உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/066-150

விக்கிமூலம் இலிருந்து

வெட்சி
இக்சோரா காக்சினியா (Ixora coccinea, Linn.)

புறத்திணை இலக்கணம் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியனார், அகத்திணைகட்குரிய புறத்திணைகளை ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ (தொல். புறத். 2:1) எனத் தொடங்கி ஏழு புறத்தினைகளை வகுத்துரைத்தார். பிற்காலத்தில் இவை பன்னிரண்டாயின. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஒதுக்கியவை போக புறத்திணை ஒழுக்கங்களும் அவற்றிற்குரிய பூக்களும் எட்டாகக் கூறப்படுகின்றன. இவற்றைப் பட்டியலிட்டுக் காண்போம்.

எண். அகத்திணை புறத்திணை புறத்திணை ஒழுக்கம் சூடும் பூ
  1. குறிஞ்சி வெட்சி ஆநிரை கவர்தல் வெட்சி
  2. கரந்தை ஆநிரைகளை மீட்டல் கரந்தை
  3. முல்லை வஞ்சி போருக்கு முனைந்து எழுதல் வஞ்சி
  4. பெருந்திணை காஞ்சி தாக்கியோரை எதிர்த்தல் காஞ்சி
  5. மருதம் உழிஞை முற்றுகையிடல் உழிஞை
  6. நொச்சி முற்றுகையைத் தகர்த்தல் நொச்சி
  7. நெய்தல் தும்பை கைகலந்து போரிடல் தும்பை
  8. பாலை வாகை வெற்றி வாகை

தும்பைப் பூவைப் போர் நிலைக்கேற்ப வெட்சிப்புறத்துத் தும்பை, வஞ்சிப்புறத்துத் தும்பை, உழிஞைப் புறத்துத் தும்பை என்று பிரித்து உரை கூறுகின்றார் நச்சினார்க்கினியர்.

இனி, புறத்திணை மலர்களைத் தரும் தாவரங்களை முறைப்படி ஒவ்வொன்றாகக் காணலாம்.

‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ என்று கூறும் தொல்காப்பியம் (புறத். 2:1) பகை அரசரது ஆநிரையைக் கவரும் படையினர், வெட்சி மலரைச் சூடிச் செல்வர். ஆதலின், இது போர் மலர் எனப்படும். இது ஒரு புதர்ச்செடி; இதன் மலர் செக்கச் சிவந்த நிறமானது. கொத்துக் கொத்தாகப் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : வெட்சி
தாவரப் பெயர் : இக்சோரா காக்சினியா
(Ixora coccinea, Linn.)

இது அழகுச் செடியாகப் பூங்காவிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.

வெட்சி இலக்கியம்

வெட்சிப் பூவால் பெயர் பெற்றது வெட்சித் திணை. பகை நாட்டவரது ஆநிரைகளைக் கவரப் போகும் போது, அதன் அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடுவர்.

வெட்சி ஒரு புதர்ச் செடியாகும். இது தழைத்துக் கிளைத்துக் கானம் போலக் காட்டில் வளரும் எனவும், இதன் கிளைகள் வளைந்திருக்குமெனவும், பல அரும்புகளை உடையன எனவும், முகையவிழுங்கால், மணங்கமழும் எனவும், இம்மலர்களை மகளிர் தலையில் சூடிக் கொள்வர் எனவும் சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்.

“வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட”
புறநா. 202 : 1
“கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சித்
 தளைஅவிழ் பல்போது கமழும்
 மையிருங் கூந்தல் மடந்தை நட்பே”
-குறுந் 209 : 5-7

இக்குறுந்தொகைப் பாடலில் வரும் ‘முடச்சினை’ என்பது ‘முட்ச்சினை’ என்ற பாட பேதம் உடையது. இப்பாடத்திற்கு ‘முள்ளைப் போன்ற அரும்பினை உடைய’ என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இப்பாடம் பொருத்தமாக உள்ளது. ஏனெனில் ‘இதல் முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி’ (அகநா. 133 : 14) என்று தாமோதரனார் கூறுவர் ஆகலின், உண்மையில் வெட்சியின் அரும்பு, முள்ளை ஒத்துக் கூரியதாக இருக்கும். வெட்சி மலர் நல்ல செந்நிறமானது. வெட்சிப் பூக்களைச் சூடிக் கொண்டு ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்களது தோற்றம் செவ்வானம் செல்வது போன்று இருக்குமாம்.[1]

வெட்சிப் பூக்களைப் பிற பூக்களுடன் இடையிடையே தொடுத்துக் கட்டி, தலையில் அணிவர் என்றும், விடு பூவாகத் தூவுவர் என்றும், வெட்சி மலர்க்கால் செவ்வியது என்றும் கூறப் படுகின்றது.

“செங்கால் வெட்சித் சீறிதழ் இடையிடுபு”-திருமுரு. 21

“வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ”
-புறநா. 100 : 5
“ஈர்அமை வெட்சி இதழ்புனை கோதையர்
 தார்ஆர் முடியர் தகை கெழுமார்பினர்”

-பரி. 22 : 22-23


வெட்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae) அகவிதழ் இணைந்தவை. சூலகம் பூவுறுப்புக்களுக்கு அடியில் இருக்கும்.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : இக்சோரா (1xora)
தாவரச் சிற்றினப் பெயர் : காக்சினியா (coccinea)
சங்க இலக்கியப் பெயர் : வெட்சி
உலக வழக்குப் பெயர் : வெட்சி: தொட்டி எனவும் வழங்கப்படுமென்பர் காம்பிள்.
தாவர இயல்பு : பெரிய புதர்ச் செடி, நன்கு தழைத்து வளரும்.
இலை : தனி இலை, எதிரடுக்கில் அமைந்திருக்கும் தடித்த, பசிய, அகன்று நீண்ட இலைகளுக்கு இடையில் இலையடிச் செதில்கள் உள்ளன.
மஞ்சரி : மும்முறை கிளைத்த நுனி வளராப் பூந்துணர் கொத்துக் கொத்தாகக் கிளை நுனியில் இருக்கும். இதனைக் ‘காரிம் போஸ் சைம்’ என்பர். பூவடிச் செதில் தடித்து, இலை போன்றது. மலரடிச் சிறு செதில்கள் 2.
மலர் : செக்கச் சிவந்த நிறம். முகை முள் போன்றது. கூரியது. நீளமானது.
புல்லி வட்டம் : புறவிதழ்கள் இணைந்த முட்டை வடிவமான குழல் போன்றிருக்கும். விளிம்பு 4 பிளப்புகளை உடையது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்து, அடியில் நீண்ட குழல் வடிவாக இருக்கும். மலர் நுனியில் 4 மடல்கள் விரிந்திருக்கும். இவை முகையில் முறுக்கி விட்டது போன்றிருக்கும். மலர்ந்த இம்மலர்க் கொத்து மிக அழகாகத் தோன்றும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள் வாயவிழ்ந்த மலரின் வாயில் காணப்படும். தாதிழை மிகக் குட்டையானது. தாதுப்பைகள் மெல்லியவை. அடியில் இரு பிளவாகவும், நுனி கூரியதாகவும் இருக்கும்.
சூலக வட்டம் : இரு செல்லுடையது. ஒரு தொங்கு சூல் சூலக அறையில் காணப்படும். சூல்தண்டு தடித்தது. சூல்முடி இரு பிளவானது. சதைக்கனி நீண்ட ‘பெர்ரி’ எனப்படும்.
விதை : முட்டை வடிவானது. சூலறையில் தொங்கிக் கொண்டிருக்கும். விதையுறை மிக மெல்லியது. வித்திலைகள் சிறியவை. இலை போன்றிருக்கும்.

வெட்சி ஓர் அழகுச் செடியாகத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என டி. எஸ். இராகவன், அரங்கசாமி (1941) கணக்கிட்டனர்.



  1. புறத்திரட்டு. 752