சங்க இலக்கியத் தாவரங்கள்/062-150
மராஅம்–வெண்கடம்பு
ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ்
(Anthocephalus indicus, Rich.)
கபிலர் குறிஞ்சிப்பாட்டில் (85) ‘பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்’ என்றார். ‘மராஅம்’ என்ற இச்சொல், சங்க இலக்கியங்களில் எல்லாம் அளபெடை பெற்றே வருவது இதன் சிறப்பியல்பு போலும்! மராஅம் என்பது பொதுவாக வெண்கடம்பு, செங்கடம்பு ஆகிய இரண்டையும் குறிக்குமாயினும் சிறப்பாக வெண்கடம்ப மரத்தையே குறிக்கின்றது. இது ‘மரவம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் ‘சுள்ளி’ என்று கபிலர் குறிப்பிடும் மரத்திற்கு ‘மராமரம்’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். ஆகவே ‘மராஅம்’ என்பது பொதுவாக வெண்கடம்பு என்றும், இதற்குச் ‘சுள்ளி’, ‘மராமரம்’ என்ற பெயர்களும் உண்டென்றும் அறியலாம்.
சங்க இலக்கியப் பெயர் | : | மராஅம் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | மரவம், மரா, சுள்ளி, கடம்பு |
பிற்கால இலக்கியப் பெயர் | : | கடம்பை, மராமரம் |
உலக வழக்குப் பெயர் | : | வெண்கடம்பு, வெள்ளைக்கடம்பு |
தாவரப் பெயர் | : | ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ் (Anthocephalus indicus, Rich.) |
முன்னைய தாவரப் பெயர் | : | ஆன்தோசெபாலஸ் கடம்பா (Anthocephalus cadamba, Mig.) |
மராஅம்–வெண்கடம்பு
இலக்கியம்
‘பாங்கர் மராஅம் பல் பூந் தணக்கம்’ என்பது கபிலர் கூற்று (குறிஞ். 85). பத்துப் பாட்டிலும் கலித்தொகையிலும் பத்திடங்களில் ‘மராஅம்’ பேசப்படுகிறது. இவற்றிற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘மராமர’மென்றும், ‘மரவம்’ என்றும், ‘வெண் கடம்பு’ என்றும், ‘செங்கடம்பு’ என்றும் உரை கூறுவர். மராஅம் என்பதை வெண்கடம்பிற்கும், செங்கடம்பிற்கும் பொதுப் பெயராகச் சங்க நூல்கள் கூறுகின்றன. இடத்திற்கேற்றவாறு உரையாசிரியர் பொருள் கொள்வர். திருமுருகாற்றுப்படையில் ‘மராஅம்’ என்பதற்குச் செங்கடம்பு என்றும் (10-11) வெண் கடம்பு என்றும் (202), உரை வகுத்த நச்சினார்க்கினியர், மலைபடுகடாத்தில் மராஅம் என்பதற்கு ‘மரவம்’ என்று (498) பொருள் கண்டுள்ளார். மரவம் என்ற சொல் ஐங்குறுநூற்றில் (400) காணப்படுகிறது. பெரும்பாணாற்றுப்படையில் ‘வண்ணக் கடம்பின் நறுமலர்’ (203) என்பதற்கு ‘வெள்ளிய நிறத்தையுடைய கடம்பினது’ என்று உரை கூறுவர். ‘கார் நறுங்கடம்பின் கண்ணிசூடி’ என்ற நற்றிணை அடிக்கு (34 : 8) ‘செங்கடம்பினது கண்ணியைச் சூடி’ என்று கூறுவர் பின்னத்தூரார்.
‘மரா மலர்த்தார்’ என்ற பரிபாடல் அடிக்கு (15 : 20) வெண் கடம்பு என்று உரை காண்பார் பரிமேலழகர்.
‘மரா வெண்கடம்பின் பெயராகும்மே’ என்று சேந்தன் திவாகரம் கூறுமாயினும், மராஅம் என்பது வெண்கடம்பையும், செங்கடம்பையும் குறிக்கும் என்பதும், மராஅம் என்பது மரா மரம், மரவம் என்ற பெயர்களையும் குறிக்கும் என்பதும் அறியப்படும். இங்ஙனமே கடம்பு என்ற சொல்லும், வெண்கடம்பையும், செங்கடம்பையும் குறிக்கும்.
மேலும் ‘எரியுறழ் எறுழம் சுள்ளி கூவிரம்’ என்ற குறிஞ்சிப் பாட்டு அடியில் (66) வரும் ‘சுள்ளி’ என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘மராமரப்பூ’ என்று உரை கூறுவர். பிற்கால இலக்கியங்களில் வரும் சுள்ளி மரத்தை நோக்குமிடத்து இஃது ஒரு பெரிய மரமெனப் புலனாதலின், சுள்ளி என்பது வெண்கடம்பாக இருத்தலும் கூடும்.
ஆகவே வெண்கடம்பு, செங்கடம்பு, சுள்ளி முதலியவற்றைத் தனித்தனியாக விளக்க முற்படுவோம்.
‘மராஅம்’ என்பது உறுதி மிக்க பெரிய மரம். ஆலமரத்துடன் சேர்த்துப் பேசப்படுகிறது. அடிமரம் நன்கு திரண்டது. கரிய நிறமுடையது. பட்டை பொரிந்தது. கிளைகள் செந்நிறமானவை.
“ஆலமும் தொல்வலி மராஅமும்”-கலி. 101 : 13
“மள்ளர் அன்ன மரவம்”-ஐங். 400 : 1
“இருள்படப் பொதுளிய. பராரை மராஅத்து”-திருமு. 11
“கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து ”
-அகநா. 83 : 5
“சொரிபுறம் உரிஞிய நெறிஅயல் மராஅத்து”
-அகநா. 121 : 8
“வாங்குசினை மலிந்த திரள்அரை மராஅத்து”
-அகநா. 221 : 7
இதன் பூ வெண்ணிறமானது. கொத்தாகப் பூப்பது. கண்ணாம்பு போன்ற வெண்ணிறமானது. இதன் வெண்மை ஒளியைக் கதிரவன் ஒளியோடு பொருத்தினர் கல்லாடனார். நீர் வேட்கை கொண்ட யானை, மலைப் பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை, வெள்ளிய மழைத்துளி விழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஓடி அலைந்தது என்பர்.
“செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு”
-திருமு. 202
“வெயில்அவிர் புரையும் வீததை மராஅத்து”
-அகநா. 317 : 5
“கேளாய் எல்ல தோழி வாலிய
சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்”-அகநா. 211 : 1-2
“கரைபாய் வெண்திரை கடுப்ப பலவுடன்
நிரைகால் ஒற்றலின் கல்சேர்பு உதிரும்
வரைசேர் மராஅத்து ஊழ்மலர் பெயல்செத்து
உயங்கல் யானை நீர்நசைக்கு அலமர”-அகநா. 199 : 1-4
தெய்வங்களின் நிறத்தோடு மலர்களை அறிமுகம் செய்யும் கலித்தொகை, ஒரு காதணி கொண்டவனும், வெள்ளை நிறத்தவனும், வலிய நாஞ்சில் படையைக் கொண்டவனுமாகிய பலராமன், பசிய துளசி மாலையை அணிந்திருப்பது போன்று, மராமரத்தின் அகன்ற உயர்ந்த கிளைகளில் பசிய மயில்கள் சூழ்ந்திருக்கும் என்று கூறும்.
“ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்”
-கலி. 26 : 1
“கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராஅத்து
நெடுமிசைச் சூழும் மயில்ஆலும் சீர”-கலி. 36 : 1-2
பலராமன் மார்பில் அணிந்துள்ள வெண்மையான மராமலர்த் தார் அருவி போன்றிருந்தது என்று கூறுவர் இளம்பெருவழுதியார்:
“அராஅணர் கயந்தலை தம்முன் மார்பின்
மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கும் அருவிஆர்த்து இமிழ்பு இழிய”
பரி. 15 : 19-20
வெண்கடம்பின் வெள்ளிய மலர்கள் பூங்கொத்தில் வலமாக முறுக்கிய புரி அமைப்புடையன. இவ்வுண்மையைப் புலவர்கள் பாடியுள்ளனர்.
“சிலம்பு அணிகொண்ட வலஞ்சுரி மராஅத்து”
-குறுந். 22 : 3
“வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீ”-அகநா. 83 : 1
உடன் போக்கில் தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன், வழியில் பூத்துள்ள மராமரக் கிளையை வளைத்துக் கொடுக்க, அவள் அதன் மலர்களைக் கொய்து, தானும் சூடிக் கொண்டு, தனது பொம்மைக்கும் சூட்டினாள். இதனைக் கண்ட தலைவன் மகிழ்ந்தான் என்று கூறும் ஐங்குறுநூறு:
“கோட்சுரும்பு அரற்றும் நாட்சுரத்து அமன்ற
நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
வலம்சுரி வால்இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந் தன்றே
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே”-ஐங். 383
வெண்கடம்பின் பூவைத் தனியாகச் சூடுவதோடு, பிற பூக்களோடும் மாந்தளிரொடும் மரல் நாரில் தொடுத்துக் கண்ணியாகச் சூடினர் என்று கூறும் மலைபடுகடாம்.
“தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல்நாரில் பொலியச் சூடி”
(தேம்பட-தேன் உண்டாக).
-மலைபடு. 428-431
இம்மரம் மலைப்பகுதியிலும், சுரத்திலும் வளரும். இது பூத்துக் குலுங்கும் போது மலையே அழகு பெற்று விளங்கும்.
“சிலம்பணி கொண்ட வலம்சுரி மராஅத்து
வேனில் அம்கிளை கமழும்”-குறுந். 22 : 3-4
ஒருத்தி இம்மலரைச் சூடிக் கொண்டு, அவளது கூந்தல் முழுவதும் மணங்கமழத் துவள விட்டு, மருங்கில் நடந்து சென்றாளாம்.
“. . . .. . . .. . . . அவிழ்இணர்த்
தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர”-நற். 20 : 2-4
இம்மரம் பாலை நிலத்து நெறியிலும், நெறியயலிலும் வளரும். உடன் போக்கு மேற்கொண்டவர் இதன் இலை உதிர்ந்த நிழலில் தங்குவர். இலை இல்லாத மராமரத்தின் நிழல், அம்மரத்தின் மேலே வலையைக் கட்டி வைத்தாலொத்து இருக்கும். வழி நடப்போர் அந்த நிழலில் தங்கிக் கானத்து எவ்வம் போக இளைப்பாறிச் செல்வர்.
“பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ”-சிறுபா. 11-12
“புல்இலை மராஅத்த அகன்சேண் அத்தம்”
-அகநா. 3 : 11
“களிறு வழங்குஅதர கானத்து அல்கி
இலை இல் மராஅத்த எவ்வம் தாங்கி
வலைவலந் தன்ன மென்னிழல் மருங்கில்”
-பொருந. 49-51
ஒரு யானை வேனிற் காலத்தில், சுரத்திடையே வளர்ந்திருந்த மராமரத்தின் பட்டையைப் பிளந்து, தன் பெண் யானைக்கு ஊட்டும் என்பர் மதுரைத் தத்தங்கண்ணனார்.
“. . . . . . . . . . . . . . . .யானைதன்
கொல்மருப்பு ஒடியக் குத்திச் சினம்சிறந்து
இன்னா வேனில் இன்துணை ஆர
முனிசினை மராஅத்துப் பொளிபிளந்து ஊட்ட
புலம்பு வீற்றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்”-அகநா. 335
(பொளி-பட்டை)
இம்மரம் அரும்பற மலரும். தேன் சொரியப் பூக்கும். மணங்கமழப் பூக்கும். மலரில் சுரும்பினம் மொய்க்கும். மகளிர் மலரைக் கூந்தலிற் பெய்வர் என முன்னரும் கூறினோம்.
“அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
சுரும்புசூழ் அலரி தைஇ வேய்ந்தநின்
தேம்பாய் கூந்தல்”-அகநா. 257 : 6-8
“. . . .. . . . வலம்சுரி மரா அத்து
வேனில் அஞ்சினை கமழும்”-குறுந். 22 : 3-4
தீய்ந்த இம்மரத்தில் சுரத்திடை வேனிற்காலத்தில் பூக்கும் மலர்களில் தேனில்லாது போவதும் உண்டு என்றும், இதன் தேன் கருதி இம்மலரை ஊதிய தும்பி தேனின்றி ஏமாந்து பெயரும் என்றும் கூறுவர் காவல் முல்லைப்பூதனார்.
“தீய்ந்த மராஅத்து ஒங்கல் வெஞ்சினை
வேனில் ஓர்இணர் தேனொடு ஊதி
ஆராது பெயரும் தும்பி”-குறுந். 211 : 4-6
வெண்கடம்ப மரத்தடியிலும் பலர் கூடும் மன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடியிடத்தில் போரில் புறங்கொடாது மாய்ந்த வீரரது நடுகல் நாட்டப்படும். இம்மரத்தில் சிறுதெய்வம் இடம் பெறுவதாகவும், இத்தெய்வம் கொடியோரைத் தெறுமென்றும் நம்பினர்.
“மன்ற மராஅத்த கூகை குழறினும்”-அகநா. 158 : 13
“செல்லும் தேயத்துப் பெயர்மருங்கு அறிமார்
கல்எறிந்து எழுதிய eகல்அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடுஏசு கவலை”
-மலைபடு. 394-396
“மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறு உம் என்ப”-குறுந். 87 : 1-2
மராமரத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு காணப்படுகின்றது. இதனைச் சங்க இலக்கியங்கள், மராஅ. மராஅம். மராஅத்து என அளபெடையுடன் பெரிதும் குறிப்பிடுகின்றன. இஃது மராமரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு போலும்.
மராஅம்–வெண்கடம்பு தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | இன்பெரே (Inferae) அகவிதழ்கள் இணைந்தவை. |
தாவரக் குடும்பம் | : | ரூபியேசி (Rubiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஆன்தோசெபாலஸ் (Anthocephalus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகஸ் (indicus,Rich.) |
இதன் முன்னைய தாவரப் பெயர் | : | ஆன்தோசெபாலஸ் கடம்பா |
தாவர இயல்பு | : | பருத்துக் கிளைத்து உயரமாக வளரும் பெரிய மரம். வறண்ட நிலத்திலும், 1500 அடி உயரமான மலைப் பாங்கிலும் உயர்ந்து வளரும். எடுப்பான தோற்றம் உள்ளது |
இலை | : | முட்டை வடிவான 6 அங்குலம் அகன்ற தனி இலை, ஓர் அடி நீளமானது. இலைச் செதில்கள் ஈட்டி போன்றன. எளிதில் உதிர்வன. |
மஞ்சரி | : | கொத்தாகப் பூக்கும். இணர்க்காம்பு உள்ளது. கிளை நுனியில் வெள்ளிய பூங்கொத்து திரண்டு தோன்றும். இவ்விணர் ‘ஹெட்’ எனப்படும். |
மலர் | : | மங்கிய வெள்ளை நிறமானது. ஐந்தடுக்கானது. நறுமணம் உள்ளது. |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் அடியில் இணைந்து குழல் போன்றிருக்கும். மேலே 5 பிரிவுகளை உடையது. |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் இணைந்து அடியில் நீண்ட குழலுடன் புனல் வடிவானது. மேலே 5 மடல்கள் தழுவிய ஒட்டு முறையில் காணப்படும். பளபளப்பானவை. |
மகரந்த வட்டம் | : | 5 குட்டையான தாதிழைகள் அகவிதழ்க் குழலின் தொண்டைப் பகுதியில் ஒட்டியிருக்கும். மகரந்தப் பைகள் நீள்முட்டை வடிவில் ஈட்டி போன்றிருக்கும். |
சூலக வட்டம் | : | 4 செல்களை உடையது. அடியில் இரு செல்களாக இணைந்து விடும். பல சூல்கள் படுக்கையானவை. இரு பிளவான சூலகக் காம்பில் இணைந்துள்ளன. |
சூல் தண்டு | : | மெல்லியது. மலரின் வெளியே காணப்படும். |
சூல் முடி | : | வெண்ணிறமானது. இதுவே மலரின் வெண்மை நிறத்திற்குக் காரணம். |
கனி | : | மஞ்சள் நிறமான அடித்தளத்தில் வெடிகனியாகப் புதைந்திருக்கும். மேற்புறத்தில் 4 குல்லாய் போன்றும் அடிப்புறத்தில் மெலிந்தும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும், |
விதை | : | பல விதைகள், கோணங்களை உடையவை. விதை உறை ‘மூரிகுலேட்’ எனப்படும். கரு மிக நுண்ணியது வட்டவடிவான விதையிலைகளை உடையது. முளைவேர் தடித்திருக்கும். |
இம்மரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1500 அடி உயரமான மலைப் பாங்கிலும், மேற்குக் கடற்கரையிலும் வளர்கிறது. இலையுதிர் காடுகளிலும் காணலாம். இதன் அடிமரம் நேரானது. மரவேலைக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதனால் இது வளர்க்கப்படுகிறது. வெண்கடம்ப மரம் கட்டிட வேலைக்குப் பெரிதும் பயன்படுகிறது. மரம் வெளிர் மஞ்சள் நிறமானது.