அந்தி நிலாச் சதுரங்கம்/பாபுவின் தெய்வ அவதாரம்
7. பாபுவின் தெய்வ அவதாரம்!
தமிழ்ச் சாதி -சமுதாயத்தின் பண்பாடு தழுவிய நெறிமுறைகளுக்கும், மண வாழ்க்கையின் முன்-பின் கதையின் பாற்பட்ட காரண காரியங்களுக்கும் தக்கபடி, மென்மையான நல் உணர்ச்சிகளுக்கு எளிதிலே ஆளாகி விடுகின்ற மனப்பாங்கும் மனப்போக்கும் கொண்ட பாங்கர் ரஞ்சித், நல் இணக்கமான ‘சரி’ என்னும் ஒப்புதலை மகேஷ் சொல்லக் கேட்ட மாத்திரத்தில், மண்ணிவிருத்து விண்ணுக்கும், விண்ணிலிருந்து மண்ணுக்குமாகப் பறந்தார்; பறந்துகொண்டிருந்தார்.
அந்தி மயங்குகிறது. மயக்குகிறது!
அசோக மரங்களைக் கட்டி அணைத்த பூங்காற்று, கட்டிளங்காளையின் புது ரத்தத்தை நினைவூட்டுவது போன்று, இளமைக் கோலம் தாங்கிச் சிருங்கார ரசம் குலுங்கத் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது.
குறளி வித்தை செய்து தங்கள் வாயை யாரோ அடைத்துவிட்டமாதிரி, மகேஷசம் ரதியும் வாயைத் திறக்கமாட்டாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார்கள்.
ரஞ்சித்தின் பார்வை இப்போதுதான் குமாரி ரதியிடமிருந்து திரும்பியது! செயற்கையின் கண்படாமலே, இயற்கையிலேயே எத்தனை அழகோடு பொலிகிறாள் இந்த ரதிப்பெண் -வசீகரமான வடிவ அமைப்பு இம்மாதிரிப் பெண்களிடம் கூடியும் கைகூடியும் சரண் அடைவதற்கும் கேரளத்தின் உன்னதமான மண்வளம்தான் மூலாதாரம் ஆகியிருக்கவேண்டும்.
மென்மையான கனைப்புச் சத்தம் மென்மையாக ஒலித்தது.
ரஞ்சித் திசைமாறித் திசை மறுகினார்.
ஒ!.ரஞ்...தான்!
இளமை திரும்பும்போது, அது ஊஞ்சலாடாமல், வெறுமனே கால் கடுக்க நிற்பதில்லை.
"என்ன, ரஞ்சனி?" என்று கேட்டார் பாங்கர்: சொற்களில் தடுமாற்றம் தெரியவில்லை. குற்ற உணர்வு தெரிந்தது. ஒரக்கண்ணில் ரதியை ரசித்ததை யூகித்திருப்பாளோ ரஞ்சனி? "அப்புறம் ப்ரோக்ராம் என்ன?” என்று தூண்டினார்.
‘என்னாங்க அத்தான், இப்படிக் கேட்கிறீங்க? நீங்க சொன்னதுதான் ப்ரோக்ராம்!-முதலிலே டி. வி: அப்பறம், ரேடியோ; பின்னே, டாஜ்: பிறகு, பீச்...கடைசியாய்ச் சாப்பாடு!“சாப்பாடு முடிஞ்சதும்...?
“சாப்பாடு முடிஞ்சதும்.......”
“ஊம்!”
"வேணாம்னா, ஏதாகிலும் ஃபிலிம் போகலாம்!”
"ஃபிலிமுக்குப் போ காட்டி?"
"போகாட்டி, ஹாயாக எல்லாரும் தூக்கம் போட வேண்டியதுதானுங்க, அத்தான்!”
"நடுவிலே ஒரு ஐய்ட்டம் விட்டுப் போச்சுதே, ரஞ்?"
"அத்தான், நீங்க வாயைத் திறந்தாலே, எனக்குத் திகீர்னு ஆயிடுது: நீங்க விடுகதை போடுறதைப்பத்தி எனக்கு யாதொரு ஆட்சேபணை.யும் கிடையாது; ஆன, போடுற புதிருக்கு உண்டான விடையையும் சொல்லிடுங்க; உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் கிடைச்சிடும்; ஏன், தெரியுங்களா? அற்பமான, சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம்கூட மூளையைப் போட்டுக் குழப்பிக்கிடுற மன நிலையிலே நான் இப்போது இல்லீங்க, அத்தான்!”
“ அப்படி என்ன இப்போ வந்துடுச்சு உனக்கு?"
“ எனக்கு ஒண்ணும் வந்திடல்லேங்க!”
“பின்னே? உடம்புக்கு ஏதாச்சும் வந்திடுச்சுதா?”
"உடம்புக்கு எதுவும் வந்திடல்லே!"
"பின்னே?”
"பின்னே, என் மனசுக்குத்தான்..."
"உன் மனசுக்கு என்ன ஆச்சாம்?”
"மனது கெட்டுப் போச்சுங்க!”"மனசு கெட்டுப் போச்சா!"
".............."
"ஏன், என்ன காரணம்?”
"................"
"சொல்லு, ரஞ்; நான் விடுகதை போடுறேன்னு: எம் மேலே குற்றம் சாட்டிட்டு: இப்போ நீயே விடுகதை போட்டா, நான் என்ன செய்வேனாம் விளங்கிற மாதிரினாலே, புட்டு வச்சுப் பேசிதானே, எனக்குச் சங்கதி புரியும், ரஞ்சனி’
“நல்ல அத்தான் நீங்க!"
"நான் நல்ல அத்தான் இல்லாமல், மறுகா கெட்ட அத்தான, என்ன?”
"ஐயையோ! துரும்பைத் தூணாய் வளர்க்காமல், கொஞ்ச நேரம் என்ன நிம்மதியாய் இருக்க விடமாட்டீங்களா, அத்தான்"
"ரஞ்......!”
"........."
ரஞ்சனியின் மனம் கெடும்படி ஒரு சொல் சொல்லி விட்டால்கூட, மணமறியாமல் தவறிவிழுந்த அச்சொல்லுக்காகக் செஞ்சிக் கூத்தாடி அவளிடம் கழுவாய் சம்பாதித்துக் கொண்டால்தான் ரஞ்சித் மனச்சமாதானம் அடைவது நடைமுறை; அப்படிப்பட்ட மனப்போக்கும் மனப்பக்குவமும் கொண்டிருந்தவர், இப்போது மாசிடி துடித்திடச் செயலிழந்து. செய்வகை அறியாமல், கதி கலங்கி நின்றுவிட்டதில், ஆச்சரியம் இல்லைதான்! இல்லக் கிழத்தியின் பொற் கரங்களைப் பொன்னைப் போற்றுவது போலப் பற்றிக்கொண்டார் அவர்: கண்ணனின் கீதோப தேசத்தில் ஆறுதலும் தென்பும் பெற்ற அர்ஜுனன் மாதிரி, மனைவியின் மேனி ஸ்பரிசத்தான் விளைந்த ஆறுதலுடனும் தெம்புடனும் புதிய விழிப்புப் பெற்றார்: "ரஞ்சனி, உன்னேட மனசு புண்படும்படி நான் ஒன்னும் சொல்லலேயே?" என்று பரிதாபமான கெஞ்சுதலுடன் கேட்டார். "நாம துங்கறதுக்கு முன்னாடி, நம்மோட பாபு பிரச்னைக்குத் தீர்வு காணவேணுமேன்னு ஞாபகப்படுத்த நினைச்சேன்; அவ்வளவுதான் கதை,” என்று விடுகதைக்கு விடையும் விளக்கமும் அளித்தார் லட்சாதிபதி,
ஆகாயத்தில் மசூதிப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன.
பூமியில் ரஞ்சனியின் உள்ளம் அமைதியில் ஆனந்த தடணம் ஆடிக்கொண்டிருந்தது: ஆகவே, அவள் பெருந் தன்மையோடு மனம் திறந்து சிரித்தாள்: அவ்வளவு தானா கதை? நல்லாய்ச் சொன்னிங்க போங்க...அத்தான்!” என்றாள்.
ரஞ்சித் முகப்புப் பக்கம் போய்விட முனைந்தார். -
“அத்தான்! என்ன போlங்க?’ என்று கூவி, அத்தானின் கையைப் பிடித்து இழுத்தாள் ரஞ்சனி.
“நீ போகச் சொன்னாய்; நான் போனேன்!”
‘ஒமை குட்னெஸ்’ என்று வாய் திறந்து சிரித்தான் ரஞ்சனி. இது ட்ரை ஜோக்-ஆனாலும், என்னோட அன்பு அத்தானுக்காகத்தான் சிரிச்சு வச்சேன்’ என்றாள்.
"ஓ!"
"ஊம்! எனக்காகவேண்டி, எத்தனையோ செஞ்சிருக்கித தர்மப் பிரபுவாச்சுங்களே நீங்க! பாழும் இந்த உடம்பிலே கி.யிர்னு ஒண்ணு ஒட்டிக் கிடக்குதின்னா, அதுக்கு நீங்க தானுங்களே மூலகாரணம்?”“என் உடம்பிலே உயிர் தங்கியிருக்கிறதுக்கும் நீதான் காரணம், ரஞ்சனி!- அது சரி, நம்மகிட்டே என்னமோ முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போறதாக நம்ப பாபு சொன்னானே? அந்த ரகசியம் என்ன ஏதுன்னே புரியமாட்டேங்குதே?”
“ஆமாங்க, அத்தான்; ஒருவேளை அது சிதம்பர ரகசியமோ, என்னமோ?”
“இருக்கும், இருக்கும்!”
“ஆமா, சிதம்பர ரகசியம்னா அது என்னங்க, அத்தான்?”
“அதுவும் சிதம்பர ரகசியம்தான்!”
“சொல்லுங்க, அத்தான்!”
“தெரிஞ்சால்தானே சொல்வேன்?”
“நல்ல அத்தான்!”
“இன்னெரு தரமும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்: நான் நல்ல அத்தான் என்கிற உண்மையான நடப்பை நான் மனிதாபிமானத்தோட உன் சந்நிதானத்திலே ஊர்ஜிதம் செஞ்சு வருஷம் பத்து தாண்டிப்போயிடுச்சு, ரஞ்!”
ரஞ்சனிக்குப் பேச நா எழவில்லை. “உண்மைதானுங்க, அத்தான்!-அந்த மகத்தான சத்தியத்தை-கண்ணியமான உன்மையை-உன்னதமான தருமத்தை, நீங்க கொடுத்த இந்த உயிர், இந்தப் பத்து வருஷத்திலே, ஒவ்வொரு நிமிஷத்திலேயும் கை தொழுதுகிட்டே இருக்குது என்கிற உண்மையான நடப்பும் உங்களுக்குத் தெரிஞ்சதுதானுங்களே. அத்தான்?” பேச நா எழுந்து, எப்படியோ, ஒருவாறாகப் பேசி முடித்தாள், அவள்.
மனம் நெகிழ்ந்து, உணர்ச்சி வயப்படலானார் நந்தினி விலாசம் ரஞ்சித்; “தாய் அறியாத சூல் உண்டா? உன்னை அறிஞ்சவன் நான்; உன்னை உணர்ந்துகிட்டவன் நான்: உன்னை உடலாலும், உள்ளத்தாலும், உணர்வாலும், உண்மையாலும், சத்தியத்தாலும், தருமத்தாலும் புரிஞ்சுக்கிட்டவனும் நானேதான்! சரிதானே, ரஞ்?” என்பதாக விசாரணை நடத்தினார்.
“என்னோட தெய்வ அத்தான் சரியாய்த்தான் சொல்லுவாங்க; சொன்னால், சரியாகத் தான் இருக்குமுங்க!”
“பாபு நம்பளைச் சோதிச்சுப் பிறந்தவன், ரஞ்சனி!”
“நம்மளைச் சோதிக்கப் பிறந்தவனும் இதே பாபு தானுங்க, அத்தான்!”
மருண்டார் ரஞ்சித்.
ரஞ்சனி மிரளவில்லை.
பூந்தோட்டப் புல்வெளி வெளிச்சம் போட்டது.
முகப்பு மண்டபத்தில் ரதி-மகேஷ், ஜோடி சேர்த்து, ஜோடி சேர்ந்து மின்னினார்கள்.
ரஞ்சனியின் ஒரக்கண்களில் ஒரம்கட்டி, ஒரம்காட்டி நீர்த்துளிகளைச் சுண்டி எறிந்தவர் சாட்சாத் ரஞ்சித்தான்.
விம்மியவளும் ரஞ்சித்தின் ரஞ்சனிதான்!...
“திரும்பவும் யோசனையிலே மூழ்கிட்டீயே, ரஞ்சனி?”.
“திரும்பவும் யோசனை என்னை மூழ்கடிச்சுக்கிட்டு இருக்குங்க, அத்தான்!-தெய்வம்தான் புதிர் போடும்னு கேள்விப்பட்டிருக்கேன்; ஆனா இப்ப நம்ப பாபுவே நம்மளுக்குப் புதிர் ஆகிட்டானே, அத்தான்?”
“பாபுவைச் சாமான்யமாக நினைச்சிட்டியா, ரஞ்: அவன் தெய்வம்; அவன்தான் நம்மோட தெய்வம்”
“அப்படின்னா, அவன்-நம்ப பாபு இந்த ஜன்மத்திலே என்ன அவதாரம் எடுத்திருக்கானாம், அத்தான்?”
“ஸ்ரீராமபிரான் அவதாரமாக இருக்கலாமோ, ரஞ்சனி?”
“கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரமாகவும் இருக்கலாமே, அத்தான்?”
“பிரகலாதனாகக்கூட இருக்கலாம், ரஞ்...!”
“”நந்தகோபாலனாகக்கூட இருக்கலாம், அத்...!”
“பாலமுருகளுகவும் அவதரித்திருக்கக்கூடும்!”
“கூடும், கூடும்!”
“ஏன், பரசுராமர் அவதாரமாகவும்கூட இருக்கலாம் அல்லவா, ரஞ்...?”
“அ...த்......!”
ரஞ்சனி தொடர்ந்த அழைப்பிற்குத் தொடர் சேர்ப்பதற்குள்----
பாபு ஓடிவந்து தாயின் மடியில் வீழ்ந்தான்.
“பாபு, என் தெய்வமே!...எங்க தெய்வமே!...பாபு... பாபு!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் விளித்த அன்பு அன்னை ரஞ்சனி, தன் அன்புத் தெய்வத்தின் கன்னங்களில் மாறி மாறி-மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தாள்.
“அழறியா. அம்மா” என்று பதட்டச்துடன் கேட்டான் அருமைப் பிள்ளை.“நான் ஏன் அழப்போறேன், பாபு?” என்று கெட்டிக்காரியாகவே தப்பித்துவிட்டாள் ரஞ்சனி.
“அதுதானே பார்த்தேன்?- என் அம்மா எதுக்கு அழவேணும்? தப்புச் செஞ்சவங்கதான் லோகத்திலே அழுவாங்களாம்!-எங்க குருஜி பிரார்த்தனையப்ப அடிக்கடி சொல்லுவாங்களே!” என்று வியாக்கியானம் படித்து நிறுத்தினான் பாபு.
“பாபு, நீ நிஜமாவே சாதாரணப் பிறவியே இல்லேப்பா!”
“ஐயையோ என்னைத் தெய்வமாக ஆக்கப் பார்க்கிறீயா, அம்மா”
“பின்னே என்னவாம்?-நான் உன்னைத் தெய்வமாகப் பார்க்கத் தொடங்கி வருஷம் பத்து ஆகிடுச்சே, பாபு?” மறு தரமும் பாசத்தின் முத்தங்கள் பரிமாறப்பட்டன, பகிரங்கமான அன்போடு புன்னகை புரிந்தாள்: ரகசியமான பாசத்தோடு கண் கலங்கினாள் அவள்!-அன்பு ராஜ்யத்தின் மகாராணி அவள்!-அவள் ரஞ்சனி.
ம்மா, அம்மா!... நீ என்னைத் தெய்வமாகப் பாவிப்பதைப் பார்க்கையிலே, நீ என்கையிலே வரம் கிரம் கேட்பாய் போலிருக்குதே, அம்மா?”
“ஆமா, பாபு ராஜா! கட்டாயம் வரம் கேட்பேன்!”
“ஊம், ஆல்ரைட்! வரம் கேள்; இதோ, கொடுக்கிறேன்!”
“ஊகூம்; இப்ப கேட்கமாட்டேன்; சமயம் பார்த்து, சந்தர்ப்பம் பார்த்து, எனக்கு அவசியப்படும்போது, நான் உன்கிட்டே கேட்கக்கூடிய வரத்தை நீ தப்பாமல் கொடுத்தாக வேணுமாக்கும்!”
"ஓ! ரெடி!" என்று சொல்லிக் கும்மாளத்துடன் பெற்ற தெய்வத்தைப் பாசம் மேலிடக் கட்டிப்பிடித்து. அன்பு மேலோங்க முத்தங்களை வாரிவாரி வழங்குகிறான் பாபு! - ஒருவேளை, பழனிமலை ஆண்டியான பாலமுருகனே இப்படிப் பாபுவாக அவதாரம் எடுத்து, இங்கே ஜனனம் எடுத்திருப்பானோ?
அம்மா ஆனந்தக் கண்ணீரை ஆனந்தமாக வடிக்கிறாள்.
மகன் திணறுகிறான்; "கண்ணீர் வடிக்கிறீயா, அம்மா?" என்று கேட்கிறான்.
"ஆமாப்பா, பாபு: இது ஆனந்தமான கண்ணீ ராக்கும்!"
"அப்படியானால், சரி, அம்மா!"
செல்வன் பாபுவைச் செல்லமாக ஏற இறங்கப் பார்க்கிறாள் ரஞ்சனி; பாபுவின் சின்ன உருவத்திலே, கோடரியும் கையுமாகப் பெரிய உருவத்தில் பரசுராமர் தோன்றினார்!- பாபுவின் தாய், நந்தினி இல்லத்தின் தலைவியாகித் தவித்தாள். பட்டுக் கருநீல விழிகளில் கட்டுமீறின புதுவெள்ளம் நுங்கும் நுரையுமாகக் கொப்புளிக்கிறது.
ரஞ்சித் பையப் பையத் துணைவியையும் குமாரனையும் நெருங்கினார்; தைமாத மேகமென அவரது முகம் கறுமை கண்டிருந்தது. பாபு, என்னவோ முக்கியமான சேதியைச் சொல்லப் போவதாகப் புதிர்போட்டு, 'சஸ்பென்ஸ்' போட்டானே? என்ன புதிராம் அது?-தங்கட்குத் தெய்வமாக ஆகிவிட்டிருக்கும் அருமைமிகு பாபு இந்த ஜன்மத்தில் என்ன அவதாரம் எடுத்திருப்பான் என்ற சர்ச்சையில் தாமும் ரஞ்சனியும் ஈடுபட்டிருந்த காலை, 'ஏன், பரசுராமர் அவதாரமாகவும்கூட இருக்கலாம் அல்லவா, ரஞ்...?' என்பதாக எதிர்க்கேள்வி கேட்டது நெஞ்சிலும் நினைவிலும் பளீச்சிடவே, அவரது நேத்திரங்களில் கருமணிகள் பளபளத்தன. விதி ஆடத் தொடங்கிய அந்திமாலைச் சதுரங்க விளையாட்டு, விதியின் எழுத்தைக் கிழித்தெறிவதைப்போலே, ரஞ்சித்-ரஞ்சனி தம்பதி மேற்கொண்ட சவாலின் ஒரு தார்மிகமான நல்ல முடிவின் பேரில் தொடர்ந்து, பின், அது அந்திநிலாச் சதுரங்க விளையாட்டாக உருக்கொண்டு, உருமாறி, அவ்விளையாட்டு விதிக்குத் தோல்வியை ஏற்படுத்திவிட்ட அந்தமான அந்த நிகழ்ச்சியையும் அவரது மனமென்னும் நல்ல பாம்பு படம் எடுத்துக் காட்டியது!-சோகமயமான நெடுமூச்சில், கண்ணீரின் அன்புமயமான ஈரம் தடம் பதிந்திருந்தது.
தன்னுடைய முதற்காதல் நிறைவேறாத-நிறைவேற்றப்படாத ஆறாத துயரத்தில்-ஆற்றப்படாத துயரத்தில் மனம் வெறுத்து, உயிர் வெறுத்து, உயிரைப் போக்கிக் கொள்ள முயன்ற ஒரு கருக்கலில், ஈடுஎடுப்பில்லாத ஓர் ஆதரிச விடியலாகத் தோன்றி, தன்னுடைய உயிரையும் உயிர்மானத்தையும் காத்து, பின்னர், அமிர்தயோகம் கூடியதொரு சுபயோக சுபதினத்திலே, அக்கினியைச் சாட்சிவைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துத் தன் கைத்தலம் பற்றித் தனக்குத் திருப்பூட்டிய அந்த ஏழைப் பங்காளன் ரஞ்சித்தை-இந்த அன்புத் தெய்வம் சஞ்சித்தைக் கூர்த்தமதிபதிந்துப் பார்வையிட்டான் அபலை ரஞ்சனி; நெஞ்சின் அலைகள் விதியின் அலைகளாகிக் கத்தின; ஆ! வந்த பொற்பாவை, பதம் மாறும் பொழுது, பாவத்தை மாற்றிக்கொள்ளும் கதையாக, முகத்தில் சோகத்தை அழித்து, மகிழ்வை எழுதினாள் ரஞ்சனி; அப்பால், பாபுவைக் கூப்பிட்டாள்.
பாபுவின் புதிருக்கு இனியாகிலும் நல்லவிடை கிடைத்து விட்டால் தேவலாம் என்கிற உணர்ச்சியில் அமைதியைச் சேகரம் செய்தவாறு, பாபுவை நோக்கினார் ரஞ்சித்.அப்பாவையும் அம்மாவையும் ஒருசேரப் பார்த்தான் பாபு.
விதிக்குப் பேசத் தெரியாது.
ஆனால்....
பாபு இதோ, பேசப்போகிறான்!
மகேஷ் அதோ, நடந்து வருகிறார்!
"அம்மா, மத்தியான்னம் நான் முக்கியமான விஷயத்தைச் சொல்லப்போறதாகச் சொன்னேனே?- அது என்ன விஷயம்னு உன்னாலே கற்பனை செய்ய முடிஞ்சுதா, அம்மா?"-பாபு வினாக் கணையைத் தொடுத்தான்.
எதிர்பாராமல் தவறிழைத்து, எதிர்பாராமல் சட்டத்தின் விலங்குப் பிடிக்குள்ளே சிக்கிக்கொண்ட பெண் ஒருத்தி, மான அவமானத்தால் அஞ்சி ஒடுங்கித் தவித்துத் தடுமாறும், கோலத்தில், கோலவிழிகளில் சஞ்சலம் மாக்கோலம்போட நிலைகுலைந்தாள் ரஞ்சனி. சிவந்த அதரங்கள் வெளுத்தன: பிதுங்கின; நயனங்களின் நிலையும் அப்படியே!
"நீங்களாச்சும் அந்தத் துப்பைத் துலக்கமுடியுமா, அப்பா?"
"ஊகூம்!"
"சரி, நானே சொல்லிட்றேன்: ராத்திரியிலிருந்து இக்கேயே, என்னோட பங்களாவிலேயேதான் நான் தங்கிப் படிக்கப் போறேன்!- ஹாஸ்டலிலே காலம்பறவே தேவையான மீனுமதியையும் வாங்கிக்கிட்டேன். இனியாச்சும் நீ ராத்திரியிலே நிம்மதியாகப் படுத்துத் தூங்குவேதானே. அம்மா?"சத்தியமாய் இனிமேலே நான் ஆனந்தமான நிம்மதியோடே அழகாகப் படுத்துத் தூங்குவேண்டா, பாபு. எட்டிப் போயிட்ட தெய்வம் என்கிட்டே ஒட்டி வந்ததுக்கப்பறம், நான் அமைதியாக உறங்குறதுக்குக் கேட்கவா வேணும்?"
"உங்களுக்குத் திருப்திதானே, அப்பா?"
"நிச்சயமாக!-நல்ல காலம், எங்களை நீ தல்லதனமாய்க் காப்பாத்திவிட்டாய், பாபு! நீ நல்லா இருக்கணும்; விஷ் யூ ஆல் த பெஸ்ட், மை டியரஸ்ட் பாபு!..."
"தாங்க் யூ, ஸோ மச், டாடி!"
இயற்கைத் தாய் அவ்வப்போது சீதனம் தரும் பூங்காற்றை நன்றியுணர்வோடு வஞ்சனையின்றி அனுபவித்துப் பழகிய ரஞ்சித், இப்போது சற்றுக் கூடுதலான நிம்மதியோடு அந்திமாலைத் தென்றல் அனுபவித்தார். 'பாபு பிரச்னை தீர்ந்தது!' என்று , தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பெருமிதம் அடைந்த சடுதியில், மனக்குதிரை கடிவாளத்தைக் கழற்றி வீசிவிட்டு, காலத்தை ஊடுருவி முன்னும் பின்னுமாகப் பாய்ந்து பாய்ந்து திரும்ப எத்தனம் செய்யவே, அவருக்குச் சொந்தமான மனத்தில், பத்து வருஷத்துக்கு முந்திய அந்த அந்திநிலாச் சதுரங்கத்தின் முன்கதையும் பின்கதையும் அச்சுப்பிசகாமல் முத்துக் கோத்தமாதிரி ஏடுவிரித்தன; சுடு வெள்ளத்தில் சோகப் பெருமூச்சு விரிந்தது. 'பாபுப் பிரச்சினை எங்கே தீர்ந்தது?- எப்படித் தீரமுடியும்? அது ஆண்டவன் மனசு வச்சு நல்ல விதமாய் தீர்த்தாகவேண்டிய பிரச்னை ஆச்சுதே? ஈஸ்வரா!... இன்னக் கறுப்பர் ஸ்வாமியே! எங்களை நல்லபடியாய்க் காப்பாத்திடு! நானும் என் ரஞ்சனியும் தெய்வமாய்ப் பாவிச்சுக்கிணு வருகிற எங்க பாபுவை எங்களோட ஆயுசு பரியந்தம் எங்களுக்குத் தெய்வமாகவே விளங்கும்படி செஞ்சுப்பீடு, அப்பனே. அம்மையப்பனே!' கண்ணீரைப் பாபு பார்த்துவிடப் போகிறான்!- ரஞ்சித் அச்காய் சூரர்!
பெற்ற புண்ணியவதிக்கு அழகு காட்டி அவளோடு விளையாடவும் விளையாட்டுக் காட்டவுமே இனிமேல் பாபுவுக்குப் பொழுது காணாதுதான்!
ஓ!--மகேஷ்!
"வாங்க... வாங்க," என்று வரவேற்றார் அன்புச் சீமான்.
அப்போது:
அந்தி மடந்தையின் மசக்கை தீர்ந்து, நிலவுக் கரு வளர்ச்சி அடைந்திருந்தது.
"எல்லாரும் வெளியிலே போயிட்டு வரலாம்னு சொன்னீங்க புறப்படலாமா, ரஞ்சித்?-சமயம் ஆகிக்கிட்டு இருக்குதுங்களே?"
"வாஸ்தவந்தான்; பத்து நிமிஷத்திலே புறப்பட்டால் போச்சுங்க, மகேஷ்," என்றார் ரஞ்சித்: பாபுவை நோக்கி, "பாபு ஸார், புறப்படலாமா?" என்றார்.
"நான் வர்ரெடி, ஸார்!" என்று வாய் கொள்ளாமலும், களிப்புக்கொள்ளாமலும் சிரித்தான் பாபு.
"நீதான் எவரெடி ஆச்சுதே, பாபு?"
"ஆமா, ஆமா!..."
"மாஸ்டர் பாபுவின் கூடவே நானும் பின் தொடர்ந்து மெட்ராஸிலே ஒரு 'சோஷல் ரவுண்ட்' போயிட்டு வாரதுக்கு வாய்ச்சிருக்கிறது இது தான் முதல் சந்தர்ப்பம்னு நான் நம்புறேன்; இல்லையா, பாபு?" என்று கேட்டார் மகேஷ்."உண்மைதானுங்க, மகேஷ் ஸாரே!-ஆனா, இதுவே தான் அநேகமாகக் கடைசிச் சந்தர்ப்பமாகவும் இருக்கும்னும் நான் நம்புறேன்!" என்று முகத்தில் அடிக்காத குறை யாகக் கூறினான் பாபு.
மகேஷுக்கு முகம் செத்துவிட்டது. கண்களில் மஞ்சி விரட்டுக் காளையாகச் சுடுகின்ற கண்ணீர் சுட்டதுடன் நிற்காமல், முட்டவும் செய்தது. "பாபு...பாபு!" -உள்மனம் விம்மிப் புடைத்துச் செருமிப் பொருமியது. பாபு தப்பிப் பிறந்த இனிய செய்தியைக் காலம் கடந்து கேட்டதும் கேட்காததுமாக, உடனடியாகக் கொச்சியினின்றும் பறந்து வந்து பாபுவைத் தெய்வமாகவே தரிசித்து மகிழ்ந்து கண்ணீர் சிந்தி, அவனுடைய இடது கன்னத்துக் கறுப்பு மருவைக்கண்டு நிலைகலங்கித் தடுமாறிய நிலையில், அவனது உதடுகளில் முத்தம் கொடுத்து பிரிந்த அந்த நாள் அவருடைய மொனக் கண்ணீரில் மலரிந்து மறையவும் தப்பவில்லை!-பழைய ஞாபகத்தில் ஷர்ட் பையைத் துழாவியதும்தான், பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதம்-பாபுவுக்கு வரைந்திருந்த கடிதம் மாயமாக மறைந்துவிட்ட விவரத்தையும் புதிய ஞாபகத்தில் பதித்துக் கொள்ளவும் வேண்டியவர் ஆனார் அவர். எங்கே போய்விட்டது. அந்தக் கடிதம்?
வண்டுகளின் இதமான ரீங்காரம்.
மலர்களின் சுகந்தச் சிரிப்பு.
அந்தி நிலவின் ஆனந்த ராகம்.
"மிஸ்டா மகேஷ், நாமெல்லாம் வெளியே போய்த் திரும்பியானதும், உங்க கையிலே ஒரு வெட்டர் கொடுப்பேன்!"
"செரி!""சரினு சொல்லுங்க; நீங்க இப்ப இருக்கிறது தமிழ் மண்ணுக்கும்!"
"சரி, பாபு!"
"ஓ. கே!"
ரஞ்சனியின் முகத்திலே ஈ ஆடவில்லை!
ரஞ்சித் இமைக்க மறந்திருப்பார், பாவம்!
ஆகாயக் கப்பல் எங்கேயோ பறந்தது.
அந்த ஸ்தலத்தில் ரதி வந்ததுதான் தாமதம்; அங்கே ஜனநாயகப் பண்புடன் விசித்திரமான பரபரப்பு அரசாளத் துவங்கியது.
மறு பத்தாவது வினாடியில்:
அவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி, நிகழ்ச்சி நிரல் ஒழுங்குமுறையாகவே நடந்தேறிற்று.
தொலைக்காட்சி: பலே ஜோர்!
வானொலியில், ஜானகி, டி, எம். எஸ், ஜேசுதாஸ் பாடல்கள் படு டக்கர்!
'ஹோட்டல் டாஜ் கொரமாண்டெல்': "வருக, வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!"
மெரினாக் கடற்கரையின் சிலம்பொலியில், நந்தினி விலாசம் குடும்பத்தினரும் ரதி-மகேஷ் ஜோடிக் காதலர்களும் கும்மாளமிட்டுச் சிரித்த சிரிப்பொலி இரண்டறக் கலந்து எதிரொலித்தது.
ஆனால், ஒன்று:
பாங்கர் ரஞ்சித் இட்டதுதான் சட்டம்! அவருடைய அன்பில் குறுக்கிட யாருக்குத்தான் தைரியம் வரும்?— பர்ஸின் பணவீக்கம் குறைந்தது!-ரஞ்சித் என்றான், ரஞ்சித் தான்!
இரவு வந்தது.
பங்களா வந்தது.
இம்பாலாவும் வந்தது.
ரஞ்சித்-ரஞ்சனி ஜோடி, இன்றைக்கு விடியலிலே தான் கலியாணம் பண்ணிக்கொண்டவர்கள் மாதிரி, கம்பீரத்தோடும் மலர்ச்சியோடும் அமைதியாகவே காரின் பின் ஆசனத்திலிருந்து இறங்கினார்கள்.
பின்புறத்து இருப்பிடத்தின் இருமுனைகளின்லும் தாலிப் பாய்ந்து வெளியேறிய பெருமைக்கு உசுத்தவர்கள் அக்கா நந்தினியும் தம்பி பாபுவும்தான்.
இளைய நிலா, கடைக்கண் பணியில் ரசனையோடு ஈடுபட்டிருக்கிறது.
இளைய ராஜாப் பயல் பாபு எந்தக் கோட்டையைப் பிடிப்பதற்காகவோ ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து விட்டிருந்தான். சுட்டிப் பயலுக்கு அதற்குள் அப்படி என்னதான் மாளாவ சிந்தனை வந்து தொலைத்ததோ, தெரியவில்லை!- பால் வழியத்தக்க தன்னுடைய பிஞ்சு முகத்தின் இடது கன்னத்திற்குத் திருஷ்டி கழித்த அந்த ஓர் அவலட்சணச் சின்னத்தை - இயற்கையின் விதி முத்திரை குத்தியிருந்த அந்தக் கறுப்பு வடுவை- மருவை விரல்கள் நடுங்கத் தடவி விட்டுக் கொண்டேயிருந்தான். அதே நேரத்தில், மகேஷின் இடது கன்னத்தில் தரிசனம் கொடுத்த இதே மாதிரியான கன்னங்கரிய தழும்பு-மரு அவனுடைய பால், மணம் மாறாத பச்சை மனத்தில் பயங்கரச் சிவப்பாக அபாய அறிவிப்புச் செய்யவும் தவறி விடவில்லை இப்போது அவன் சிந்தனை முனைப் படையத் தொடங்கியது; மலர்ந்த பூக்களாக மலர்ந்திருந்த விழிகள் கன்றிச் சிவந்து வந்தன: அவை கலங்கவும் தொடங்கின, 'என்ன ஆச்சரியமாம் இது? மகேஷோட இடது பக்கக் கன்னத்திலே இருக்கிற அசிங்கமான கறுப்பு மரு மாதிரியே, என்னோட இடது கன்னத்திலேயும் ஒரு கறுப்பு வடு அலங்கோலமாய் விழுந்திருக்கிறதே? சே!... உப்புச் சப்பு இல்லாத இந்த அசிங்கத்தை பாவம், அம்மாகிட்டேயோ, இல்லாட்டி அப்பாகிட்டவோ கேட்டாக்க, அவங்க கை கொட்டிச் சிரிக்க மாட்டாங்களாக்கும்?- ஆண்டவனின் சிருஷ்டி ரகசியங்களிலே இதுவும் ஒண்ணாக இருக்கலாம்னு கடைசிப் பட்ச விளக்கம் ஒண்ணைச் சொல்லிட்டு அவங்க 'தெய்வமே'ன்னு தப்பிச்சிக்கிடப் போறாங்க!... மருவும் ஆச்சு; மண்ணாங்கட்டியும் ஆச்சு!- மகேஷ் யார்? நான் யார்? எனக்கும் அந்த ஆளுக்கும் என்ன சம்பந்தமாம்?-என்னமோ அதிசயம் கூத்தாட்டம், சொல்லி வச்சாப்பிலே எங்க ரெண்டு பேர் இடது கன்னங்களிலேயும் கடவுள் எங்களைப் பிண்டம் எடுத்துப் போடுறப்பவே ஒரு பாழாய்ப்போன மருவை உருட்டித் திரட்டி வச்சுப்பிட்டான்!- அவ்வளவு தான் கதையும் காரணமும்!- மகேஷ் எக்கேடும் கெட்டுப்போய்த் தொலையட்டும்! எனக்கு என்னா வந்ததாம்?' நிச்சலனமாய்க் கைகளை உதறிவிட்டு, முகத்தின் வேர்வையை முழங்கையால் துடைத்த வண்ணம், நிர்மலமான விழிகளால் அன்னையைத் தேடினான் பாபு.
ரஞ்சனி ஒயிலோடு கைகளை வீசியவளாக முகப்பை நோக்கி நடந்து கொண்டிருக்கிறான். வீடு தேடி வந்திருக்கும் மகேஷ்-ரதி விருந்தினர்களுக்கு இராச் சாப்பாட்டுக்கு வழி பண்ண வேண்டாமா?-ஒன்பது மணிக்காகிலும் இலைபோடா விட்டால், அத்தான் குதித்து விடமாட்டாரர? சாது மிரண்டால் காடு கொள்ளாதாம்!-இந்த அத்தான் சாதுவான 'சாது'வா, என்ன-அம்மாடியோ!-ஆனால், ஒரு விதி-வீலக்குக்குக் கட்டுப்படுபவர்!- இவர் வள்ளுவம் வகுத்த அன்பு உடையார் அல்ழவா?- 'என்னோட அன்பு அத்தானுக்கு என்னோட அன்பான தெய்வத்துக்கு உரித்தான அந்த நன்றிக்கடனைத் தீர்க்க நான் இன்னம் ஏழேழு ஜன்மங்கள் எடுத்தாலும், போதாதே!- அத்தான்!- என்னோட தெய்வமே! என் சுவாமியே!... சாகவேண்டிய என்னை உயிர் பிழைக்கப் பண்ணியதோடு நில்லாது எனக்கு ஒரு கவுரவத்தையும் மானத்தையும் வாழ்க்கையையும் அருள்பாவித்து, என்னையும் இந்தச் சமூகத்தின் வீதிகளிலே தலை நிமிர்ந்து, தலையை நிமிர்த்தி நடக்கப் பண்ணிய உங்களுடைய மகத்தான அன்புக்கு என் வரையிலும் ஒரு மகத்தான சரித்திரமே உண்டுங்க! ஆமாங்க, அத்தான்! நான் செஞ்ச மன்னிக்க முடியாத-மன்னிக்கக் கூடாத அந்த மகாப் பெரிய பாவத்துக்கு பரிகாரமாகவும் - நீங்க செஞ்ச ஈடு இணையில்லாத புண்ணியத்துக்கு ஈடாகவும் என்னோட இந்தப் பொல்லாத உயிரை உங்களோட அன்பே உருவான காலடியிலே காணிக்கை செலுத்தினால், ஒரு சமயம், என்னோட ஆவி வேகுமோ, என்னமோ?- தெரியலீங்க, அத்தான்! நான் பாவிங்க, அத்தான்!- அத்தான், நான் துரோகி! ஐயையோ. இன்றைக்கு ராத்திரிப் பொழுது எப்படித்தான் கழியப் போகுதோ?-மனசும் மனச்சாட்சியும் கிடந்து அடிச்சுக்கிட்டே கிடக்குதே?.. நான் என்ன செய்வேன்? தெய்வமே! அத்தான்... அத்தான்.. ஐயையோ, தெய்வமே!'- பாபு, எடுத்திருப்பது பரசுராமரின் அவதாரமாகவும் இருக்கலாம் அல்லவா என்பதாகக் கொஞ்சம் முந்தி அத்தான் விதியைப் போலப் பேசினாரே? ஏன் 'பாபு!--என் தெய்வமே, என் ராஜாவே! நான் மனப்பூர்வமாகத் தயாராகிடுறேன்: எனக்கு நீயே விதியாக ஆகிப்பிடு, மகனே!- ஆமாண்டா, என் தெய்வமே!'- தலை சிதறும் தேங்காயாக வெடித்துச் சுக்கல் நூறாகச் சிதறிவிடும் போலிருக்கிறது. யாரோ ஆழைக்கிறார்கள். அத்தானாக இருக்க முடியாது. 'மா!' அப்படின்னு சத்தம் கேட்ட மாதிரி இருந்தது, பாபுவாகவே இருக்கவேண்டும்; பாபுவாகவே இருக்கட்டும்! தலையை ஒடித்துத் திருப்பினாள் ரஞ்...சனி. அத்தனை வெறுப்பு, ஆத்திரம், விரக்தி!-பாவம், என்ன வந்துவிட்டதாம் இந்த மஹாலக்ஷ்மி ரஞ்சனிக்கு?
“அ...ம்... மா!” என்று கூவி அழைத்து ஓடி வந்து நின்றான் பாபு, அம்மாவை ஒரே வாயில் விழுங்கி ஏப்பம் விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று கங்கணம் கட்டி கொண்டவன் மாதிரி, அப்படிப் பார்த்தான், பார்வையிட்டான் பாபு! மறு இமைப்பிலே தன் அன்னைத் தெய்வம் இல்லாவிட்டால், அப்பால், இந்தப் பூவுலகம் அசல் காடாகவே மாறி விடாதா என்னும்படியான ஞானோதயம் பெற்றவன் போலே, பார்வையில் ஒரு கனிமை- மல்கோவா மாங்கனியின் கனிவை ஏந்தி அமைதியாகவும் ஆறுதலாகவும் பெருமையாகவும் முந்நூறு நாள் சுமந்தவளை முந்துாறு தடவை ஏற்றிப் போற்றிய பெருமிதத்துடன் அவன் பார்த்தான்; பார்வையிடலானான்.
இப்போது;
ரஞ்சனிக்குப் போன உயிர் திரும்பிற்று. “பாபு, என்னப்பா அப்படிப் பார்க்கிறே?-இப்பத்தான் அம்மாவை முதன் முதலாகப் பார்க்கிறீயா, என்ன? எடுத்த எடுப்பிலே நீ என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த அந்தப் பார்வையைக் கண்டடியும் என்னோட ஈரல் குலையே நடுங்கிப் போயிடுச்சாக்கும்!” அவள் குரல் கம்மியது; கம்மியில்லாமல் விழிகளில் நீர்முத்துக்கள் திரண்டன.
“சும்மா விளையாட்டுக்காகத்தான் அப்படி முதலிலே பார்த்தேன்; உன்னை ‘டெஸ்ட்’ பண்ணனும்னு தோணுச்ச!: பார்த்தேன்; அவ்வளவுதான். இந்த அல்பக் காரியத்துக்காக நீ கண் கலங்கலாமா, அம்மா?” என்று பதற்றத்தோடு கேட்டான் பாபு.
“உன்னைப் பெற்ற அம்மாவைச் சோதிச்சுப் பார்க்கணும்னு உனக்குத் தோணிடுச்சா என் தெய்வமே, பாபு?”
“சும்மா ஒரு தமாஷ் பண்ணினேன்; அதுக்காக சும்மா சும்மா என்னத் தெய்வமாக ஆக்கிப்பிடுறீயே, அம்மா?”
“பெற்லவளையே டெஸ்ட் பண்ணத் துணிஞ்ச மகன் தெய்வமாக இல்லாமல், வேறு யாராக இருக்க முடியும்?---நீயே சொல்லுப்பா!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள் தாய்க்காரி.
“நீ என்னென்னமோ பேசறீயே, தாயே?” நிலத்தடி நீர் மண்பரப்பில் பொங்குமே. அப்படி, பாபுவின் சிறிய கண்களில் பெரிய நீர்த்துளிகள் பொங்கின.
“சரி. சரி. அது போகட்டுய். ஒண்ணு கேட்பேன்: பதில் சொல்லுவியா, பாபு?“”
“ஓ! ஒண்ணு என்ன, ஒன்பதாவே கேளேன், அம்மா!”
“உன்கிட்டே ஒன்பது கேட்க எனக்குத் தெரியாது: ஒன்னு மட்டும் கேட்டுட்றேன், பாபு!”
“ஒ!”
வாணி ஜெயராமின் விணைக் குரல் எங்கு ஒலித்தாலும், அது தன்னை இனம் காட்டிக் கொள்ளத் தவறுவது அரிது?
இசையில் அம்மாவும் லயித்தாள்.
மகனும் மெய்ம் மறந்தான்.
“கேட்கட்டா?”
“அப்பவே ஒ சொல்லிட்டேன்!”
சிரிப்புக்கு ஒரு ரஞ்சனிதான் இருக்கமுடியும்.
புதுக்கவிக்கு ஒரு மேத்தா இல்லையா? அப்படித்தான்.
பாபுவிடம் கேட்க வாயெடுத்தாள் ரஞ்சனி. அதற்குள், அவள் திருஷ்டியில், ரதியோடு அத்தான் உரையாடிக் கொண்டிருந்தது தொலைதூரக் காட்சியாகத் தெரியவே, கைந்நொடிப் பொழுதுக்குத் தடுமாற்றம் அடைந்து, அதே கைந்நொடிப்பொழுதில் நிலையைச் செப்பனிட்டுக் கொண்டவளாகக் கேள்வியைக் கேட்டாள்: “பாபு, நானும் உன் அப்பாவும் உன்னைத் தெய்வமாகப் பாவிச்சு வாரதாகச் சொன்னோம்!”
“மறுபடியும் பூச்சாண்டி காட்ட ஆரம்பிச்சிட்டியா. அம்மா ?”
“பெற்ற தாய் தன் மகனுக்குப் பூச்சாண்டி காட்டினால், அப்பறம் உலகம் அழிஞ்சிடாதா, பாபு? ஆனா நீ எனக்குப் பூச்சாண்டி காட்டினால், நான் அதையும் வரவேற்கத் தயாராவே இருக்கேன். ஆமாம்!”
“உன்னைப் புரிஞ்சுக்கிட எனக்கு வயசு பத்தாது. அம்மா! சரி, சரி; அப்பா கூப்பிடப்போறாங்க. அடடே, மகேஷை விட்டுட்டு அப்பாவோடே ரதி பேசிக்கிட்டு இருக்காங்க போலிருக்குதே, அம்மா?” என்று எதிர்த் திசையைச் சுட்டிக்காட்டினன் பாபு.
“பேசிறதினாலே, பெண்ணோட கற்போ, இல்லே ஆணோட கற்போ கெட்டுப்போயிடாது, பாபு...இப்படி, மனசுக்கு ஏதாச்சும் ஒரு மாற்றம் சமயங்களிலே தேவைப்படுறது இயற்கைதான்!” என்றாள் ரஞ்சனி; நெஞ்சைத் தடவி விட்டுக்கொண்டாள்.
“விட்டகுறையைத் தொட்டகுறையாக நீ ஏதேதோ பேசுறாய்; இதையெல்லாம் நான் என்ன கண்டேன்? நான் பாவம், பச்சைப்பிள்ளை, அம்மா!” என்று பரிதாபக் குரலெடுத்துச் செப்பினன் பாபு;
“மெய்தான். நீ பச்சைப் பாலகன்தான்: அதனாலே தான், சிவப்புப் பாலகனாகத் தெய்வ அவதாரம் எடுக்க முன்வந்திருக்கே?...ஆமா; தெய்வத்தோட திருவிளையாடலிலே உனக்கு எந்த அவதாரம் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்?...என்னோட பாபு என்கிட்டே ஒளிவுமறைவு இல்லாமச் சொல்லுவானாம்!-தெய்வமாச்சே? மனுஷங்களே அபூர்வமாக மெய் பேசத் துணிகிறப்ப, தெய்வம் பொய் பேசினால், அவதாரம் என்கிற அந்தஸ்துக்கு என்ன தான் மரியாதை இருக்கமுடியும்?--பாபு, நீ என் தெய்வம் மட்டுமில்லே, நீ என் ராஜாவும்தான்! சொல்லு, கண்ணா, சொல்லு!” என்று தவப்புதல்வனின் தாழ்வாயைப் பற்றியவாறு, ஆனால், அவனுடைய இடப்புற மருவைத் தீண்டாதபடி, கெஞ்சினாள் ரஞ்சனி; கொஞ்சியவளும் அதே அசல் ரஞ்சனிதான்!
“சொல்லிப்பிடுவேன்!”
“ம்!”
“சொல்லிப்பிடட்டுமா?”
“ம்!”
“சொல்லிப்பிடுவேன்!”
“ஓ! மேளதாளத்தோட சொல்லிடுடா, பாபு:”
“ஒன்..டூ..”.
“ஊம், த்ரீ!...சொல்லிப்பிடுடா, என் கண்கண்ட தெய்வமே பாபு!”
“ஒ. கே! - த்ரீ! - இதோ, சொல்லிப்பிட்டேன்: எனக்கு...?” .
“உனக்கு?...ம்... டிலே செய்யாமல் சொல்லிடுடா, என் பாபுத் தெய்வமே!”
"எனக்குப் பரசுராமர் அவதாரம்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!”
“ஆ!”
அதிர்ச்சி அடைந்த புண்ணியவதி, ரஞ்சனிதான்!-- அதாவது, திருமதி ரஞ்சித்தான்!
தாய் அடைந்த அதிர்ச்சியில், பிள்ளையும் அதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும்.
இன்னமும்கூட, ரஞ்சனி தன்னுடைய மார்பகத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டுதான் இருக்கிறாள்.
“நெஞ்சு வலிக்குதா, அம்மா? நான் தடவிவிடட்டுமா. அம்மா?”
“ஊம்!”
பாலமுதம் பருகித்திளைத்த தாயின் மார்பைப் பாசத்தின் செறிவு சிலிர்த்திடத் தேய்த்துவிட்டான் தடவிவிட்டான். கண் முனைகளில் ஈரம் கசிந்தது. “இப்ப வலி நின்னிடுச்சுதா, அம்மா?”
“ஆமாப்பா, இப்ப வலி நின்னுபோச்சு!”
“அப்படின்னா, திரும்பவும் வலி எடுக்குமா, அம்மா?”
“ஊம்!”
“ஏம்மா அப்படி?”
“அது என்னோட விதி பாபு!”
“நீ என்ன அம்மா சொல்றே? உன் பேச்சே எனக்குப் புரியலையே, அம்மா?”
“என் விதி உனக்கு எப்படிப்பா புரியும்?”
“நீ என்னம்மா சொல்லுறே?”
“நான் என் விதியைச் சொல்றேண்டா, பாபு:”
“உன் விதின்னா...?”
“என் விதிதான்!”
“நீ என்னத்தையோ எங்கிட்டேயிருந்து மறைக்கிறாயே, தாயே?”
நெருஞ்சி முள் மறுபடி தைத்தது!
துடிக்கிறாள் தாய்.
பாபுவா இப்படிப் பேசுகிறான்?
ஒ!---பாபு தெய்வம் ஆயிற்றே?
ரஞ்சனிக்கு வாய்விட்டு ‘ஓ’வென்று கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. பாபு லேசில் விட்டுவிடுவானா? அவன் மனிதப்பிள்ளை அல்லவே!
“பாபு!”
“பேசு, அம்மா மனசைத் திறந்து பேசு, அம்மா உன் நெஞ்சிலே இருக்கிற கஷ்டத்தை என் கையிலே ஒளிக்காமல் மறைக்காமல் சொல்லிடு, அம்மா! உன்னோட சங்கடம் எதுவானாலும் சரி, அதையெல்லாம் ஒருநொடியிலே நான் தீர்த்துப்பிடுறேன், அம்மா!” .
“மனுசங்களோட கஷ்ட நஷ்டங்களைத் தீர்க்க தெரிஞ்சவன்-தீர்க்க முடிஞ்சவன்தான் ஆண்டவன்!-நீ எனக்குத் தெய்வமாய் வாய்ச்சிருக்கையிலே, நான் ஏன் எதுக்கும் பயப்படப்போறேன்! எதையோ நினைக்கிறேன். மனசு ஏனோ குற்றுயிரும் குலை உயிருமாகத் துடிக்குது!”
“அப்படி எதைத்தான் அம்மா, நினைக்கிறே?”
“அதெல்லாம் உனக்கு இப்ப விளங்காதடா, என் தெய்வமே!”
“இப்ப விளங்காட்டி, பின்னே எப்பத்தான் விளங்குமாம்.”
“காலம் வருறபோது எல்லாம் தன்னாலே உனக்குப் புரிஞ்சிடும்!”
“எதையும் இப்ப நீ என்கிட்டே சொல்லமாட்டே தானே!”
ரஞ்சனி தொண்டையைக் கனைத்துக் கொள்ள வேண்டியவள் ஆனாள்!
“பாபு, அம்மா பேரிலே நீ கோபப்படாதேடா, கண்ணே! நீ கோபப்பட்டால், உன் அம்மாவுக்கு இந்தப் பூலோகத்தில் வேறே போக்கிடம் உண்டா? புகலிடம்தான் ஏது. பாபு?நீ மிரண்டால் இந்தப் பங்களா நிச்சயம் தாங்காது: தாங்கவே தாங்காதப்பா! ஏன், தெரியுதா? நீ என்னோட தெய்வம்; எங்களோட தெய்வம். இல்லையா, பாபு? தெய்வம் தப்பித்தான் பிறக்கும்; அதுதான் தெய்வத்தோட விதி!-ஆமா, தெய்வத்துக்கும் விதி உண்டு. அது மாதிரி, நீயும் தப்பிப் பிறந்தவன்தான்: ஏன்னா. நீ என்னோட தெய்வம் எனக்குத் தெய்வம் நீ! ஆனபடியாலேதான், நான் என்னோட உயிரையே உங்கிட்டே பணயம் வச்சிருக்கேன்: இப்படிப்பட்ட நிலவரத்திலே, என் மனசான மனசை ஒருநாள் இல்லாட்டி ஒரு நாளைக்கு உன்கிட்டேத் திறந்து காண்பிக்காமல் தப்பி விடுவேனா?-அப்படிக் காண்பிக்கத் தவறினால், பின்னே, அந்தப் பாவத்தையும் பழியையும் சுமந்து கரைக்கிறத்துக்குப் புதுசான கங்கையைத்தான் தேடிப் போகவேணும் நான். எதுக்கும் நேரம் காலும் வரணும் அப்ப, என்னோட இந்த நெஞ்சை-நீ. சப்பிச் சப்பிப் பால் குடிச்சு லூட்டி அடிச்ச இந்த நெஞ்சை ஒரே மூச்சிலே பிளந்து உன்கிட்டே காட்டாமல் இருந்திடுவேனா? நான் உன் அன்பான அம்மா இல்லியா? இப்போதைக்குப் பெரிய மனசு பண்ணி எனக்குத் துளி நாழி விடுதலை கொடுத்திடு, அப்பனே பாபு! நான் போய்ச் சாப்பாடு தயார் செஞ்சாகணும்; தேடி வந்தவங்களுக்கு பசி அறிஞ்சு சோறு படைக்கலேன்னா, விருந்தோம்பலுக்கே மரியாதை கிடைக்காது.” மார்பகம் எம்பி எம்பித் தாழ்ந்து அடங்கிக் கொண்டேயிருக்கிறது.
அதற்குள் :
சின்னதாக ஓர் ஆலோசனையைச் செய்தான் சின்னப் பையன் பாபு, தனக்கும் மகேஷூக்கும், அதே இடது கன்னங்களில் ஒரே அச்சான கறுப்பு மரு-வடு தோன்றியிருப்பதற்கான காரண காரியத்தை அம்மா முன்னே வைத்து விளக்கம் தெரிந்து கொண்டால்தான், தன் பிஞ்க இதயம் அமைதி காட்டுமென்று தோன்றியது. ஆனால், அம்மாவுக்கோ தலைக்குமேல் அலுவல்கள் காத்திருக்கின்றன. பின்னொரு சமயம் கேட்டுத் தெரிந்தால் போயிற்று; இன்னொரு சிதறல். கேட்டான். “ஆமா, பசி அறிஞ்சு சோறு படைக்கணும்னு என்னமோ சொன்னியே, அம்மா? அப்படியானா, மகேஷ் பசி உனக்குத் தெரியுமோ?” என்று சந்தேகம் கேட்டான்.
சுரீர்!......
“மகேஷின் பசி எனக்குத் தெரியும், பாபு!”
“எப்படியாம்?”
“அவர் எனக்குத் தெரிந்தவராக்கும்!”
“எப்படி?”
“எப்படின்னா...? எனக்குத் தெரிஞ்சவர்னா, தெரிஞ்சவர் தான். அவ்வளவுதான்!”
பாபு குழம்புகிறான்!-அம்மா குழப்புகிறார்களே?---"அது போகட்டும்; மிஸ்டர் மகேஷ் ஸாருக்குச் சொந்த ஊர் எது, அம்மா?” என்பதாக மறு கேள்வியை முடுக்கி விட்டான். “தஞ்சாவூர்.”
“அடடே, உன் ஊர்தானா? இந்தச் சிதம்பர ரகசியத்தை அப்பவே சொல்லியிருந்தா, எனக்குத் தலைவலியாவது மிஞ்சியிருக்கும்; உனக்கும் தொண்டைத் தண்ணி வற்றி யிருக்காது. இல்லியா, அம்மா?”
“சரி, சரி. இனியாச்சும் ஆளை விடுறீயாப்பா?”
“இன்னம் ஒரேயொரு சங்கதி மிச்சம் இருக்குது, அம்மா. மகேஷ் ஸாரோட ஸ்நேகிதி ரதியோட பசியும் உனக்குத் தெரியுமோ?”
அவன் எதிர்மறையில் தலையை உலுக்குக் குலுக்கினாள்.
“ஒருவேளை, ரதியோட பசி நம்ப அப்பாவுக்குப் புரிஞ் சிருக்கலாமோ?”
“பா...பு!”
தீப்பந்தம் ஏந்தக் கூவினாள் ஏந்திழை.
புயலிடைச் சிக்கிக்கொண்ட அகல் ஆனான் பாபு; உயிர் தத்தளித்தான்; அஞ்சி ஒடுங்கியவனாக, அம்மாவை மெள்ள மெள்ள, மெல்ல மெல்லப் பரிதாபமாய்ப் பார்த்தான்: “அ...ம்... மா!”
புயல் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது.
“பாபு, நீ சின்னப் பிள்ளை!”
“ஆமா, நிஜம்தான், அம்மா. நான் சின்னப்பிள்ளை தான்; அதனாலேதான், நான் சின்னப்பிள்ளை என்கிற உண்மையை மறக்காது இருக்கேன்; நெஞ்சை ஒளிச்சு வஞ்சகம் பேச எனக்குத் தெரியாதம்மா, நீ பெற்ற பிள்ளை பொய் பேசுவேனா? அப்படிப் பொய் பேசினால்தான்,பொய் பேசின எவன் வாய்க்குப் போசனம் போட ஒப்புவியா, அம்மா?... ஆனா. நீதான் என்னை அடிக்கொரு வாட்டி ‘தெய்வம், தெய்வம்’னு தலையிலே தூக்கி வச்சு ஆடிக்கிட்டு இருந்தே!”
வாழைப்பழத்தில் ஊசியைச் செருகி விட்டானோ பாபு?
இப்போது உயிர் துடிக்க வேண்டிய சீட்டு ரஞ்சனியின் மண்டை ஒட்டிலே விழுந்து தொலைத்தது. பாபுவாவது சின்னப் பிள்ளையாவது! ஊகூம்!-“பாபு, என் தெய்வமே!” என்று உணர்ச்சிகள் கொப்புளிக்க விளித்துக் கொண்டே ஆருயிர்த் திருமகனை ஆரத் தழுவி உச்சி நுகர முயன்றாள் அன்னை.
ஆனால்---
பாபு, ஆயர் குலக் கண்ணனென நழுவி விட்டான். “ஐயையோ! மறுபடியும் என்னைத் தெய்வமாக ஆக்கிப்பிடாதே, தாயே! நீ ஒருவேளை என்னைத் தெய்வமாக ஆக்கினாலும்கூட, நான் இனிமே ஒருக்காலும் தெய்வமாக ஆகவே மாட்டேனாக்கும்!’ கைகொட்டி நகைத்தான் சுட்டி.
“நீ தெய்வமாக ஆகவே மாட்டியா, என்ன?... அப்படியானா, நான் கேட்கிறப்ப, கேட்கிற வரத்தை எனக்குக் கொடுக்கிறதாக வாக்குக் கொடுத்தியே, பாபு?- அது என்ன ஆவதாம்?” இருதயத்தைப் பற்றின்றிப் பற்றியவாறு, தொண்டை வற்ற, நம்பிக்கை வறட்சியோடு கேட்டாள் பாபுவின் தாய். பாபு தெய்வமாக ஆகவே மாட்டானாமே?- அப்படியென்றால், ஒரு சமயம் பரசுராமர் அவதாரம்தான் எடுப்பானோ, என்னவோ?
தைத்துவிட்ட முள்ளை முள்ளைக்கொண்டோ, இல்லாவிட்டால், முள் வாங்கியைக் கொண்டோ பிடுங்கி வீசி எறிந்தால் மட்டுமே, முள்ளின் உபாதை நிரந்தரமாக விடுபட முடியும்!
ரஞ்சனியால் தைத்த முள்ளின் புரையோடிய வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
பாபுவின் இதழ்கள் அசைந்த அரவம் கேட்டதும், அரவம் கண்ட பாவனையில் நடுநடுங்கி நிமிரிந்தாள் பெற்றவள்.
“அம்மா. கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தாலே மட்டுந்தான் வரம் கொடுக்க முடியுமா?” என்று வினாச்சரம் தொடுத்தான் பாபு. “ஏன், கண்ணுக்குத் தெரிகிற மனுசங்களாலேயும் வரம் கொடுக்க முடியாதா, அம்மா?” என்று தொடர்ந்தான்.
“முடியுமா?”
“முடியாதா?”
“எப்படி முடியும்?”
“எப்படி முடியாது?- சொல்லேன், அம்மா!-அப்பாவை நீ கலியாணம் பண்ணிக்கிட்ட அந்த நாளிலிருந்து இந்த நாள் பரியந்தம், அப்பா உனக்கு ஒரு வரத்தை ஒரேயொரு வரத்தைக் கூடவா வழங்கவில்லை?-நெஞ்சிலே கையை வச்சுச் சொல்லேன், அம்மா!”
திரும்பவும் ‘விதி’ கணை தொடுக்கிறது.
திரும்பவும் நெஞ்சின் மரண வலி விதியாகத் திரும்புகிறது.
ரஞ்சனி கதறுகிறாள்: “எனக்கு உயிர்ப் பிச்சை தந்து, மடிப் பிக்சை தந்த என்னோட அன்புத் தெய்வம், ஆமா உன்னோட அன்பான அப்பா எனக்கு மனப்பூர்வமாய் வழங்கிய மகோன்னதமான வரமே நீ தாண்டா, பாபு!” “பின்னே என்னம்மா?- நானும் ஒரு சராசரி மனித ஜன்மமாகவே இருந்து, அதாவது, நீ பெற்ற பிள்ளையாகவே இருந்து, நீ கேட்கிற வரத்தை, நீ கேட்கிற சமயத்திலே கட்டாயம் நானும் வழங்கிடுறேன், அம்மா!என்னைப் பத்து மாசம் சுமந்து பெற்ற புண்ணியவதியான உன் மேலே ஆணை வச்சு, சத்தியம் வச்சுச் சொல்லிட்டேன், தாயே!”
பாபுவுக்கு உடல் சிலிர்த்தது.
பாபுவின் ரஞ்சனிக்கு உள்ளம் சிலிர்த்தது.
ரொம்ப ரொம்பச் சந்தோஷமாகப் போச்சு, பாபு: நீ மகா கெட்டிக்காரப் பிள்ளை; இத்தனை தெய்வாம்சம் கொண்ட உன்னை நான் என் வயித்திலே சுமக்கிறதுக்கு பாக்யம் செஞ்சிருந்த நான் உண்மையிலேயே கொடுத்து வச்சவள்தான்! நான் மறுதரமும் சொல்லுகிறேன். நீ தெய்வமாக ஆனாலும் சரி, ஆகாட்டாலும் சரி- அது உன்னோட சொந்த விவகாரம்:- ஆனா, என் வரையிலே நீ எப்பவுமே என்னேட தெய்வமேதான்! உன்னை நான் தெய்வமாகப் பாவிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம், இங்கே எனக்குக் குறுக்கே பரசுராமருக்கு என்ன வேலை?... நல்ல பொழுதாய்த்தான் விடிஞ்சிருக்குது; தொட்டதெல்லாம் தலைவலி! தொட்டதுக்கெல்லாம் தலைவலி!... நான் புறப்பட்றேன், மகனே!”
மகனது அனுமதி தாய்க்கு அவசியம் கிடையாது.
அங்கே-
பழனி மலையில் பழனி ஆண்டியின் வடிவம்: சிலை இங்கே, பாபுவுக்கும் சிலை நிலைதான்.
நந்தினி விலாசம் பெருமனையின் பெருமாட்டி ரஞ்சனியின் பார்வையில் இப்போது வழக்கம்போலே மகேஷ்-ரதி ஜோடி இணையிரியாமல் காட்சியளித்ததில், அவளிடமிருந்து ஒர் ஆசுவாசப் பெருமூச்சு, புற்றைவிட்டு வெளியேறும் பூநாகமாகப் புறப்பட்டது.
அம்மாவை அழைப்பான் மகன்.
மகனை அரவணைப்பாள் அம்மா.
“அம்மா, இப்போ நான் உன் கையிலே ரெண்டு லெட்டர் கொடுக்கிறேன் ; நீ சமயம் வாய்க்கையில்,படிச்சுப் பார்!”
“ஆகட்டும்; அப்படியே செய்வேன்,’ என்று உறுதி கொடுத்து, கொடுக்கப்பட்ட கடிதங்களைப் பத்திரமாக வாங்கிக் கொண்டாள் ரஞ்சனி.
“திருப்தி தானே, பாபு”
“பரமதிருப்தி, அம்மா!”
மரங் கொத்திப் பறவையின் தலைக் கொண்டைச் சிவப்பு, முகப்பு மண்டபத்தின் வெண்ணிலவில் பாங்காகப் பிரதிபலிக்கிறது.