சங்க இலக்கியத் தாவரங்கள்/061-150

விக்கிமூலம் இலிருந்து
 

“சே”–அழிஞ்சில்
அலாஞ்சியம் சால்விபோலியம்
(Alangium salvifolium, Wang.)

தொல்காப்பியத்தில் ‘சே’ என்னும் பெயர் பெற்றது இம்மரம். சிலப்பதிகாரமும், பிங்கலமும் இதனை ‘அழிஞ்சில்’ என்று குறிப்பிடுகின்றன. மற்று. இதனைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. எனினும், இது உயரமாக வளரும் ஒரு வலிய மரம்.

தொல்காப்பியப் பெயர் : ‘சே’
பிற்கால இலக்கியப் பெயர் : அழிஞ்சில்
தாவரப் பெயர் : அலாஞ்சியம் சால்விபோலியம்
(Alangium salvifolium, Wang.)

“சே”–அழிஞ்சில் இலக்கியம்

‘சே’ என்ற இம்மரம் தொல்காப்பியத்தில் இலக்கணம் பெற்றுள்ளது: ‘சே என மரப்பெயர் ஒடுமர இயற்றே’ (தொல். 1:7:76). ‘சேம்பூ’ என்ற விதி பெற்றது. ‘அழிஞ்சில், சேமரம் அங்கோலமாகும்’ என்ற வண்ணம் இது ‘அழிஞ்சில்’ எனப் பெயர் பெற்றது எனக் கூறும் பிங்கலம் [1]. சிலம்பில் [2] ‘சே’ எனறதற்கு அரும்பத உரையாசிரியர் ‘உழிஞ்சிலுமாம், அழிஞ்சிலுமாம்’ என்றனர் ஆயினும் இதற்கு, ‘அழிஞ்சில்’ என்ற பெயர் பொருந்துமென்றனர். இம்மரம் நிறைந்த காடு அழிஞ்சிக்காடு எனப்படும். பாலைக்காடு என்பர் இளஞ்சேரனார். இதன் மலர் மஞ்சள் கலந்த வெண்ணிறம் உடையது.

 

அழிஞ்சில்
(Alangium salvifolium)

திருத்தக்க தேவர், நீரில் தோய்த்த வெண்துகில் போன்றது இதன்பூ என்பர்.

“மாசில் வெண்துகிலை நீர் தோய்த்து மேற்போர்த்த வண்ணமே போல்
 காசின் மாட்டொழுகப் பூத்த அழிஞ்சில் கண்ணார் கவின் கொண்டன ”
[3]

இம்மரம் தாவரவியற் சிறப்புடையது.

“சே”–அழிஞ்சில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorace)
தாவரக் குடும்பம் : அலாஞ்சியேசி
தாவரப் பேரினப் பெயர் : அலாஞ்சியம் (Alangium)
தாவரச் சிற்றினப் பெயர் : சால்விபோலியம் (salvifolium)
சங்க இலக்கியப் பெயர் : அழிஞ்சில்–தொல்காப்பியத்துள் காணப்படுகிறது.
உலக வழக்குப் பெயர் : அழிஞ்சி மரம், அலஞ்சி
தாவர இயல்பு : மரம், இலையுதிர் சிறுமரமென்ப.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அரை அங்குல நீளமான தனி இலை. 3-5 நரம்புகள் உள்ளன.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர். கொத்தாகத் தோன்றும்.
மலர் : மஞ்சள் கலந்த வெண்ணிறமானது. அழகானது. மணமுள்ளது. மலர்க் காம்புடன் சூலகம் இணைந்திருக்கும்.
 

அழிஞ்சில்
(Alangium salvifolium)

புல்லி வட்டம் : அல்லிக்குழல் அடி ஒட்டியது. மேலே 4-10 பற்கள் போன்றது. பிரிவு உடையது.
அல்லி வட்டம் : 4-10 நீண்ட அகவிதழ்கள் தடித்தவை மலரில் பின்புறமாக மடிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : அகவிதழ்களில் 2–4 மடங்கு எண்ணிக்கையான தாதிழைகளை உடையது. அகவிதழ்களை ஒட்டியிருக்கும். தாதிழைகள் மேலே பிரிந்துள்ளன. தாதுப்பை நீளமானது.
சூலக வட்டம் : மலர் வட்டங்களுக்குக் கீழானது. இரு சூலகம். சூல்தண்டு நீளமானது. சூல்முடி அகன்ற குல்லாய் போன்றது. சூலறையில் சூல்கள் தனித்திருக்கும்.
கனி : 2 விதைகளை உடைய பெர்ரி என்ற சதைக் கனி புல்லி வட்டத்தால் மூடப் பெற்றிருக்கும்.
விதை : விதையுறை அழுத்தமானது. ஆல்புமின் சதைப்பற்றானது. சூலிலைகள் இலை போன்றவை. பட்டையானவை. சூல்முளை நீளமானது.

இத்தாவரக் குடும்பத்தில் அலஞ்சியம் என்ற ஒரு பேரினமே தமிழ் நாட்டில் வளர்கிறது. இதில் 2 சிற்றினங்கள் உள்ளன. இதன் மரம் மஞ்சள் நிறமானது மர வேலைப்பாடுகளுக்கேற்றது.

  1. பி. நிகண்டு: 2730
  2. சிலப். 2 : 12 : 2
  3. சீ. சிந். 1649 :2-3