அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/368-383

விக்கிமூலம் இலிருந்து

39. மனிதன் எனப்படுவோனுக்குரிய உயர்சத்து

மனித வகுப்போரை மனிதவகுப்பாராக பாவிப்பது உயர்சத்து. அம்மனித வகுப்போருக்குள்ளக் குறைகளை அகற்றி சீர்தூக்கி ஆதரிப்பது உயர்சத்து. மற்றய மனிதவகுப்போருக்குற்றத் துன்பங்கள் யாவையுந் தங்களுக்கு வந்த துன்பம் போற்கருதி அவர்கள் துன்பத்தை நீக்கி ரட்சிப்பது உயர்சத்து. மனுமக்களை தன்னவர் அன்னியரென்னும் பேதம் பாராதலே உயர்சத்து, எம்மக்களையுந் தம்மக்களுக்கு சமதையாய் அன்புபாராட்டல் உயர்சத்து. சருவசீவர்களையும் தன்னுயிர்போல் பாதுகாத்த லுயர்சத்து, மனிதனுக்கு சீவகாருண்யம் நிறைந்திருத்தலே உயர்சத்து, மனிதனுக்கு குருவிசுவாசம், இராஜவிசுவாசம் நிறைந்திருத்தலே உயர்சத்து. சகலமக்களும் சுகம்பெற்று வாழ்கவேண்டும் என்று எண்ணுவது உயர்சத்து. மனிதனுக்குரிய சாந்தசத்துவே சுயவுருவென்றும், தன்மகாயமென்றும், உண்மெயென்றும், அந்தரங்கமென்றும் வழங்குதலால் மேற்கூறியுள்ள உயர்சத்துக்குரியச் செயல்களே தெய்வ நிலையுமாதலின் அச்செயல் மிகுத்தோரே மேன்மக்கள் என்றும், பெரியோர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். ஞான நூற்களும், நீதி நூற்களும் இவைகளையே தழுவி நிற்கும். இதற்கு எதிரடையாய்ச் செய்கைகளை உடையவர்கள் யாரோ அவர்கள் யாவரையுங் கீழ்மக்கள் என்றும் சிறிய சிந்தையரென்றுங் கூறப்படும்.

இத்தகையக் கீழ்மக்களும் சிறியச் சிந்தையை உடையவர்களுமாகிய மனுக்கள் எத்தேசத்தில் வாசஞ்செய்கின்றார்களோ அத்தேசத்தின் சிறப்பு நாளுக்குநாள் கெடுவதுடன் தேசவாசிகளும் சீரழிவார்களென்பது திண்ணம். ஆதலின் மனுக்களுள் சீர்திருத்தக்காரர்களேனும் மேற்கூறியுள்ள நல்லெண்ணத்துடனும் செய்வார்களாயின் எடுக்கும் சீர்திருத்தங்கள் யாவும் செவ்வனே முடியும் முடியுமென்பது சத்தியம்.

- 8:8; சூலை 31, 1912 -