உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/115 சிலப்பதிகார வெளியீடு

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—115

சிலப்பதிகார வெளியீடு

கும்பகோணத்திற்கு வந்து வழக்கம் போலக் காலேஜ் வேலையோடு சிலப்பதிகாரப் பதிப்பு வேலையையும் கவனித்து வந்தேன். அந்நூற்பதிப்பு விஷயத்தில் காகித விலை, அச்சுக்கூலி முதலியவற்றிற்குப் போதுமான பொருள் என் கையில் இல்லை. புத்தகத்துக்கு வேண்டிய விஷயங்களை விளக்கமாக அமைக்கும் முயற்சியில் மாத்திரம் என் திறமை வளர்ந்ததே யன்றி, பிரசுரம் செய்வதற்குரிய பொருள் வசதியை அமைத்துக்கொள்ளும் விஷயத்தில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை. சிலப்பதிகாரத்தில் ஏழு காதைகள் அச்சிட்டு நிறைவேறியிருந்தன; மேலே 23 காதைகள் நிறைவேற வேண்டியிருந்தன.

பொருளுதவி செய்த அன்பர்கள்

எனது நிலையைத் தமிழ் அபிமானிகளுக்கும் நண்பர்களுக்கும் கனவான்களுக்கும் தெரிவித்தேன். திருவாவடுதுறை, குன்றக்குடி, திருப்பனந்தாளென்னும் மடங்களிலுள்ள தலைவர்களும், கொழும்பு பொ. குமாரசாமி முதலியாரவர்களும், கும்பகோணம் சாது சேஷையரவர்களும் வேறு பல கனவான்களும் தக்க சமயத்தில் பொருளுதவி புரிந்தனர். அதனால் மேலே பதிப்பை நடத்திச் செல்வதற்குரிய தைரியம் எனக்கு உண்டாயிற்று.

இராமசுவாமி முதலியார் பிரிவு

சிலப்பதிகாரப் பதிப்பு வேகமாகவே நடைபெற்று வந்தது. விரைவில் அதனை முடித்து விட்டு அப்பால் வேறு நூல்களை அச்சிடத் தொடங்கவேண்டுமென்று எண்ணினேன். இடையிடையே புறநானூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை முதலிய பழைய நூல்களின் ஆராய்ச்சியும் நடைபெற்று வந்தது. அக்காலத்தில் என் அரிய நண்பரும் பேருபகாரியுமாகிய சேலம் இராமசுவாமி முதலியாரை இழக்கும் துர்ப்பாக்கியம் இத்தமிழ் நாட்டிற்கு நேர்ந்தது. 1892-ஆம் வருஷம் மார்ச்சு ௴ இரண்டாம் தேதி அவர் உலக வாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு நான் துடிதுடித்துப் போனேன். அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இராவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? துக்க உணர்ச்சியோடு சில பாடல்களை எழுதினேன். அவற்றுட் சில வருமாறு:—


“என்புடையா ரன்புடைய இராமசா மிக்குரிசில்
உன்புடையார் நயசுகுணம் ஒவ்வொன்றை யுன்னியுன்னி
அன்புடையார் பல்லோரும் ஆற்றும்வழி காணாராய்த்
துன்புடையா ராகிமனஞ் சோர்ந்திடவெங் ககன்றனையே!”

[என்புடை-என்னிடத்தில்]


“இன்றேனும் பாலுமெனும் இன்சொலுடை யாய்வைரக்
குன்றேனும் ஒவ்வாக் குணனுடையாய் குற்றத்துள்
ஒன்றேனும் உனையணுக ஒண்ணாதோ சார்ந்திருப்பின்
என்றேனும் நிற்பிரிதல் எம்மை வருத்திடுமோ!”

[இன் தேனும், நிற்பிரிதல் - உன்னைப்பிரிதல்.]


“ஊர்க்குழைப்பான் போனானென் றுலைவாரும் போனானிப்
பார்க்குழைப்பா னென்று பதைப்பாருந் தமிழெனுமுந்
நீர்க்குழைப்பா னென்றுருகி நிற்பாரு மாய்க்கலங்க
ஆர்க்குழைப்பான் சென்றாய் அளியுடைய அண்ணலே!”

[உலைவார் - வருந்துவார். தமிழெனும் முந்நீர் - தமிழென்னும் கடல். அளி - அன்பு.]

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டையும் புத்தக வடிவத்திற் பார்க்க வேண்டுமென்று முதலியார் எவ்வளவோ ஆவலோடிருந்தார். அவர் இருந்த காலத்தில் அவ்விரண்டையும் நிறைவேற்றும் பேறு எனக்கு இல்லாமற் போயிற்று.

இடையில் ஓய்வு கிடைத்த காலத்தில் சென்னைக்குச் சென்று வருவேன். 1892-ம் வருஷம் கோடை விடுமுறையில் அங்கே போயிருந்தபோது, திருமானூர்க் கிருஷ்ணையர் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தமையால் அவருக்கு விடை கொடுத்தனுப்பி விட்டேன். திருவழுந்தூர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியரும் தில்லைவிடங்கன் வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளையும், மில்லர் காலேஜிலிருந்த சுப்பராயலு நாயடு என்பவரும் தங்களாலான உதவிகளைச் செய்தார்கள். சுறுசுறுப்பும் கூர்மையான அறிவும் உள்ள வை. மு. சடகோப ராமானுஜாசாரியர் பெரும்பாலும் என்னுடன் இருந்து ஒப்பிட்டுப் பார்த்தல் முதலிய உதவிகளையெல்லாம் செய்து வந்தார்.

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் முற்றுப்பெறும் நிலையில் இருந்தன. நண்பர்கள் பலர் அரும்பதவுரையையும் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தினமையால் அதனைச் செப்பஞ் செய்து சிலப்பதிகாரத்தின் பின் அச்சிடும்படி கொடுத்து விட்டேன்.

அரும்பதவுரையின் முகவுரை

சிலப்பதிகாரத்திற்குரிய முகவுரையை முதலில் எழுதி விட்டேன். அதில் அரும்பதவுரையைப் பற்றி அதிகமாக எழுதாமல் ஓரிடத்தில் அடிக் குறிப்பில், இவ்வரும்பதவுரை, தனியே அச்சிட்டு இப்புத்தகத்தினிறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கிறது’ என்று மாத்திரம் எழுதினேன்.

அரும்பதவுரை முழுவதும் அச்சான பிறகு அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டியவற்றைத் தனியே எழுத வேண்டுமென்று தோற்றியது. அதை எழுதி விட்டால் சிலப்பதிகாரப் புத்தகம் நிறைவேறிவிடும்.

இந்த நிலையில், அச்சுக்கூடத்திற்குக் கொடுக்க வேண்டிய பணம் என் கையில் இல்லாமையால், திருவல்லிக்கேணியிலிருந்த நார்ட்டன் துரை குமாஸ்தாவாகிய விசுவநாத சாஸ்திரியாரிடம் போய் வேண்டிய தொகையைப் பெற்றுக் கொண்டேன்.

அன்று வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை சிலப்பதிகார வேலையைப் பூர்த்தி செய்து ஒரு புத்தகத்தைப் பைண்டு செய்வித்துக் கண்ணால் பார்த்துவிட்டுக் கும்பகோணம் செல்ல வேண்டுமென்ற விருப்பம் பலமாக இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை விசுவநாத சாஸ்திரியாரை அணுகியபோது அவர் அன்றிரவு தம் வீட்டிலேயே உணவு கொள்ளச் செய்தார். இரவில் அங்கே தங்கினேன்.

அரும்பதவுரைக்கு முகவுரை எழுத எண்ணிக் காகிதமும் பேனாவும் சாஸ்திரியாரிடம் வாங்கிக்கொண்டு எழுத உட்கார்ந்தேன். எனக்கிருந்த சோர்வினாலும் பசியோடு ஆகாரம் செய்தமையாலும் உடனே தூக்கம் வந்து விட்டது. ஒன்றும் செய்ய இயலாமல் படுத்துக் கொண்டேன். படுத்துக் கொள்ளும் போது, ‘இப்பொழுதும் முகவுரை எழுதவில்லையே! நாளை எட்டு மணிக்கு அச்சுக் கூடத்திற் கொடுத்தால் தானே நாளைக்கே புத்தகத்தை முடித்துக் கண்ணாற் பார்க்கலாம்?’ என்ற கவலை மாத்திரம் இருந்தது. ‘விடியற் காலையில் எழுந்து எழுதிவிட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு ஒரு மெழுகுவர்த்தியும் நெருப்புப் பெட்டியும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

நன்றாகத் தூங்கினேன். இரவில் இடையே விழிப்பு ஏற்பட்டது. பூர்த்தியாகாத சிலப்பதிகாரப் புத்தகம் என் அகக் கண்முன் நின்றது. எழுந்து விளக்கேற்றிப் பார்க்கையில் இரண்டு மணிதான் ஆகியிருந்தது. அரைத் தூக்கத்தில் எழுந்தமையால் மீட்டும் படுத்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியே மேலோங்கி நின்றது.

‘படுத்துக் கொண்டால் நான்கு மணிக்கு எழுந்திருக்க முடியுமா? அயர்ச்சியால் நெடுநேரம் தூங்கி விட்டால் காரியம் அரைகுறையாக நின்று விடுமே!’ என்று பலவிதமான சிந்தனைகள் எழுந்தனவே யொழிய எழுத வேண்டுமென்ற வேகம் உண்டாகவில்லை. உலகமெல்லாம் குறட்டை விட்டுத் தூங்கும் அச்சமயத்தில் ஓய்ந்து போன நிலையில் எனக்கு ஊக்கம் ஏற்படுவதற்கு அனுகூலமான பொருள் யாதும் இல்லை.

கண்கள் சுழன்றன. கொட்டாவி விட்டேன்; அண்ணாந்த போது எதிரே சுவரில் இருந்த ஒரு படம் என் கண்ணிற் பட்டது. இன்னாருடைய படமென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. படத்திலுள்ளவர் மிக்க சுறுசுறுப்பும் முயற்சியும் உடையவரென்பது தோற்றத்திலிருந்தே தெரிந்தது. அத்தோற்றம் என் உள்ளத்துள்ளே ஊக்கத்தை எழுப்பியது. ‘இவர் யாரோ தெரியவில்லை; என்ன துடியாய் இருக்கிறார்! நாம் சோர்விலே மூழ்கியிருக்கிறோமே!’ என்று எண்ணினேனோ இல்லையோ, உடனே பேனாவை எடுத்தேன்; எழுதத் தொடங்கி விட்டேன்.

அரும்பதவுரையைப் பற்றி என் ஞாபகத்துக்கு வந்தவற்றை வைத்துக்கொண்டு சுருக்கமாக ஒரு முகவுரை எழுதி முடித்தேன். அப்படி எழுதியதை மீட்டும் படித்துச் செப்பஞ் செய்து கொண்டேன். பிறகு எனக்குத் தூக்கம் வர நியாயம் ஏது?

காலையில் விசுவநாத சாஸ்திரியாரிடம் அந்தப் படம் யாருடையதென்று விசாரித்தேன். அவருடைய தலைவராகிய நார்ட்டன் துரையினதென்று தெரிந்து கொண்டேன். அப்படத்தைக் கண்டு எனக்கு உண்டான ஊக்கத்தையும் அதனால் விளைந்த நன்மையையும் அவரிடம் சொன்னேன்.

சனிக்கிழமையன்று சிலப்பதிகாரத்தில் எஞ்சியிருந்த பகுதிகளெல்லாம் அச்சாயின. ஞாயிறன்று இரவு பைண்டு பண்ணின பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு கும்பகோணத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

சிலப்பதிகாரப் புத்தகங்கள் பைண்டாகிச் சென்னையிலிருந்து வந்தவுடன் அனுப்ப வேண்டியவர்களுக்கெல்லாம் அனுப்பினேன். அதனைக் கண்ட அன்பர்கள் மிகவும் பாராட்டிக் கடிதம் எழுதினார்கள் இராமநாதபுரம் ராஜா மு. பாஸ்கர சேதுபதியவர்களுக்கும் பிரதிகள் அனுப்பினேன். அவர் புத்தகம் கிடைத்த விவரத்தைத் தெரிவித்ததோடு தக்க சந்தர்ப்பமொன்றில் என்னை இராமநாதபுரத்துக்கு அழைக்க நேருமென்றும், அப்போது தவறாமல் வர வேண்டுமென்றும் எழுதினார்.

சரித்திரச் செய்திகள்

சீவகசிந்தாமணியும் பத்துப் பாட்டும் தமிழ் நாட்டில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே, பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும், தமிழில் இருந்த கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. ‘கண்டறியாதன கண்டோம்’ என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்.

சிலப்பதிகாரம் மிக அரிய சரித்திரச் செய்திகளை உடையது. தமிழ் நாட்டு அரசனாகிய செங்குட்டுவன் வட நாடு சென்று வடவேந்தர்களை வென்று கண்ணகியின் படிமச்சிலை கொணர்ந்த செய்தி மிக்க விம்மிதத்தை உண்டாக்கியது. அன்றியும், சங்க காலத்தை நிர்ணயிப்பதற்குச் சிலப்பதிகாரம் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியில்வல்ல பலருடைய கவனத்தை அந்நூல் கவர்ந்தது.

அடியார்க்கு நல்லார் உரையினால் அறிந்த வேறு நூல்கள் தமிழன்பர்களுடைய அறிவுக்கு விருந்தாயின. இதனை எதிர்பார்த்தே அவருரையிற் கண்ட நூல்களைப் பற்றிய குறிப்புக்களைத் தனியே தொகுத்து வெளியிட்டிருந்தேன்.

பெருங்கதை

அவ்வுரையினால் நான் அறிந்த பல செய்திகளுள் முக்கியமானது பெருங்கதை என்னும் நூலின் சிறப்பாகும். நான் தேடித் தொகுத்த நூல்களுள் ‘கொங்குவேள் மாக்கதை’ என்பது ஒன்று. அது யாரோ கொங்குவேள் என்ற ஒருவரைப் பற்றிய கதையாக இருக்கலாமென்றுதான் எண்ணியிருந்தேன். முன்னும் பின்னும் இல்லாத அந்த நூற்சுவடி என் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது.

அடியார்க்கு நல்லாருரையை ஆராய்ச்சி செய்தபோது ஓரிடத்தில், “கூத்தியரிருக்கையுஞ் சுற்றியதாகக், காப்பிய வாசனை கலந்தவை சொல்லி” என்ற அடிகளை அவர் எடுத்துக் காட்டியிருப்பதைக் கண்டேன்; இடைச்சங்க காலத்து நூல்களை ஆராய்ந்து செய்த உதயணன் கதையில் அவ்வடிகள் உள்ளனவென்று அவர் அறிவித்திருந்தார்.

ஒரு நாள் என்னிடமிருந்த கொங்குவேள் மாக்கதையென்னும் சுவடியைப் புரட்டிய போது அந்த இரண்டு அடிகளை அதிற் கண்டேன் ஊன்றிக் கவனித்தேன். முன்னும் பின்னும் பார்த்தேன். உதயணனென்ற பெயர் பலவிடங்களில் வந்தது கொங்குவேள் மாக்கதையே உதயணன் கதையென்று தெரிய வந்தது. பின்னும் அடியார்க்கு நல்லாருரையினால் அதற்குப் பெருங்கதை, கதையென்ற பெயர்களும் உண்டென்பதை உணர்ந்தேன். அதுகாறும் அந்நூலைக் கவனியாதிருந்த நான் அதனை ஆவலோடு படித்துப் பார்க்க ஆரம்பித்தேன்.

நான் எழுதிய நூற்குறிப்புக்களில் என்னிடமுள்ள சுவடிகளிலிருந்து தெரிந்த செய்திகளையெல்லாம் புலப்படுத்தினேன். உதயணன் கதையைப்பற்றி எழுதுகையில், “இப்பொழுது கிடைத்த கையெழுத்துப் பிரதியில் முதலும் கடையும் பழுதுபட்டுப் போய் விட்டமையால் முதலாவது உஞ்சைக் காண்டத்தில் 32 சிற்றுறுப்புக்கள் காணப்படவில்லை; ஐந்தாவது நரவாண காண்டதின் மேலுள்ள காண்டங்கள் இவை யென்பதும், அவற்றின் சிற்றுறுப்புக்கள் இத்தனை யென்பதும் தெரியவில்லை. இவ்வடியார்க்கு நல்லாருரைப் பரிசோதனையாலேயே இந்நூல் இக்காலத்து வெளிப்பட்டதென்று சொல்லலாம்” என்று குறித்தேன். அந்நூற் பிரதி என்னிடத்தில் இருப்பதை இதனால் ஒருவாறு குறிப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்பதும் என் நோக்கம்.

பிற நூல்கள்

இப்படியே முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய குறிப்பில், “முத்தொள்ளாயிர”மென்னும் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை; ஆயினும், ‘வாரிய பெண்ணை’ என்னும் இவ்வெண்பா, தான் எடுத்துக் காட்டும் செய்யுட்களின் தலைப்பில் அவ்வந்நூற் பெயரை எழுதி விளக்கும் ‘புறத்திட்டு’ என்னும் புத்தகத்திலெழுதப் பட்டிருத்தலால், முத்தொள்ளாயிரத்திலுள்ள தென்றறியப்பட்டது” என்று புறத்திரட்டைப் பற்றிய செய்தியை எழுதினேன்.

இவ்வாறே அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, மணிமேகலை என்னும் பழைய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை விரிவாக எழுதினேன். திருக்கோவையாருரை பேராசிரியர் இயற்றியதென்பதை ஒரு குறிப்பிற் பின்வருமாறு வெளிப்படுத்தினேன். “அவ்வுரையாசிரியர் நச்சினார்க்கினியரென்பது பலருடைய கொள்கை; யான் எண்ணியிருந்ததும் அதுவே. ஆயினும் தமிழ்ப் பிரயோக விவேக நூலாசிரியராகிய சுப்பிரமணிய பண்டிதர் தாமியற்றிய அப்பிரயோக விவேக நூலுரையில் இந்நூலுக்கு உரை செய்தோர் பேராசிரியரென்று பலவிடத்தும் புலப்படுத்தினமையானும், தென்னாட்டில் ஆழ்வார் திருநகரி முதலியவற்றிலிருந்த பரம்பரைத் தமிழ் வித்துவான்கள் வீடுகளில் இருக்கும் ஏட்டுப் பிரதிகளில் திருச்சிற்றம்பலக் கோவையாருரை என்றுள்ளவைகளுட் பலவற்றின் தலைப்பிலும் பேராசிரியருரையென்றே எழுதப்பட்டிருத்தலானும், ஊன்றிப் பார்த்தவிடத்துச் சிறிதும் அவைகள் வேறுபாடின்றி அச்சிடப்பட்ட உரையாகவே இருத்தலானும் இந்நூலுரையாசிரியர் நச்சினார்க்கினியரென்று ஒரு தலையாகச் சொல்லக் கூடவில்லை.”

நான் எழுதிய இத்தகைய குறிப்புக்கள் தமிழன்பர்களுடைய ஆவலை அதிகமாக்கின. முகவுரையின் இறுதியில், “இச் சிலப்பதிகாரத்தைப் போலவே நான் பதிப்பிக்க விரும்பிய நூல் ஒவ்வொன்றையும் கருதிய வண்ணம் நிறைவேற்றுதற் பொருட்டும், பிரதியுதவி பொருளுதவி முதலியன புரிந்தோர் பெருவாழ்வடையும் பொருட்டும் திருவருள் சுரக்கும்படி எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய இறைவனுடைய திருவடித் தாமரைக்களைப் பிரார்த்திக்கின்றேன்” என்று எழுதியிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்து தமிழ் நாட்டில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. அங்கங்கே உள்ளவர்கள் கூடி என்னை வாழ்த்தி மேலும் நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று அறிவித்தனர். என்னுடைய அன்பர்கள் தனித்தனியே கடிதம் எழுதி, இன்ன இன்ன நூலைத் தொடங்க வேண்டுமென்று வற்புறுத்தினர்.

சிலப்பதிகாரம் நிறைவேறியவுடன், இவ்வாறு வேறு அணிகலன்களையும் துலக்கித் தமிழ் மகளுக்கு அணியவேண்டுமென்ற அன்புக் கட்டளை தமிழ் நாட்டாரிடமிருந்து எனக்குக் கிடைத்தமையின், மீண்டும் எந்த நூலைத் தொடங்கலாமென்ற எண்ணத்தில் நான் ஆழ்ந்தேன்.