உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/40 பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்‌—40

பட்டீச்சுரத்திற்‌ கேட்ட பாடம்‌

ரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக்கணக்காக ரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதைவிடச் சில பாடல் செய்தாலும் பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது.

“சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற் பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று தொடங்கும் பாட்டு ஒன்றே அவரிடத்தில் இயல்பாக உள்ள கவித்துவத்தைத் தெளிவாக வெளியிடுகிறது. பனங்கிழங்கு பிளந்தாற் போன்ற கூரிய வாயையுடைய நாரையே என்று நாரையை அவர் அழைக்கிறார். இந்த உவமை பாண்டிய மன்னனது உள்ளத்தைக் கவர்ந்ததாம். ஆடையின்றி வாடையினால் மெலிந்து கையினார் உடம்பைப் பொத்திக்கொண்டு கிடக்கும் தம் நிலையை அந்த வித்துவான் எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார். தாம் படுகின்ற கஷ்டம் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தம் மனைவி தமது வீட்டிற்படும் துன்பங்களை நினைந்து வாடுகிறார். அந்த அருமையான பாடலை இயற்றினவர் இந்த ஊரிலேதான் வாழ்ந்து வந்தார்” என்று என் ஆசிரியர் பட்டீச்சுரத்தை அடைந்தவுடன் கூறினார்.

சத்திமுற்றம்

“இது பட்டீச்சுரமல்லவோ?” என்று நான் கேட்டேன்.

“ஆம்; அதோ தெரிகிறதே அதுதான் சத்திமுற்றம் கோயில்; பட்டீச்சுரமும் சத்திமுற்றமும் நெருங்கியிருக்கின்றன. பட்டீச்சுரத்தின் வடக்கு வீதியே சத்திமுற்றத்தின் தெற்கு வீதியாக இருக்கிறது.”

“அந்தப் புலவருடைய பரம்பரையினர் இப்போது இருக்கிறார்களா?”

“இருக்கிறார்கள். ஒருவர் தமிழறிவுள்ளவராக இருக்கிறார். அவரை நீரும் பார்க்கலாம்.”

பிள்ளையவர்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அந்த இடத்தைப்பற்றிய சரித்திரச் செய்திகளையும் ஸ்தலமானால் அதன் சம்பந்தமான புராண வரலாறுகளையும் உடனிருப்பவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். ஸ்தல வரலாறுகளைத் தெரிந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது தாம் இயற்றும் நூல்களில் அமைத்துக்கொள்ளும் இயல்புடைய அவர் தமிழ்நாட்டு ஸ்தலங்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்திருந்தார்.

அரண்மனைச் சுவர்

பட்டீச்சுரத்தில் நாங்கள் புகுவதற்கு முன், ஓரிடத்தில் மிகவும் உயரமாக இடிந்த கட்டிடம் ஒன்றைக் கண்டோம்; இரண்டு சுவர்கள் கூடிய மூலையாக அது தோற்றியது; அதன் உயரம் ஒரு பனைமரத்தின் அளவுக்குமேல் இருந்தது. பின்பு கவனித்ததில் பல படைகளையுடைய மதிலின் சிதைந்த பகுதியாக இருக்கலாமென்று எண்ணினோம்.

“இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கட்டிடம் இருத்தற்குக் காரணம் என்ன?” என்று அதைப்பற்றி என் ஆசிரியரைக் கேட்டேன்.

“பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஒன்றாகிய சோழன் மாளிகை என்பது இது. இந்த இடத்திலே சோழ அரசர்களுக்குரிய அரண்மனை முன்பு இருந்தது என்றும், இந்த இடிந்த கட்டிடம் அரண்மனைச் சுவர் என்றும் இங்குள்ளவர்கள் சொல்வதுண்டு.”

பழையாறை

பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பழைய சரித்திரத்தை விளக்கும் சின்னங்கள் நிரம்பியிருக்கின்றன. நான் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்த காலங்களில் தெரிந்துகொண்ட செய்திகளையன்றி அப்பால் இலக்கியங்களாலும் கேள்வியாலும் சிலாசாஸனங்களாலும் தெரிந்துகொண்ட விஷயங்கள் பல. சோழ அரசர்கள் தமக்குரிய இராசதானியாகக்கொண்டிருந்த பழையாறை என்னும் நகரத்தின் பல பகுதிகளே இப்போது தனித்தனி ஊர்களாக உள்ளன. அந்தப் பழைய நகரத்தைச் சேக்கிழார் தம் பெரியபுராணத்தில்,

“பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை”

என்று பாராட்டுகிறார். இப்போது பட்டீச்சுரத்திற்கு அருகிலே கீழைப்பழையாறை என்னும் ஓர் ஊர்தான் அப்பழம் பெயரைக் காப்பாற்றி வருகிறது. சரித்திர விசேஷங்களால் பெருமைபெற்ற அவ்விடங்கள் பிறகு தல விசேஷங்களால் ஜனங்களுடைய அன்புக்கு உரியனவாக இருந்தன. இப்போது அந்த மதிப்பும் குறைந்துவிட்டது.

நாங்கள் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் தங்கினோம். அவர் அந்த ஊரில் ஒரு ஜமீன்தாரைப்போலவே வாழ்ந்து வந்தார். பிள்ளையவர்களை அவர் மிக்க அன்போடு உபசாரம் செய்து பாதுகாத்துவந்தார். அக்கிரகாரத்தில் அப்பாத்துரை ஐயர் என்பவர் வீட்டில் நான் ஆகாரம் செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

விலகிய நந்தி

பட்டீச்சுரம் சென்ற முதல்நாள் மாலையில் பிள்ளையவர்கள் வெளியே உலாத்திவரப் புறப்பட்டார். நான் உடன் சென்றேன். அவ்வூருக்கு அருகிலுள்ள திருமலைராயனாற்றிற்கு அழைத்துச் சென்றார். போகும்போது பட்டீச்சுர ஆலயத்தின் வழியே சென்றோம். அவ்வாலயத்தில் நந்திதேவர் சந்நிதியைவிட்டு மிக விலகியிருப்பதைக் கண்டேன். நந்தனார் சரித்திரத்தைப் படித்து ஊறிய எனக்கு அவர் சிவபெருமானைத் தரிசிக்கும் பொருட்டுத் திருப்புன்கூரில் நந்தி விலகினாரென்ற செய்தி நினைவுக்கு வந்தது. “இங்கே எந்த அன்பருக்காக விலகினாரோ!” என்று எண்ணியபோது என் சந்தேகத்தை என் முகக் குறிப்பினால் உணர்ந்த ஆசிரியர்’ “திருச்சத்திமுற்றத்திலிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமான் அருளிய முத்துப்பந்தரின் கீழே இவ்வழியாகத் தரிசனத்துக்கு எழுந்தருளினார். அவர் முத்துப்பந்தரின் கீழேவரும் கோலத்தைத் தாம் பார்த்து மகிழ்வதற்காக இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனுபுரீசுவரர் நந்தியை விலகும்படி கட்டளையிட்டனராம். அதனால்தான் விலகியிருக்கிறார்” என்றார்.

மேலைப் பழையாறை

அப்பால் திருமலைராயனாற்றிற்கு நாங்கள் சென்று அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டோம். அந்த ஆற்றிற்குத் தெற்கே மேலைப்பழையாறை என்னும் ஊர் இருக்கிறது. அதன்பெரும் பகுதி ஆறுமுகத்தா பிள்ளைக்குச் சொந்தமாக இருந்தது. இயற்கை வளங்கள் நிறைந்த அவ்வூரில் தென்னை, மா, பலா, கமுகு முதலிய மரங்கள் அடர்ந்த ஒரு தோட்டத்தின் நடுவில் ஆறுமுகத்தா பிள்ளை அழகிய கட்டிடம் ஒன்றைக் கட்டியிருந்தார். வெயில் வேளைகளில் அங்கே சென்று தங்கினால் வெயிலின் வெம்மை சிறிதேனும் தெரியாது. பிள்ளையவர்கள் அடிக்கடி அவ்விடத்திற்சென்று தங்கிப் பாடம் சொல்லுவதனால் பிற்பகலில் ஆறுமுகத்தாபிள்ளை நல்ல பழங்களையும் நீரையும் கொணர்ந்து அளிப்பார். அங்கே மிகவும் இனிமையாகப் பொழுதுபோகும்.

ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு

ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக இருப்பவர்கள் சனி, ஞாயிறுகளில் வந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டு செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் யாவரும் ஆறுமுகத்தாபிள்ளை வீட்டிலேயே உணவுகொள்வார்கள். தம்முடைய பெருமையை யாவரும் உணர வேண்டுமென்பதற்காகவே விசேஷமான விருந்துணவை அளிப்பார். திருவாவடுதுறை மடத்தில் நன்கு பழகினவராதலின் உணவு வகைகளிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் அங்கேயுள்ள சில அமைப்புக்களைத் தம் வீட்டிலும் அமைத்துக்காட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம்.

பிள்ளையவர்களிடத்திலேதான் ஆறுமுகத்தா பிள்ளை பணிவாக நடந்துகொள்வார். மற்றவர்களை அவர் மதிக்க மாட்டார். யாவரும் அவருடைய விருப்பத்தின்படியே நடக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மிக்க கோபம் வந்துவிடும்; அந்தக்கோபத்தால் அவர் சில ஏழை ஜனங்களைக் கடுமையாகவும் தண்டிப்பார்.

நாகைப் புராணம்

நான் கையில் கொண்டுபோயிருந்த பிரபந்தங்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சில தினங்களில் பாடங் கேட்டு முடித்தேன். மேலே பாடம் கேட்பதற்கு என்னிடம் வேறு புஸ்தகம் ஒன்றும் இல்லை. இந்த விஷயத்தை ஆசிரியரிடம் தெரிவித்தேன்.

“தம்பியிடம் புஸ்தகங்கள் இருக்கின்றன. ஏதாவது வாங்கிப் படிக்கலாம். முதலில் திருநாகைக் காரோணப் புராணம் படியும்” என்று அவர் கூறி அந்நூலை ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து வாங்கி அளித்தார்.

அதுகாறும் பிள்ளையவர்கள் இயற்றிய புராணம் ஒன்றையும் நான் பாடங் கேளாதவனாதலால் அப்புராணத்தைக் கேட்பதில் எனக்கும் ஆவல் இருந்தது. அரியிலூரில் சடகோபையங்கார் வீட்டில் அந்தப் புஸ்தகத்தைப் பார்த்து வியந்ததும் பிள்ளையவர்களிடம் வந்தபோது அந்நூலிற் சில பாடல்களுக்கு அவர் உரை கூறியதும் என் மனத்தில் இருந்தன. சில வாரங்கள் தொடர்ந்து கேட்டு வரலாம் என்ற நினைவும் அந்த நூலினிடத்தில் எனக்கு விருப்பம் உண்டானதற்கு ஒரு காரணம்.

அப்புராணம் பாடம் கேட்கத் தொடங்கினேன். விடியற்காலையிலேயே பாடம் ஆரம்பமாகிவிடும். எட்டு மணிவரையில் பாடம் கேட்பேன். பிறகு அக்கிரகாரம் சென்று பழையது சாப்பிட்டு வருவேன். வந்து மீட்டும் பாடங் கேட்கத் தொடங்குவேன். பத்து அல்லது பதினொரு மணிவரையில் பாடம் நடைபெறும். மத்தியான்னம் போஜனத்திற்குப் பின் பிள்ளையவர்கள் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அவர் எழுந்தவுடன் மறுபடியும் பாடங் கேட்பேன். அநேகமாகப் பிற்பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வருபவர்கள் அவரோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். மாலையில் திருமலைராயனாற்றிற்குச் சென்று திரும்பிவரும்போது அக்கிரகாரத்தின் வழியே வருவோம். நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டுக்குள் சென்று உணவு கொள்வேன். நான் வரும் வரையில் அவ்வீட்டுத் திண்ணையிலே ஆசிரியர் இருப்பார்; அங்கே இருட்டில் அவர் தனியே உட்கார்ந்திருப்பார். வீட்டுக்காரர் சில சமயம் விளக்கைக்கொணர்ந்து அங்கே வைப்பார். நான் விரைவில் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வருவேன். ஆசிரியர் என்னை அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளை வீட்டுக்குச் செல்வார். உடனே பாடம் நடைபெறும்.

இவ்வாறு இடைவிடாமல் பாடங் கேட்டு வந்தமையால் பட்டீச்சுரத்தில் இருந்தபோது நான் கேட்ட செய்யுட்கள் பல. நாகைப் புராணத்தில் முதலில் தினந்தோறும் ஐம்பது செய்யுட்கள் கேட்பேன்; இரண்டு வாரங்களுக்குப்பின் நூறுபாடல்கள் முதல் இருநூறு பாடல்கள் வரையில் கேட்கலானேன். பாடங் கேட்பதில் எனக்கு ஆவல்; பாடஞ் சொல்லுவதில் அவருக்குத் திருப்தி. ஆதலின் தடையில்லாமலே பாடம் வேகமாக நடைபெற்றது. இந்த வேகத்தில் பல செய்யுட்களின் பொருள் என் மனத்தில் நன்றாகப் பதியவில்லை. இதனை ஆசிரியர் அறிந்து, “இவ்வளவு வேகமாகப் படிக்கவேண்டாம். இனிமேல் ஒவ்வொரு செய்யுளுக்கும் சுருக்கம் சொல்லும்” என்றார். நான் அங்ஙனமே சொல்லலானேன். அப்பழக்கம் பலவித அனுகூலங்களை எனக்கு உண்டாக்கியது. செய்யுட் பொருளைத் தெளிவாக நான் அறிந்துகொண்டதோடு ஒரு கருத்தைப் பிழையின்றித் தக்கசொற்களை அமைத்துச் சொல்லும் பழக்கத்தையும் அடைந்தேன்.

அங்கங்கே அவர் பல தமிழிலக்கண, இலக்கியச் செய்திகளைச் சொல்லுவார்; காப்பியச் செய்திகளையும் எடுத்துக்காட்டுவார்.

அப்புராணம் முற்றுப் பெற்றது; எனக்குப் பூரணமான திருப்தி உண்டாகாமையால் இரண்டாவது முறையும் கேட்க விரும்பினேன். ஆசிரியர் அவ்வாறே மறுமுறையும் அதைப் பாடஞ் சொன்னார். முதன்முறை அறிந்துகொள்ளாத பல விஷயங்கள் அப்போது எனக்கு விளங்கின.

மாயூரப் புராணம் ஆரம்பம்

நாகைப் புராணம் முடிந்தவுடன் அவர் மாயூரப் புராணத்தைப் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அதுவும் அவர் இயற்றியதே அப்புராணத்தில் 1894 செய்யுட்கள் இருக்கின்றன. திருநாகைக் காரோணப் புராணமும் மாயூரஸ்தல புராணமும் பிள்ளையவர்களாலேயே சென்னையிலிருந்த அவர் மாணாக்கராகிய சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் என்பவரின் உதவியால் அச்சிடப்பெற்றவை. நாகைப் புராணம் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. பலர் அப்புராணத்தை அடிக்கடி பாராட்டுவார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் சிறந்தது நாகைப் புராணமென்று அவருடைய மாணாக்கர்களும் பிறரும் சொல்லுவார்கள். அத்தகைய புராணத்தை நான் இரண்டு முறை பாடங் கேட்டதில் எனக்கு மிக்க திருப்தி உண்டாயிற்று. தமிழ் நூற் பரப்பை நன்கு உணராமல் இருந்த நான் அப்புராணத்திற் காணப்பட்ட விஷயங்களை அறியுந்தோறும் அளவற்ற இன்பத்தை அடைந்தேன்.

பிள்ளையவர்கள் புராணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து மாயூரப் புராணப்பிரதி ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்து அதைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அப்போது எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. “பட்டீச்சுரத்திற்கு நல்ல வேளையில் வந்தோம். வேகமாகப் பாடம் கேட்கிறோம். நல்ல காவியங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது” என்று எண்ணி மன மகிழ்ந்தேன். “இந்த ஸந்தோஷம் நிரந்தரமானதன்று; பட்டீச்சுரத்திற்கு வந்தவேளை பொல்லாதவேளையென்று கருதும் சமயமும் வரலாம்” என்பதை நான் அப்போது நினைக்கவில்லை.