பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

19

கிய பிறகும், பாளையக்காரர்கள் பலர் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக அரியலூர், உடையார் பாளையம், பாளையங்களின் கிளர்ச்சி, திருவாங்கூர் மன்னருடன் போர் (1765), மைசூர் மன்னர் ஹைதர் அலி கானுடன் முதல் மைசூர் போர் (1767-69), ஆற்காட்டுப் போர் (1780-82) இவை போன்ற பல இடர்ப்பாடுகள்-தொடர் நிகழ்ச்சிகள், இதற்கிடையில் மறவர் சீமையில் நுழைவதற்காக படை உதவி கோரி, கும்பெனியாருக்கு கடிதம் ஒன்று அனுப்பினார் நவாப். அதில் இவர் குறிப்பிட்டிருந்த காரணங்கள் வினோதமானவையாக இருந்தன.[1]

1. இராமநாதபுரம் மன்னர், நவாப்பின் அனுமதியில்லாமல் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டிக் கொண்டிருப்பது.
2. நவாப்பிற்குச் சொந்தமான பல ஊர்களை தமது சீமையில் சேர்த்து ஆக்கிரமித்து வந்திருப்பது.
3. அந்நியர்களான டச்சுக்காரர்களுக்கு மறவர் சீமையில் தொழில் மையம், பண்டகசாலை ஆகியவைகள் நிறுவ அனுமதி அளித்திருப்பது.
4. நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்று கப்பத்தொகையை இதுவரை செலுத்தாமல் இருந்து வருவது.[2]

இந்த காரணங்கள் அனைத்தும் பொருத்தமற்றவை என்று வரலாறு தெரிந்த யாரும் எளிதில் கூறிவிட முடியும். மறவர் சீமையின் அரசுக் கட்டிலில் அமருவதற்கு அந்த நாட்டு மக்களின் ஒப்புதலைத் தவிர வெளியார் யாரிடமும் சேதுபதி மன்னர் அனுமதி பெறத் தேவையில்லை. அதனைப் போன்றே அந்த நாட்டிற்குள் அந்நியர்கள் தொழில் நடத்த சேதுபதி மன்னர் தான் அனுமதி வழங்க வேண்டுமே தவிர, வெளியாரது அனுமதி எதுவும் தேவையில்லை. டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனியார்,


  1. M. C. C., Vol. 19, 20-2-1771, p. 247 and M. C. C., Vol. 19. 24-3-1771, pp. 119-23.
  2. M. C. C., Vol. 21, 4–2–1772, p. 101-102.