உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  9


22.

கொல்லியில் வளர்ந்தா யென்று குறுகினே னின்பங் கண்டேன்.
நெல்லியின் கனியால் இன்பம் நேர்ந்ததே யென்று பாடுஞ்
செல்வியைக் காணுகின்றேன்; சேக்கிழார் பேசு கின்றார்
இல்லையென் றுள்ள வர்க்கே யெந்தமி ழில்லை யம்மா!


23.

கோவலன் கண்ட பெண்ணைக் குவலயம் போற்றப் பாடி
நாவலன் இளங்கோ தன்னை நற்புகழ் எய்தச் செய்த,
பாவலர் நெஞ்சில் வாழும் பத்தினி படிக்குங் காலை
ஆவலைத் துண்டு செய்வாள்; ஆனாலும் வாழ்த்து கின்றேன்!


24.

கவ்விருள் அன்றோ உன்னைக் கல்லாரின் அறிவெல்லாங் (கொல்
அவ்விருள் போக்கு தற்கே அருந்தமிழ் பேசல் வேண்டும்.
இவ்வகை எடுத்துச் சொல்லும் எம்மோரிவ் வுலகத்துள்ளே
எவ்வகை வாழல் வேண்டும் என்பதை அறியாய் வாழி!


25.

‘சங்க’த்தின் விளைவே! என்றன் செந்தமிழ் வீடே! ஒவ்வோர்
அங்கத்தின் உருவே! மூச்சிற் காகிய முதலே! ஆழ்ந்த
வங்கத்தைக் கிழக்கும் வாழும் அரபியை மேற்குந் தாங்கி
எங்களைக் காக்கத் தெற்கில் கடலோடும் மலையே வாழி!


26.

சாவாத எழிலே! வாழ்ந்து சலிக்காத தாயே! துன்பம்
மேவாத ஒலியே! எம்போல் மின்னாத தமிழர்க் கெல்லாம்
ஆவாத பொருளே! நீண்ட ஆழிசூழ் மண்ணில் என்னைக்
காவாத முதலே! பாவாற் கசிகின்றேன்; கனிவா யம்மா!


27.

சிவிகையிற் குந்தி ஏத்திச் ‘சிரமீ’து வைத்துப் பேணி
அவிகையில் லாமற் காத்த அரசரின் தமிழே, யின்று
‘புவி 'மிசை யஃகித் தேய்ந்து போயினை யன்றோ நெஞ்சு
குவியுதென் னுயிரோ நைந்து குலையுது காத்துத் தேர்வாய்!


28.

சீர்த்திசேர் வேந்தர் எல்லாம் செந்தமிழ்ப் புலவர் செய்த
நேர்த்திசேர் பாக்கட் கீந்து நேர்மிடி போக்கிப் போந்த
ஆர்த்திடு கழகம் ஆக்கி வைத்தனர் தமிழின் வேந்தே
பார்த்திடு வறுமை நீக்காப் பாவையே பாச்சு வைப்பாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/36&oldid=1419403" இலிருந்து மீள்விக்கப்பட்டது