சங்க இலக்கியத் தாவரங்கள்/117-150

விக்கிமூலம் இலிருந்து
 

நெல்லி
எம்பிளிகா அபிசினாலிஸ் (Emblica officinalis,Gaertn.)

நெல்லி ஒரு மரம். இதன் இலைகள் சிறியவை. இதன் கனி மிகவும் சுவையானது. அதியமான் நெடுமான் அஞ்சி என்ற பேரரசன், தான் பெற்ற பெறுதற்கரிய பேறு வாய்ந்த, சாதலைத் தவிர்க்கும் நெல்லிக்கனியை ஔவையாருக்கு அளித்தனன். அதனைப் பெற்று உண்ட ஔவை அவனை ‘சாதற்குக் காரணமான நஞ்சுண்டும் நிலை பெற்றுள்ள நீலமணிமிடற்று ஒருவன் போல நீ என்றும் நீடினிது வாழ்க’ என்று வாழ்த்தினார். இக்குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : நெல்லி
தாவரப் பெயர் : எம்பிளிகா அபிசினாலிஸ்
(Emblica officinalis,Gaertn.)

நெல்லி இலக்கியம்

‘நெல்லி’ ஒரு மரம். மலைப்புறத்துச் சுரத்திடையேயும் வளரும். சிறிய பல இலைகளை உடையது. இதன் கனி முயலின் கண்ணுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. நெல்லிக்கனி சுவையுள்ள கனிகளுள் ஒன்று. முதிர்ந்த கனிகள் தாமே கீழே உதிர்ந்து விழும். சுரத்திடைப் போவோரெல்லாம் இக்கனியை நீர்நசை தீர்வதற்குச் கவைத்து உண்பர்

“சாத்து இடைவழங்காச் சேண்சி னமஅதர
 சிறுஇலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய்
 உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வின்று”

-அகநா. 291 : 15-17


“சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
 குறுவிழிக் கண்ண கூரல்அம் குறுமுயல்”

-அகநா. 284 : 1-2


அதியமான் நெடுமான் அஞ்சி, என்ற அதியர் கோமான் ஒரு பேரரசன். அவன் பெறுதற்கரிய சுவை மிக்க நெல்லிக் கனி ஒன்று கிடைக்கப் பெற்றான். இக்கனியின் சிறப்பு யாதெனில், இதனை உண்பவர் சாதலைத் தவிர்ப்பர். இக்கனியை ஔவையார் என்னும் பெரும் புலவருக்குக் கொடுத்தான். எனினும், இக்கனியின் சிறப்பியல்பினை அவரிடம் கூறவில்லை. ஔவைப் பிராட்டியும் அதனைப் பெற்றுக் கொண்டார். அவர் பாடுகின்றார்:

‘அதியர் கோமான் அஞ்சி! பெறுதற்கரியதென்று கருதாமல், அதனால் பெறும் பெரும் பேற்றினை எமக்குக் கூறாது, சாதல் ஒழிய, எமக்கு நெல்லிக் கனி அளித்தாய். ஆதலின் நீலமணிமிடற்று ஒருவன் போல, நீயும் சாவாதிருத்தல் வேண்டும்’ என்று கூறி வாழ்த்துகின்றாள்.

“நீலமணி மிடற்று ஒருவன் போல
 மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
 பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
 சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
 தாதல் நின்னகத் தடக்கிச்
 சாதல் நீங்க எமக்கீத் தனையே”
-புறநா. 91 : 6-11

இவ்வுண்மை நிகழ்ச்சியை நத்தத்தனாரும் குறிப்பிடுகின்றார்.

“. . . . . . . . . . . . மால்வரைக்
 கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
 அமிழ்து விளைதீங்கனி ஔவைக் கீந்த
 உரவுச் சினங்கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
 அரவக் கடல் தானை அதிகனும்”
-சிறுபா. 99-103

நெல்லி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே
யூனிசெக்சுவேலீஸ் (unisexuales)
தாவரக் குடும்பம் : யூபோர்பியேசி (Euphorbiaceae)
தாவரப் பேரினப் பெயர் : எம்பிளிகா (Emblica)
தாவரச் சிற்றினப் பெயர் : அபிசினாலிஸ் (officinalis)
சங்க இலக்கியப் பெயர் : நெல்லி
உலக வழக்குப் பெயர் : நெல்லி, பெருநெல்லி.
தாவர இயல்பு : மரம். இரண்டாகக் கிளைத்துத் தழைத்து வளர்வது 4000 அடி உயரம் வரையில் மலைப் பகுதிகளிலும் வளரும்.
இலை : சிறகன்ன கூட்டிலை போலத் தோன்றும் மிகச் சிறு இலைகள், 100 வரையில் சிறு கிளைகளில் உண்டாகும். 0.3-0.75 அங்குல நீளமும், 0.1 அங். அகலமும் உள்ளது.
மஞ்சரி : ஆண் மலரும், பெண் மலரும் தனியானவை. பெண் மலர்கள் அடியிலும், ஆண் மலர்கள் மேலேயும் அமைந்து, கொத்தாக இலைக் கோணத்தில் உண்டாகும்.
புல்லி வட்டம் : 5-6 சற்று நீண்ட புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இல்லை.
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 3 தாதிழைகள் கூம்பு போலத் தோன்றும். தாதுப்பைகள் ஒன்றாகத் திரண்டு, தாதுப் பைகளின் 3 இணைப்புகளும் நீண்டு இருக்கும். தாதுப் பைகள் நீள்வாக்கில் பிளக்கும்.
சூலக வட்டம் : பெண் மலரில் 3 செல் உள்ள சூலகம் ஒவ்வொன்றிலும் இரு சூல்கள் உள்ளன சூல்தண்டு நீண்டு சூல்முடி இரு முறை பிளவுபட்டு அடிப் புறமாக வளைந்திருக்கும்.
கனி : உருண்டை வடிவான சதைக் கனி: 0.5-0.9 அங். நீளமும், 0.2-0.3 அங். அகலமும் உள்ளது.
விதை : 3 வலிய இரண்டு வால்வுகளை உடைய ‘காக்கஸ்’ என்ற 6 விதைகள் உண்டாகும். விதையிலை தட்டையானது; அகன்றது.

நெல்லிக்கனி சுவையான உணவுப் பொருள். இதன் கனிகளுக்காக இம்மரம் வளர்க்கப்படும். இது நல்லதொரு மருந்துப் பொருளுமாகும். இதன் அடிமரம் வலியது. நுகத்தடியாகப் பயன்படும். இம்மரத்தைக் கிணறுகளில் போட்டு வைப்பதால், கிணற்று நீர் சுவையாக இருக்கும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 28 என பெர்ரி, பி. ஏ. (1943) என்பாரும், 2n = 98 என இராகவன், ஆர்.எஸ். (1958 ஏ) என்பாரும் கணக்கிட்டுள்ளார்.