உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/6 என் தந்தையார் குருகுலவாசம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—6

என் தந்தையார் குருகுலவாசம்

“எப்போதும் சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைப்பிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பியிருக்கிறேன். அவர் என் விஷயமாக உள்ளத்தே கொண்டிருந்த கவலையை நான் முதலில் அறிந்து கொள்ளாவிட்டாலும் நாளடைவில் உணர்ந்து உருகலானேன். அவரிடம் எனக்கு இருந்த பயபக்தி வரவர அதிகரித்ததே யொழியக் குறையவில்லை.

இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச் சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு லௌகிகத்தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவபக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது. அவருடைய ஆசாரசீலமும் சிவபூஜையும் பரிசுத்தமும் சங்கீதத் திறமையும் அவரைத் தெய்வமாக எண்ணும்படி செய்தன. அவருக்கு என்பாலுள்ள வாத்ஸல்யம் வெளிப்படையாகத் தோற்றாது. அவரது உள்ளமாகிய குகையிலே அது பொன்போற் பொதியப்பட்டிருந்தது. அதன் ஒளியைச் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கிறேன்.

என் தந்தையாருடைய இயல்பான பெயர் வேங்கட சுப்ரமணிய ஐயரென்பது; வேங்கட சுப்பையரென்றே அது மருவி விட்டது. அவரது பெயர் முன்னோர்களின் பெயரானமையின் வீட்டிலுள்ளவர்கள் அதைக் கூறமாட்டார்கள். அதனால் “ஸாமி” என்றே அவரை அழைத்து வந்தனர். என்னுடைய தந்தையாருக்கு இளைய சகோதரர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஸ்ரீநிவாஸையரென்பது முதற்பெயர். ஸாமி என்று என் தந்தையாரை அழைத்த காரணம் பற்றி அவரை யாவரும் ‘சின்னசாமி’ என்று வழங்கலாயினர். அவருக்கு அதுவே பெயராக நிலைத்துவிட்டது. என் தந்தையாருக்கு ஒரு தமக்கையார் இருந்தார்.

என் தந்தையாருக்கும் சிறிய தந்தையாருக்கும் இளமையில் என் பாட்டனாரே வடமொழியையும் தமிழையும் கற்பித்தார். என் பாட்டியார் சங்கீதப் பழக்கம் உடையவராதலின் அவருடைய அம்சம் என் தந்தையாரிடமும் இருந்தது. அவருக்குச் சங்கீதத்தில் இளமை தொடங்கியே விருப்பம் உண்டாகி வளர்ச்சி யடைந்து வந்தது.

என் தந்தையாருக்கு உபநயனம் ஆயிற்று. பாட்டியாருக்கு அவரைச் சங்கீதத் துறையில் ஈடுபடுத்த வேண்டுமென்ற அவா இருந்து வந்தது. தம்முடைய அம்மானாகிய கனம் கிருஷ்ணையர் உடையார்பாளையம் ஸமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாக இருந்து சிறப்படைந்திருந்தமையின் அவரிடமே தம் மூத்த குமாரரை ஒப்பித்துக் குருகுலவாசம் செய்யும்படிவிடலா மென்று எண்ணினார். என் பாட்டனாரும் இதற்குச் சம்மதித்தார். என் தகப்பனாருக்கோ சங்கீத அப்பியாசத்தில் இருந்த ஆவல் சொல்லும் அளவினதன்று. தமக்கு வாய்க்கப்போகிற குரு தாய்வழியினர் என்று தெரிந்தபோது அவரோடு சுலபமாகப் பழகலாமென எண்ணி மிக்க சந்தோஷத்தை அடைந்தார்.

“ஸாமி, எங்கள் மாமாவைப் பற்றி நீ நன்றாகத் தெரிந்துகொண்டிருக்க மாட்டாய். அவரால் திருக்குன்றத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு பெருமை உண்டாயிருக்கிறது தெரியுமா? அவருக்கு இதுவரையில் நல்ல சிஷ்யன் ஒருவனும் கிடைக்கவில்லை. நீ அவரிடம் ஜாக்கிரதையாகப் பழகி அவர் மனம் குளிரும்படி நடந்து வந்தால் அவருடைய வித்தை முழுவதும் உனக்கு வராவிட்டாலும் முக்காற் பங்காவது வரும். சங்கீதத்தில் அவருடைய மார்க்கமே தனி. அதை நீ கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் நீயும் கியாதியை அடைவாய்” என்று என் பாட்டியார் கூறினார். அவ்வாறு கூறுகையில் அவர் தம்முடைய குமாரரும் பிற்காலத்தில் ஒரு ஸமஸ்தானத்தில் பலரும் பாராட்டும் வண்ணம் சங்கீத வித்துவானாக இருந்து விளங்குவதாகப் பாவித்திருக்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தன் மகனைப் பற்றி இவ்வாறு காணும் கனவுகளுக்குக் கணக்கு உண்டோ?

ஒரு நல்ல நாளில் என் பாட்டியார் தம் அருமைப் புதல்வரை அழைத்துக்கொண்டு உடையார்பாளையம் சென்றார். தம் அம்மாவிடம்‌ தம்‌ குமாரரை ஒப்பித்துத்‌ தம்‌ கருத்தையும்‌ கூறினார்‌. கனம்‌ கிருஷ்ணையர்‌” “அடே. ஏதாவது. பாடு பார்க்கலாம்‌?” என்றார்‌. என்‌ தத்தையாருக்கு என்‌ பாட்டியார்‌. கனம்‌. கிருஷ்ணையர்‌ கீர்த்தனங்கள்‌ சிலவற்றைக்‌ கற்றுக்‌ கொடுத்திருந்தார்‌, அவற்றில்‌ ஒன்றை என்‌ தந்தையார்‌. பாடிக்‌ காட்டினார்‌. அது ஸ்வர சுத்தமாக இருந்தது கண்ட கிருஷ்ணையர்‌, “உன்‌ பிள்ளைக்குச்‌ சாரிரம்‌ இருக்கிறது; நீயும்‌ கொஞ்சம்‌ சொல்லித்‌ தந்திருக்கிறாய்‌. முன்னுக்கு வருவான்‌”? என்று கூறினார்‌.

“மாமா, உங்களிடம்‌ இவனை இப்பித்துவிட்டேன்‌. இனிமேல்‌ இவனுக்கு ஒரு குறையும்‌ இல்லை” என்றார்‌ பாட்டியார்‌,

“எல்லாம்‌ நன்றாகத்தான்‌ இருக்கின்றன. ஆனால்‌ இவனுல்குத்‌ தேக புஷ்டிதான்‌ போதாது. நன்றாகப்‌. சாப்பிட வேண்டும்‌. உடம்பு வளைந்து வேலை செய்யவேண்டும்‌” என்று கிருஷ்ணையர்‌ கூறினார்‌.

“நமக்குச்‌ சொந்தக்காரராக இருப்பதனால்தான்‌ தம்முடைய தேக செளக்கியத்தைர்‌ பற்றி இவ்வளவு தாரம்‌ சொல்லுகிறார்‌” என்று எந்தையார்‌ நினைத்துக்கொண்டார்‌. ஆனால்‌ உண்மை வேறு.

கனமார்க்க சங்கீதம்‌ எல்லோராலும்‌ சாதித்துக்‌ கொள்ள இயலாதது. யானையின்‌ பலமும்‌ சிங்கத்தின்‌ “தொனியும்‌ இருப்பவர்களே அதை முற்றும்‌ கடைப்பிடிக்கலாம்‌. கனம்‌ கிருஷ்ணையருக்குச்‌ சரீர வண்மையும்‌ சாரிர பலமும்‌ நன்றாகப்‌ பொருந்தியிருந்தன. அதனால்‌ அவர்‌ அந்த மார்க்கத்தில்‌ நல்ல சாதனை பெற்றார்‌. சங்கீத வித்துவான்கள்‌ சாரிீரத்தை மாத்திரம்‌ பரீட்சை செய்து பார்ப்பார்கள்‌. கனமார்க்க சங்கீத வித்துவனாகிய அவர்‌ சரீரத்தையும்‌ சாரீரத்தையும்‌ ஒருங்கே. பார்த்தார்‌. இரண்டு வன்மையும்‌ சேர்ந்தால்தான்‌ தம்முடைய வழி பிடிபடுமென்பது அவர்‌ தம்‌ அதுபவத்திற்‌ கண்டதல்லவா?

“இனிமேல்‌ மண்‌ வைத்து ஒட்டிப்‌ புஷ்டி.ப்படுத்த முடியுமா? இருக்கிற ஊடம்மைச்‌ சரியாகக்‌ காப்பாற்றிக்‌ கொண்டால்‌. போதும்‌” என்று என்‌ பாட்டியார்‌ சொல்லிச்‌ சில நாள்‌ அங்கே தங்கியிருந்து பிறகு விடை பெற்று உத்தமதானபுரம்‌ போய்ச்‌ சேர்ந்தார்‌.

என்‌ தந்தையாருடைய குருகுல வாசம்‌ ஆரம்பமாயிற்று, கனம்‌ விடுஷ்ணையர்‌ மனோதைரியமும்‌ பிரபுத்துவமும்‌ உடையவர்‌. என்‌ தந்தையாரை அவர்‌ மிக்க அன்போடு பாதுகாத்து வந்தார்‌. ஆனாலும்‌ அவருக்குப்‌ பல வேலைகளை ஏவுவார்‌. தினந்தோறும்‌ தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வஸ்திரம் துவைத்துப் போடுவார்; வெந்நீர் வைத்துக் கொடுப்பார்.

அந்த ஸமஸ்தான ஜமீன்தாராகிய கச்சிக் கல்யாணரங்கர், கிருஷ்ணையரையும் ஒரு ஜமீன்தாரைப் போலவே நடத்திவந்தார். அவருக்கு எல்லாவிதமான சௌகரியங்களையும் அமைத்துக் கொடுத்தார். கனம் கிருஷ்ணையர் குதிரையின் மேல் சவாரி செய்வதுண்டு. ஜமீன்தார் அவருக்கு ஓர் அழகிய குதிரை வாங்கித் தந்திருந்தார்; பல்லக்கும் கொடுத்திருந்தார். “எங்கள் மாமாவுக்கு ராஜயோகம். அவருடைய மேனியழகும் எடுப்பான பார்வையும் ராஜஸ சுபாவமும் ராஜாவாகப் பிறக்க வேண்டியவர் தவறிப் பிராமணராகப் பிறந்து விட்டார் என்றே தோற்றச் செய்யும்” என்று தந்தையார் கூறுவார்.

தம்முடைய ஆசிரியர் குதிரையில் ஏறிச் செல்லும்போது சில சமயங்களில் என் தந்தையார் அக்குதிரையின் லகானைப் பிடித்துச் செல்வதுண்டாம். இளைய பிரம்மசாரியாகிய என் தந்தையார் இத்தகைய வேலைகளில் கிருஷ்ணையர் தம்மை ஏவுவது குறித்துச் சில சமயங்களில் மனம் வருந்துவார்; ‘சொந்தக்காரர்; மரியாதையாக நடத்துவார்’ என்று தாம் எண்ணியதற்கு மாறாக இருப்பதை நினைந்து வெறுப்படைவார். ஆனால் அந்த வருத்தமும் கோபமும் அடுத்த கணத்திலே மறைந்து விடும். உணவு விஷயத்திலும் மற்றச் சௌகரியங்களிலும் என் தந்தையாருக்கு ஒருவிதமான குறைவும் நேரவில்லை. தம் மாணாக்கரின் உடம்பு புஷ்டிப்படுவதற்காக இத்தகைய ஏவல்களை அவர் இட்டனரென்றே எனக்கு இப்போது தோற்றுகின்றது. முறையாக என் பிதா தம் ஆசிரியரிடம் சங்கீத அப்பியாசம் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் எழுந்து உடையார்பாளையம் காண்டீப தீர்த்தத்தின் தென்கரையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் சாதகம் செய்வது வழக்கம். கிருஷ்ணையருடைய கீர்த்தனங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டார். அவ்வப்போது அப்பெரியார் இயற்றும் சாகித்தியங்களையும் பாடம் பண்ணி ஜமீன்தாருக்கும் அந்த ஸமஸ்தானத்துக்கு வரும் வித்துவான்களுக்கும் பாடிக் காட்டுவார். பல பழைய சங்கீத வித்துவான்கள் இயற்றிய கீர்த்தனங்கள் அவருக்குப் பாடமாயின. கனம் கிருஷ்ணையரையன்றி வேறு யாருக்கும் தெரியாத சக்ரதானத்தையும் கற்றுக்கொண்டார்.

இவ்வாறு இரவும் பகலும் குருவின் பணிவிடையிலும் சங்கீதப் பயிற்சியிலும் என் தந்தையார் சோம்பலின்றி ஈடுபட்டிருந்தார். பன்னிரண்டு வருஷ காலம் இந்தக் குருகுல வாசம் நடைபெற்றது.

கனம் கிருஷ்ணையருக்கு வரவர என் தந்தையாரிடத்தில் அன்பு அதிகமாயிற்று. வேறு சிஷ்யர் சிலர் சில நாள் இருப்பினும் யாரும் அவரிடம் நிலையாக இருந்ததில்லை. அதனால் என் தந்தையாரிடத்தில் இருந்த அன்பு வன்மை பெற்றது. முதலில் உள்ளத்துள் இருந்த அது நாளடைவில் விரிந்து வெளிப்படலாயிற்று. அவர்தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம் மாணாக்காரை அழைத்துச் சென்றார். ஜமீன்தாரிடத்திலும் அடிக்கடி அழைத்துச் சென்று பழக்கம் செய்து வைத்தார்.

ஜமீன்தாருக்கு என் தகப்பனாரிடத்தில் அன்பு உண்டாயிற்று; “வேங்கட சுப்பு” என்று பிரியமாக அழைத்துப் பேசி மகிழ்வார். பிறகு மாதச் சம்பளமும் அவருக்கு ஏற்படுத்தினார்.

கனம் கிருஷ்ணையர் வித்துவான்கள் கூடிய சபையில் பாடும் போது என் தந்தையாரையும் உடன் பாடச் சொல்வார். சில சந்தர்ப்பங்களில் அவரைத் தனியே பாடச் செய்து கேட்டு மகிழ்வார். இத்தகைய அன்புச் செயல்களால் என் தந்தையாருக்கு ஊக்கமும் சங்கீதத்தில் திறமையும் அதிகமாகிக் கொண்டே வந்தன.

என் பிதா அவர்கள் உடையார்பாளையம் சென்ற சில வருஷங்களுக்குப் பின் என் சிறிய தந்தையாராகிய சின்னசாமி ஐயரும் அங்கே சென்று கனம் கிருஷ்ணையரிடம் சங்கீத அப்பியாசம் செய்யத் தொடங்கினர்.

என் தந்தையாருக்குக் கலியாணம் செய்யும் பருவம் வந்தது. அக்காலத்தே இவ்விஷயத்தில் பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு அதிகம். விவாகச் செலவிற்கும் கூறை முதலியவற்றிற்கும் ஆபரணங்களுக்கும் பிள்ளை வீட்டுக்காரர்களே பணம் கொடுப்பது வழக்கம்; ஒரு திருமாங்கலியம் மட்டும் பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுப்பார்கள். ஆதலின் கலியாண விஷயத்தில் இந்தக் காலத்தைப் போலப் பெண் வீட்டார் பொருளில்லையே என்ற கவலைகொள்ள மாட்டார்கள்.

தம்முடைய குமாரருக்கு விவாகம் செய்விக்க வேண்டுமென்னும் கவலை என் பாட்டியாருக்கு உண்டாயிற்று. பாட்டனார் தம்முடைய ஜீவனத்துக்குப் போதுமான வருவாயை மாத்திரம் சம்பாதித்து வந்தார். நிலங்களெல்லாம் போக்கியத்தில் இருந்தன. கடன் வாங்குவதற்கும் மார்க்கம் இல்லை. இந்த நிலையில் விவாகச் செலவுக்கு என்ன செய்வதென்ற யோசனை பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் உண்டாயிற்று. “மாமாதான் வழிவிட வேண்டும். ஸாமி இப்போது நமக்குப் பிள்ளையாக இல்லை. அவருக்குத்தான் பிள்ளையாக வாழ்ந்து வருகிறான். அவர் முயற்சி பண்ணினால் கலியாணம் நிறைவேறும்” என்று அவர் நினைத்தார்.

இடையிடையே என் தந்தையாரைப் பார்க்கும் வியாஜத்தால் என் பாட்டனாரும் பாட்டியாரும் உடையார்பாளையம் வந்து சில நாள் தங்கிவிட்டுச் செல்வது வழக்கம். அங்ஙனம் ஒரு முறை வந்திருந்தபோது என் பாட்டியாராகிய செல்லத்தம்மாள் தன் அருமை அம்மானிடம் தம் குமாரருடைய சங்கீதத் திறமையைப் பற்றி விசாரித்தார்.

கனம் கிருஷ்ணையர், “நல்லபிள்ளை; எல்லோருக்கும் பிரியமாக நடந்து கொள்ளுகிறான். எனக்கு எவ்வளவோ சகாயம் செய்து வருகிறான். ஜமீன்தாருக்கும் அவனிடம் பிரீதி உண்டு” என்றார்.

அதுதான் தம்முடைய விருப்பத்தை வெளியிடுவதற்கு ஏற்ற சமயமென்று துணிந்த செல்லத்தம்மாள், “எல்லாம் உங்கள் ஆசீர்வாத விசேஷந்தான். உத்தமதானபுரத்தில் இருந்தால் வீணாய்ப் போய்விடுவானென்று உங்களிடம் ஒப்பித்தேன். உங்களுடைய கிருபைதான் அவனுக்கு எல்லாப் பெருமையும் உண்டாவதற்குக் காரணம். நீங்கள் வைத்த மரம். எனக்கு ஒரு குறை மாத்திரம் இருக்கிறது” என்று பேச்சைத் தொடங்கினார்.

“என்ன குறை?”

“இவனுக்குக் கலியாண வயசாகி விட்டது. நல்ல இடத்திலே கலியாணம் ஆகவேண்டும். உங்களுடைய சம்பந்தத்தால் இவனுக்கு நல்ல யோக்கியதை உண்டாகியிருக்கிறது. ஆனாலும் இவனுடைய கலியாணச் செலவுக்கு வேண்டிய பணம் எங்களிடம் இல்லை. நாங்கள் இவனைப் பெற்றதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாப் பொறுப்பையும் நீங்களே வகித்துக்கொண்டீர்கள். உங்களுடைய கிருபையால் இவனுக்குக் கலியாணமாக வேண்டும்.”

“அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? ஈசுவர கிருபை எல்லாவற்றையும் நடத்தும்” என்றார் கிருஷ்ணையர்.

இந்த வார்த்தை என் பாட்டியார் காதில் அமிர்தம்போல் விழுந்தது. தம் அம்மானது பெருந்தன்மையான குணத்தை உணர்ந்தவராதலின், “இவர் எப்படியாவது கலியாணத்தை நிறைவேற்றி வைப்பார்” என்ற தைரியம் அவருக்கு உண்டாயிற்று. அந்தத் தைரியத்தோடு அவர் உத்தமதானபுரத்துக்குத் திரும்பிச் சென்றார்.

கனம் கிருஷ்ணையர் இந்தச் சுபகாரியத்தை ஜமீன்தார் உதவியைக்கொண்டு நிறைவேற்றுவது மிகவும் சுலபமென்று அறிந்தவர். அதனால்தான் என் பாட்டியாரிடம் அவ்வளவு உறுதியாகப் பேசினார். ஒருநாள் தம் கருத்தை அவர் ஜமீன்தாருக்குத் தெரிவித்தார். எல்லோரையும் போலத் தெரிவிக்கும் வழக்கந்தான் அவருக்கு இல்லையே. ஒரு செய்யுள் மூலமாக அதனைத் தெரிவித்தார். அந்தச் செய்யுள் ஒரு கட்டளைக் கலித்துறை. அது முற்றும் இப்போது கிடைக்கவில்லை.

“வன்ய குலோத்தமன் ரங்க மகீபன் வரிசைமைந்தா”

என்ற முதலடி மாத்திரம் என் சிறிய தந்தையார் எழுதி வைத்துள்ள குறிப்பிலிருந்து கிடைத்தது. கனம் கிருஷ்ணையருடைய வேண்டுகோள் நிறைவேறுவதில் தடையொன்றும் உண்டாகவில்லை. கச்சிக் கலியாணரங்கர், கலியாணத்துக்குப் பொருளுதவி செய்வதாக ஏற்றுக் கொண்டார். பெண் நிச்சயமானவுடன் பணம் உதவுவதாக வாக்களித்தார். அது முதல் என் தந்தையாருக்கு ஏற்ற பெண்ணை என் பாட்டியாரும் பாட்டனாரும் ஆராயத் தொடங்கினர்.

இவ்வாறு இருக்கையில் திடீரென்று கனம் கிருஷ்ணையருக்கு வறள்வாயு என்னும் ஒருவகை நோய் கண்டது. முதுமையினால் இயல்பாகவே அவருக்கு உடல் தளர்ச்சியும் இருந்து வந்தது. அந்த நிலைமையில் உடையார்பாளையத்திலே இருப்பதைக் காட்டிலும் தம்முடைய ஊராகிய திருக்குன்றத்தில் போய் இருந்தால் நலமென்று அவருக்குத் தோன்றியது. ஜமீன்தாரிடம் விடைபெற்றுக்கொண்டு திருக்குன்றம் சென்று இருக்கலானார். ஜமீன்தார் அக்காலங்களில் வேண்டிய பணமும் நெல் முதலியனவும் அனுப்பி உதவி புரிந்தார். தக்கவர்களை அடிக்கடி விடுத்துச் செய்தியைத் தெரிந்து வரச் செய்தார்.

கிருஷ்ணையர் திருக்குன்றம் சென்றபோது அவருடன் என் தந்தையாரும் சென்றார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை எல்லாம் எந்தையார் செய்து வந்தார். அவருடைய மெலிவைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார். அவர் தம்மைப் பாதுகாத்து வந்த அருமையை நினைக்கும் போதெல்லாம் விம்மினார்; அவருடைய கட்டு வாய்ந்த அழகிய மேனிகுலைந்து தளர்ந்து வாடுவதைக்கண்டு அழுது புலம்பினார்.

எந்தையாருடைய மன வருத்தத்தைக் கனம் கிருஷ்ணையர் அறிந்து, “என்னுடைய வாழ்வு இவ்வளவுதான் என்று தோன்றுகிறது. நான் ராஜயோகத்தை அனுபவித்தேன், இனியும் அப்படியே அனுபவிப்பதென்பது இயலாத காரியம். அவரவர்கள் கொடுத்து வைத்ததுதான் அவரவர்களுக்குக் கிடைக்கும். அந்த அளவுக்குமேல் ஒன்றும் கிடைக்காது” என்று சொல்லிச் சிறிது மௌனமாக இருந்தார். பிறகு “அப்பா, வேங்கடசுப்பு ஏட்டை எடு; ஒரு கீர்த்தனம் சொல்லுகிறேன்; எழுதிக்கொள்” என்று கூறிவிட்டு,

“கொடுத்துவைத் ததுவரும் ஏறாசை யால்மிகக்
குறைப்பட்டால் வருகுமோ பேய்மனதே”

என்ற பல்லவியை முதலாக உடையதும் பைரவி ராகத்தில் அமைந்ததுமாகிய கீர்த்தனத்தைச் சொல்லத் தொடங்கினார். எல்லாவிதமான பலமும் போன அந்த நிலையில் அந்த வித்துவானுக்கு இறைவனது தியானந்தான் பயனுடைய தென்ற உணர்வு மேலெழுந்து நின்றது.

“படுத்தால் பின்னாலே கூட வருவாருண்டோ
பயறணீ சரைநிதம் பக்தியாய்த் தொழுதிரு”

என்ற அநுபல்லவியைப் பாடினார். அவர் மனம் உடையார்பாளையம் ஆலயத்திலுள்ள சிவபெருமானாகிய பயறணீசரிடம் சென்றது. மேலே மூன்று சரணங்களையும் பாடி முடித்தார். என் தந்தையார் அக்கீர்த்தனத்தை எழுதினார். அந்த நிலையிலும் அப்பெரியாருடைய சாகித்திய சக்தி முன் நிற்பதை நினைந்தபோது வியப்பும், “இத்தகைய பெரியோரை இழந்து விடுவோமோ” என்று எண்ணியபோது துக்கமும் உண்டாயின. கண்ணில் நீர் வழிய அதை எழுதினார். அதன் பின்பும் கனம் கிருஷ்ணையர் தாம் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பந்துவராளி ராகத்தில் சிதம்பரம் ஆனந்த நடராஜமூர்த்தி விஷயமாக,

“தில்லையப் பாவுனது பஞ்சா க்ஷரப்படியிற்
சின்மயமாய்த் தினந்தினமும் வந்துதரி சிப்பேன்”

எனத் தொடங்கும் ஒரு கீர்த்தனத்தைச் சொல்லி எழுதச்செய்தார்.

கனம் கிருஷ்ணையரிடத்தில் இயல்பாகவே பக்தியுடைய என் தந்தையாருக்கு அவரது இறுதிக்கால நிகழ்ச்சிகள் அதனைப் பன்மடங்கு அதிகமாக்கின. கனம் கிருஷ்ணையருடைய உள்ளத்துள்ளே புதைந்திருந்த பக்தி அப்போது வெளிப்பட்டது. அந்தப் பக்தியின் மலர்ச்சியை அதுகாறும் அவ்வளவு விளக்கமாக எந்தையார் கண்டதில்லை. அக்காலத்தில் அறிந்தபோது என் தந்தையாரிடம் முளைத்திருந்த சிவபக்தி வலிவுடையதாயிற்று.

கனம் கிருஷ்ணையர் வாழ்க்கை முடிவடைந்தது. அப்போது என் தந்தையார் துடித்துப் போனார். தம் அருமைக் குருவினிடத்தில் அவர் வைத்திருந்த பக்தி அவர் வாழ்நாள் முழுவதும் மங்கவே இல்லை. அடிக்கடி, “அவர்களைப்போல் இனி யாரைப் பார்க்கப் போகிறேன்!” என்று சொல்லுவார். அப்போது அவர் கண் கலங்கும்.

அப்பால் என் பிதா உடையார்பாளையம் சென்று ஜமீன்தாருடைய ஆதரவிலே இருந்து வரலானார். கனம் கிருஷ்ணையருக்குப் பிறகு அவரது ஸ்தானத்தை வகிப்பதற்கேற்ற சங்கீத வித்துவான் ஒருவரைக் கச்சிக் கலியாணரங்கர் தேடிக் கொண்டிருந்தார். தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகளின் குமாரராகிய சுப்பராயரென்னும் வித்துவானை வருவித்து அவரைத் தம்முடைய ஆஸ்தான சங்கீத வித்துவானாக நியமித்துக் கொண்டார்.

என் தகப்பனார் சுப்பராயரிடம் மிக்க பக்தியோடு ஒழுகியும், கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களைப் பாடி ஜமீன்தாரையும் மற்றவர்களையும் உவப்பித்தும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு அவரும் ஸமஸ்தானத்து வித்துவானாகவே சில காலம் இருந்து வந்தார்.