உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/100 சிந்தாமணி வெளியானது

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—100

சிந்தாமணி வெளியானது

சீவக சிந்தாமணியின் மூலமும் உரையும் பெரும்பாலும் அச்சாகி விட்டன. அக்காலத்தில் அச்சிடப்பெற்ற தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றில் முகவுரை முதலியன காணப்படவில்லை. அவை இருந்தால் படிப்பவர்களுக்கு மிக்க உபயோகமாக இருக்குமென்பதை உணர்ந்த நான் சிந்தாமணிக்கு அங்கமாக அவற்றை எழுதிச் சேர்த்துப் பதிப்பிக்கலாமென்று எண்ணினேன். என்ன என்ன விஷயங்களை முகவுரையில் எழுதவேண்டுமென்பதைப் பற்றி ஆலோசித்தேன். நூலைப் படிப்பதற்குமுன் அதிலுள்ள முக்கியமான விஷயங்களையும் நூலின் பெருமையையும் உரையின் தன்மை முதலியவற்றையும் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளுவது நலமென்பது எனது கருத்து. முதலில் செய்யுட்களின் முதற் குறிப்புக்களை எழுதி ஒருவகையான அகராதி செய்து வைத்துக் கொண்டேன்.

மேற்கோள்கள்

நூலைப் பதிப்பித்து வருகையில் அங்கங்கே உள்ள மேற்கோள்களில் விளங்கியவற்றிற்குரிய ஆகரங்களை அடிக்குறிப்பிற் புலப்படுத்தியிருந்தேன். பிறகு விளங்கிய மேற்கோள்களையும் விளங்காத மேற்கோள்களையும் தனித் தனியே தொகுத்து எழுதி வைத்துக் கொண்டேன். இவற்றையெல்லாம் நூலுக்குப் பின்பு அமைக்கலாமென்று நிச்சயம் செய்தேன். முகவுரைக்கு அடுத்தபடி நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு என்பவற்றை எழுத நிச்சயித்தேன்.

முகவுரைக்கு அடுத்தபடி நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு என்பவற்றை எழுத நிச்சயித்தேன்.

சரித்திரச் சுருக்கம்

சீவக சிந்தாமணி தமிழ் நாட்டில் பழக்கமில்லாத நூலாதலால் அதிலுள்ள கதையை வசன நடையில் எழுதினால் நூலைப் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். மூவாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களையுடைய சிந்தாமணிக்கு வசன மெழுதத் தொடங்கினால், அது சீக்கிரத்தில் முடியக்கூடிய காரியம் அன்று என்றெண்ணி, சீவகன் சரித்திரத்தைச் சுருக்கமாக எழுதி அமைத்து விடலாமென்ற முடிவிற்கு வந்து கதைப்போக்கு விட்டுப் போகாமல் ஒருவகையாக அதை எழுதி முடித்தேன். அதை என்னுடன் பழகும் காலேஜ் ஆசிரியர்களிடமும் ஜைன நண்பர்களிடமும் படித்துக் காட்டினேன். அவர்கள் அதைக் கேட்டு அங்கீகரித்ததோடு சில யோசனைகளையும் சொன்னார்கள். அவற்றுள் உசிதமானவற்றை ஏற்றுக் கொண்டேன்.

நூலாசிரியர் வரலாறு முதலியன

பிறகு நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாற்றை எழுத ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. ஜைனர்கள் தமக்குள்ளே கர்ண பரம்பரையாகச் சொல்லி வந்த செய்திகளை அவர்கள் வாயிலாக அறிந்து அவற்றைக் கோவைப் படுத்தி அதனையும் ஒரு வகையாக எழுதினேன்.

நச்சினார்க்கினியர் வரலாற்றை எழுதுவதற்குத் துணையாக அவர் உரையைப் பாராட்டும் சிறப்புப் பாயிரப் பாடல்கள் இரண்டு இருந்தன அவற்றை ஆதாரமாக வைத்துச் கொண்டு அம்மகோபகாரியின் வரலாற்றை எழுதினேன். அதில் அவர் உரை எழுதிய வேறு நூல்கள் இன்னவென்று குறிப்பிட்டேன். பத்துப் பாட்டுக்கு அவர் உரை எழுதியதைத் தெரிவிக்கும்போது, பத்துப் பாட்டுக்களின் பெயர்களும் அவற்றைப் பாடினோர், பாடப் பெற்றோர் பெயர்களும் இன்ன வென்பதைச் சேர்த்து எழுதினேன். தமிழ் நாட்டினருக்கு அது புதிய செய்தியாக இருக்குமென்பதே என் கருத்து.

பிறகு சீவகன் சரித்திரத்தில் வரும் சிறப்புப் பெயர்களைத் தனியே எடுத்து அகராதியாக அமைத்து அவற்றை விளக்கி எழுதி, “அபிதான விளக்கம்” என்ற தலைப்பின்கீழ்ப் புலப்படுத்தினேன்.

முகவுரை

முகவுரையை எழுதத் தொடங்கி, நூலின் சிறப்பையும் அந்நூலால் இன்ன செய்திகள் தெரிய வருகின்றன வென்பதையும் முதலில் எழுதலானேன்:

‘செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் காப்பியம் ஐந்தனுள் முந்தியதாகிய இந்தச் சீவகசிந்தாமணி யென்பது திருத்தக்க தேவரென்னும் ஜைன முனிவரால் இயற்றப்பட்டது. இது பழைய இலக்கிய உரைகளிலும் இலக்கண உரைகளிலும் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட பிரமாண நூல்களுள் ஒன்று; முற் காலத்து முதல், இடை, கடை என்னும் முச்சங்கத்தும் எழுந்தருளியிருந்து தமிழாராய்ந்த தெய்வப் புலவர்கள் அருளிச் செய்த இலக்கியங்கள் போன்று செந்தமிழ் நடையிற் சிறந்துள்ளது; வடமொழியில் வான்மீகம் போல், எல்லா வருணனைகளும் தன்பால் அமையப் பெற்றிருத்தலின் மகா காவியமென்று கூறப்பட்டிருத்தலன்றி, பிற்காலத்து அதி மதுரமான காப்பியங்கள் இயற்றிய மகா கவிகள் பலர்க்கும் இன்ன இன்னவற்றை இன்ன இன்னவாறு வருணித்துப் பாடுகவென அவ்வான்மீகம் போல வழி காட்டியதும் இந்நூலே என்பர்.’

இவ்வாறு எழுதி விட்டுப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தேன். முதன் முதலாக இந்தத் துறையிலே புகுந்த எனக்கு, ‘நல்ல பெயர் வாங்க வேண்டுமே’ என்ற கவலை மிகுதியாக இருந்தது. அதனோடு ‘பிழையென்று தோற்றும்படி விஷயங்களை எழுதக்கூடாது’ என்ற நினைவும் இருந்தது. ஆதலின் நான் எழுதியதைப் பலமுறை பார்த்துப் பார்த்து அடித்தும் திருத்தியும் ஒழுங்கு படுத்திக் கொண்டேன். பழக்க மில்லாமையால் ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதி முடிக்கும்போது சந்தேகமும் பயமும் உண்டாயின. ‘வான்மீகத்தை இதனோடு ஒப்பிடுவது சரியோ? பிழையோ? ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஏதாவது சொன்னால் என்ன செய்வது? என்றும், ‘பிற்கால நூல்களுக்கு வழிகாட்டி என்று சொல்லுகிறோமே; ஜைன நூலாகிய இதை அப்படிச் சொல்லு வதால் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்மேல் சினம் உண்டாகுமோ?’ என்றும் கலங்கினேன். ‘நம் மனத்திற்குச் சரியென்று தோற்றியதை எழுதி விடுவோம்; பிறகு தவறென்று தெரிந்தால் மாற்றிக் கொள்வோம்’ என்று துணிந்து எழுதலானேன். நூலைப் பற்றிய செய்திகளை எழுதிவிட்டு அதனை ஆராய்ந்து பதிப்பித்தது சம்பந்தமான செய்திகளையும், எனது அன்பிற் சிறந்த ஸ்ரீ சேலம் இராமசாமி முதலியார் சிந்தாமணி பதிப்பிக்கும்படி என்னைத் தூண்டியதையும், பிரதி அளித்ததையும், வேற பல பிரதிகள் கிடைத்ததையும் குறிப்பித்தேன்.

பட்ட கஷ்டங்கள்

அப்பிரதிகளை ஆராய்ந்த போது நான் பட்ட கஷ்டங்களைச் சுருக்கமாக அதில் தெரிவித்தேன்:

”எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டுக் கிலமுற்றிருந்த இந்நூலுரைப் பழைய பிரதிகள் பலவற்றையும் பலகால் ஒப்புநோக்கி இடையறாது பரிசோதனை செய்து வந்த பொழுது, கவிகளின் சுத்த வடிவத்தையும் உரையின் சுத்த வடிவத்தையும் கண்டு பிடித்ததற்கும், உரையினுள் விசேடவுரை இன்னது பொழிப்புரை இன்னது என்று பிரித்தறிதற்கும், மேற்கோள்களின் முதலிறுதிகளைத் தெரிந்து கோடற்கும், பொழிப்புரையை மூலத்தோடு இயைத்துப் பார்த்தற்கும், பிழையைப் பிழையென்று நிச்சயித்துப் பரிகரித்தற்கும், பொருள் கோடற்கும் எடுத்துக்கொண்ட முயற்சியும், அடைந்த வருத்தமும் பல. அப்படி அடைந்தும் சில விடத்துள்ள இசைத் தமிழ் நாடகத் தமிழின் பாகுபாடுகளும், மற்றுஞ் சில பாகமும் நன்றாக விளங்கவில்லை. அதற்குக் காரணம் அவ்விசைத் தமிழ் நாடகத் தமிழ் நூல் முதலியவைகள் இக் காலத்துக் கிடையாமையே!”

என் கொள்கை

ஏட்டுச் சுவடிகளிற் கண்ட பாடங்களின் வேறுபாட்டைக் கண்டு கண்டு என் மனம் புண்ணாகியிருந்தது. இன்னபடி இருந்தால் பொருள் சிறக்குமென்று எனக்குத் தோற்றின இடங்களிலும் பிரதியில் உள்ளதையே பதிப்பித்தேன். என்னுடைய கருத்தையோ, திருத்தத்தையோ சிந்தாமணியில் ஏற்றாமல் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துப் பதிப்பித்தேன். பதிப்பிக்கத் தொடங்கிய நூல் எனக்கு ஒரு தெய்வ விக்கிரகம்போல இருந்தது. அதன் அழுக்கைத் துலக்கிக் கவசமிட்டுத் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஆசை; ‘கை கோணி இருக்கிறது, வேறுவிதமாக அமைக்கலாம்; நகத்தை மாத்திரம் சிறிது திருத்தலாம்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதன் ஒவ்வோரணுவிலும் தெய்விக அம்சம் இருக்கிறதென்றே நம்பினேன். அழுக்கை நீக்கி விளக்குவதற்கும், அங்கத்தையே வேறுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக அறிந்திருந்தேன். இக்கருத்தை, ‘புராதனமான தமிழ் நூல்களும் உரைகளும் பண்டைவடிவம் குன்றாதிருத்தல் வேண்டுமென்பதே எனது நோக்கமாதலின் பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும். உள்ளவற்றை மாற்றியும், குறைத்தும் மனம் போனவாறே அஞ்சாது பதிப்பித்தேனல்லேன். ஒரு வகையாகப் பொருள் கொண்டு பிரதிகளில் இருந்தவாறே பதிப்பித்தேன். யானாக ஒன்றுஞ் செய்திலேன்’ என்று புலப்படுத்தினேன்.

இந்த விரதத்தை நான் அன்று முதல் இன்றுவரை மறந்தவனல்லன். பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் வழங்கி வந்து இடையிலே மறக்கப் பெற்ற நூல்களில் உள்ள பொருள்களை உள்ளபடியே அறிய வேண்டுமானால் அந்நூல்கள் இயற்றப் பெற்ற காலத்து நிலையையும், இலக்கிய மரபையும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி முற்ற உணர்ந்து கொள்வது இவ்வளவு காலத்திற்குப் பின் வந்த நம்மால் இயலாதது. ஆதலின் விளங்காதவை பிறகு விளங்குமென்று காத்திருத்தலும், மாறுபாடாக ஒரு சமயம் தோற்றுவனவற்றை மாறுபாடென்று உடனே துணியாமல் அவற்றிற்குச் சமாதானம் இருக்கக் கூடுமென்று எண்ணிப் பொறுத்திருத்தலும் என் இயல்புகளாயின. இந்தத் தாமதத்தால் என்னோடு பழகினவர்களுக்கு என்பால் சிறிது வெறுப்பு ஏற்பட்டதும் உண்டு. ஆயினும் நான் என் கொள்கையைக் கைவிடவில்லை.

உதவி செய்தோர்

ஏட்டுப் பிரதிகளின் அமைப்பைப் பற்றி எழுதிய பின்னர் எனக்குப் பொருளுதவி செய்தவர்களைப் பற்றியும், பதிப்பிக்குங் காலத்தில் உடனிருந்து உழைத்தவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியும் எழுதினேன். அப்பால் கிடைத்த ஏட்டுப் பிரதிகளின் விவரத்தை எழுதி முகவுரையை முடித்து விட்டேன். அப்பொழுதே சீவகசிந்தாமணிப் பதிப்பு நிறைவேறியது போன்ற ஆறுதலும் ஆனந்தமும் உண்டாயின. எல்லாவற்றையும் கைக்கொண்டு சென்னையை அடைந்தேன்.

பத்துப்பாட்டுப் பிரதி

இறுதிப் பகுதிகளை யெல்லாம் முடித்து முகவுரை முதலியவற்றையும் அச்சிற் கொடுத்து ஒரு முறை புரூப் திருத்தம் செய்து கொடுத்தவுடன் ‘ஈசன் திருவருளால் காரியம் இனிது நிறைவேறியது’ என்ற மகிழ்ச்சி மீதூர்ந்தது. உடம்பில் அப்போது ஒரு சோர்வு உண்டாயிற்று. இரவு பகலின்றி உழைத்த காலங்களிலெல்லாம் வாராத சோர்வு, முடித்துவிட்டோம் என்ற அளவில் காத்து நின்று பாய்வதுபோல என்னை அமிழ்த்தியது. அச்சுக்கூடத்தில் ஓரிடத்தில் படுத்து நித்திரை செய்யலானேன்; சுகமாகத் தூக்கம் வந்தது.

தூங்கி விழித்தபோது முன்பே வந்து காத்திருந்த ஒருவர், “இந்தாருங்கள், பத்துப்பாட்டு” என்று சொல்லி ஓர் ஏட்டுச் சுவடியை என் கையில் அளித்தார். கொடுத்தவரை நிமிர்ந்து பார்த்தேன். வேலூரிலுள்ள வீரசைவராகிய குமாரசாமி ஐயரென்பரே அதை அளித்தவரென்று அறிந்தேன். அவர் இயற்றமிழாசிரியராகிய விசாகப் பெருமாளையருடைய மருகர். அவர் பழைய வித்துவான்களின் வீடுகளில் ஆதரவற்றுக் கிடக்கும் ஏட்டுச்சுவடிகளை இலவசமாகவாவது, சிறு பொருள் கொடுத்தாவது அவ்வீட்டுப் பெண்பாலார் முதலியவர்களிடம் வாங்கி விரும்பியவர்களுக்குக் கொடுத்து ஊதியம் பெற்றுக் காலக்ஷேபம் செய்பவர். அவரிடம் முன்னமே நான் ‘பத்துப் பாட்டு முதலிய சங்கச்செய்யுள்கிடைத்தால் கொணர்ந்து கொடுக்க வேண்டும்; தக்க பொருளுதவி செய்கிறேன்’ என்று சொல்லியிருந்தேன்.

அவர் பத்துப் பாட்டுப் பிரதியை அந்தச் சமயத்தில் கொண்டு வந்து கொடுத்தது எனக்கு நல்ல சகுனமாகத் தோன்றியது. ‘தமிழன்னையே இவர் மூலம் மேலும் தமிழ்த் தொண்டுபுரிய வேண்டுமென்று கட்டளையிடுகிறாள்’ என்று கருதினேன். உடனே அவர் விரும்பியபடி அவர் கையில் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து அனுப்பினேன்.

“தாயே, நீ சிந்தாமணியை இந்த ஏழை முகமாக மீட்டும் அணிந்துகொண்டாய். பிற ஆபரணங்களையும் அடியேன் கைப்படும்படி செய்து அவற்றைத் துலக்கும் கைங்கரியத்திலே திருவருளைத் துணையாக வைத்துப் பாதுகாக்க வேண்டும்” என்று மனப்பூர்வமாகத் தமிழ்த்தாயை வேண்டிக் கொண்டேன்.