உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/36 எல்லாம் புதுமை

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—36

எல்லாம் புதுமை

நான்‌ சுப்பிரமணிய தேசிகரது தோற்றத்திலும்‌ பேச்சிலும்‌ ஈடுபட்டு இன்பமயமான எண்ணங்களி ஒன்றியிருந்தபோது தேசிகர்‌ என்னை நோக்கி அன்புடன்‌, இப்படி முன்னே வாரும்‌ என்று அழைத்தார்‌. நான் அச்சத்துடன்‌ சிறிது முன்னே நகர்ந்தேன்‌. சந்நிதானம் உம்மைப்‌ பரீக்ஷை செய்யவும்‌ கூடும்‌ என்று ஆசிரியர்‌ மாயூரத்திலிருந்து புறப்படும்போது சொன்னது ஞாபகத்திற்கு வத்தது. "சிறந்த அறிவாளியும்‌ உபகாரியும்‌ எல்லா வகையிலும்‌ பெருமதிப்புடையவருமாகிய சுப்பிரமணிய தேசிகர்

நம்மை பரிக்ஷித்தால்‌ நாம்‌ தத்கவாறு பதிலுரைப்போம்" என்ற தைரியம்‌ இருந்தது; அவருடைய மனத்தில்‌ நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ண வேண்டுமென்ற ஆவலும்‌ இருந்தது. அதனால்‌ தேசிகர்‌ என்னை முன்னுக்கு வரச்சொன்ன போது உண்மையில் நான் முன்னுக்கு வந்ததாகவே எண்ணினேன்‌.

சோதனையில் வெற்றி

ஆனால், முன்பழக்கமில்லாத இடம்; பெரிய வித்துவான்கள் கூடியுள்ள சபை; என் ஆசிரியரே பயபக்தியுடன் நடந்துகொள்ளும் கல்வி நிறைந்த பெரியாருடைய முன்னிலை; அவ்விடத்தில் வாயைத் திறப்பதற்கே அச்சமாக இருந்தது. ஆவலும் அச்சமும் போராடின.

“நீர் படித்த நூலிலிருந்து ஏதாவதொரு பாடல் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.

நான் அதை எதிர்பார்த்திருந்தேன். “மிகவும் கடினமான யமக அந்தாதிகளிலிருந்தும் திரிபந்தாதிகளிலிருந்தும் செய்யுட்களைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் சிரமப்பட்டுப் படித்து வருவது தெரிய வரும்” என்று முன்பே நினைத்திருந்தேன். பிள்ளையவர்கள் இயற்றிய திருவாவடுதுறை யமக அந்தாதியிலிருந்து முதலில் ஒரு பாடல் சொல்ல எண்ணி வாயெடுத்தேன். அதைச் சொல்வதற்குமுன் என் ஆசிரியர் முகத்தைப் பார்த்தேன். அவர் சொல்ல வேண்டும் என்பதைத் தம் பார்வையால் குறிப்பித்தார்.

குரல் ஏழவில்லை; உடம்பு நடுங்கியது; வேர்வை உண்டாயிற்று. ஆனாலும் நான் சோர்வடையவில்லை, மெல்லத் திருவாவடுதுறை யமக அந்தாதி (துறைசையந்தாதி)யிலிருந்து, ‘அரச வசனத்தை’ என்ற செய்யுளைச் சொன்னேன். கட்டளைக் கலித்துறையாதலால் நான் பைரவி ராகத்தில் அதைச் சொல்லி நிறுத்தினேன்.

“பொருள் சொல்ல வருமா?” என்று தேசிகர் கேட்டார்.

“சொல்வார்” என்று என் ஆசிரியர் விடையளித்தார். அந்த விடை தேசிகர் வினாவுக்கு விடையாக வந்ததன்று; நான் பொருள் சொல்லவேண்டுமென்று தாம் விரும்புவதையே அந்த விடையால் அவர் புலப்படுத்தினார். நான் அக்குறிப்பை உணர்ந்தேன்.

அர்த்தம் சொல்லி வரும்போது என் நாக்குச் சிறிது தழுதழுத்தது. “பயப்பட வேண்டாம்; தைரியமாகச் சொல்லும்” என்று பிள்ளையவர்கள் எனக்கு ஊக்கமளித்தார். நான் சிறிது சிறிதாக அச்சத்தை உதறிவிட்டு எனக்கு இயல்பான முறையில் சொல்லத் தொடங்கினேன். துறைசையந்தாதியில் மேலும் சில செய்யுட்கள் சொன்னேன்.

“இன்னும் பாடல்கள் தெரிந்தால் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.

அப்போது நான் நல்ல தைரியத்தைப் பெற்றேன். நடுக்கம் நீங்கியது. பிள்ளையவர்கள் இயற்றிய திருத்தில்லை யமக அந்தாதியிவிருந்து, “அம்பலவா வம்பலவா” என்ற பாடலைச் சொன்னபோது முன்பு சொன்னவற்றைவிடத் தெளிவாகவும் சொன்னேன். பைரவி ராகத்தின் மூர்ச்சைகளை ஒருவிதமாகப் புலப்படுத்தினேன்.

தேசிகர் முகத்தில் புன்முறுவல் அரும்பியது; அவர் சிரம் சிறிதே அசைந்து என் உள்ளத்தில் உவகையை உண்டாக்கியது. அச் செய்யுளுக்கும் பொருள் சொன்னேன். மேலும் எந்தச் செய்யுளைச் சொல்லலாம் என்று யோசித்தபோது சுப்பிரமணியதேசிகர் திரிகூட ராசப்பக் கவிராயர் பரம்பரையில் தோன்றியவரென்று என் ஆசிரியர் கூறியது நினைவுக்கு வரவே, திருக்குற்றால யமக அந்தாதியிலிருந்து ஒரு செய்யுளைச் சொல்லத் தொடங்கினேன். “புவிதந்த வாரணன்” என்ற பாடலைச் சொன்னேன்.

தேசிகர் அதைக் கவனமாகக் கேட்டார். அவரது பரம்பரைச் சொத்தல்லவா அது? நான் அச்செய்யுளின் அடிகளை இருமுறை, மும்முறை சொல்லி முடித்துப் பொருளும் சொன்னேன்.

“இன்னும் இந்நூலிலிருந்து ஏதாவது சொல்லும்” என்று தேசிகர் கூறினபோது, “நான் எதிர்பார்த்தது பலித்தது” என்ற உற்சாகம் எனக்கு ஏற்பட்டது. மேலும் எனக்குத் தெரிந்த செய்யுட்களைச் சொன்னேன்.

“இது திருக்குற்றால யமக அந்தாதி அல்லவா? இந்தப் பக்கத்தில் இது வழங்குவதில்லையே. இவருக்கு எப்படிக் கிடைத்தது?” என்று சுப்பிரமணிய தேசிகர் கேட்டார்.

பிள்ளையவர்கள், “நெடுநாட்களாக இந்த நூலையும் திருக்குற்றாலப் புராணத்தையும் படிக்க வேண்டுமென்ற அவா அடியேனுக்கு இருந்தது. சண்பகக்குற்றாலக் கவிராயர் அவற்றை வருவித்துக் கொடுத்தார். நான் அந்தாதியை முதலிற் படித்துப் பொருள் வரையறை செய்துகொண்டு இவருக்கும் பாடம் சொன்னேன். குற்றாலப்புராணத்தையும் படித்து வருகிறேன்” என்றார்.

“அப்படியா!” என்று சொல்லி மேலும் ஏதாவது சொல்ல வேண்டும் என்ற குறிப்போடு என்னைத் தேசிகர் பார்த்தார். நான் திருப்புகலூர் அந்தாதியிலிருந்து சில பாடல்களைச் சொன்னேன். அவருடைய முகக்குறிப்பிலே திருப்தியையும் ஆதரவையும் கண்டேனாதலால் நான் வர வரத் தைரியத்தை அடைந்து பாடல்களையும் அவற்றின் பொருளையும் சொல்லி வந்தேன்.

‘நன்றாகப் பாடல் சொல்லுகிறார். நல்ல சாரீரம் இருக்கிறது; சங்கீத ஞானமும் இருக்கிறது. முன்னுக்கு வருவாரென்று தோற்றுகிறது. தங்களிடம் மாணாக்கராக இருக்கும்போது இவர் நல்ல நிலையை அடைவதற்கு என்ன சந்தேகம்?” என்று தேசிகர் கூறினார்.

“சந்நிதானத்தின் முன்பு இவர் வந்தபோதே இவரது நிலை உயர்ந்துவிட்டதென்று அடியேன் தீர்மானித்துக்கொண்டேன். சந்நிதானத்தின் திருவுள்ளத்தில் இவரிடம் கருணை உண்டான பிறகு இவருக்கு என்ன குறை?” என்று பிள்ளையவர்கள் கூறினர்.

தேசிகர் கூறிய வார்த்தைகள் என் செவி நிரம்பப் புகுந்து என் உள்ளத்தில் பூரணமான இன்பத்தை விளைவித்தன. “நாம் சோதனையில் வெற்றி பெற்றோம்” என்ற எண்ணம் அந்த இன்பத்துக்கு ஆதாரமாக இருந்தது.

அதன்பிறகு வேறு விஷயங்களைப்பற்றிப் பிள்ளையவர்களும் ஆதீனத் தலைவரவர்களும் பேசி வந்தனர். அப்பால், “நேரமாகிவிட்டது; தங்கள் பூஜையை முடித்துக்கொண்டு சபாபதி தரிசனத்திற்கு வரவேண்டும்” என்று தேசிகர் கூறவே, அப்புலவர்பிரான் விடைபெற்று எழுந்து ஸ்நானம் செய்யும் பொருட்டு அங்குள்ள தெற்குக் குளப்புரைக்கு வந்தார். நானும் பின் தொடர்ந்தேன். சபாபதி பூஜை என்பது மடத்தில் தினந்தோறும் ஆதீனகர்த்தரவர்கள் செய்யும் பூஜை.

நான் கண்ட காட்சிகள்

நான் நடந்து செல்லும்போது என் கண்கள் ஒரு நிலையில் இல்லை. அங்கங்கே உள்ள காட்சிகள் அவற்றை இழுத்துச் சென்றன. தூய்மை, தவக்கோலம், சிவமணங்கமழும் அமைப்புக்கள் எல்லாம் அங்கே விளங்கின. மடத்தின் தெற்கு வாயிலுக்கு எதிரே ஓர் அழகிய குளம் உண்டு. அதன் கரையில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அதையே குளப்புரை என்று வழங்குவார்கள். புரை என்பதற்கு வீடு என்பது பொருள். மலையாளத்தில் இவ்வாறு சொல்வது வழக்கம்.

குளப்புரைக்கு நாங்கள் சென்றோம். அங்கே பிள்ளையவர்களுக்கு வெந்நீர் போடப்பட்டிருந்தது. அவர்கள் அங்கே செல்லும்போது பெரிய தம்பிரான்களும் குட்டித் தம்பிரான்களும் மடத்து உத்தியோகஸ்தர்களும் ஓதுவார்களும் அவரைச் சுற்றிக்கொண்டு க்ஷேம சமாசாரம் விசாரித்தார்கள். பலர், “இனிமேல் இங்கேதானே வாசம்?” என்று வினவினார்கள். அதற்கு விடை கிடைப்பதற்கு முன்பே சில தம்பிரான்கள், “ஐயாவிடம் பாடங் கேட்கவேண்டுமென்று நாங்களெல்லாம் காத்திருக்கிறோம்; ஐயா இங்கே வந்துவிட்டது எங்கள் அதிர்ஷ்டந்தான்” என்று சொல்லிக் குதூகலம் அடைந்தார்கள்.

தம்பிரான்களுடைய தோற்றத்தைக் கண்டு நான் விம்மிதமடைந்தேன். “இவ்வளவு நீண்ட சடை இவர்களுக்கு எப்படி வந்தது?” என்று பிரமித்தேன். அவர்கள் அணிந்திருந்த உடையின் அழகும் சடையின்மேல் போட்டிருந்த வஸ்திரத்தின் அமைப்பும் காதில் உள்ள வேடமும் ருத்திராக்ஷமும் விபூதி அணிந்த பளபளப்பான மேனியின் வனப்பும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. அவர்கள் பூண்டிருந்த உடையும் சிவ சின்னங்களும் அலங்காரமான ஆடைகளையும் ஆபரணங்களையும் விஞ்சி நின்றன.

பிள்ளையவர்கள் ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜைக்குச் சென்றார்கள். குளப்புரைக்கு வடக்கே பூஜை செய்வதற்காகவே ஓர் இடம் உண்டு. பூஜை மடம் என்று அதைச் சொல்வார்கள். குளத்தின் மேல் புறத்திலும் பூஜை மடம் உண்டு அங்கே பெரிய தம்பிரான்களிற் சிலர் மிக்க நியமத்தோடு மௌனமாகப் பூஜை செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தவசிப் பிள்ளைகள் ஈர ஆடையை உடுத்தபடியே பூஜைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தனர். மல்லிகை, முல்லை முதலிய மலர்களையும் வில்வம் முதலிய பத்திரங்களையும் தனித்தனியே வகைப்படுத்தி வெள்ளித் தட்டுகளில் வைத்து உதவினர்.

பூஜை செய்த தம்பிரான்கள் புறப்பட்டனர். சிலர் ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜை செய்ய வந்தனர். அங்கே நிருமாலியங்கள் கால்படாத தொட்டி ஒன்றில் குவிக்கப்பட்டிருந்தன.

என் தந்தையாரும் பாட்டனாரும் சிவபூஜை செய்வதை நான் பார்த்துள்ளேன். அதனால் சிவபூஜையென்றால் என் மனத்தே ஒரு பக்தியும் சாந்த உணர்ச்சியும் உண்டாகும். அவர்கள் பூஜையில் இவ்வளவு சாதனங்கள் இல்லை; சாதகர்களும் இல்லை; இங்கே பூஜைமடம் முழுவதும் பூஜை செய்பவர்களது கூட்டமாக இருந்தது. பூஜைக்குரிய திரவியங்கள் குறைவின்றி இருந்தன. அந்த இடம் முழுவதும் சிவபூஜைக் காட்சியால் நிரம்பியிருந்தது.

சைவ ஆதீனமாகிய அவ்விடத்தை, ‘சிவ ராஜதானி’யென்றுகொண்டாடுவர். அங்கே ஆதீனகர்த்தராக இருப்போர் சைவத் துறவிகளுக்கு அரசர். அந்த அரசின் ஆட்சியின்கீழ் வாழும் தம்பிரான்கள் சைவக் கோலம்பூண்ட ஞான வீரர்கள். அவர்களுக்குச் சிவவூஜை செய்வதும் குரு கைங்கரியம் செய்வதும் நல்ல நூல்களைப் படிப்பதுமே உத்தியோகங்கள். தம்பிரான்கள் தம் கடமையை நன்கு உணர்ந்து அந்தச் சிவராஜதானியில் ஒழுங்காகப் பூஜை முதலியவற்றை மிக்க சந்தோஷத்துடன் தவறாமல் செய்து வந்தனர். அவை அவர்கள் நாள்தோறும் செய்யும் வேலைகள். இந்த அமைப்புக்களை நூதனமாகப் பார்த்த எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தன; அமைதியான இன்பத்தை விளைவித்தன. ‘திருவாவடுதுறை, திருவாவடுதுறை’ என்று அடிக்கொருதரம் என் ஆசிரியரும் அவரைப் பார்க்க வருவோரும் சொல்லிப் பாராட்டுவதன் காரணத்தை நான் அப்போது நன்றாக உணர்ந்தேன்.

என் கண்களை அவற்றின் போக்கிலே விட்டுவிட்டு ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து நின்ற என்னிடம் ஒருவர் வந்தார். “ஏன் இங்கே நின்றபடியே இருக்கிறீர்?” என்று அவர் வினவினார். “இக்காட்சிகள் எங்கும் காணாத புதுமையாக இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது எனக்கு வேறிடம் போகவே கால் எழும்பவில்லை” என்றேன்.

“இதுதானா ஆச்சரியம்? நீர் திருவாவடுதுறைக்கு வந்ததே இல்லைபோலிருக்கிறது. மேல்பக்கத்துள்ள அபிஷேகக் கட்டளை மடத்துக்குப் போய்ப் பாரும்; வடக்கு மடத்தைப் பார்த்தால் நீர் மயங்கிவிடுவீர்; அதற்குப் பின்னே உள்ள குளப்புரையிலும் இந்த மாதிரியான காட்சிகளைக் காணலாம். இன்னும் மறைஞான தேசிகர் கோவில், காவிரிப் படித்துறை, நந்தவனங்கள் முதலிய இடங்களைப் பார்த்தால் எவ்வளவு ஆச்சரியப்படுவீரோ தெரியாது” என்று அவர் மிகவும் சாதாரணமாக அடுக்கிக்கொண்டே போனார்.

“ஏது! நாம் பூலோகத்தை விட்டுவிட்டுச் சிவலோகத்தின் ஒரு பகுதிக்கு வந்துவிட்டோமென்று தோற்றுகிறதே” என்று எண்ணும்படி இருந்தது அவர் பேசின பேச்சு.

“இந்த உலகத்தில்தான் இருக்கிறோம். நாமும் ஸ்நானம் செய்யவேண்டும்; போஜனம் செய்யவேண்டும்” என்பதை அப்போது எனக்கு உண்டான சிறிய பசி உணர்த்தியது. “இனிமேல் இங்கேயே இருக்கும் சந்தர்ப்பந்தான் வரப்போகிறதே; அப்போது இவர் சொன்ன அவ்வளவு இடங்களையும் பார்க்காமலா விடப்போகிறோம்?” என்ற சமாதானத்தோடு நான் ஸ்நானம் செய்யச் சென்றேன். பிள்ளையவர்கள் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக்கொண்டு மடத்துக்குச் சபாபதியின் தரிசனத்துக்குச் சென்றார்கள்.

விருந்தும் ஆசீர்வாதமும்

ஸ்நானம் ஆனபிறகு நான் நியமங்களை நிறைவேற்றினேன். என்னை ஒரு பிராமணக் காரியஸ்தர் ஆகாரம் செய்யவேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றார். பிராமணர்கள் உண்பதற்குரிய சத்திரம் அது. அது சிவாலயத்துக்கு முன் உள்ள திருக்குளத்தின் தென்கரையில் அமைந்த விசாலமான கட்டிடம். அவ்விடத்தில் பலர் கூடிப் பேசிக்கொண்டு மகிழ்ச்சியோடிருந்தனர். அவர்கள் பேச்சு வீண்பேச்சாக இல்லை. சிலர் ஸம்ஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தனர். சிலர் சில கீர்த்தனங்களைப் பாடியபடி இருந்தனர். சிலர் தமிழ்ப்பாடல்களைச் சொன்னார்கள் அவர்களுடைய செயல்களால் அங்கிருந்தவர்களில் சிலர் ஸம்ஸ்கிருத வித்துவான்கள், சிலர் சங்கீத வித்துவான்கள், சிலர் தமிழ்ப் பண்டிதர்கள் என்று அறிந்தேன். இடையிடையே அவர்கள் சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டினர்.

நான் அங்கே சென்றவுடன் ஒருவர் என்னை அழைத்தார். “பிள்ளையவர்களுடன் வந்திருக்கிறவரல்லவா நீர்? காலையில் சந்நிதானத்துக்கு முன் பாடல் சொன்னீரே; நாங்களெல்லாம் கேட்டுச் சந்தோஷித்தோம்” என்றார். அருகில் இருந்த சிலர் நகர்ந்து என்னிடம் வந்தார்கள்.“பாட்டுச் சொன்னபோது பைரவி ராகம் சுத்தமாக இருந்தது; அபஸ்வரம் இல்லை. சந்நிதானம் அதைக் கவனித்துச் சந்தோஷித்தது” என்றார் ஒருவர். அவர் சங்கீத வித்துவானாக இருக்க வேண்டுமென்று நான் ஊகித்தேன். “உமக்கு யார் சங்கீத அப்பியாசம் செய்து வைத்தார்கள்?” என்று வேறொருவர் கேட்டார். “என் தகப்பனார்” என்று நான் சொன்னேன். “அப்படிச் சொல்லும், பரம்பரைவித்தை. அதுதான் சக்கை போடுபோடுகிறீர்” என்று அவர் தம் துடையைத் தட்டிக்கொண்டே சொன்னார்.

“நீர் பிள்ளையவர்களிடம் வந்து எவ்வளவு காலம் ஆயிற்று?” என்று மற்றொருவர் கேட்டார்.

“நாலைந்து மாச காலந்தான் ஆயிற்று” என்றேன்.

“நீர் அதிர்ஷ்டசாலிதான். பிள்ளையவர்களுக்கு உம்மிடம் அதிகப் பிரியம் இருப்பதாகத் தெரிகிறது. அதோடு சந்நிதானத்துக்கும் உம்மைப்பற்றித் திருப்தி ஏற்பட்டிருக்கிறது உமக்கு இனிமேல் குறையே இல்லை” என்றார். “வித்தியாதானத்தில் சிறந்த தாதா அந்த மகாகவி அன்னதானத்திலும் சொன்னதானத்திலும் சிறந்த தாதா. இந்த மகா புருஷர் இரண்டு பேருடைய பிரியத்துக்கும் பாத்திரரான உமக்கு இனிமேல் வேறு பாக்கியம் என்ன இருக்கிறது?” என்றார் இன்னுமொருவர். இப்படி ஒவ்வொருவரும் உத்ஸாகத்தோடு பேசத் தொடங்கினர். நான் நாணத்தோடு தலை கவிழ்ந்துகொண்டே கேட்டு வந்தேன்.

இலை போட்டதும் இனிய உணவை உண்டு பசி யாறினேன். பின்பு அங்கிருந்த வித்துவான்கள் என்னைச் சில பாடல்கள் சொல்லும்படி கேட்டனர். நான் சொல்லிக் காட்டினேன். அவர்கள் கேட்டு மகிழ்ந்து ஆசீர்வாதம் செய்தார்கள்.