பக்கம்:தமிழின எழுச்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

112 - தமிழின எழுச்சி

அக்கறையும் ஆர்வமும் கொண்டவருமாகிய திரு.இர.ந. வீரப்பன் அவர்களாகும். இதன் இந்தியக் கிளை ஒன்று சென்னையில் உள்ளது. அதன் முழு முயற்சியால்தான் சென்னையில் அதன் முதல் மாநாடு நடந்தது. மாநாடு வெற்றியுற நடந்ததா இல்லையா என்று கருதிப் பார்க்கக் தேவையில்லையானாலும், அதனை ஒரு கருத்தரங்கு அளவிலேனும் சிறப்புற நடத்திய திரு. அரு.கோபாலன், பாவலர் திரு வா.மு.சேதுராமன் (“தமிழ்ப்பணி” ஆசிரியர்) முதலியவர்களை நாம் பாராட்டியே ஆகல் வேண்டும். மாநாட்டிற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, இறியூனியன், பிசித்தீவு, மொரீசியசு, இந்தோனேசியா, பர்மா - முதலிய நாடுகளிலிருந்தெல்லாம் பேராளர்கள் வந்திருந்தனர்.

மாநாட்டில் அயலகத் தமிழர்களுக்கும் தாய்நிலத் தமிழர்களுக்கும் நலஞ்சேர்க்கும் பதினொரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்று, அவை தொடர்புடைய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு விடுக்கப் பெற்றுள்ளன. மாநாட்டிற்கு வந்திருந்த படிநிகராளியரைத் தமிழக முதல்வர் திரு. ம.கோ. இராமச்சந்திரன் அவர்கள் பாராட்டி ஒரு விருந்தும் அளித்தார். மொத்தத்தில் மாநாடு அதனளவில் நல்ல பயனை விளைவிக்காமற் போயினும், உலகளாவிய தமிழர் தம் தாய்த்தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் காத்துக் கொள்ள எழுச்சி கொண்டுவிட்டனர் என்பதை மற்ற இனத்தார் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. இக்கருத்து விளைவையே ஒருவகை வெற்றியாகத்தான் நாம் கருதுகிறோம்.

மாநாட்டைத் தொடர்ந்து 20.12.77 அன்று, சென்னை பெரியார் திடலில், மாநாட்டுப் பேராளர்களைப் பாராட்டி ஒரு சிறப்பு விழா நடந்தது. உ.த.ப. இயக்க இந்தியக்கிளையை முதன்முதல் அமைத்த திரு. தமிழ்மன்னன் அவர்களும், செல்வி. தன்மானம் அவர்களும் அங்க விழாவை ஒரு மாநாடு போலவே நடத்திக் காட்டினர். அதில் கலைஞரும் நானும் அழைக்கப்பெற்றோம். உ.த.ப. இயக்க மாநாட்டின் சோர்வை, அயலகத்தமிழர்கள் இப்பாராட்டு விழாவில் போக்கிக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது.

உட்பூசல்கள் மறைந்து போலி ஆரவாரங்களையும் தவிர்த்து உ.த.ப. இயக்கம் தமிழ்மொழிக்கும் பண்பாட்டிற்கும் இனத்திற்கும் முழுமையாகவும் உண்மையாகவும் தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், அதன் கொள்கையில் வெற்றி பெறவும் , நிறைந்த நெஞ்சுடன் வாழ்த்துகிறோம்.

தென்மொழி சுவடி-14, ஓலை 8, 9 சனவரி 1978