன்றைத் தந்தாள்-கையில்!

"பாபு!"

ஏறிட்டு விழித்தான் பாபு.

யார் அழைப்பதாம்?

மகேஷா?

இல்லை.

பின்னே?

ஓ!-ரதி அம்மாவா?

"பாபு, பஜ்ஜி ரொம்ப உச்ரமா இருக்கில்ல?" என்று அபிப்பிராயம் கேட்டாள் கேரளப் பூங்குயில்.

"ஓ!" என்று ஒய்யாரமாக விடைமொழிந்தான் பாபு!

ஒரு சிதம்பர ரகசியம்!-பாபு, இன்னமும் வெங்காயப் பஜ்ஜியைத் தொடவே இல்லை!

ரஞ்சித்துக்கும் ரஞ்சனிக்கும் சிரிப்பைத் தடுத்துக் கட்டுப்படுத்த முடியாமலே போய்விட்டது.

ரதியின் சந்திரபிம்ப வதனம், மேகத்துண்டத்திடம் பலாத்காரமாகச் சிக்கிக் கொண்ட பிறை நிலவுக் கீற்றை நினைவூட்டும் பாங்கில் சிறுத்துக் கறுத்தது. "பாபுவுக்கு என்னையும் பிடிக்கல்லே போலிருக்கு!"

"நல்லவங்களை நேக்குக் கட்டாயம் பிடிக்குமே? ஞான் இப்போழ் பஜ்ஜி கழிக்காம்!" பாபு இப்போதுதான் பஜ்ஜியைத் தொட்டான்; நிஜார்ப் பைக்குள்ளே பள்ளி கொண்டிருந்த அந்தத் துண்டுக் கடிதத்தை மறுபடி தொட்டுச் சரி பார்த்துக் கொள்ளவும் மறக்கவில்லை. படுசுட்டி மட்டும் அல்ல; படு சமாத்துங்கூட!

பொங்கு விரி காவிரியாக வேர்வை பெருகுகிறது.

இந்தப் பேரதிசயத்துக்கு ஆளான புள்ளி!-சரிதான்; மகேஷ்தான்! பாவம், அசந்து மறத்து கூட அவர் பார்வை பாபுவின் பக்கமே திரும்பவில்லை!

ரஞ்சனியை ரஞ்சித்தும், ரஞ்சித்தை ரஞ்சனியுமாக ஒரு கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டார்கள்: பாபுப் பயல் என்ன புதிர் போடப் போகிறானாம்?- பகவானே!... உடலுக்கு இதமளிக்க முயற்சி செய்யும் செயற்கைக் காற்று: உள்ளத்துக்கு --- உள்ளங்களுக்கு இயற்கையாக இதமளிக்கத் தவறிவிடுவதும நடைமுறையில் உண்டு .

செவகிக் குட்டியோடு காப்பி தீர்ந்தது. சுபம்!

தாம்பூலத் தாம்பாளம் வந்தது.

செட்டிநாட்டு உருப்படி.

கோட்டையூர் மீ. சுப., திருமண நாளின்போது பரிசளித்தது அது.

புது மெருகு மாறவில்லை.

ரஞ்சித்துக்கும் சமயங்களில் இப்படி நாணம் வருவது இயல்பு!--- மணவறையில், மாலையும் கழுத்துமாக மங்களமும் மாங்கல்யமுமாகத் தம் அருகில் தொடையோடு தொடை சேர்ந்து, தோளோடு தோள் சேர்ந்து, வாத்ஸல்யமான சல்லாபக் குதூகலத்துடன் வீற்றிருக்கும் ரஞ்சனி என்னமாய் ஒரக்கண்ணால் பார்த்து எவ்வளவு அழகாகப் புன்னகை செய்கிறாள்!-தன்னுணர்வுகொண்டு, உள்ளம் கொண்டவளைப் பார்த்தபோதும் அந்த நாணத்தைக் காட்டினால், ‘ரஞ்’ நையாண்டி பண்ணமாட்டாளாக்கும: ஆனாலும், அவளும் அர்த்தப்புஷ்டியோடு பதிலுக்குப் புன்னகை செய்தது அவரை என்னவோ செய்திருக்கவேண்டும். ‘எச்எம்டி’யில் பத்துமணியைப் பொருத்தி வைத்துப் பார்த்தபோது, அவர் வெளியேற்றிய பெருமூச்சு ராத்திரி வரையிலும்கூட பெரிதாக நீண்டு விடும் போலிருந்தது இருந்திருந்தாற்போலலே, மனக்கடலில் ஆறுதல் அலையொன்று அடித்தது. மத்தியானம் ஓய்வுப்பொழுது நல்ல பொழுதாகச் சிருங்காரமாகக் கழிந்தது!---பிறந்த மேனியாகப் போதத்தையும் போதையையும் ரசனையோடு தரிசிப்பதென்பது அபூர்வமான நடப்புத்தான்!

“இந்தாங்க, பிடியுங்க, அத்தான்!”

“என்ன சாபமா?” என்று சாணக்கியத் தந்திரத்தோடு கேட்டுக்கொண்டே, தமது உயிரினும் மேன்மை தங்கிய ஆருயிர் ரஞ்சனியின் தளிர்க்கரங்களைப் பிடித்துக்கொண்டார் ரஞ்சித்!

“ஊஸ்...என்னாங்க அத்தான் இப்படி..? அந்நியமானவங்களெல்லாம இருக்கிறது மறந்துபோச்சுதா?” காதும் காதும் வைத்தவிதமாகச் செல்லமாகக் கோபப்பட்டுக் கைகளையும் விடுவித்துக்கொண்ட பெருமை திருமதி ரஞ்சித்தைச் சார்ந்தது; சேர்ந்தது.

மகேஷ் குனிந்த தலையை இன்னமும்கூட நிமிர்த்தவில்லை.

ஜாடை தெரிந்துகொள்வதில் ரதி கெட்டி. ஆகவே தான, சற்றுமுன்னம் வந்து சேர்ந்த ‘மெயில்’, ‘மாலை முரசு’ பத்திரங்களில் மூழ்கிவிட்டிருந்தாள்.

பாங்கரின் அன்புக்கணக்கில் தாம்பூலமும் ஆதாயப் புள்ளியில் சேர்க்கப்படுகிறது.

“மகேஷ், பீடா எடுத்துக்கிடுங்க; உங்களுக்குப் பிடித்தமான ஸ்பெஷல் பீடாதானுங்க!” என்றாள் ரஞ்சனி. “நீங்களும் ஒண்ணு எடுங்க!” என்பதாக ரதிதேவிக்கும் குறிப்புக் கொடுத்தாள்.

“ரஞ், மகேஷூக்கும் மகேஷோட ரதிக்கும் உன் கையாலேயே தாம்பூலம் கொடுத்திடேன்!” என்று ஆலோசனை வழங்கினார் ரஞ்சித்.

ரஞ்சனி நூறு சதவீத அளவிலான எச்சரிக்கையுடன், இட்ட பணியைத் தட்டாமல் நிறைவேற்றினாள்.

நந்தினி விலாசம் உரிமையாளர்; ‘சபாஷ்!’

“மிஸ்டர்.மகேஷ்!...”

இடைவெளி கொடுத்து, எதிரொலி கொடுத்த அழைப்புக் குரல் மகேஷைத் தூக்கிவாரிப் போட்டது. ரஞ்சித் தன்னை ‘மிஸ்டர்’ போட்டு இங்கிலீஷ்காரர்மாதிரி அழைக்கும் சமயத்திலெல்லாம் அவருக்கு நுரைஈரல் நுங்கும் நுரையுமாக ஆகிவிடுவது புதிதான அனுபவம் அன்று. “சொல்லுங்க, மிஸ்டர் ரஞ்...சித்”, என்று கேட்டுக்கொண்டார்.

மகேஷ் பேசிய பேச்சில் தொனித்த போலித்தனம் காரணமாக, ‘மிஸ்டர்’ மரியாதையை அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை ரஞ்சித். எனவே அவர் குரலில் இப்போது கடுமை சற்றே கூடுதலாக ஒலித்தது. “நீங்க எங்க பாபுவோடே பேசவேணும்னு ஆசைப்பட்டீங்களே?--- இப்போ வேணும்னா பேசுங்களேன்: பாபுவோட ரூமுக்கு அழைச்சுக்கினு போய், அவனோடு தனிமையிலே மனம்விட்டும் பேசலாமே, மிஸ்டர் மகேஷ்?” என்றார்.

“.....”

“கேட்கிறேனே?”

“நான் பேசல்லீங்க, மிஸ்டர் ரஞ்சித்!”

“ஏன்?”

“பாபுவோடே நான் பேச விரும்பல்லேங்க!”

அடிநாளிலே, பசிபிக் மகாசமுத்திரத்திலே, அணுப்பரிசோதிப்பின்போது, அணுக்குண்டுகள் இவ்வாறுதான் வெடித்திருக்குமா?

“ஒஹோ!... அப்படியா?”

ரஞ்சித் திடுக்கிட்டார்; திகைத்தார்; தவித்தார்; தடுமாறினார். எத்தனை நிட்டூரமாகத் தீர்ப்புக் கொடுத்து விட்டார் மகேஷ்!- ‘நான் பாபுவோட பேச விரும்பல்லேங்க!’ மனம் கலங்க, கண்கள் கலங்கின. இந்நிலையிலே, உயிரைக் குடித்து ஏப்பம்விடக்கூடியதான அந்த அந்திமாலைச் சோக நாடகம்-ஒரே களமும் ஒரே அங்கமும் கொண்டதாக விளங்கிய அந்தத் துயரக்கூத்து அவரது இதயமேடையில் மறுபடி நிழலாடாமல் தப்பமுடியாமலும் போய்விட்டது: கசிந்து உருகிய சுடுநீர்ப்படலம், அந்தச் சோக நாளின் தேதிப்படத்தைக் காண்பிக்கவும் தவறிவிடவில்லை. அடித்து வைக்கப்பட்ட கருங்கற் சிலைமாதிரி. ‘கம்’ மென்று உட்காtந்திருந்த மகேஷின் போக்கு அவரைக் சாறு பிழியவே, “மிஸ்டர் மகேஷ்! எந்தக் கோட்டையைப் பிடிக்க ப்ளான் போடுறீங்க? பிடிச்ச கோட்டை போதாதா?” என்று கேட்டுவிட்டார்.

கப்சிப் !

வெற்றிலைத் தட்டுடன் உள்ளே சென்ற ரஞ்சனி, இரவுச் சாப்பாடுபற்றி விவரம் அறிவதற்காகத் திரும்பி ஒரு நிமிஷம்கூட ஆகியிருக்கவில்லை; சுடர்மணித் தீபமாக அல்லாடித் தள்ளாடினாள்.

“மதியத்திலே நீங்க எங்க பாபு கையிலே என்னவோ பேசவேணும்னு நினைச்சிங்க: ஆனா, இப்போ உங்க மனசான மனசு ஏனோ மாறிப்போச்சு! அது போகட்டும்!-பாபு கிட்டே ரகசியமாக அப்படி என்னதான் பேச நினைச்சீங்களாம்? அதையாச்சும் சொல்லலாமா, மிஸ்டர் மகேஷ்?”

“அது என் சொந்த விஷயம், ரஞ்சித், ஸாரே!” என்று மிக அமர்த்தலாகவும் வெகு கண்டிப்பாகவும் பதில் கூறினார் மகேஷ்!-ரஞ்சனி-ரஞ்சித் குடும்பத்தின் உயிர் நண்பரான மிஸ்டர் மகேஷ்!

“பேஷ், பேஷ்! நல்லாய்ச் சொன்னீங்க ; உண்மையை உண்மையாய்ச் சொல்லிட்டீங்க!...மிஸ்டர் மகேஷ்!உங்களை எனக்குத் தெரியாதா?...”

ரஞ்சித் ஆத்திரம் தாங்காமல், சத்தம் போட்டுப் பேசினார்; நெஞ்சில் வீரிட்டுப் பீறிட்ட வெஞ்சினம் பற்களில் நெரிபட்டு நிர்த்துளிப்பட்டது: அகன்று விரிந்த கண்கள் மறுபடிச் சிவப்பேறிச் சிவந்தன: கண்ணின் கருமணிகள் கண்ணீரில் பளபளத்தன. சொந்த விஷயம்!--- எது சொந்த விஷயம்? என் பாபுவோடே --- எங்க பாபுவோடே பேசறதும் பேசாததும் உன் சொந்த விஷயமா?---‘அட, பாவி!’... வேர்வை, முத்துக் குளித்தது.

ரஞ்சித்தின் கோபம் மகேஷூக்குத் தீரத் தெளியத் தெரியும்; ஆகவே, அவர் மறுபேச்சாடத் துணியவில்லை; தலைகுனிந்தார்: ‘ஐயய்யோ...பாபு!...சோட்டானிக்கரைப் பகவதி அம்மே!’ ஈரவிழிகள் என்ன காவியம் படிக்கின்றனவாம்?

ரஞ்சனி-ரஞ்சித்தின் மனையாட்டி-பாபுவின் அன்னை தவியாய்த் தவிக்கின்றாள்: தண்ணீராய் உருகுகின்றாள்!...

ரதி அகம் சிணுங்கினாள்.

நந்திணிக்குக் காப்பிச் சுவைப்பு மாறிவிட்டது; அல்ல, மாற்றப்பட்டது.

இளங்கன்று பயம் அறிவதில்லை!-ஆவேசமும் ஆத்திரமுமாக மகேஷை வெறித்தும் முறைத்தும் பார்த்தான் பாபு;

மகேஷ் பதுங்கினார்; ஆனால், அவர் புலியல்லவே!-- அவர் மனிதர்!-ஆகவே, என்னவோ ஓர் உறுத்தல் அச்சப்படுத்தவே, அச்சத்தில் விளைந்த ஆற்றாமையுடன் இருக்கையினின்றும் மெதுவாக எழுந்தார்: நெற்றித் திட்டில் ஒற்றிக் கிடந்த வேர்வை, இப்போது சிறுகச் சிறுக உலர ஆரம்பித்திருந்தது. சந்தனப் பிறைக் கீற்று இப்போது துலாம்பரமாகவே தெரிகிறது.

பாபு இளங்கன்றாகத் துள்ளி எழுந்தான்; அவன் பயம் அறிந்தவன்தான்; ஆனாலும், இப்போது அவன் பயப்படவில்லை!- நான் ஏன் பயப்படவேண்டும்? மகேஷ் எழுந்து நின்று எதிர்த் திசையை நோக்கி நடந்தான். “மகேஷ் ஸாரே! என்கிட்டே நீங்க பேசுறதும் பேச விரும்பாததும் உங்க சொந்த விஷயம்னு சொன்னீங்க; ரொம்ப சரி. ஆனா, நீங்க என் கையிலே என்னவோ பேச நினைச்சீங்கதானே?- உங்களோட அந்த ஒரு எண்ணம் என்னையும் சம்பந்தப்படுத்தாதுங்களா? அப்படியானா, அந்தச் சம்பந்தத்தை வச்சுப் பார்த்தாக, அது என்னோட சொந்த விஷயமாகவும் ஆகிடாதுங்களா?- ஆகையினாலேதான், இப்ப நானே உங்களை வலியத் தேடி வந்து நிற்கிறேன்; சொல்லுங்க, ஸாரே!-அப்படி என்ன பெரிய விஷயத்தை நீங்க என்கிட்டே பேச நினைச்சிருந்தீங்க?- சொல்லுங்க மகேஷ், சொல்லுங்க!” அவன் பேச்சில் அதிகாரம் மேலோங்கியிருந்தது.

ரதியின் சந்திரப் பிறை நெற்றியில் பளிச்சிட்ட அம்மன் குங்குமத்தில் கேள்விக் குறியும் அதிசயக் குறியும் கொக்கி இட்டுப் பின்னியும் மின்னியும் பளிச்சிட்டன. அவளது விழி நோக்கில், மகேஷ் ரங்கராட்டினம் சுற்றியிருக்க வேண்டும்.

ஆமாம்: மகேஷ் ரங்கராட்டினம்தான் சுற்றிக் கொண்டிருந்தார்-‘பாபு!...என் அருமைப் பாபு...அன்புப் பாபு!... என்டே பாபு!... நீ என்னை இப்படிச் சோதிக்கலாமா? இது தகுமா?---தர்மமா?’--- ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டது போலவும், அப்படிப்பட்டதொரு முடிவுக்கு வருவதைத் தவிர வேறு மார்க்கமே கிடையாது என்கிற ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு ஆளானவர் போலவும்-ஆளாக்கப்பட்டவர் போலவும் தோன்றிய.... தோற்றமளித்த மகேஷ், பையப் பைய விழிகளை உயர்த்திப் பின்பு, கண்களையும் உயர்த்திப் பாபுவை இப்போது நேருக்கு நேராகப் பார்த்தார்: பார்வையிட்டார்!-- “பாபு!” என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.

பாபுவும் ஏறிட்டு நிமிர்ந்து, தலையை நிமிர்த்தினான் !

ரஞ்சனி தீக்கணப்பின் நடுவில் அகப்பட்டுச் சிக்கிக் கொண்டவளாகத் துடித்தாள்; தடுமாறினாள்; தத்தளித்தாள்; அன்றைக்கு, ஸ்ரீராமபிரானின் சோதனைக்கு ஆளாகி அக்கினிப் பரீட்சைக்குத் தயாராக நின்ற ‘புணையா ஒவியம்’ இன்று, இப்போது அவள் நெஞ்சிலும் நினைவிலும் புனைந்த ஒவியமாகி நிழலாடிச் சிரித்திருக்க வேண்டும்; விதியாகவே வினைசூழச் சிரித்திருக்கவேண்டும்!...

வெறி பிடித்தவராகவும் பைத்தியம் பிடித்தவராகவும் நெஞ்சைத் தடவித் தடவி, இருதயத்தைக் தேடிக் கண்டு பிடித்துப் பிசைந்து கொண்டிருந்தார் ரஞ்சனியின் உயிர்த் துணைவர் ரஞ்சித்!- பாபுவின் அன்புத் தந்தை ரஞ்சித்: உயிர் மானம் உயிர்க் கழுவில் ஊசலாடிக்கொண்டிருந்தது.

இப்போது:

பாபு நடந்தான்.

பாபு, விதியாக நடந்தான்.

மகேஷ் நின்ற இடத்தை நோக்கி நடந்தான் பாபு.

பாபுதான் விதியா?

விதிதான் பாபுவா?

“ஊம்; சொல்லுங்க, மகேஷ் ஸாரே!” என்றான் பாபு, களங்கம் இல்லாத அவனுடைய கண்களிலே, ஆத்திரம் இருந்தது. பால் வழிந்த பிஞ்சு முகத்திறகுக் களங்கத்தைக் கற்பிப்பது போன்று அவனது இடது கன்னத்தில் அமைந்திருந்த அந்தக் கறுப்பு நிற மரு இப்போது வினையாகச் சிரித்தது.

மகேஷ், ‘பாபு!...’ என்று மறுபடி விளித்தார்; விளித்தவர், ஏனோ, மறு வினாடி மெளனம் சாதித்தார்: தனது இடது கன்னத்தில் இருந்த பொல்லாத அந்தக் கறுப்பு வடுவை - அசிங்கமாகக் காட்சியளித்த அந்தக் கறுப்பு மருவை நடுங்கும் விரல்களால் தடவினார்; தடவிக் கொண்டிருந்தார்.

பாபுவுக்குச் ‘சுரீர்’ என்னும் வினோதமான ஒர் உணர்வு நெஞ்சம் முழுவதிலும் பரவத் தொடங்கியது. ‘என்ன அதிசயம் இது?-மகேஷ் ஸாரோட இடது கன்னத்திலே இருக்கிற கறுப்பு மரு---வடு மாதிரியே, என்னோட இடது கன்னத்திலேயும் ஒரு கறுப்பு மரு - வடு இருக்குதே? என்ன வேடிக்கை இது?- பிஞ்சு மனம் ஏனோ தவிக்கிறது!எப்படியோ தவிக்கிறது! அவனையும் மீறி, அவனுடைய நிர்மலமான கண்கள் கலங்கவும் தொடங்குகின்றன.

“பாபு, நான் உன் மேலே வச்சிருக்கிற பரிசுத்தமான அன்பையும் துல்லிதமான பாசத்தையும் ஆண்டவன் அறிவான்; ஆனா, நீ அறியமாட்டே!- நான் உன்கிட்டே பிரியம் கொண்டிருக்கிறது மாதிரியே, நீயும் என்கிட்டே பிரியம் கொள்ளவேணும் என்கிறது என் ஆசை; இந்தப் புனிதமான ஆசை அநியாயமாய் நிராசையாக ஆகிடப் படாதேன்னுதான், நான் உன் மனசான மனசை மாற்றி, என் பக்கம் நல்லபடியாகத் திருப்பவும் நினைச்சேன்: அதனாலேதான், நான் உன்னைத் தனிமையிலே கண்டு உன்கிட்டே பேசவும் நினைச்சேன்!... கதை இவ்வளவுதான், பாபு!” உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வார்த்தைகளைக் கொட்டி அளந்து, டக்கென்று பேச்சை நிறுத்தி விட்டார் மகேஷ். கழுத்துப் புறத்தில் வழிந்த வேர்வை, வழிந்து கொண்டே இருக்கிறது; வேர்வையில் விழிநீரும் கலக்கிறது. அவரது பார்வை முதலில் ரஞ்சனி மீதும், பிறகு, ரஞ்சித் பக்கமும் சாய்ந்தது: “ஐயப்பா என்னைச் சோதிச்சிடாதே!... ஞான் நிரபராதியாக்கும்!.... ,” நெஞ்சத்தின் நெஞ்சம் பாவத்தின் மன்னிப்பில் உருகியது:உருக்குலைந்தது: “பாபு...பாபு!”

ரஞ்சனியின் உயிர் இயங்கத் தொடங்கிகிறது.

ரஞ்சித் அமைதியாகப் புன்னகை செய்கிறார்.

‘ஒமேகா’ சிட்டுக் குருவி ஆறு முறை, முறை வைத்துக் கூவியது.

அந்தி மயங்குகிறது; மயங்கிக் கொண்டிருக்கிறது.

பாபு, மீண்டும் கூப்பிட்டான்: “மகேஷ் ஸார்!”

“சொல்லு, பாபு!”

“நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லே; கேட்கப் போறேன்!”

“ஊம், கேள்!”

“நீங்க என்மேலே இவ்வளவு அன்பு பாசமும் வச்சிருக்கிறதுக்குக் காரணம் என்னாங்க, மகேஷ்! உங்களுக்கும். எனக்கும் என்ன சம்பந்தம், மகேஷ் ஸாரே? ஊம், சொல்லுங்க!” என்று ஆணையிட்டான் பிஞ்சுப் பாபுப் பயல்.

ரஞ்சனிக்குத் ‘திக்’கென்றது: “கிருஷ்ணபரமாத்வே!”

ரஞ்சித் மலைத்தார்: “கண்ணபிரானே!”

மகேஷ் விம்மினார்: “நான் மனுஷன்!- அதுதான் உனக்கும் எனக்கும் உண்டான சம்பந்தம்!...” -

“ஒஹோ?...அவ்வளவே.தானே?...” என்று ஓங்காரமிட்டுச் சிரித்தான் பாபு-நிஜார்ப் பைக் கடிதமும் அவனோடு சேர்த்துகொண்டு சிரித்திருக்கலாம்!

மகேஷ் திடுக்கிட்டார்.

"உங்களை எனக்குப் பிடிக்கல்லேங்க, மகேஷ்! ஆகச்சே. நீங்க என்னை மறந்திடுங்க, மகேஷ் ஸாரே!" என்று தீர்ப்பு வழங்கினான் மணிப்பயல் பாபு!...

பாபுதான் விதியோ?

விதிதான் பாவோ?

"ஐயையோ, பாபுவே!" வீரிட்டு அலறினார் மகேஷ்.

பாபு இப்போது அன்னை ரஞ்சனியின் அன்பான மடியில் வந்து விழுந்தான். அவலுடைய நிர்மலமான அழகு விழிகளினின்றும் கண்ணீர் முத்தங்கள் சிந்திச் சிதறிக் கொண்டிருக்கின்றன. அவனுடைய நாசித் துவாரங்கள் அம்மா ரஞ்சனியின் நாசித் துவாரங்களைப் போன்றே அச்சுக் குலையாமல் அதிக அழகுடனும் மிகுந்த கவர்ச்சியுடனும் புடைத்துப் புடைத்து அடங்குகின்றன.

"பாபு! பாபு!" என்று குரல் தழதழக்க விளித்த ரஞ்சனி, தன் அருமைப் பிள்ளையான்டானுக்கு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தாள். இடது கன்னத்தின் மருவில் பதிந்த முத்தத்தில், ஒரு சொட்டுக் கண்ணீரும் பதிந்தது!

பாபு கெட்ட கனவு கண்டவன் போலவே, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.

ரஞ்சனி பதறினாள்.

ரஞ்சித் தவித்தார்.

பாபு, அந்தக் கூடத்தின் கீழ்த்திசைச் சுவரில் பளிச்சிட்ட அந்தச் சித்திரத்தை-மணியம் வரைந்த அந்தச் சித்திரத்தையே வைத்த விழி வாங்காமல் பார்த்தான்; அப்படிப் பார்த்தான்; "அம்மா, அம்மா! அது என்ன படம் அம்மா" என்று வினவினான்.

"ஓ, அதுவா? உனக்குத் தெரியாதா பாபு? அகுதான் பரசுராமர் படம்!"

"ஓஹோ! அப்பாவோட ஆணைக்கு கீழ்ப்படிஞ்சு, தப்புப் பண்ணிட்ட தாயையே வெட்டிப் போட்ட அந்தப் பரசுராமா?--- எங்களுக்குக்கூட., பரசுராமர் கதை இந்த வருஷம் பாடத்திலே வந்திருக்குது. அம்மா!"

"அப்படியா?"

ரஞ்சலியின் சமர்த்து யாருக்கு வரமுடியும்?

"அம்மான்னா அம்மாதான்! என் அம்மாவுக்கு எல்லாம்! தெரியுது!" என்று ஆனந்தப் பரவசத்துடன் பெருமை அடைந்த பாபு, அந்தப் பெருமையை நிதர்சனமாகப் பிராடவப்படுத்தும் பாவனையிலே, தன் அன்னைக்கு- அன்பும் பாசமும் கொண்ட தன் அன்னைக்குத் தன் பங்கிற்காகவும் முத்தங்களை வழங்கினான்; வாரி வாரி முத்தங்களை முத்தங்களை வழங்கினான்.

"பாபு!" ரஞ்சனி விம்முகிறாள்!

காலடி ஓசை கேட்கிறது.

ரஞ்சித் ஏறிட்டு விழித்தார்.

"நாங்க புறப்பட்றோமுங்க, மிஸ்டர் ரஞ்சித்!" என்றார் மகேஷ்-ரதி சகிதம் நின்ற மகேஷ்.

"எங்கே புறப்பட்டுட்டீங்க?"

"ரதியோட சினிமா ஸ்டார் சிநேகிதி பங்களாவுக்கு!- அங்கே போயிட்டு, அப்படியே ராத்திரிக்கே நாடு போகவேணுமுங்க!" என்றார் மகேஷ்.

ரஞ்சித்துக்கு அதிர்ச்சி ஏற்பட்டது; மறு நொடியில், அவரது இதழ்களில் புன்னகை விளையாடத் தொடங்கியது: “வீடு தேடி வந்த விருந்தாடிங்க, ஒரு ராத்திரி கூட இங்கே எங்களோடே தங்காமல் போனால், நல்லா இருக்குங்களா, மகேஷ்?... ஊகூம்; நான் உங்களை லேசிலே விட்டுட மாட்டேன்; என்னோட ரஞ்சனியும் உங்களை விட்டுட மாட்டாள்! நான் சொல்றதைக் கேளுங்க. இப்ப நாமா அதாகப்பட்டது, நீங்க, உங்க ரதி, நான், என் ரஞ்சனி, நம்ப பாபு...அப்புறம் எங்க நந்தினிக் குட்டி எல்லோரும் கொஞ்ச நேரம் டி. வி. பார்க்கிறோம்; ரேடியோ கேட்கிறோம்; பின்னே எல்லோரும் ‘டாஜ்’ போய் ஒரு ஸ்பெஷல் காஃபி சாப்பிடறோம்; பின்னே, நேரா மெரீனா போறோம்; அப்புறம் நாம் பங்களாவுக்குத் திரும்புறோம்: சாப்பிட்றோம்; ராத்திரி இங்கேயே படுத்துத் தூங்குறோம்; நாளைக்கு நீங்க கொச்சின் எக்ஸ்பிரஸிலே நாடு போறீங்க!” என்று ரஞ்சித் தமது திட்டத்தைத் திட்டவட்டமாக வெளியிட்டார். அவரது சொற்களில் அவருக்கே ஆகிவந்த அன்பு பண்புடன் வெளிப்படுத்தப்பட்டது. உதட்டுச் சிரிப்பில் தற்போது சிலிர்ப்பும் கூடியது; கூடிவந்தது. இடையிலே, ஒரு சலசலப்பு நிகழ்ந்துவிட்டது!- ஏதோ ஒரு சலனம்; சலனத்தின் ஆட்டபாட்டம்!-அன்புப் பரிமாறலில் இம்மாதிரியான சலசலப்பு ஏற்படும்போது, அந்த அன்பிற்குப் புதியதான அரும் பதவுரை கிட்டுமோ, என்னவோ?---தலையை உயர்த்தி மகேஷை நோக்கினார் அவர்,

ஆனால்:

மகேஷ் வழக்கம் போலவே இப்போதும் மெளனப் பிண்டமாகக் காட்சி கொடுத்தார். ரதியைப் பார்த்து, அவளது இணக்கமான முகக் குறிப்பை உணர்ந்து கொண்டவர் போல் ரஞ்சித்தை நோக்கினார்.

“ஊம், சரி சொல்லிடுங்க, மகேஷ்!” என்று கேட்டுக் கொண்டாள் ரஞ்சனி.

“சரி!...” என்று விடை கொடுத்தார்: விடை சொன்னார்!- சொன்னவர் சாட்சாத் மிஸ்டர் மகேஷ்தான். ரஞ்சனியின் சொல் அவருக்கு “இலட்சுமணன் கோடு” அல்லவா? ஏன், ரஞ்சித்தின் பேச்சையும் அவர் என்றைக்குமே தட்டியது கிடையாதுதான்!...

ரஞ்சனி வசீகரமான தன் உதடுகளில் புன்னகை அணிகிறாள். ஒர விழிப் பார்வையால் மகேஷை அளந்த போது, மாரகச் சேலை சற்று நழுவி விட்டது. சுயப் பிரக்ஞை நழுவியதால் வந்த வினை!

ரஞ்சித் ஒடிப்போய், மனைவியின் சரிந்த புடவையைச் சரி செய்தார். பரவாயில்லே!...என்று தட்டிக் கொடுத்தார்.

“சரிதானே, ரஞ்சித்?”-மகேஷ்.

நாளேக்கு மதியத்திலாவது முதல்வரைக் கோட்டையில் போய்ச் சந்தித்துவிட வேண்டும்!--- “ஆல் ரைட்!...ஒ.கே!” என்று ஆமோதித்தார் திருவாளர் ரஞ்சித். மறுகணம்! அவர் விடுகதைச் சிரிப்பொன்றை எதிரொலிக்கச் செய்யவும் மறந்துவிடவில்லை!,..