உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/43 ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—43

ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்

நான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்து சில மாதங்களே ஆயின. சித்திரை மாதம் வந்தேன் (1871 ஏப்ரல்); புரட்டாசி மாதம் பட்டீச்சுரத்தில் இருந்தோம். இந்த ஆறு மாதங்களில் நான் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். தமிழ் இலக்கிய சம்பந்தமான விஷயங்களோடு உலகத்திலுள்ள பலவேறு வகைப்பட்ட மனிதர்களின் இயல்புகளையும் உணர்ந்தேன். செல்வத்தாலும் கல்வியாலும் தவத்தாலும் நிரம்பியவர்களைப் பார்த்தேன். அவர்களுள் அடக்கம்மிக்கவர்களையும் கர்வத்தால் தலைநிமிர்ந்தவர்களையும் கண்டேன். உள்ளன்புடையவர்களையும் புறத்தில் மாத்திரம் அன்புடையவர்கள் போல நடிப்பவர்களையும் காண நேர்ந்தது. வறுமைநிலையிலும் உபகாரம் செய்வதை மறவாத பெரியோர்கள் பழக்கமும் ஏற்பட்டது. அடிக்கடி இன்ப நிகழ்ச்சிகளுக்கிடையே துன்பங்களும் விரவி வந்தன. பட்டீச்சுரத்தில் திருமலைராயனாற்றிலிருந்து ஒரு வாய்க்கால் பிரிகிறது. நான் அவ்விடத்தில் ஒருநாள் ஸ்நானம் செய்யும்பொழுது சுழலில் அகப்பட்டுக்கொண்டேன். இரண்டு பேர்கள் என்னை எடுத்துக் கரையேற்றினார்கள்.

இவ்வாறு இருந்த எனக்கு உணவினர்களைக் காணவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. என் தாய், தந்தையர் அப்போது சூரியமூலையில் இருந்தார்கள். பட்டீச்சுரத்திற்குச் சமீபத்தில் உத்தமதானபுரம் இருக்கிறது. அதனால் ஒருமுறை அங்கே சென்று அங்கிருந்த சிறிய தந்தையாரையும் சிறிய தாயாரையும் பார்த்து வரவேண்டுமென்ற ஆசை இருந்தது. புரட்டாசி மாதமாதலால் நவராத்திரி ஆரம்பமாயிற்று. என் ஆசிரியரிடம் விடைபெற்று ஸரஸ்வதி பூஜைக்கு உத்தமதானபுரம் சென்றேன். செல்லும்போது ஆசிரியர், “போய் நான்கு நாள் இருந்துவிட்டு வாரும்” என்று கூறினார். பட்டீச்சுரத்தில் நிகழ்ந்த கஷ்டங்களைச் சில தினங்களேனும் நான் மறந்திருக்கலாமென்பது அவர் எண்ணம் போலும்.

விஜயதசமி

ஸரஸ்வதி பூஜைக்கு உத்தமதானபுரத்தில் இருந்தேன்; ஊருக்குச் செல்லும்போது அங்கே சில நாட்கள் தங்கலாமென்றுதான் எண்ணினேன். ஸரஸ்வதி பூஜை செய்துவிட்டு மறுநாட்காலையில் புனப்பூஜையும் செய்தேன். விஜயதசமியாகிய அன்று மாணாக்கர்களுக்கு விசேஷமான தினம் அன்றோ? தங்கள் தங்கள் ஆசிரியர்களிடம் புதிய பாடத்தை அன்று தொடங்குவது நம் நாட்டு வழக்கம். பிள்ளையவர்கள் கையால் அன்று ஒரு நூல் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. “இவ்வளவு நாட்கள் அவர்களோடு இருந்தோம். என்றைக்கு அவர்களோடு இருந்து பாடங் கேட்க வேண்டுமோ அன்றைத் தினத்தில் அவர்களைப் பிரிந்து இருப்பது நியாயம் அன்று. எப்படியாவது இன்று போய் அவர்களைப் பார்க்கவேண்டும்” என்று உறுதி செய்துகொண்டேன்.

என் சிறிய தந்தையார் சில தினம் இருந்துவிட்டுப் போகும்படி என்னை வற்புறுத்தினார். அவரும் சிறிய தாயாரும் என்னிடம் அளவற்ற அன்பு பூண்டவர்கள். என்னைக் கடிந்து கோபிக்கும் இயல்பை அவர்களிடம் நான் கண்டதே இல்லை. “சாமா, உன்னைப் பார்த்து ஆறு மாதங்கள் ஆயின. நான் மாயூரம் வரலாம் வரலாமென்று இருந்தேன். இங்கே வேலை அதிகமாக இருக்கிறது. அதனால் வரமுடியவில்லை. நீ வந்தாயே என்று எவ்வளவோ சந்தோஷம் அடைந்தேன். உடனே போகவேண்டுமென்று சொல்லுகிறாயே! நான்கு நாள் பாடங் கேளாவிட்டால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?” என்று அவர் சொன்னார். அவ்வூரில் அவர் கிராம முன்சீபாக இருந்தார். அவருக்குப் பல வேலைத் தொல்லைகள் உண்டென்பதை நான் அறிவேன். என்சிறிய தாயாரும் இருந்து போகும்படி வற்புறுத்தினார்.

“இங்கே இருப்பதில் எனக்கு ஆக்ஷேபம் ஒன்றும் இல்லை. விஜயதசமியாகிய இன்றைக்குப் பிள்ளையவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் வாங்கிக்கொண்டால் நல்லதென்று தோற்றுகிறது. நான் மறுபடியும் வருகிறேன்” என்று விடைபெற்று, பிற்பகலில் பட்டீச்சுரத்தை நோக்கிப் புறப்பட்டேன். பட்டீச்சுரத்திற்கு மாலை நான்கு மணியளவுக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டவுடன்,. “ஏன் அதற்குள் வந்து விட்டீர்?” என்று ஆசிரியர் கேட்டனர்.

“இன்று விஜயதசமி; ஐயாவிடம் ஏதாவது ஒரு புஸ்தகம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணி வந்தேன்” என்றேன்.

‘கலி தீர்ந்தது’

உடனே ஆசிரியர் அங்கு வந்த ஒருவரிடம், அந்த வீட்டிலே பூஜையில் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்றை எடுத்து வரும்படி சொன்னார். அவர் அங்ஙனமே ஒன்றை எடுத்து வந்து பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை அவர் என்னிடம் அளித்தார். நான் அதை மிக்க ஆவலோடு பெற்றுக்கொண்டேன். “என்ன நூலென்று பிரித்துப் பாரும்” என்று அவர் கூறவே, நான் பார்த்தேன். அது நைடதமாக இருந்தது. “நைடதம் படித்தால் கலிபீடை நீங்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். உமக்குக் கலி இன்றோடு நீங்கிவிட்டது. இனிமேல் கவலைப்பட வேண்டாம்” என்று ஆசிரியர் கூறிய பொழுது எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. நான் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளானதை அறிந்த அவர் என் மனத்தில் அவற்றால் துன்பம் உண்டாகியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் அன்று அவ்வாறு எனக்கு ஆறுதல் கூறினார். உண்மை அன்புடையார் சொல்லும் வார்த்தைகளுக்குப் பயன் இல்லாமற் போகுமா?

“மாயூரத்தில் ஐயாவிடம் முதலிற் பெற்றுக்கொண்டது நைடதந்தான். அப்பொழுதே இந்த மாதிரி எண்ணினேன்” என்று நான் சொன்னேன். பிறகு நைடதத்திலிருந்து சில செய்யுட்களை ஆசிரியர் முன்னிலையில் படித்தேன். அதனால் எனக்கு உண்டான திருப்தி மிக அதிகம். அதுவரையில் ஒவ்வொரு வருஷமும் விஜயதசமி வந்து போய்க்கொண்டுதான் இருந்தது. ஆனால் அந்த வருஷத்து விஜயதசமியில் நான் என் ஆசிரியர் கைப்பட ஒரு புஸ்தகம் பெற்றுப் படித்த பாக்கியம் கிடைத்தது. அதனால் அதற்கு ஒரு தனி விசேஷம் இருந்தது.

உச்சிஷ்ட கணபதி தரிசனம்

சவேரிநாத பிள்ளையும் நானும் பாடம் கேட்டு வந்தோம். கும்பகோணத்திற்கு ஒருமுறை யாவரும் சென்று தியாகராச செட்டியாரைக் கண்டுபேசி இருந்துவிட்டு வந்தோம். அவரும் சில முறை பட்டீச்சுரத்திற்கு வந்து சென்றார். ஒரு நாள் சத்திமுற்றம் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். அங்கே அம்பிகை தவம்புரிந்து இறைவன் பிரசன்னமானபொழுது தழுவிக்கொண்டதாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அங்ஙனம் தழுவிய திருக்கோலத்தில் ஒரு விக்கிரகம் அங்கே இருக்கின்றது. அதையும் தரிசித்தோம். அங்கே ஆலயவாசலில் உச்சிஷ்ட கணபதியின் கோயில் ஒன்று இருக்கிறது. அந்த மூர்த்தியை உபாஸனை செய்தால் நல்ல வாக்கு உண்டாகுமென்று பெரியோர்கள் கூறக் கேட்டிருந்தேன். ஆதலால் மனத்தில் அந்நினைவுடனே அப்பெருமானை வணங்கினேன்.

கோட்டூரில் தீபாவளி

புரட்டாசி மாதம் போய் ஐப்பசி மாதம் வந்தது. தீபாவளி அணுகிற்று. என் தாய், தந்தையரையும் குழந்தையாக இருந்த தம்பியையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. தீபாவளிக்குப் போய் என் பெற்றோர்களோடு இருந்து வரலாமென்று எண்ணிப் பிள்ளையவர்களிடம் என் கருத்தை வெளியிட்டேன்.

“அப்படியே செய்யலாம்” என்று அவர் அனுமதி அளித்தார். புறப்படும்பொழுது இரண்டு பட்டுக்கரை அங்கவஸ்திரங்களை வருவித்து என்னிடம் அளித்து, “தீபாவளியில் உபயோகப்படுத்திக்கொள்ளும். சௌக்கியமாகத் தீபாவளி ஸ்நானம் செய்து சிலநாள் தங்கிவிட்டு அப்படியே மாயூரத்திற்கு வந்துவிடலாம். நான் தீபாவளிக்கு அங்கே போவதாக எண்ணியிருக்கிறேன்” என்றார்.

அவருடைய அன்பை அறிந்து நான் வியந்தேன்; அந்த அங்கவஸ்திரங்களைப் பணிவுடன் ஏற்று விடைபெற்றுப் புறப்பட்டேன்.

கோட்டூரென்பது, பாடல் பெற்ற சிவஸ்தலமும் ஹரதத்த சிவாசாரியரவர்களுடைய அவதார ஸ்தானமுமாகிய கஞ்சனூருக்குக் கிழக்கே கார் காத்த வேளாளர்களுக்கு ஆசிரியர்களாகிய சோழியப் பிராமணர்கள் வசிக்கும் துகிலிக்கு மேற்கே சமீபத்தில் உள்ளது. அதன் பெயர் கோடையென்று செய்யுட்களில் வழங்கும்.

கஞ்சனூர், துகிலி, மணலூர் முதலிய இடங்களில் மாறி மாறித் தங்கிவந்த என் தந்தையார் அப்போது கோட்டூரில் என் சிறிய தாயார் (தாயாரின் தங்கை) வீட்டில் இருந்தார்; துலா மாதமாதலால் காவிரி ஸ்நானம் செய்ய எண்ணி என் பெற்றோர்கள் அங்கே இருந்தனர். சூரியமூலையிலிருந்து என் பாட்டனாரும் வந்திருந்தார். கோட்டூரில் காவிரி உத்தரவாகினியாக ஓடுகிறது. அதனால் பலர் அங்கே ஸ்நானம் செய்வதற்கு வருவார்கள். நான் அங்கே போனது பலபேரையும் ஒருங்கே பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது யாவரும் என்னுடைய க்ஷேம சமாசாரத்தையும் கல்வியபிவிருத்தியையும் பற்றி விசாரித்தார்கள். நான் கொண்டுபோயிருந்த அங்கவஸ்திரங்களைப் பார்த்த என் தந்தையார் மிக்க திருப்தியை அடைந்தார். என் தாயாருக்கோ அவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. “என்னவோ. பகவான்தான் காப்பாற்றவேணும். எங்களால் ஒன்றும் முடியாதென்று தெரிந்து இப்படி ஒரு நல்லவரைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது, அவர் கிருபைதான்” என்று அவர் சொல்லி உளம் பூரித்தார்.

தீபாவளி ஸ்நானம் செய்தேன். என் ஆசிரியர் அன்புடன் அளித்த அங்கவஸ்திரங்களைத் தரித்துக்கொண்டேன். அப்போது எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி உண்டாயிற்று.

ஒரு கனவான்

கோட்டூரில் இருந்தபோது பல பேர்கள் என்னைப் பார்த்துப் பிள்ளையவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அநேகமாக யாவரும் அவரைப் பாராட்டினார்கள் உலகத்தில் எல்லோரும் ஒரேவிதமான அபிப்பிராயமுடையவர்களாக இருக்கிறார்களா? நல்லதை நல்லதென்று சொல்பவர்களுக்கு நடுவில் அதைக் கெட்டதென்று சொல்பவர்களும் இருந்து வருகிறார்கள். ஒருநாள் என் தகப்பனாருக்குத் தெரிந்த ஒருவர் வந்திருந்தார். நெடுநேரம் பேசினார். “உங்கள் பிள்ளை என்ன செய்கிறான்?” என்று விசாரித்தார். என் தந்தையார், “தமிழ் படிக்கிறான்” என்று சொன்னார். அவர் ஏதோ ஆச்சரியத்தைக் கேட்டவரைப் போலவே திடுக்கிட்டு, “என்ன? தமிழா!” என்று கூறினார். அதோடு அவர் நிற்கவில்லை. “தமிழையா படிக்கிறான்! இங்கிலீஷ் படிக்கக் கூடாதா? ஸம்ஸ்கிருதம் படிக்கலாமே? இங்கிலீஷ் படித்தால் இகத்துக்கு லாபம்; ஸம்ஸ்கிருதம் படித்தால் பரத்துக்கு லாபம். தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை” என்று அவர் மேலும் தம் கருத்தை விளக்கினபோது எனக்குக் தூக்கி வாரிப் போட்டது.

அவ்வளவு அருமையான அபிப்பிராயத்தைச் சிறிதேனும் யோசனையில்லாமல் சொல்ல முன்வந்த அந்தப் பேர் வழி யாரென்று அறிய எனக்கு விருப்பம் உண்டாயிற்று. அவர் போனவுடன் நான் விசாரித்தேன். பாவம்! அவருக்கு இங்கிலீஷூம் தெரியாது; ஸம்ஸ்கிருதமும் தெரியாது; தமிழ் தெரியவே தெரியாது ஆகவே அவர் கருத்துப்படி அவரே இகபர சுகத்துக்கு வேண்டியதைத் தேடவில்லையென்று தெரிய வந்தது ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ!’ என்று யோசனை இல்லாமலும், பிறர் மனம் புண்படுமே என்பதைத் தெரிந்துகொள்ளாமலும், தமக்கு இந்த அபிப்பிராயத்தைக் கூற என்ன தகுதி இருக்கிறதென்று ஆலோசியாமலும் வாய்க்கு வந்ததை, “என் அபிப்பிராயம் இது” என்று சொல்லும் கனவான்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்குக் கோட்டூரில் கண்ட மனிதர் ஞாபகம் வரும்.

ஜ்வர நோய்

கோட்டூரில் ஒன்றரை மாதம் இருந்தேன். தீபாவளியான சில நாளில் எனக்குக் கடுமையான ஜ்வரம் வந்துவிட்டது. மிகவும் சிரமப்பட்டேன். அவ்வூரிலிருந்த சக்கரபாணி என்ற ஒரு பரிகாரி வைத்தியம் பார்த்தார். “கண்காணாமல் சௌக்கியமாக இருந்து வந்த குழந்தை இங்கே வந்தவுடன் நம்முடைய துரதிர்ஷ்டம் அவனையும் பிடித்துக்கொண்டது” என்று என் தாயார் அழுதார்.

தீபாவளிக்குப் பின் நான் மாயூரம் செல்லாமையால் என் ஆசிரியர் மிகவும் கவலைப்பட்டுக் கோட்டூருக்கு மனுஷ்யர்களை அனுப்பி விசாரித்து வரச்சொன்னார். நான் நோய்வாய்ப்பட்டது தெரிந்து பெரிதும் வருந்தினார். அடிக்கடி அவரிடமிருந்து யாரேனும் வந்து என் தேகஸ்திதியைப்பற்றி அறிந்துகொண்டு சென்றனர். “அன்பென்றால் இதுவல்லவா அன்பு!” என்று ஊரினர் ஆச்சரியப்பட்டனர்.