சங்க இலக்கியத் தாவரங்கள்/070-150

விக்கிமூலம் இலிருந்து
 

வகுளம்–மகிழம்
மிமுசாப்ஸ் இலெஞ்சி (Mimusops elengi, Linn.)

‘பசும்பிடி வகுளம்’ (குறிஞ். 70) என்றார் கபிலர். ‘வகுளம்’ என்பதற்கு ‘மகிழம்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். இதற்கு ‘இலஞ்சி’ என்ற பெயரையும் சூட்டுகின்றது சேந்தன் திவாகரம்.

மகிழ் ஒரு சிறு மரம்; என்றும் தழைத்திருக்கும். மலர், தேர் உருளையின் வடிவானது. மலரின் நடுவில் சிறு துளையிருக்கும். இம்மலர் சிறியதாயினும் நறுமணம் உடையது. வெளிர் மஞ்சள் நிறமானது.

தாவரவியலில் இதற்கு ‘மிமுசாப்ஸ் இலஞ்சி’ என்று பெயர். சேந்தன் திவாகரம் குறிப்பிடும் ‘இலஞ்சி’ என்ற வேறு பெயர் தாவரவியலில் இதற்கமைந்த சிற்றினப் பெயராகுதல் காண்க.

சங்க இலக்கியப் பெயர் : வகுளம்
பிற்கால இலக்கியப் பெயர் : மகிழ், இலஞ்சி
உலக வழக்குப் பெயர் : மகிழம்பூ, மகிழ மரம்
தாவரப் பெயர் : மிமுசாப்ஸ் இலெஞ்சி
(Mimusops elengi, Linn.)

வகுளம்-மகிழம் இலக்கியம்

மணங்கமழும் மலர்களில் மகிழம்பூவின் மணம் மகிழ்ச்சி தரும். சங்க இலக்கியத்தில் மகிழம் பூவை ‘வகுளம்’ என்பர்.

“பசும்பிடி வகுளம் பல்இணர்க் காயா-குறிஞ். 70.

என்றார் கபிலர். வகுளம் என்பதற்கு மகிழம்பூ என்று உரை வகுத்துள்ளார் நச்சினார்க்கினியர். இங்ஙனமே பரிபாடலிலும், திணைமாலை நூற்றைம்பதிலும் ஒவ்வோரிடத்தில் மட்டும் வகுளம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி ”-பரி. 12 : 79

“நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை ”[1]

சேந்தன் திவாகரம் [2] ‘வகுளம் இலஞ்சி மகிழ் மரமென்று’ என்று வகுளத்திற்கு, இலஞ்சி, மகிழ் என்ற இரு பெயர்களைச் சூட்டுகிறது. தாவர இயலில் இதற்கு மிமுசாப்ஸ் இலெஞ்சி என்று பெயர். இதில் தாவரச் சிற்றினப் பெயராகிய ‘இலெஞ்சி’ என்பது திவாகரம் கூறும் இலஞ்சியாகத்தான் இருக்க வேண்டும்.

தினை விதைப்பதற்கு வெறும் புதரை வெட்டுவது போன்று, வகுளத்தை வெட்டி எறிவதைக் கணிமேதாவியார் கூறுதலின் இது குறிஞ்சி நிலப்பூ என்பதறியலாம்.

மகிழ மரம், மிக அழகிய சிறுமரம். என்றும் பசுமையானது. இதன் பூ மிகச் சிறியது. அழகிய அமைப்புடையது. மங்கிய மஞ்சள் நிறமானது. இனிய நறுமணமுடையது. இம்மலரின் வடிவமைப்பைத் திருத்தக்கதேவர் தேர்க்காலின் வடிவமைப்பிற்கு ஒப்பிட்டுள்ளார்.

கம்பர், இராமனது கொப்பூழ்க்கு இப்பூவை உவமையாக்கினார். இராமனது ஒவத்து எழுத ஒண்ணாத உருவத்தைச் சொல்லின் செல்வன் சொற்களாற் காட்டுகின்றார்[3]. கவி மரபில் வகுளம் மகளிர் எச்சில் உமிழ மலரும் என்பர்.

இம்மலர் வடிவில் சிறியதாயினும், மணத்தாற் பெரியது. ‘மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்[4]’ என்பதுங் காண்க. இப்பூவில் மையத்துளை இருத்தலின், இணரிலிருந்து கழன்று விழும். அதனால், இம்மலர்களை நாரால் கோத்துக் கண்ணியாக்கிப் புனையலாம்.

வகுளம், சிவனுக்குரிய மலர்களுள் ஒன்றென்பர். இப்பூ நம்மாழ்வாருக்குரிய சின்னப்பூ என்பது போல, அவரே ‘வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்’[5]என்று பாடுகின்றார்.

வகுளம்—மகிழம் தாவர அறிவியல்

தாவரவியலில் இச்சிறுமரம் சபோட்டேசி என்ற குடும்பத்தின் பாற்படும். இக்குடும்பத்தில் 40 பேரினங்களும், ஏறக்குறைய 600 சிற்றினங்களும் உள என்பர். இவற்றுள் 8 பேரினங்கள் இந்தியாவில் உள்ளதாக ஹூக்கரும், தமிழ்நாட்டில் ஆறு பேரினங்கள் வளர்வதாகக் காம்பிளும் கூறுவர். வகுளம் இவற்றுள் மிமுசாப்ஸ் என்ற பேரினத்தைச் சார்ந்தது. இப்பேரினத்தில் இந்தியாவில் உள்ள 5 சிற்றினங்களில் 3 மட்டும், தமிழ் நாட்டில் வாழ்கின்றன. வகுளத்திற்கு இலஞ்சி என்ற ஒரு பெயரும் உண்டெனக் கண்டோம். இப்பெயரையே தாவரவியவில் இதன் சிற்றினப் பெயராக ‘இலெஞ்சி’ எனப் பெயர் அமைத்துள்ளார் லின்னேயஸ்.

இதன் இதழ்கள் இணைந்துள்ளமையின், இது ஹெட்டிரோமீரி என்னும் தாவரத் தொகுதியுள் வைக்கப்பட்டுள்ளது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என, சென் எஸ்; சென் என்.கே (1954), சாப்திசிங் (1961) முதலியோர் அறுதியிட்டனர்.

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெட்டிரோமீரி (அல்லி இணைந்தது)
தாவரக் குடும்பம் : சப்போட்டேசி (Sapotaceae)
 

வகுளம்
(Mimusops elengi)

தாவரப் பேரினப் பெயர் : மிமுசாப்ஸ் (Mimusops)
தாவரச் சிற்றினப் பெயர் : இலெஞ்சி (ilengi)
தாவர இயல்பு : சிறுமரம், 4 முதல் 5 மீ. உயரமானது. எப்பொழுதும் பசுமையாக இருக்கும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : பசிய தனி இலை. பளபளப்பானது. 8-10 செ. மீ நீளமும் 2-3 செ. மீ. அகலமும் உள்ளது. நீர் நிலைக்கு அருகில் உள்ள மரத்தின் இலைகள் சற்றுப் பெரியனவாக இருக்கும்.
மஞ்சரி : தனிமலர். காம்புடன் இலைக் கோணத்தில் உண்டாகும்.
மலர் : மழுங்கிய வெண்மை நிறமானது. மலர்ந்ததும், காம்பிலிருந்து கழன்று விழும்.
புல்லி வட்டம் : 8 புறவிதழ் விளிம்புகள் உள்ளன.
அல்லி வட்டம் : 8 அகவிதழ்கள் இணைந்து இருக்கும் அல்லிக்குழல் 3 மி.மீ. நீளமானது.
மகரந்த வட்டம் : 8 மகரந்தத் தாள்களும், அகன்ற பல கூரிய போலி மகரந்தத் தாள்களும் உள்ளன. அல்லி ஒட்டியவை. மலர்ந்தவுடன், இப்பூ காம்பிலிருந்து கழன்று விழும். மையத்தில் சிறு துளை இருக்கும். நறுமணம் உள்ளது. மலர் வாடிய போதும் மணமிருக்கும்.
சூலக வட்டம் : 6-8 சூலறைச் சூலகம். சூல்முடி சுபுலேட்.
கனி : பெர்ரி என்னும் முட்டை வடிவமான மஞ்சள் நிறமுள்ள சதைக்கனி. 2.5-3 செ.மீ. நீளமானது. விதையில் நறுமண எண்ணெய் உண்டு.

இதன் மலருக்காக இச்சிறுமரம் தோட்டங்களில் வளர்க்கப் படுகிறது. கருஞ் சிவப்பு நிறமான இதன் அடிமரம் மிக வன்மையானது. வண்டிச் சக்கரங்களுக்கும், வேளாண்மைக் கருவிகளுக்குக் காம்பு செய்வதற்கும் பயன்படும். தமிழ் நாட்டில் இம் மரம் பரவலாக வளர்கிறது.


  1. திணை மாலை நூற். 24
  2. ‘கோடு உதையாக் குழிசியோடு ஆரங் கொளக்

     குயிற்றிய ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம்’ 1650

    (தேருருளை; மேற்சூட்டு வையாத் தேருருளை) மகிழ், தேர் உருளைப் போலே பூத்தன என்று உரை கூறியுள்ளார். இம்மலர் பூக்காம்பினின்றும் கழன்று விழும். இக்காட்சியைத் திருத்தக்க தேவர், ‘ஒரு சிலந்திப் பூச்சி கீழ் விழுவது போன்ற’தென்பார்.

    “மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பி வீழ்வனபோல்
    மலர் சொரி வகுளமும் மயங்க” 2108

  3.  . . . . . . . . . . . . பூவொடு
    நிலஞ்சுழித் தெழுமணி உந்தி நேர்இனி
    இலஞ்சியம் போலும் வேறுவமை யாண்டயோ

    -கம்ப இராமாயணம்

  4. ’மடல் பெரிது . . . . . . ’நல்வழி
  5. திருவாய். 4:10:11