உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 கனிச்சாறு – முதல் தொகுதி


உள்ளமும் உடலும் ஊறுற் றனவெனக்
கள்ளமில் என்னைக் கடுஞ்சிறை தள்ளினர்!

என்னைக் கடுஞ்சிறை இட்டதால் என்னுளம்
முன்னினும் மூளுமோ? முங்கி யொழியுமோ?

சீர்த்துப் பாய்ந்திடும் சிறுத்தையின் கூருகிர்
ஆர்த்த நெடும்புல் அசைவில் வழுக்குமோ?

மதர்த்தெரு களிற்றின் மலையுடல் தூண்கால்
பதர்க்குவை கண்டு பதுங்கி யொடுங்குமோ? 240

பொங்கு பேரலைப் போக்கினை வீழ்சிறு
தெங்கின் குரும்பை தேக்கி நிறுத்துமோ?

தீக்குழம் புருக்கித் தெறிக்கும் எரிமைலைப்
பாக்குழம் பினையொரு பழம்பாய் தடுக்குமோ?

எழுந்த வல்லரி ஏற்றின் உறுமலைப்
பழம்பறை கொட்டொலி பரக்கச் சிதர்க்குமோ?

உணர்வில் உயிரில் உடலின் நரம்பினில்
புணர்ந்த செந்தமிழ் பூண்ட கூத்தினை
அரசக் கோலெடுத் தாடும் குரங்கதன்
உரசக் கால்நடம் ஊன்றி நிறுத்துமோ?' 250

என்றுரை முழக்கி எழுந்து செந்தமிழ்
வென்றர சாளும் நாளும் விரைந்ததே!

ஆகலின் அன்பரீர் அந்நாள் நோக்கி
ஏகுக நம்முயிர்! ஏகுக நம்முடல்;
அந்நாள் சிறைக்கத வகலத் திறக்கும்;
அந்நாள் தமிழ்வித் தூன்றுக” என்றேன்!
சிறையகப் பட்டோர் சிறுமை மறந்தே
கரையகப் பட்ட கலம்போல் மகிழ்ந்து
வாழ்த்தினார் என்றன் வரவை
காழ்த்தது மேலுமென் கவினுறு நெஞ்சே! 260

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/133&oldid=1513162" இலிருந்து மீள்விக்கப்பட்டது