பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



மாகவா, ஏசல் பாணங்களைச் சரமாரியாக ஏவின நிலையில் பூசல்—சதியே கூட—நடை பெற்றிருக்கிறது. ஏன் ? இரு தரப்பினரும், கூசுகின்றனர், கூற. ஆனால் இரு தரப்பினரின் மனமும் குமுறுகிறது! இவ்வளவு வேதனைக்கிடையிலேயும் இந்த வேடிக்கை தெளிவாகவே புலனகிறது.

"ஏனய்யா ஓமந்தூரார் கூடாது என்று கூறுகிறீர்?"

அவர்—அவர்....."இப்படி இழுக்கிறார் எதிர்ப்பாளார்."

"என்ன தான் காரணம் இந்த எதிர்ப்புக்கு?" என்று விடாப் பிடியாகக் கேட்டால் தடு மாற்றத்துடனே தான் பேசுகிறார் எதிர்ப்பாளர், "அவர்—அவர் நல்லவர்—தங்கமானவர்—நாணயஸ்தர்—அவர் மீது ஒரு குறையும் இல்லை....ஆனால்.... என்று எதையோ மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், அவஸ்தைப் படுகிறார்.

அவருக்கு ஆங்கிலம் தெரியாது, என்று ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளாத நிலையிலே உள்ளவர்கள் கூடக் கூறினர்—அது ஒரு காரணமாகாது.

இது போன்ற அர்த்தமற்ற எதையோ கூறினரேயொழிய, உண்மையைக் கூற, அவர்களுக்கு நெஞ்சு உரம் இல்லை, ஏன் ? உண்மையைக் கூறினால் ஊராரின் கண்கள் திறந்து விடும். அப்போது உலுத்தரின் சூது நன்றாகத் தெரிந்து விடும் என்ற அச்சம் எதிர்ப்பாளர்களைப் பிடித்துக் கொண்டது.

ஆச்சாரியாருக்கு முன்பு எதிர்ப்பு ஏற்பட்டது-அவர் ஆகஸ்ட்டுத் துரோகி—ஆணவச்சுபாவக்காரர்—என்று காரணங்கள், பொது மேடைகளிலேயே எடுத்துக் கூறப்பட்டன, காமராஜ் போன்றவர்களால்.

ஆந்திர கேசரி பிரகாசம் அவர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அவர், விஞ்ஞானத் தொழில் முறையை ஒழித்து விடும் நோக்குடன், மில் ஒழிப்புத் திட்டம் கொண்டு வருகிறார் என்று காரணம், கூறப்பட்டது.