நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருவாசிரியம்
Appearance
திருவாசிரியம் தனியன்
[தொகு]அருளாப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த
- காசினிதயார் தாம் வாழக் கலி யுகத்தத வந்துதித்து
- ஆசிரியப் பா அதனால் அருமறை நூல் விரித்தாறனத்
- தேதசிகறனப் பராங்குசனைத் திகழ் வகுளத் தாரானை
- மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே
நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாசிரியம்
[தொகு]- செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,
- பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய், திகழ்பசுஞ்சோதி மரகதக் குன்றம்,
- கடலோன் கைமிசைக் கண்வளர்வதுபோல், பீதகஆடை முடிபூண் முதலா
- மேதகு பல்கலன் அணிந்து, சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
- பச்சைமேனி மிகப்பகைப்ப, நச்சுவினைக் கவர்தலை அரவி னமளியேறி,
- எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவனிய னிந்திரன் இவர்முதலனைத்தோர்
- தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
- மூவுலகளந்த சேவடி யோயே. (1) 2578
- உலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,
- அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,
- அமுத வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு
- அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
- மூன்றி னொடுநல்வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? (2) 2579
- குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை
- மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து
- வரைபுரை திரைபொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
- வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே
- இசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே? (3) 2580
- ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,
- யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
- கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
- ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,
- மாயக் கடவுள் மாமுத லடியே. (4) 2581
- மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
- ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
- வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
- மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
- முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே (5) 2582
- ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்
- தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
- தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
- கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
- தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே. (6) 2583
- நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
- யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
- மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
- அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்
- பெருமா மாயனை யல்லது, ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே. (7) 2584