பக்கம்:கனிச்சாறு 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


169

உய்யுமோ நாடு, இவ் உலுத்தர் ஆட்சியிலே!


ஆட்சி செய்யும் அரம்பர் கூட்டம்
மாட்சி யின்றி மக்களை வருத்திச்
சுரண்டிக் கொழுக்கும் சூழ்ச்சியே, இன்றைய
வரண்ட கையடி வாயடி அரசியல்!

திட்டங்கள் என்னும் திருட்டு நடைமுறைக்
கொட்டங்கள் அடிக்கும் கொள்ளைக் கூட்டம்!

ஏமாற்று, வஞ்சகம், எத்துகள், புரட்டுகள்,
மாமாக்கள் மாமிகள் மயக்கிடும் கலைகள்,
கொண்டாட்டம், கொம்மாளம், குழிபறிப்பு, இரண்டகம்!
திண்டாடும் மக்கட்குத் தெருவோர வாழ்க்கை!

வானத்தை எட்டிடும் வாங்கிடும் விலைகள்!
மானத்தை மறைத்திடும் உடைகளோ மலை விலை!
கூரை பிய்ந்த குடிசைக்கும் பஞ்சம்!
ஊரை ஏமாற்றி உலையில் போட்டிடும்
அமைச்சர்கள் மலிந்த அதிகாரக் கூட்டம்!
நமச்சல் எடுத்த கையூட்டு நாற்றம்!

பள்ளிகள் எனப்படும் பகற்கொள்ளைக் கூடங்கள்!
பள்ளிப் பிள்ளைகள் பாடவும் ஆடவும்
சீருடை அணிந்து சிறப்புறத் திரண்டு
ஊர்வலம் போகவும் உதவிடும் உதிரிகள்!

உடலை நெளித்தும் உறுப்புகள் குலுக்கியும்
நடலைப் பெண்டிர்கள் நாணமில் லாமல்
அருவருப் பாக அரைகுறை ஆடையில்
திரைப்படம் நடிக்கும் தெருக்கூத்துக் கலைகள்!

ஐயகோ! இத்துணை அவலத்துக் கிடையில்
உய்யுமோ நாடு, இவ் வுலுத்தர் ஆட்சியிலே!

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/284&oldid=1437497" இலிருந்து மீள்விக்கப்பட்டது