உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/48 சில சங்கடங்கள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—48

சில சங்கடங்கள்


ரே மாதிரியான சந்தோஷத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பது இவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலே இன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலே செழித்திருப்பவர்களாயினும் வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம், துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல் இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும் அபாக்கியர்களும் இல்லை.

எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க்கல்வி லாபமும் திருவாவடுதுறையிலே கிடைத்தன. மனத்திலே சந்தோஷம் இடையறாது உண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றி இருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோஷத்திற்குத் தடை நேராமல் இல்லை.

ஒவ்வாத உணவு

இரண்டு வகையாக நடந்து வந்த பாட வகுப்பில் நானே படித்து வந்தமையால் சில நாள் என் தொண்டையும் நாக்கும் புண்ணாகிவிடும். ஆகாரம் செய்துவந்த சத்திரத்தில் எல்லோரையும்போல் நானும் ஒருவனாக இருந்து ஆகாரம் பண்ணிவந்தேன். என் அசௌகரியத்தை அறிந்து கவனித்து அதற்கேற்ற உணவுகளை அளிப்பவர் யாரும் அங்கே இல்லை. எனக்கு இன்னவகையான உணவு செய்துபோட வேண்டுமென்று துணிந்து சொல்லுவதற்கும் நான் அஞ்சினேன். சத்திரத்தில் அப்போது உணவு அளித்து வந்தவள் ஒரு கிழவி. மடத்திலிருந்து வரும் உணவுப் பொருள்களுக்குக் குறைவு இல்லை. உணவருந்த வருபவர்களுக்கு அவற்றைக்கொண்டு நல்ல உணவு சமைத்து வழங்குவதற்குரிய சக்தி அந்த அம்மாளுக்கு இல்லை. எல்லாம் சரியாகவே நடந்துவருமென்பது மேலேயுள்ளவர்களது கருத்து. “இவ்வளவு பெரிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே!” என்று நான் வருந்தினேன்.

சத்திரத்து உணவு என் தேகத்துக்கு ஒவ்வாமையால் சில நாட்கள் நான் அன்னத்தோடு மோரை மட்டும் சேர்த்துச் சாப்பிட்டதுண்டு. அயலூர்களிலிருந்து திருவாவடுதுறைக்கு வரும் வித்துவான்களிலும் கனவான்களிலும் சிலர் சில சமயங்களில் சமையற்காரர்களை அழைத்து வருவார்கள்; சில சமயங்களில் குடும்பத்துடன் வருவதுமுண்டு. நான் பண்டார சந்நிதிகளுக்கு வேண்டியவனென்று தெரிந்தவர்களாதலால் என் நிலைமையை அறிந்து தங்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி அவர்கள் என்னை வற்புறுத்துவார்கள். அப்போது எனக்கு மெத்த ஆறுதல் ஏற்படும்.

குழம்பு செய்த குழப்பம்

ஒருநாள் எனக்கு வயிற்றுப்போக்கு உண்டாயிற்று. மாங்கொட்டைக் குழம்பு வைத்துச் சாப்பிட்டால் அந்நோய் நீங்குமென்று எனக்குத் தெரியுமாதலால் அக்கிழவியிடம் நயமாகப் பேசி அதைச் செய்துபோடும்படி கேட்டுக்கொண்டேன். அந்த அம்மாள் அப்படியே செய்துபோட்டாள். நான் ஆகாரம்செய்ய உட்கார்ந்த பின் என் இலையில் அந்தக் குழம்பைப் பரிமாறினாள். என்னுடன் உணவருந்தியவர்களுள் ஒருவர் இதைக் கவனித்தார். திருவாலங்காட்டுக்குச் சென்று ஸம்ஸ்கிருதம் படித்து வருபவர் அவர். அவருக்கு மனம் பொறுக்கவில்லை. “எல்லோரும் சாப்பிடுகிற இப்பொதுவிடத்தில் இவருக்கு மட்டும் தனியாக எதையோ செய்துபோடுகிறாளே!” என்று அவர் எண்ணினார். அந்நினைவு வளர்ந்தது. ஒரு பெரிய தவறு சத்திரத்தில் நேர்ந்ததென்று தோற்றும்படி அச்செய்தியை மிகவும் சாதுரியமாக விரித்து அவர் சுப்பிரமணிய தேசிகர் காதில்விழும்படி செய்துவிட்டார். உடனே கிழவிக்கு மடத்திலிருந்து உத்தரவு வந்தது; “பலர் சாப்பிடுகையில் ஒருவருக்கு மட்டும் தனியே உபசாரம் செய்வது தப்பு; இனிமேல் இம்மாதிரியான காரியம் செய்யக்கூடாதென்று உத்தரவாகிறது” என்று காரியஸ்தர் வந்து கிழவியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார்.

இந்நிகழ்ச்சி எனக்கு மிக்க மனத் துன்பத்தை உண்டாக்கியது, “பண்டார சந்நிதிகள் நம்மிடமே நேரில் விஷயத்தை விசாரித்துத் தெரிந்துகொண்டிருக்கலாமே! யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு இப்படிச் செய்தார்களே” என்று வருந்தினேன். “ஒரு நாளும் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். யாரோ ஒருவர் போய் எனக்கு விசேஷ உபசாரம் நடந்ததாகச் சொல்லியிருக்கக் கூடும். பொதுவிடத்தில் பக்ஷபாதம் இருப்பது சரியன்று என்று எண்ணி இப்படி உத்தரவு அனுப்பியிருக்கலாம். நமக்கு நடந்த உபசாரம் மாங்கொட்டைக் குழம்புதான். அதுவும் தேக அசௌக்கியத்துக்காக ஏற்பட்டதென்று தெரிந்திருந்தால் நம்மிடம் விசேஷ அன்பு வைத்திருக்கும் அவர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்” என்று நானே சமாதானம் செய்துகொண்டேன்.

இரவில் பொழுதுபோக்கு

இரவில் ஆகாரம் செய்த பிறகு மடத்திற்கு வந்து அங்குள்ள குமாரசாமித் தம்பிரானுடன் பாடத்தைப் படித்துச் சிந்தித்து வருவேன். பிறகு அங்கேயே படுத்துக்கொள்வேன். இவ்வழக்கம் திருவாவடுதுறை சென்ற பிறகு சில மாதங்கள் வரையில் இருந்தது. மடத்தில் தங்கி வந்த காலத்தில் ஒரு நாள் இரவு அவருடன் வழக்கம்போலவே படித்து வந்தேன். மடத்தின் கீழ்ப்பக்கத்தில் இருந்த சவுகண்டியில் தம்பிரான்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு அறைகள் உண்டு. குமாரசாமித் தம்பிரான் ஓர் அறையில் இருந்து வந்தார். அதற்கு எதிரே உள்ள அறையில் பன்னிருகைத் தம்பிரான் என்பவர் இருந்தார். அவர் நல்ல செல்வாக்குடையவர். ஆதீனத்தில் பொறுப்புள்ள உத்தியோகங்களை வகித்தவர். அறைகளுக்கு மத்தியிலுள்ள கூடத்தில் நாங்கள் இருந்து படித்த நூல்களைச் சிந்தனை செய்வோம். அப்போது அவரும் உடனிருந்து கவனிப்பார். படித்துக்கொண்டிருந்த நான் அலுப்பு மிகுதியால் அங்கே படுத்துத் தூங்கிவிட்டேன். இரவு மணி பத்து இருக்கும். குமாரசாமித் தம்பிரானும் பன்னிருகைத் தம்பிரானும் பேசிக்கொண்டிருந்தனர். முத்துசாமி ஓதுவார் அங்கே வந்தார்.

எதிர்பாராத சம்பவம்

மடத்திலும் கோயிலிலும் அர்த்த சாமத்தில் நிவேதனமாகும் பிரசாதங்களில் ஒரு பகுதி சுப்பிரமணிய தேசிகருக்கு வரும். அவற்றில் சிறிது, தாம் உபயோகித்துக்கொண்டு பாக்கியைத் தனித்தனியே பிரித்துக் தம்பிரான்களுக்கும் அனுப்புவார். ஒவ்வொரு நாளும் 10 மணிக்கு வடை,சுகியன், தேங்குழல் முதலிய பிரசாதங்கள் தம்பிரான்களுக்குக் கிடைக்கும். குமாரசாமித் தம்பிரானுக்கும் பன்னிருகைத் தம்பிரானுக்கும் கொடுப்பதற்காக அப்போது முத்துசாமி ஓதுவார் அவற்றை எடுத்து வந்தார். அவர் வந்த சமயம் தம்பிரான்கள் இருவரும் அன்று மாலையில் நடந்த ஒரு களவைப் பற்றிச் சம்பாஷித்திருந்தனர்.

பன்னிருகைத் தம்பிரான் ஒரு சிறந்த ஏறுமுக ருத்திராக்ஷ கண்டியை அணிந்திருந்தார். அதன் இரு தலைப்பிலும் கல்லிழைத்த தங்க முகப்புக்கள் உண்டு ஏறக்குறைய இரண்டாயிர ரூபாய் பெறுமானமுள்ளது. அன்று மாலை தம்பிரான் குளப்புரைக்குப் போய் வந்து சில வேலைகளைக் கவனித்தார். சிறிது நேரமான பிறகு பார்த்தபோது கண்டி காணப்படவில்லை. விலையுயர்ந்த பொருளாதலால் மடத்துக் காரியஸ்தர்கள் அதைத் தேடலாயினர்.

“தவசிப் பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லவேண்டும். இந்த மடத்தில் இந்த மாதிரி நடப்பதென்றால் ஆதீனத்துக்கே குறைவல்லவா?” என்றார் பன்னிருகைத் தம்பிரான்.

“ஒவ்வொரு பயலாகக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். திருடினவன் லேசில் சொல்ல மாட்டான். கட்டிவைத்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார் குமாரசாமித் தம்பிரான்.

அங்கே இருந்த முத்துசாமி ஓதுவார் அவர்களுடைய பேச்சு இன்ன விஷயத்தைப் பற்றியதென்பதை அறிந்து, ‘இது தெரிந்து சந்நிதானம்கூட மிகவும் கவலையோடிருக்கிறது. இவ்வளவு துணிவான காரியத்தைச் செய்தவன் யாராயிருப்பான்? அங்கங்கே எல்லோரும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்”என்று சொல்லி அச்சம்பாஷணையில் கலந்தனர்.

அவர்கள் மூவரும் பேசிய சப்தத்தால் என் தூக்கம் கலைந்தது. நன்றாகத் தூங்கின எனக்குச் சிறிது விழிப்பு உண்டாயிற்று. கண்ணைத் திறவாமல் மறுபடியும் தூக்கத்தை எதிர்பார்த்துப் படுத்தவண்ணமே இருந்தேன். அப்போது அங்கே வந்த வேறொரு மனிதர், “இங்கே வந்திருக்கும் புதிய மனிதர்களையும் விசாரிக்கவேண்டும்” என்றார்.

“புதிய மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? எல்லாம் பழைய பெருச்சாளிகளே. அவர்கள் வேலையாகத்தான் இருக்கும் இது” என்றார் குமாரசாமித் தம்பிரான்.

“அப்படிச் சொல்லலாமா? இந்த ஐயர் புதியவர் அல்லவா? இவர் எடுத்திருக்க மாட்டாரா?” என்று அந்த மனிதர் சொன்னார்.

அந்த வார்த்தை என் காதில் விழுந்ததோ இல்லையோ எனக்கு நடுக்கமெடுத்தது. அரைகுறையாக இருந்த தூக்க மயக்கம் எங்கேயோ பறந்து போயிற்று.

“ஐயோ! ஒரு பாவமும் அறியாத நம்மைச் சந்தேகிக்கிறார்களே! திருட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளவா இவர்களுடன் பழகுகிறோம்! எதற்காக நாம் இங்கே வந்தோம்!” என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

“என்ன சொன்னாய்? அடபாவி! அந்த வார்த்தையை மறுபடி சொல்ல வேண்டாம்” என்று பன்னிருகைத் தம்பிரான் அம்மனிதரை நோக்கிச் சொன்னார்.

குமாரசாமித் தம்பிரானோ மிக்க கோபக்குறிப்புடன், “உம்மை யாரையா கேட்டார்? மனிதர்களுடைய தராதரம் லவலேசமும் தெரியாத நீர் அபிப்பிராயம் சொல்ல வந்துவிட்டீரே! வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போம். இனி இங்கே நிற்க வேண்டாம்” என்று கடுமையாகக் கூறினார். ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம். இருந்திருந்து பரமசாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம் வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்விட்டார்.

அபய வார்த்தை

அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை, பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன். “இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாஷணையைக் கவனித்தேன். எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். என் உள்ளம் பதறிவிட்டது. இப்போது தான் என் மனம் அமைதியை அடைந்தது. என்னை ஒரு பெரிய அபவாதத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்று அவர்களை நோக்கிக் கூறினேன். அப்படிப் பேசும்போது எனக்கு ஒருவிதமான படபடப்பு இருந்தது. அதைக் கவனித்த பன்னிருகைத் தம்பிரான், “நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? நாங்கள் எதையும் நம்பிவிடுவோமா? எந்தக் காலத்தும் உங்களுக்கு ஒரு குறைவு வரும்படி செய்யமாட்டோம். வந்த மனுஷ்யன் ஏதோ அசட்டுத் தனமாய்ச் சொன்னானென்று நினைக்க வேண்டும். அதை மறந்துவிடுங்கள்” என்று சொல்லி என்னைத் தேற்றினார். “இந்த அபய வார்த்தைகளை நான் ஒரு போதும் மறவேன்” என்று கூறினேன்.

கண்டி அகப்பட்டது

எங்கே பார்த்தாலும் இந்தக் களவைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. மறுநாட் காலையில் பத்து மணிக்கு மடத்தின் ஒரு பக்கத்தில் பன்னிருகைத் தம்பிரான் சிலரோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று குளப்புரையிலிருந்து ஒரு வேலைக்காரன் மிகவும் வேகமாக ஓடிவந்து தம்பிரானிடம் அந்தக் கண்டியைக் கொடுத்து, “சாமீ, இன்று காலையில் நான் எல்லா இடங்களையும் பெருக்கிக்கொண்டிருந்தேன். படித்துறைச் சுவரின் மாடமொன்றில் உள்ள விநாயகருக்குப் பின்னே ஏதோ பளிச்சென்று தெரிந்தது. உடனே கவனித்தேன். இந்தக் கண்டி அகப்பட்டது” என்று சொன்னான்.

அதை வாங்கிக்கொண்டு பன்னிருகைத் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, “நேற்று நான் அனுஷ்டானத்துக்குப் போகையில் அங்கே இதை மாடத்தில் வைத்துவிட்டுத் தோட்டத்துக்குப் போனேன். அப்போது திடீரென்று ஒரு சேவகன். “சந்நிதானம் அவசரமாக அழைக்கிறது” என்று குடல் தெறிக்க ஓடிவந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று நானும் மிகவும் வேகமாக வேறொன்றையும் கவனியாமல் சந்நிதானத்திடம் போனேன். சந்நிதானம் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் கட்டளையிட்டது. சில நேரம் அதே கவலையாக இருந்தேன். கண்டியைப் பற்றிய ஞாபகமே எனக்கு உண்டாகவில்லை. சிறிது நேரம் பொறுத்தே அந்த ஞாபகம் வந்தது. பல தடவை யோசித்துப் பார்த்தும் வைத்த இடம் ஞாபகத்துக்கு வரவில்லை. நான் வைத்த இடத்தைவிட்டு மற்ற இடங்களிலெல்லாம் தேடினேன். பிறரையும் தேடச் செய்தேன் அகப்படவில்லை. எப்படியோ இது சந்நிதானத்துக்கும் தெரிந்துவிட்டது. வயசு ஆக ஆக மறதி உண்டாகிறது. அனாவசியமாகப் பலருக்குக் கவலை ஏற்பட்டது. பாவம்? சாமிநாதையர் மிக்க சஞ்சலத்தை அடைந்துவிட்டார்” என்று எல்லோரிடமும் சொன்னதோடு, உடனே எனக்கும் அதைப்பற்றிச் சொல்லி அனுப்பினார். இச்செய்தி காதில் விழுந்ததும் நான் விநாயகர் சந்நிதி சென்று வந்தனம் செய்தேன்.

கோளால் வந்த துன்பம்

வேறொரு சமயம் என் ஆசிரியரிடம் யாரோ ஒருவர் சென்று என்னைப்பற்றிக் கோள் கூறினார். அதனால் பிள்ளையவர்கள் என்பால் சினங்கொள்ளலாயினர். யாரிடமேனும் கோபங்கொண்டால் அவரிடம் பேசாமல் இருந்துவிடுவது ஆசிரியரது வழக்கம். என்னிடமும் அவ்வாறு இருக்கத் தொடங்கினார். மடத்திற் பாடம் நடக்கையில் படிப்பதும் ஆசிரியர் ஏதேனும் பாடல் சொன்னால் எழுதுவதுமாகிய வேலைகளையே நான் செய்துவந்தேன். நான் அருகில் இருக்கும்போது, “ஏடு எடுத்துக்கொள்ளும், எழுதும்” என்று சொல்லமாட்டார். படுத்துக்கொண்டே ஏதேனும் ஒரு பாடலின் முதல் அடியை ஆரம்பிப்பார். அது புதுப்பாடலாக இருந்தால் அதனை எழுத வேண்டுமென்பது அவர் குறிப்பென்று நான் அறிந்து, ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்குவேன். அவர் சொல்லிக்கொண்டே போவார். நிறுத்த வேண்டுமானால் சரியென்பார். அந்தக் குறிப்பை அறிந்து நான் நிறுத்திவிடுவேன்.

தனியே பாடங் கேட்பதும் பேசுவதும் இன்றி இந்நிலையில் சில நாள் நான் இருந்து வந்தது என் மனத்தை மிகவும் உறுத்தியது. இதை வேறு யாரிடமும் தெரிவிக்கவில்லை; உள்ளத்துள்ளே நான் மறுகினேன்.

அப்போது மாயூரத்தில் வசந்தோத்ஸவம் நடந்தது. அந்த உத்ஸவ தரிசனத்துக்குச் சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் திருக்கூட்டத்துடனும் பரிவாரங்களுடனும் சென்றார். ஆசிரியரும் சென்றார். அவருடன் நானும் சில மாணாக்கர்களும் சென்றோம். மாலையில் மாயூரம் போய்ச் சேர்ந்தோம். சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் ஸ்ரீ மாயூரநாதராலயத்திற்குப் போய்த் தரிசனம் செய்து பிறகு மடத்துக்கு வந்தார். வருங்காலத்தில் என்னை ஒரு காரியஸ்தரோடு அனுப்பி ஆகாரம்செய்து வரும்படி சொன்னார். இவ்விஷயம் பிள்ளையவர்களுக்குத் தெரியாது. அவர் தம் வீட்டில் தங்கியிருந்தார்.

நான் போஜனம் செய்துவிட்டுப் பிள்ளையவர்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் இருந்தேன். அப்போது மடத்தில் பந்தி நடந்தமையால் அங்கே ஆகாரம்செய்துகொள்ளப் பிள்ளையவர்கள் போயிருந்தார்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மடத்தில் பந்தி நடைபெறும்பொழுது சுப்பிரமணிய தேசிகரும் அங்கே போய் உணவுகொள்வார். அப்பந்தியில் தம்பிரான்களும் சைவர்களாகிய வெள்ளை வேஷ்டிக்காரர்களும் தனித்தனியே வரிசையாக இருந்து புசிப்பார்கள். வெள்ளை வேஷ்டிக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிள்ளையவர்களுக்கு உரியது.

வழக்கம்போல் ஆசிரியர் அவ்விடத்தில் அமர்ந்தபோது அவர் எப்பொழுதும் இருப்பதைப்போன்ற தெளிவோடு இல்லை. ஏதோ ஒரு கவலை அவர் முகத்தில் தோற்றியது. போஜனம் செய்யும் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தவர் திடீரென்று எழுந்தார். அவ்வாறு யாரும் செய்யத் துணியார். சம்பிரதாயத்தை நன்கு அறிந்த பிள்ளையவர்கள் அப்படி எழுந்திருந்ததைக் கண்டு யாவரும் பிரமித்துப் போனார்கள். சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஏதோ கவலை இருப்பதை அறிந்து ஒருவர் மூலம் விசாரித்தார். “சாமிநாதையர் என்னுடன் வந்தார். அவர் ஆகாரம் செய்வதற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் வந்துவிட்டேன். பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி விசாரித்து வருவதற்காக எழுந்தேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட தேசிகர், “அவரை ஒரு காரியஸ்தரோடு ஆகாரம் செய்ய அனுப்பியிருக்கிறோம். இதற்குள் அவர் போஜனம்செய்து வந்திருப்பார்” என்றார்.

'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’

ஆசிரியர் ஒருவாறு ஆறுதலுற்றார். ஆனாலும் அவர் மனம் சமாதானம் அடையவில்லை. உணவிலே மனம் செல்லாமல் போஜனம்செய்பவர் போலப் பாவனைசெய்து இருந்துவிட்டு யாவரும் எழுவதற்கு முன்பே எழுந்து கையைச் சுத்திசெய்துகொள்ளாமலே வேகமாக மடத்திற்கு அடுத்ததாகிய தம் வீடு நோக்கி வந்தார். அவர் வேகமாக வருவதைக் கண்டு திண்ணையில் இருந்த நான் எழுந்து நின்றேன்.

நான் இருந்த இடத்தில் தீபம் இல்லாமையால் அவர் என் சமீபத்தில் வந்து முகத்தை உற்றுநோக்கி, “சாமிநாதையரா? ஆகாரம்செய்தாயிற்றா?” என்று கேட்டார், “ஆயிற்று” என்று சொன்னதைக் கேட்ட பிறகே அவர் மனம் சமாதானம் அடைந்தது. உள்ளே சென்று கையைச் சுத்தம் செய்துகொண்டு தீபம் கொணர்ந்து வைக்கச் சொன்னார்.

பிறகு என்னுடன் மிக்க அன்போடு பேசத் தொடங்கினார். அவர் அவ்வளவு வேகமாக வந்ததும் என் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும் சில தினங்களாகப் பேசாதவர் அவ்வளவு அன்போடு பேசியதும் எனக்குக் கனவு நிகழ்ச்சிகளைப்போல இருந்தன.

சிறிது நேரத்திற்குப் பிறகு மடத்திலே இருந்து சிலர் வந்து என்னைக் கண்டு, “ஐயாவுக்கு உம்மிடத்திலே உள்ள அன்பை இன்று நாங்கள் அறிந்துகொண்டோம். உம்முடைய பாக்கியமே பாக்கியம்” என்று கூறி அங்கே நிகழ்ந்தவற்றைச் சொன்னபோது எனக்கு எல்லாம் விளங்கின. சில நாட்களாகத் தாம் என்பால் காட்டிவந்த பராமுகத்துக்குத் தாமே பரிகாரம் தேடியவரைப்போல என் ஆசிரியர் விளங்கினார்.

அன்பை எவ்வளவு காலம் தடைப்படுத்த முடியும்? தடைப்படுத்தப்பட்ட அன்பு என்றாவது ஒரு நாள் மிகவேகமாக வெளிப்படத்தான் வேண்டும் அப்போது ஏற்படும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாகவே இருக்கும்.