உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  101

அன்னவர் நோக்கம்; அந்நோக் கிற்கே
பன்னருந் தடைகளைப் பண்ணுவோர் தீயரே!

அரசியல் என்பதோ ஆயிரம் பொய்களை
உரைத்துப் பெற்ற ஒப்போ லைகளால் 70
ஆளுநர் மன்றப் பதவி அடைவதும்,
நாளோர் ஊராய் நடைக்கொரு கூட்டமாய்ச்
சென்று மக்களின் சிறுமைக் கிரங்கலாய்
நன்றே புளுகலும், நம்பச் செய்தலும்,
இலக்கக் கணக்கில் பொருள்பல ஈட்டலும்,
துலக்கமில் கருத்துப் பற்பல கூறலும்
என்பதே நம்மவர் இன்றைய கருத்து!
தின்பதும் உறங்கலும் தவிரவே றறியார்!

இத்தகை வாழ்வுக் கெவர்தடை செய்யினும்
அத்தகை யோரைச் சிறையில் அடைப்பதும் 80
துயர்பல கொடுப்பதும் தூக்கில் இடுவதும்
உயர்நிலை பெற்றவர் ஒருபெருங் கொள்கை!

மக்களுக் குண்மை சாற்றிட மறுப்பார்!
ஒக்கவர் நலத்திற் குழைப்பதா நடிப்பார்!
பொல்லார் எனினும் பொருள் பல இறைத்து
நல்லார் போல நடிப்பரே மேலோர்!
அன்னவர் நடிப்பிற் கொத்ததா ஆடுவர்
இன்னார் எனினும், இனியவர் அவர்க்கே!

ஊர்திகள் பெறலாம்; பொருள் மேல் உறங்கலாம்;
பார்புகழ் தரும்படி பலபடச் செய்தித் 90
தாள்களில் எழுதிடச் செய்து தருக்கலாம்!
சால்புறக் கல்லால் படிவம் சமைக்கலாம்!

ஓராயிர மெனில் ஊராள் மன்றம்;
ஈராயிர மெனில் நகராள் மன்றம்;
சற்றே கூடினால் சட்ட மன்றம்;
பத்தா யிரமெனில் பாராள் மன்றம்;
ஐம்பதா யிரமெனில் அமைச்சரின் பதவி;
நைந்த அரசியல் நாடகம் இதுவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/128&oldid=1419235" இலிருந்து மீள்விக்கப்பட்டது