சங்க இலக்கியத் தாவரங்கள்/139-150

விக்கிமூலம் இலிருந்து
 

கரும்பு
சக்காரம் ஆபிசினேரம் (Saccharum officinarum, Linn.)

கரும்பு தாவரவியலுள் ஒருவகையான ‘புல்’ எனப்படும். தொல்காப்பியமும் இதனைப் ‘புல்’ எனக் கூறும்.

“புறக்காழனவே புல்லெனமொழிப” -தொல். பொருள். 9 : 86


தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் வளர்க்கப்படுவது. அதியமான் முன்னோரால் அவர் நாட்டுக்குக் கொண்டு தரப்பட்டது என்று ஔவையார் கூறுவர். உலகிற்கு இனிய சுவையான சருக்கரை கருப்பஞ்சாற்றிலிருந்து பெறப்படுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : கரும்பு
தாவரப் பெயர் : சக்காரம் ஆபிசினேரம்
(Saccharum officinarum, Linn.)

கரும்பு இலக்கியம்

“அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” -புறநா. 99 : 2
“. . . . . . . . . . . . அந்தரத்து
 அரும் பெறல் அமிழ்தம் அன்ன
 கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே”
-புறநா. 392 : 19-21


இப்பாடல்களுள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் கரும்பைக் கொண்டு வந்து தந்ததாக ஔவையார் பாடினார். அவர், ‘அந்தரத்துப் பெறுதற்குரிய, அமிழ்தம் போன்ற கரும்பை இங்குத் தந்தவனுடைய வழித் தோன்றலே’ என்றுதான் பாடியுள்ளார். இப்பாட்டின் பழைய உரைகாரர் அந்தரம் என்பதை அமுதத்திற்கு அடைமொழியாக்காது, கரும்பிற்கு அடைமொழியாக்கி, ‘கரும்பை விண்ணுலகத்தினின்று இவ்வுலகத்தின் கண் கொடு வந்து தந்தும்’ என்று உரை வகுத்து விட்டார். இப்பாடலை நன்குணர்ந்து பயிலாத விரிவிலா அறிவினர், இந்நாளில், ‘கரும்பு தமிழ் நாட்டினதன்று’ என்று பிழைபட எழுதி வருகின்றனர்.

கரும்பு தொன்று தொட்டு தமிழ் நாட்டில் பயிரிடப்படுவது. இது முதல் முதலாகத் தென் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கக் கூடும் என்றும், மிகப் பழைய காலந்தொட்டுக் கரும்பு தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வந்தது என்றும் தாவரவியல் அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளனர். இவ்வுண்மை, கோவையிலுள்ள மத்திய அரசின் கரும்பாய்வு மையத்தில் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஆய்வின் விளைவாகும். இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கெல்லாம், பயிரிடுதற்குச் சீர்சால் கரும்புக் கணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், எமதினிய பேராசிரியர் முனைவர் டி. எஸ். இராகவன் அவர்கள் இலண்டன் மாநகரத்துப் பல்கலைக்கழகத்தில், தமது பேராசிரியர் ரகல்ஸ் கேட்ஸ் அவர்களுடனும், சானகி அம்மையார், டார்லிங்ட ன் முதலிய தாவரப் பேராசிரியர்களுடனும் கரும்பில் ‘செல்லியல்’ ஆய்வுகள் மேற்கொண்டனர். இவர்கள் ‘செல்லியல்’ மரபில், எவ்வளவுக்கெவ்வளவு (பேசிக் = Basic) அடிப்படைக்குக் குரோமோசோம் எண்ணிக்கை ஒரு தாவரத்தில் குறைவாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அத்தாவரம் தொன்மையுடையது என்ற மிக நுண்ணிய கோட்பாட்டை உருவாக்கியுள்ளனர். கரும்பில் இந்த எண்ணிக்கை மூன்றேயாகலின், இது மிகத் தொன்மையுடைத்தென்று கண்டனர். இக்கோட்பாடு மேலை நாட்டிலிருந்து வெளியிடப்படும் ‘ஜெனிடிக்ஸ்’ என்ற சஞ்சிகையில், 1950 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. மேலும், இக்காலத்தில் எழுதப் பெற்றுள்ள செல்லியல் நூல்களில் எல்லாம் இக்கோட்பாடு கூறப்படும்.

இங்ஙனமே குன்றிமணியில் யாம் 1952 ஆம் ஆண்டில் ஆய்வு செய்து, இதில் அடிப்படைக் குரோமோசோம் எண்ணிக்கை ஆறெனவும், ‘குன்றி’ தமிழ் நாட்டுக் கொடி எனவும், இது இற்றைக்கு, ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகட்கு முந்தியதாக இருக்கலாம் எனவும் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்விதழில் (Jour. An. univ: vol: XXII) (1961) வெளியிட்டு உள்ளோம். இதன் விரிவைக் ‘குன்றி’ என்னும் தலைப்பில் காணலாம். தாவர அறிவியல் சிறிதும் இல்லாத இந்நாளைய ‘பெரியோர்’ இங்ஙனம் தவறான கருத்துக்களைச் சொல்லாதிருக்கப் பெறின் நன்று!

இனி, கரும்பிற்குப் பிற்காலத்தில் வேழம், கன்னல் என்ற பெயர்கள் வழங்கப்பட்டன. எனினும்,

“கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும் ” -ஐங். 12 : 1

என ஒதப்படுதலின் கரும்பும், வேழமும் வேறாதல் காணலாம். ‘கன்னல்’ என்ற சொல்லை நிகண்டுகள் கரும்புக்குச் சூட்டின. மூங்கில் போன்று கணுக்களைக் கொண்டுள்ளமையால், மூங்கிலுக்குரிய ‘கழை’ என்னும் சொல்லால், கரும்பைக் குறிக்கத் தொடங்கினர். எனினும், ‘கழைக்கரும்பு’ என்று கீரன் எயிற்றியனார் இவற்றை வேறுபடுத்திக் காட்டுவர்.

கரும்பு ஒரு புதர்ச் செடி. இதற்கு நீர் மிகுதியாக வேண்டப்படும். அதனால், நீர்ப் பிடிப்புள்ள வயல்களில் பயிரிடப்படும்.

“. . . . . . . . . . . . அகல் வயல்
 நீடுகழைக் கரும்பின்”
-அகநா. 217 : 3-4
“. . . . . . . . . . . . அகல் வயல்
 கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ”
-அகநா. 235 : 11-12

கரும்பில் பல கணுக்கள் காணப்படும். உயர்ந்து, நீண்டு வளரும் இக்கரும்பு வெள்ளிய நீண்ட கொத்தாகப் பூக்கும். இணரில் அரும்புகள் பசிய தாளால் மூடப்பட்டு இருக்கும். இது கரும்பின் நுனியில் வேல் போலச் செங்குத்தாக இருப்பதையும், சூல் கொண்ட பச்சைப் பாம்பு போலக் கூம்பி இருப்பதையும் கூறுவர் புலவர். அரும்புகள் விரியும் போது, பொதி அவிழ்ந்த பூ வெண்மையாகக் கவரி போன்று காட்சி தரும்,

“. . . . . . . . . . . . கரும்பின்
 வேல்போல் வெண்முகை விரிய”
-நற். 366  : 7-8

“சினைப் பசும்பாம்பின் சூல்முதிர்ப் பன்ன
 கனைத்த கரும்பின் கூம்பு பொதிஅவிழ”
-குறுந். 35 : 2-3

“தோடுகொள் வேலின் தோற்றம் போல
 ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்”
-புறநா. 35 : 9-10


கரும்பின் வெள்ளிய பூக்கள் கோடைக்காலத்தில் வானில் பறக்கும் சிறுபூளை மலர்களைப் போல, மாரிக்காலத்தும் மழைக்குப் பின்னுண்டாகும் வாடைக்காற்றில் பறக்கும் என்கிறார் கீரன் எயிற்றியனார்.

“எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
 துவலை தூவல் கழிய அகல்வயல்
 நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
 கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர”
-அகநா. 217 : 2-5


ஆற்றின் கரைகளில் கரும்பு பூத்துக் காற்றில் அசைந்தாடுவதைக், காவிரிப் பூம்பட்டினத்துக் கடை வீதியில் இரு மருங்கிலும் உயர்த்தப்பட்டு, அசைந்தாடும் துணிக் கொடிகளைப் போன்றதென்பார் உருத்திரங்கண்ணனார். (பட். பா. 161-163)

மெல்லிய வெண்மை நிறமான மணமில்லாத இப்பூக்களை, ஆண் குருவி தன் பேடையின் குஞ்சுப் பேற்றிற்குக் கூடு கட்டும் பொருட்டுக் கோதி எடுக்கும் என்கிறார் தாமோதரனார். இது மணமில்லாத பூவை உடையதாயினும், தீங்கழைக் கரும்பாகத் தன் இனிய சுவைச் சாற்றால் உலகத்திற்கே இனிப்பை வழங்கும் பெருமை உடையது.

“. . . . . . . . . . . . சேவல்
 சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
 தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
 காறா வெண்பூக் கொழுதும்”
-குறுந். 85 : 2-5


புறத்தொழுக்கத்தில் நெடுநாள் ஒழுகி, இது தகாது எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டும் தலைவியுடன் கூடி ஒழுகா நின்ற தலைவன், தோழியோடு சொல்லாடி ‘நீயிர் நினைத்த திறம் யாது?’ என்று கேட்கிறான். அதற்கு அவள்

“. . . . . . . . . . . . யாமே
 பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
 கழனி ஊரன் மார்பு
 பழனம் ஆகற்க என வேட்டோமே”
-ஐங். 4 : 3-6


என்றுரைக்கின்றாள். இந்த அருமையான பாட்டிலே நல்லதொரு நயம் உள்ளது. ‘பூத்துப் பயன்படாத கரும்பினையும், காய்த்துப் பயன்படும் நெல்லினையும் உடைய ஊரனுடைய மார்பு என்றது, ஈண்டு பயன்படாப் பொது மகளிரையும், மகப்பயந்து பயன்படும் குலமகளையும் ஒப்ப நினைக்கும் ஊரனுடைய மார்பு அங்ஙனம் கரும்பையும், நெல்லையும் விளைவிக்கும் பழனமாகற்க என்று யாம் வேட்டோம்’ என்கிறாள் என்பதாம்.

கரும்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : சக்காராம் (Saccharum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆபிசினேரம் (officinarum)
சங்க இலக்கியப் பெயர் : கரும்பு
பிற்கால இலக்கியப் பெயர்கள் : வேழம், கன்னல், கழை, கரும்பு
உலக வழக்குப் பெயர் : கரும்பு
தாவர இயல்பு : நீண்டு, உயர்ந்து 5-20 அடி வரை வளரும். கணுக்களை உடைய புல்.
தண்டு : மண்ணுக்கு அடியில் இதன் தடித்த வேர்பகுதி இருக்கும். இதிலிருந்து ‘கல்ம்’ (culm) எனப்படும் இதன் தண்டாகிய கரும்பு வளரும்.
இலை : செங்குத்தானது. 5 அடி வரை மிக நீளமானது. சற்று 2" அகன்றது. விளிம்பு சற்று உட்புறம் வளைந்து இருக்கும். பசுமையானது. சொரசொரப்பானது. இலை தோன்றும் கணுவில் மெல்லிய ‘விக்யூல்’ தண்டை மூடியிருக்கும். கணுக் குருத்து வளராது
மஞ்சரி : கலப்பு மஞ்சரி. 3 அடி வரை நீளமானது. கிளைகளை உடையது. மிக வெள்ளியது. நீண்ட வெண்மையான பட்டுப் போன்ற மயிரிழைகள் அடர்ந்திருக்கும்.
மலர் : பிளாரெட் (சிறு பூ) எனப்படும். ‘குளும்’ (glume) எனப்படும் உமி-2. ஒரே மாதிரியானவை. வெண்ணிறமானவை. அடியில் சற்றுத் தடித்தும், நுனியில் மெல்லியதாகவும் இருக்கும். புறத்தில் இவை கருமையாக இருக்கும். இதற்குள் வெள்ளையான இரு ‘லெம்னா’ (lemna) இருக்கும். அடியில் உள்ளதில் ஒன்றுமிராது. மேற்புறமுள்ளது நுண்மூக்குடையது. இதில் மலர் உறுப்புகள் காணப்படும்.
லாடிக்யூல் : இரண்டும், மூன்று தாதிழைகளும், சூலகமும் இருக்கும். சூல்தண்டு இரண்டாகப் பிரிந்திருக்கும்.
சூலகம் : இதில் கரு உண்டாகும். இது சற்று நீளமானது. இதுவே தாதுச் சேர்க்கை ஆனதும், விதையாக முதிரும்.

‘கல்ம்’ என்ற இதன் தண்டு கரும்பு ஆகும். இதில் இனிய சாறு உண்டாகும். இச்சாற்றைப் பிழிந்து, காய்ச்சி, வெல்லம், சருக்கரை கூட்டுவர். கரும்பு இந்தியாவிலும், சீலங்காவிலும் பயிரிடப்படுகிறது. கரும்பிலிருந்து சாறு பிழிந்து, எஞ்சிய சக்கை, காகிதம் செய்வதற்குப் பயன்படும். இதன் இலைகள் மக்கிப் போய் நல்ல எருவாகும்.

கரும்பு எந்த நாட்டைச் சேர்ந்ததெனத் தெரியவில்லை என்று ஹூக்கர் கூறுவர். கரும்பின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 60, 80, 90 எனப் பிரெமெர் (1931) என்பாரும் 2n = 80 எனச் சானகி அம்மாள் (1941) நிஷியாமா (1956) என்பாரும், பிறரும் கணக்கிட்டுள்ளனர்.