தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்
3. குடியும் படையும்
குடியும் படையும் நாடாளும் அரசனுக்குரிய அங்கங்கள் என்று திருவள்ளுவர் கூறியருளினார். ஆதியில் தமிழகத்தில் எழுந்த குடியிருப்பும் அதனைப் பாதுகாக்க எழுந்த படையிருப்பும் ஊர்ப் பெயர்களால் ஒருவாறு விளங்கும்.
இல்
இக்காலத்தில், இல் என்பது பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிப்பதாகும். ஆயினும், அச்சொல் சில பழமையான ஊர்ப் பெயர்களிற் சேர்ந்திருக்கின்றது. திருச்சி நாட்டிலுள்ள ஊர் ஒன்று, அன்பில் என்னும் அழகிய பெயரைப் பெற்றது. அன்பின் இருப்பிடம் ஆகிய அவ்வூர் இப்பொழுது கீழ் அம்பில் என்று வழங்கும். தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் ஒன்று திருப்பாச்சில். அவ்வூர் இப்பொழுது திருவாசி என்னும் பெயரோடு ஸ்ரீரங்கத்தின் அருகே உள்ளது.
சில பழம் பெயர்களில் அமைந்த இல் என்னும் சொல், இக் காலத்தில் ஊர் என்று மாறியிருக்கக் காணலாம். ஆதியில் திருச்செந்தில் என வழங்கிய ஊர் இப்பொழுது திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகின்றது. தேவாரத்திலும் சாசனத்திலும் மைலாப்பில் என்று கூறப்படும் ஊர் பிற்காலத்தில் மைலாப்பூர் ஆயிற்று. இன்னும் இடை மருதில் என்றும், புடை மருதில் என்றும் பெயர் பெற்ற ஊர்கள் இப்பொழுது முறையே திருவிடை மருதூர் ஆகவும், திருப்புடை மருதூர் ஆகவும் விளங்குகின்றன. தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றாகிய மணவிற் கோட்டத்தின் தலைநகர் மணவில் என்பதாகும். அஃது இப்பொழுது மணவூர் என மாறியுள்ளது.
இன்னும் இல் என்னும் பெயருடைய சில ஊர்கள், பண்டைப் புலவர்கள் பெயரோடு இணைத்துச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றன. அரிசில் என்னும் ஊரிற் பிறந்த புலவர் அரிசில் கிழார் என்றும், அஞ்சில் என்னும் ஊரிலே தோன்றியவர் அஞ்சில் ஆந்தையார் என்றும், பொருந்தில் என்ற ஊரைச் சார்ந்தவர் பொருந்தில் இளங்கீரனார் என்றும், கள்ளில் என்ற ஊரிற் பிறந்தவர் கள்ளில் ஆத்திரைய ரென்றும் பழைய நூல்களிற் குறிக்கப்படுகின்றனர்.
அகம்
அகம் என்னும் சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. அச்சொல்லும் முதலில் வீட்டுக்கு அமைந்து, அப்பால் வீடுகளையுடைய ஊரைக் குறித்தது போலும், திரு ஏரகம் என்பது ஓர் ஊரின் பெயர். அது முருகனது படை வீடுகளில் அகம் ஒன்றாகும். பாண்டி நாட்டில் வைகை யாற்றங்கரையில் திரு ஏடகம் என்னும் ஊர் உள்ளது. இராமநாதபுரத்தில் மருதகம், கையகம் முதலிய பெயருடைய ஊர்கள் காணப்படுகின்றன. திருச்சி நாட்டில் கல்லகம் என்பது ஓர் ஊரின் பெயர்.
உள்
உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். சென்னை மாநகர்க்கு உள் இருபத்தைந்து மைல் தூரத்தில் வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய எவ்வுள் என்னும் ஊர் உள்ளது. திருமங்கை யாழ்வாரும் திருமழிசை யாழ்வாரும் அப்பதியைப் பாடியுள்ளனர். நாளடைவில் திரு எவ்வுள் என்றும், திரு எவ்வுளுர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளுர் என வழங்குகின்றது.
வாயில்
வாயில் என்பது இல்லின்வாய்-வீட்டின்வாய்-என்று பொருள்படும். வாயிலும் சில ஊர்ப் வாயில் பெயர்களில் வழங்கக் காணலாம். கோச் செங்கட் சோழன் தன்னோடு போர் செய்து தோல்வியுற்ற சேர மன்னனைக் குடவாயிற் கோட்டம் என்னும் சிறைக் கோட்டத்தில் அடைத்தான் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. குடவாயில் என்னும் பாடல் பெற்ற பழம்பதி தஞ்சை நாட்டில் உள்ளது. சேர நாட்டை ஆண்ட செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோ என்னும் செந்தமிழ்ச் செல்வர் துறவறம் பூண்டு, வஞ்சி மாநகரின் குணவாயிற் கோட்டத்தில் அமர்ந்து அருந்தவம் புரிந்தார் என்று அவர் வரலாற்றால் அறிகின்றோம். அக் குணவாயில் பிற்காலத்தில் ஓர் ஊராயிற்று.
தஞ்சை நாட்டில் மேலவாசல் என்னும் ஓர் ஊர் மன்னார்குடிக் கருகே அமைந்திருக்கின்றது. சேலம் நாட்டில் தலைவாசல் என்னும் ஊர் காணப் படுகின்றது. புதுக்கோட்டைச் சாசனங்களில் பெருவாயில் நாடு, சிறுவாயில் நாடு, வடவாயில் நாடு என்னும் ஊர்ப் பெயர்கள், வருகின்றன. அவற்றுள் பெருவாயில் நாடு இக் காலத்தில் பெருமாநாடு என வழங்குகின்ற தென்பர். இன்னும் அன்ன வாயில், புன்னை வாயில், காஞ்சி வாயில் முதலிய ஊர்ப்பெயர்கள் கல்வெட்டுகளிலே காணப்படும்.
கொற்ற வாயில் என்னும் பெயருடைய ஊர்களும் ஆங்காங்கு உள்ளன. மன்னனுக்குரிய மாளிகையின் தலைவாயில், பெரும்பாலும் கொற்ற வாசல் என்னும் பெயரால் குறிக்கப்படுவதாகும். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் கொத்தவாசல் என்ற ஊரும், வடமதுரைக் கருகே கொத்தவாசல் சேரி என்ற சிற்றுரும் உண்டு.
தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் அப் பெயரோடு சேர்ந்து பிலவாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந் நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. செங்கற்பட்டைச் சேர்ந்த திருவள்ளுர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது.
முற்றம்
வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் முற்றம் குறிக்கப்பட்டிருக்கிறது. கோக்குள முற்றத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் கோக்குள முற்றனார் என்று பெயர் பெற்றார். கும்பகோணத்துக்கு நான்கு மைல் தூரத்தில் சத்தி முற்றம் என்னும் ஊர் உள்ளது. பழமை வாய்ந்த சத்தி முற்றத்தில் தோன்றிய புலவர் ஒருவர் நாரையைக் குறித்து நல்லதொரு பாட்டிசைத்துத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றார். அவரைச் சத்திமுற்றப் புலவர் என்று தமிழகம் பாராட்டுகின்றது. குடி
குடி என்னும் சொல் ஊர்ப் பெயர்களில் அமைந்து குடியிருப்பை உணர்த்துவதாகும். உறவு முறையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகைய குடியினர் சேர்ந்து வாழுமிடம் குடியிருப்பு என்றும் குடி என்றும் சொல்லப்படும். தஞ்சை நாட்டில் பேரளத்துக் கருகே சிறுகுடி என்னும் ஊர் உள்ளது. இளையான் குடியிற் பிறந்த மாறன் என்ற திருத்தொண்டர் இளையான்குடி மாறன் என்று பெரிய புராணத்தில் பேசப்படுகின்றார். மற்றொரு சிவனடியாராகிய சிறுத்தொண்டர் பிறந்த ஊர் செங்காட்டங் குடியாகும். இன்னும், தேவாரத்தில் கற்குடி, கருக்குடி, விற்குடி, வேள்விக்குடி முதலிய பல குடியிருப்புகள் பாடல் பெற்றுள்ளன. நெல்லை நாட்டில் திருக்குறுங்குடி என்னும் வைணவத் திருப்பதி ஒன்று உண்டு. திராவிட மொழி நூலின் தந்தையென்று புகழப்படுகின்ற கால்டுவெல் ஐயர் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அரும்பணி செய்த இடம் இடையன்குடியாகும்.
இருப்பு ,இருக்கை
இருப்பு, இருக்கை முதலிய சொற்களும், சிறுபான்மையாக ஊர்ப்பெயர்களில் காணப் படுகின்றன. தஞ்சை நாட்டில், புன்னை இருப்பு, வேட்டைக்காரன் இருப்பு முதலிய குடியிருப்புகள் உண்டு. தொண்டை - நாட்டில் உள்ள ஓரிக்கை என்னும் ஊரின் பெயர் ஓரிர விருக்கை என்பதன் சிதைவென்று சொல்லப்படுகின்றது. வாழ்வு,வாழ்க்கை
வாழ்வு, வாழ்க்கை என்னும் சொற்களும் குடியிருப்பைக் குறிப்பன வாகும். பாண்டி நாட்டிலுள்ள பழனி மலைக்கு வழங்கும் பல பெயர்களில் சித்தன் வாழ்வு என்பதும் ஒன்று. தஞ்சை நாட்டில் பாபநாச வட்டத்தில் சித்தன் வாழூர் என்னும் ஊர் இருக்கிறது. இன்னும், எட்டி வாழ்க்கை முதலிய ஊர்ப் பெயர்களில் வாழ்க்கை அமைந்திருக்கக் காணலாம்.
சேரி
பல குடிகள் சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி என்று பெயர் பெற்றது. பள்ளர் வாழுமிடம் பட்சேரி எனப்படும். பறையர் வாழும் சேரி பறைச்சேரி, ஆயர் வாழுமிடம் ஆயர் சேரி; பிராமணர் வாழுமிடம் பார்ப்பனச் சேரி. எனவே, சேரி என்னும் சொல் ஒரு குலத்தார் சேர்ந்திருந்து வாழும் இடத்தினை முற்காலத்தில் குறிப்ப தாயிற்று. சோழ மண்டலக் கரையில் புதிதாகத் தோன்றிய சேரி புதுச்சேரி என்று பெயர் பெற்றது. அவ்வூர்ப் பெயரை ஐரோப்பியர் பாண்டிச்சேரியாகத் திரித்துவிட்டனர். இக் காலத்தில் சேரி என்னும் சொல் இழிந்த வகுப்பினராக எண்ணப்படுகின்ற பள்ளர், பறையர் முதலியோர் வசிக்கும் இடங்களைக் குறிக்கின்றது. ஒவ்வோர் ஊரிலும் சேரி உண்டு. அஃது ஊரின் புறத்தே தாழ்ந்த வகுப்பார்க்கு உரியதாக அமைந்திருக்கின்றது.
ஊரும் தொழிலும்
பயிர்த் தொழிலே பழந் தமிழ் நாட்டில் பழுதற்ற தொழிலாகக் கருதப்பட்டதெனினும்,கைத்தொழிலும் பல இடங்களிற் சிறந்திருந்ததாகத் தெரிகின்றது. நெய்யும் தொழில் தமிழ்நாட்டுப் பழந் தொழில்களில் ஒன்று. பட்டாலும், பருத்தி நூலாலும் கம்பளத்தாலும் நேர்த்தியான ஆடை தொழிலும் நெய்ய வல்ல குலத்தார் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனர் என்று. சிலப்பதிகாரம் கூறுகின்றது.19 இன்னோரன்ன தொழில்கள் நிகழ்ந்த இடங்களைச் சில ஊர்ப்பெயர்களால் அறியலாம்.
கூறை என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். கூறை நெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு கூறை நாடு என்று பெயர் பெற்றது.அந்நாடு இப்பொழுது ஒரு சிற்றுாராகக் கொரநாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒருசார் அமைந்துள்ளது. நெசவுத் தொழிலைச் செய்யும் வகுப்பார் சாலியர் எனப்படுவர். அன்னார் சிறப்புற்று வாழ்ந்த இடங்கள் ஊர்ப் பெயர்களால் விளங்கும். தஞ்சாவூருக்கு அருகே சாலியமங்கலம் என்னும் ஊர் உள்ளது. அங்கு நெசவுத் தொழில் இன்றும் நடைபெறுகின்றது.
பேட்டை
இங்ஙனம், தொழில்களால் சிறப்புறும் ஊர்கள் பேட்டை எனப்படும். சேலத்தின் மேல்பாகத்தில் செவ்வாய்ப் பேட்டை என்னும் சிற்றுர் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் சந்தை கூடும் இடமாதலால், அஃது அப்பெயர் பெற்றது என்பர். திருநெல்வேலிக்கு மேற்கே பேட்டை என்ற பெயருடைய ஓர் ஊர் உண்டு. பலவகையான பட்டறைகள் அங்கு இன்றும் காணப்படும். ஐரோப்பிய இனத்தவருள் போர்ச்சுகீசியரைத் தமிழ் நாட்டார் பறங்கியர் என்று அழைத்தனர். ஆங்கில வர்த்தகக் கம்பெனியார் இந் நாட்டில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்னமே பறங்கியர் வாணிகம் செய்து வளமுற்றிருந் தனர். அவர்களால் திருத்தப்பட்ட ஊர்களில் ஒன்று தென்னார்க் காட்டிலுள்ள பறங்கிப் பேட்டையாகும். சிங்கப்பூர், சிங்களம் முதலிய நாடுகளோடு கடல் வழியாக வர்த்தகம் செய்யும் சோழ மண்டலத் துறைமுகங்களில் பறங்கிப்பேட்டையும் ஒன்று. ஆடை நெய்தலும், பாய் முடைதலும் அங்கு நடைபெறும் கைத்தொழில்கள்.
சென்னை மாநகரத்தில் சில பேட்டைகள் உண்டு. தண்டையார் பேட்டை, வண்ணார் பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை முதலிய இடங்கள் கைத்தொழிலின் சிறப்பினால் பேட்டை என்று பெயர் பெற்றன. தண்டையார்ப் பேட்டையில் இப்பொழுதும் நெய்யுந்தொழில் நடந்து வருகிறது. கம்பெனியார் காலத்தில் சில குறிப்பிட்ட ஆடை களைக் கைத்தறியின் மூலமாகச் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்ட ஊர் சிந்தாதிரிப்பேட்டையாகும்:
தஞ்சை நாட்டிலுள்ள அய்யம் பேட்டையும், அம்மா பேட்டையும் நெசவுத் தொழிலாளர் நிறைந்த ஊர்கள். அய்யம் பேட்டையில் நூலாடையோடு பட்டாடையும், பாயும் செய்யப்படுகின்றன.
மன்னார் கடற்கரையில் முத்துப் பேட்டை என்னும் ஊர் உளது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் முன்னாளில் அங்கே சிறந்திருந்தார்கள். முத்து வேலை நிகழ்ந்த இடம் முத்துப் பேட்டையென்று பெயர் பெற்றது. இப்பொழுது அங்குள்ள மகமதியர் சங்குச் சலாபத்தை நடத்தி வருகின்றார்கள்.
வட ஆர்க்காட்டிலுள்ள வாலாஜா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும்.12 பதினெட்டு பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந் நகரம் பஞ்சு வியாபாரத்திலும், கூல வாணிகத்திலும் முன்னணியில் நின்றது.இக் காலத்தில் வாணிகம் குறைந்து விட்டாலும், கைத்தொழில் நடைபெற்று வருகின்றது.
சாலை
பாண்டி நாட்டில் கொற்கைத்துறை பழங்காலத்தில் சிறந்திருந்த தன்மையை முன்னரே கண்டோம். வாணிபம் செழித்தோங்கி வளர்வதற்கு நாணய வசதி வேண்டும். ஆதலால், கொற்கை மூதூரின் அருகே அக்க சாலை யொன்று அமைக்கப் பெற்றது. நாணயம் அடிக்கும் இடமாகிய அக்க சாலையை உடைய ஊரும் அக்க சாலை என்று பெயர் பெற்றது. முதற் குலோத்துங்க சோழன் சாசனத்தில் அக்க சாலை ஈச்சுர முடையார் கோவில் குறிக்கப்படுதலால், பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அவ்வூர் அழிவுறாது இருந்தது என்பது விளங்கும். இச்சாசனம் அக்கசாலைப் பிள்ளையார் கோவிலிற் காணப்படுகின்றது.
பழமையும் புதுமையும்
சில ஊர்களின் பழமையும் புதுமையும் அவற்றின் பெயர்களால் அறியப்படும். நெல்லை நாட்டில் பழவூர் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரத்தில் பழையாறை என்னும் ஊர் பாடல் பெற்றுள்ளது. இராமநாதபுரத்தில் பழையகோட்டை என்னும் ஊர் உண்டு. புதிதாகத் தோன்றும் ஊர்கள், புது என்னும் அடை மொழியைப் பெரும்பாலும் பெற்று வழங்கும். புதுக் கோட்டை, புதுச்சேரி, புதுக்குடி, புதுக்குளம், புதுப்பேட்டை, புதுவயல் முதலிய ஊர்ப் பெயர்களால் அவ்வூர்கள் புதிதாக வந்தவை என்பது போதரும்.
கிழக்கும் மேற்கும்
சில ஊர்களின் திசையை அவற்றின் பெயரால் நன்கறிதல் கூடும். இலக்கியத் தமிழில் குணக்கு என்பது கிழக்கு குடக்கு என்பது மேற்கு. இவ்விரு சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படும். ஒரு காலத்தில் சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய ஜெயங்கொண்ட சோழபுரத்துக்குப் பத்து மைல் தூரத்தில் உள்ள ஊர் குணவாசல் என்று பெயர் பெற்றுள்ளது. தஞ்சை நாட்டில் குடவாசல் என்பது ஓர் ஊரின் பெயர். முன்னாளில் சிறந்து விளங்கிய ஒரு நகரத்தின் மேற்குத் திசையில் அவ்வூர் அமைந்தது போலும் இன்னும், குடகு என்னும் நாடு தமிழ் நாட்டில் மேற்கு எல்லையாக விளங்கிற்றென்று இடைக் காலத் தமிழ் இலக்கணம் கூறுகின்றது. தமிழகத்தின் மேற்றிசையில் அமைந்த காரணத்தால் தமிழ் நாட்டார் அதனைக் குடகு என்று அழைத்தார்கள். கிழக்கு, மேற்கு என்னும் சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன. நாகப்பட்டினத்துக்கு அருகேயுள்ள வேளுர், கீழ் வேளுர் என்று அழைக்கப்படுகின்றது. அவ்வூரின் பெயர் இப்பொழுது கீவளுர் என்று சிதைந்துள்ளது.
மலாடு என்னும் பழைய நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் கீழுர் ஆகும். பாண்டி நாட்டுக் கரையில் உள்ள கீழக்கரை என்னும் துறையும், மதுரையிலுள்ள கீழக்குடி என்னும் ஊரும் திசைப் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன.மதுரையிலுள்ள மேலூரும், வட ஆர்க்காட்டிலுள்ள மேல்பாடியும் இன்னோரன்ன பிறவும் மேற்குத் திசையைக் குறிப்பன வாகும்.
வடக்கும் தெற்கும்
இங்ஙனமே வடக்கும் தெற்கும் சில பெயர்களில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டுக்கு வடக்கேயுள்ள நாட்டை வடுகு என்றழைத்தனர் பண்டைத் தமிழர். “வடதிசை மருகின் வடுகு வரம்பாக" என்று பாடினார் ஒரு பழம் புலவர். வடபாதி மங்கலம் முதலிய ஊர்களிலும் வடக்கைக் காணலாம். தமிழகத்தின் தென்பால் அமைந்த பாண்டிநாடு, தென்னாடு என்று பெயர் பெற்றது.அந்நாட்டிலுள்ள தென்காசி, தென்திருப்பேரை முதலிய ஊர்கள் தெற்கே எழுந்தவை என்பது வெளிப்படை.
தலை,இடை,கடை
இன்னும் ஊர்களின் அமைப்பைக் கருதி, தலை, இடை, கடை என்னும் அடைமொழிகள் அவற்றின் பெயரோடு இணைக்கப்படுவதுண்டு.தலையாலங் கானம், தலைச்செங்காடு என்னும் பாடல் பெற்ற ஊர்களின் பெயரில் தலையென்னும் அடைமொழி அமைந்துள்ளது. சேலம் நாட்டில் தலைவாசல் என்பது ஓர் ஊர். தஞ்சையில் தலைக்காடு என்னும் ஊரும், ஆர்க்காட்டில் தலைவாய் நல்லூர் என்னும் ஊரும் காணப்படுகின்றன.
இடையென்னும் அடைமொழியைக் கொண்ட ஊர்களில் மிகப் பழமை வாய்ந்தன திருவிடை மருதூர், திருவிடைச்சுரம், இடையாறு முதலியனவாம். இவை மூன்றும் தேவாரப் பாடல் பெற்றுள்ளன. இடைக்காடு என்ற ஊரிலே பிறந்த புலவர் ஒருவர் இடைக்காடர் என்று பண்டை இலக்கியத்தில் பேசப்படுகின்றார். அரிசில் ஆற்றுக்கும் திருமலைராயன் ஆற்றுக்கும் இடையேயுள்ள ஊர், இடையாற்றங்குடி என்னும் பெயர் பெற்றுளது. இன்னும், இடையென்று பொருள்படுகின்ற நடு என்னும் சொல், நெல்லை நாட்டிலுள்ள நடுவக்குறிச்சி, சோழ நாட்டிலுள்ள நடுக்காவேரி முதலிய ஊர்களின் பெயரில் அமைந்திருக்கக் காணலாம்.
இனி, கடையென்னும் அடையுள்ள ஊர்ப் பெயர்கள் சில உண்டு. சேலம் நாட்டிலுள்ள கடைக் கோட்டுரும், தென் ஆர்க்காட்டிலுள்ள கடைவாய்ச் சேரியும், நெல்லை நாட்டிலுள்ள கடையமும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
பெரியதும் சிறியதும்
பெருக்கமும் சுருக்கமும் சில ஊர்ப் பெயர்களிலே பொருந்தி நிற்கக் காணலாம். கொங்கு நாட்டில் முற்காலத்தில் பெரியதோர் ஊராக விளங்கியது பேரூர் . ஆகும். தஞ்சை நாட்டிலுள்ள பேரளம் என்னும் ஊரும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பெரும் புலியூரும் பெரிய ஊர்களாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகின்றது. சிறிய ஊர்கள் சிற்றூர் என்று பெயர் பெற்றன. அத்தகைய சிற்றுார்களில் ஒன்று இப்பொழுது சித்தூர் என்னும் பெயரோடு ஒரு ஜில்லாவின் தலைநகராக விளங்குகின்றது. வட ஆர்க்காட்டில் சிற்றாமூர் என்னும் பெயருடைய ஊர் சமணர்களால் பெரிதும் போற்றப்படுவதாகும். பழைய சிவ ஸ்தலங்களில் ஒன்று சிற்றேமம் என்று பெயர் பெற்றது. அது திரு என்னும் அடை கொண்டு திருச்சிற்றேமம் ஆயிற்று. நாளடைவில் அப்பெயர் திரிந்து திருச்சிற்றம்பலம் என வழங்குகின்றது.
நெடுமையும் குறுமையும்
சில ஊர்களின் நெடுமையும் குறுமையும் அவற்றின் பெயர்களால் அறியப்படும். நெடுங்களம் என்பது தேவாரத்திற் பாடப் பெற்றுள்ள பெரிய நகரம். திருநாவுக்கரசர் அவ்வூரை நெடுங்கள மாநகர் என்று பாடியுள்ளார். அவ்வூரின் பெயர் இப்பொழுது திருநெடுங்குளம் என வழங்கு கின்றது. மாயூரத்துக்கு அருகேயுள்ள நீடூர் என்னும் ஊர் பழங்காலத்தில் பெரியதோர் ஊராக இருந்திருத்தல் வேண்டும் எனத் தோன்றுகிறது. நெல்லை நாட்டிலுள்ள திருப்பதிகளில் ஒன்று குறுங்குடி என்பதாகும். அஃது ஆழ்வாரது மங்களாசாசனம் பெற்றமையால் திருக்குறுங்குடி ஆயிற்று. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த குறும்புலி யூரிலும், தொண்டை நாட்டுக் குறுங்கோழியூரிலும் குறுமை அமைந்திருக்கக் காண்கிறோம்.
செம்மை,கருமை,வெண்மை
செம்மை, கருமை முதலிய நிறங்கள் சில ஊர்ப் பெயர்களில் விளங்குகின்றன. தஞ்சை நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊர் உள்ளது. செந்நிறக் காட்டின் இடையே அமைந்த குடியிருப்பு, செங்காட்டங்குடி என்று பெயர் பெற்றது போலும். காவிரிப்பூம் பட்டினத்தின் அருகே தலைச்செங்கானம் என்னும் பெயருடைய ஊர் உண்டு. தேவாரத்திலும் சங்க இலக்கியத்திலும் அவ்வூர் குறிக்கப்படுகின்றது. செந்நிறத்தால் பெயர் பெற்ற குன்றுகளில் ஒன்று சேலம் நாட்டிலுள்ள செங்குன்று. அச்சிகரத்தின் பெயராகிய திருச்செங்கோடு என்பது இன்று ஊர்ப் பெயராக வழங்குகின்றது.சேர நாட்டில் செங்குன்று என்னும் வைணவத் திருப்பதி நம்மாழ்வாரால் பாடப்பட்டுள்ளது. இந்நாளில் அது செங்கன்னுர் என்னும் பெயரால் குறிக்கப்படுகின்றது. அருணாசலம் என்ற வட சொல்லின் பொருள் செங்குன்றம் என்பதே யாகும். அருணாசலம் திருவண்ணாமலையின் மறு பெயர். இன்னும், செங்குளம், செங்களக்குறிச்சி முதலிய ஊர்ப் பெயர்கள் செம்மையின் அடியாகப் பிறந்தவை. அவ்வாறே கருங்குளம், கருங்குழி, கார் குறிச்சி முதலிய ஊர்ப் பெயர்களில் கருமை அமைந்திருக்கக் காணலாம்.
நிலத்தின் நிறம் பற்றி எழுந்த ஊர்ப் பெயர்கள் பலவாகும். கருநிறம் வாய்ந்த தரை கரிசல் எனப்படும். பாண்டி நாட்டில் சின்னக் கரிசல், குலையன் கரிசல் முதலிய ஊர்கள் உள்ளன. செந்நிறம் வாய்ந்த நிலம் செவ்வல் என்று பெயர் பெறும். தென்னாட்டில் மேலச் செவல், கீழச் செவல், முள்ளிச் செவல் முதலிய ஊர்கள் உண்டு.19 வெண்மையின் அடியாகப் பிறந்த ஊர்ப் பெயர்களும் உள்ளன. திருவெண்காடு, திருவெண்பாக்கம், திருவெள்ளறை முதலியன அவற்றிற்குச் சான்றாகும்.
மேடும் பள்ளமும்
சில குடியிருப்புகளின் தன்மையை அவற்றின் பெயர்கள் அறிவிக்கின்றன. மேட்டில் அமைந்த ஊர்களையும் பள்ளத்தில் அமைந்த ஊர்களையும் அவற்றின் பெயர்களால் உணரலாம். சோழ மண்டலக் கரையில் அமைந்துள்ள கள்ளிமேடு என்னும் ஊர் முற்காலத்தில் கள்ளிகள் அடர்ந்து மேடாக இருந்த இடமென்று தெரிகின்றது. புதுச்சேரிக்கு வடக்கே கடற்கரையில் கூனிமேடு என்னும் ஊர் உள்ளது. இன்னும் சேலத்திலுள்ள மேட்டுரும், நீலகிரியிலுள்ள மேட்டுப் பாளையமும் மேடான இடங்களில் அமைந்த ஊர்களே யாகும்.
திட்டை,திடல் முதலிய சொற்களும் மேட்டைக் குறிப்பனவாம். தஞ்சை நாட்டில் திட்டை என்பது ஓர் ஊர். இன்னும், நடுத்திட்டு, மாளிகைத் திடல், பிள்ளையார் திடல், கருந்திட்டைக்குடி முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டில் உண்டு.
பள்ளம் என்னும் சொல் பல ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளது. பெரும் பள்ளம், இளம் பள்ளம், ஆலம் பள்ளம், எருக்கம் பள்ளம் முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டில் உள்ளன. நெல்லை நாட்டிலுள்ள முன்னிப் பள்ளமும், இராமநாதபுரத்திலுள்ள பள்ளத்தூரும் பள்ளத்தாக்கான இடங்களில் அமைந்திருந்த ஊர்கள் போலும்! குழி என்னும் சொல்லும் பள்ளத்தைக் குறிக்கும். கருங்குழி, ஊற்றுக்குழி, அல்லிக்குழி, பள்ளக்குழி, குழித்தலை முதலிய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில் அமைந்துள்ளன. இன்னும், பள்ளத்தைக் குறிக்கும் தாழ்வு என்னும் சொல் தாவு எனச் சிதைந்து சில ஊர்ப் பெயர்களிலே வழங்குகின்றது. கருங்குழித்தாவு, பணிக்கத் தாவு முதலிய ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
தாளும் அடியும்
பழங்காலத்தில் மரங்களின் அடியில் சில குடியிருப்புகள் தோன்றி, ; நாளடைவில் ஊர்களாயிருக்கின்றன. அவ்வூர்களின் வரலாறு அவற்றின் பெயரால் விளங்கும். திருப்பனந்தாள் என்னும் பழம்பதி பனங்காட்டில் எழுந்த ஊராகத் தெரிகின்றது. சேலம் நாட்டில் முருகந்தாள் என்பது ஓர் ஊரின் பெயர். நெல்லை நாட்டில் ஆலந்தாள், ஈச்சந்தாள், கருவந்தாள் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. தாள் என்ற பொருளைத் தரும் அடி என்னும் சொல் மாவடி, ஆலடி, இலவடி, மூங்கிலடி முதலிய ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளது.
நத்தம்
ஊர்ப் பொதுவாக அமைந்த இடம் நத்தம் எனப்படும். அத்தகைய இடம் குடியிருப்பாக மாறிய பின்னரும் பழைய பெயர் எளிதாக மறை வதில்லை. நெல்லை நாட்டிலுள்ள கீழ் நத்தம் மேல நத்தம் என்னும் ஊர்களும், மதுரையிலுள்ள பிள்ளையார் நத்தமும், தென் ஆர்க்காட்டிலுள்ள திருப்பணி நத்தமும் செங்கற்பட்டிலுள்ள பெரிய நத்தமும் இதற்குச் சான்றாகும். சேலம் நாட்டு நாமக்கல் வட்டத்தில் வெட்டை வெளியான இடத்தில் ஒரு நத்தம் எழுந்தது. அது பொட்டல் நத்தம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் அப் பெயர் தேய்ந்து சிதைந்து பொட்டணம் ஆயிற்று. பழைய பொட்டலும் நத்தமும் இப்போது பொட்டணத்தில் அமைந்திருத்தலைக் காண்பது ஒரு புதுமையாகும்.
களம்
இனி, களம் என்ற சொல்லால் குறிக்கப்படும் ஊர்கள் சிலவற்றைக் காண்போம். பொதுவாகக் களம் என்பது சமவெளியான இடத்தைக் குறிக்கும். சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருவேட்களம் என்னும் ஊர் தேவாரப் பாடல் பெற்றுள்ளது. ஈசனாரிடம் பாசுபதாஸ்திரம் பெறக்கருதிய அர்ச்சுனன் அவர் அருளைப் பெறுதற்கு நெடுங்காலம் வேட்ட களம் திருவேட்களம் என்று பெயர் பெற்ற தென்பர். அக்களமே இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடமாக அமைந்திருக்கின்றது. சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக் களம் சேரமான் பெருமாள் காலத்தில் சிறந்ததோர் திருநகராக விளங்கிற்று. அஞ்சைக் களத்தில் அமர்ந்த ஈசனைச் சேரமான் தோழராகிய சுந்தரர் பாடிப் பரவினார். இன்னும், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற நெடுங்களம் என்னும் நகரின் சிறப்பினை முன்னரே கண்டோம்.
களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த களத்தூர் என்பதும் ஊர்ப் பெயராகக் காணப்படுகின்றது. புகழேந்திப் புலவர் என்னும் தமிழ்க் கவிஞர் பிறந்த ஊர் களத்துராகும். ஏனைய களத்தூர்களுக்கும் அவர் பிறந்த களத்துருக்கும் வேற்றுமை தெரிதற்காகப் பொன் விளைந்த களத்தூர் என்று அவ்வூரைக் குறித்துள்ளார்கள்.
வெளி
வெளி என்னும் சொல் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. நாகபட்டினத்துக்கு அருகே வடக்குவெளி என்னும் ஊர் உண்டு.சங்ககாலத்துப் புலவரில் இருவர், வெளி என்னும் பெயருடைய ஊர்களில் பிறந்ததாகத் தெரிகின்றது. எருமை வெளியனார் என்பது ஒருவர் பெயர். வீரை வெளியனார் என்பது மற்றொருவர் பெயர். அவ் விருவரும் முறையே எருமை வெளியிலும், வீரை வெளியிலும் பிறந்தவரென்பது வெளிப்படை.
அரணும் அமர்க்களமும்
தமிழகத்தில் முன்னாளில் கோட்டை கொத்தளங்கள் பல இருந்தன. அரசனுக்குரிய மனை அரண்மனையென்று அழைக்கப்பட்டது. அரண் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களால் அறியலாம்.
எயில்
எயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். ஆகாய வழியாகச் செல்லும் கோட்டை போன்ற விமானங்களைத் 'தூங்கு எயில்' என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது.தொண்டை நாட்டில் பண்டை நாளில் இருந்த இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று எயில் கோட்டம் என்று பெயர் பெற்றிருந்தது. அக்கோட்டத்திலே தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சி மாநகரம் விளங்கிற்று. அக்காரணத்தால் காஞ்சியை எயிற்பதி என்று சேக்கிழார் குறித்துப் போந்தார். காஞ்சி மாநகரத்தின் பழைய வடிவம் ஓர் அழகிய பாட்டிலே காட்டப்படுகின்றது.
“ஏரி யிரண்டும் சிறகா எயில்வயிறாக்
காருடைய பீலி கடிகாவாச் - சீரிய
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு”
என்பது அப்பாட்டு. ‘காஞ்சி நகரம் ஓர் அழகிய மயில் போன்றது. எயில் அம் மயிலின் உடல்; ஏரி அதன் சிறகு; அத்தியூர் அதன் வாய், அடர்ந்த காடு அதன் தோகை என்பது அப்பாட்டின் கருத்து. எனவே, காஞ்சிபுரம் ஒரு மயில் கோட்டையாக விளங்கிற்றென்பது நன்கு அறியப்படும்.
பண்டை நாளில் பாண்டி நாட்டில் எயில்கள் பல இருந்தன. பூதப் பாண்டியனுடைய சிறந்த நண்பனாகிய சிற்றரசன் ஒருவன் எயில் என்ற ஊரில் இருந்து ஆண்ட செய்தி ஒரு பழம் பாட்டால் தெரிகின்றது. மன்னெயில் ஆந்தை என்று பாண்டியன் அவனைக் குறித்தலால் நிலை பெற்ற கோட்டையாக அவனது எயில் விளங்கியிருத்தல் வேண்டும் என்று தோற்றுகின்றது.
பழங்காலத்தில் சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் என்னும் நகரம் விளங்கிற்று. அவ்வூரில் சோழ மன்னர்கள் அரசு வீற்றிருந்த செய்தியைச் சேக்கிழார் வாக்கால் அறியலாகும். அக்காலத்தில் அஃது அரண் அமைந்த சிறந்த நகரமாக இருந்ததென்பது சில அடையாளங்களால் அறியப்படும். பேரெயில் என்னும் பெயருடைய ஒரு கோட்டை அதன் அருகே இருந்தது. அக் கோட்டையைச் சுற்றி ஒரு சிற்றுார் எழுந்தது. அவ்வூர் பேரெயிலூர் என்று பெயர் பெற்றது. இந் நாளில் அப்பெயர் சிதைந்து பேரையூர் என வழங்குகின்றது.
பாண்டி நாட்டில் கானப் பேரெயில் என்னும் பெருங்கோட்டை இருந்தது. வேங்கை மார்பன் என்று பெயர் பெற்ற வீரன் ஒருவன் அக் கோட்டையின் தலைவனாக விளங்கினான். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அவன் மீது படையெடுத்துச் சென்று கானக் கோட்டையைக் கைப்பற்றிய செய்தி சங்க இலக்கியங்களிற் கூறப்படு கின்றது. அவ் வெற்றியின் காரணமாக அம் மன்னன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் உயரிய பட்டம் பெற்றான்.
கானப் பேரெயிலுக்கு அணித்தாக ஏழெயில் என்னும் கோட்டை ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது. ஒருகால் அக் கோட்டையைக் கைப்பற்றிய நலங்கிள்ளியென்ற சோழனை,
“தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும் ஏழெயிற் கதவம் எறிந்துகைக் கொண்டுநின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை"
என்று கோவூர் கிழார் புகழ்ந்து பாடியுள்ளார். இராமநாதபுரத்துச் சிவகங்கை வட்டத்தில் உள்ள ஏழுபொன் கோட்டை என்ற ஊரே பழைய ஏழெயில் என்பர்.
நெல்லை நாட்டில் ஆழ்வார் திருநகரிக்கு அருகே ஒரு பேரெயில் இருந்ததாகத் தெரிகின்றது. அக்கோட்டை நகரத்தில் திருமால் கோயில் கொண்டருளினார். ஆதலால், அவ்வூர் திருப்பேரெயில் என்று அழைக்கப்பட்டது. திருப்பேரை என்பது அப்பெயரின் குறுக்கம். வைணவத் திருப்பதிகளில் வடநாட்டில் திருப்பேர் நகர் ஒன்று இருத்தலால், இதனைத் தென் திருப்பேரை என்று அழைத்தார்கள். தென் திருப்பேரி என்பது இன்று அவ்வூர்ப் பெயராக வழங்குகின்றது. இன்னும், வட ஆர்க்காட்டிலுள்ள செஞ்சிக் கோட்டையின் அருகே எய்யல் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உண்டு. எயில் என்பதே எய்யல் எனச் சிதைந்துள்ளது.
அகழி
சேலம் நாட்டு ஆற்றுர் வட்டத்திலுள்ள ஆறகளூர் முற்காலத்தில் சிறந்ததொரு கோட்டையாக விளங்கிற்று. அங்குள்ள திருக்காமேச்சுரம் என்னும் சிவாலயத்திற்குப் பெருநில மன்னரும், குறுநில மன்னரும் அளித்த நன்கொடைச் சாசனங்களிலே அவ்வூருக்கு அண்மையில் பெரியாரை என்னும் பெயருடைய கோட்டையொன்று இருந்தது. அதன் அடையாளம் இன்றும் காணப்படுகின்றது. இப்போது அந்த இடம் பெரியேரி என்று வழங்குகின்றது.
இஞ்சி
கோட்டையின் மதிற்சுவர் இஞ்சி என்ற சொல்லாற் குறிக்கப்படும். பாண்டி நாட்டில் மதுரைக்கு அண்மையில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்னும் ஊர்கள் உள்ளன. பழஞ்சி என்பது பழ இஞ்சி என்பதன் சிதைவாகத் தோன்றுகின்றது. இவற்றால் பண்டைய நகரத்தின் கோட்டை மதில்களின் எல்லையை ஒருவாறு அறிந்துகொள்ளலாகும். நெல்லை நாட்டில் நாங்குனேரிக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் பெரும் பழஞ்சி, சிறு பழஞ்சி என்னும் இரண்டு ஊர்கள் உண்டு. அவை பழங் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. இக் காலத்தில் பெரும் பழஞ்சிக்கு வழங்கும் தளபதி சமுத்திரம் என்னும் பெயரும் அவ்வூரின் வீரத் தன்மையை விளக்குகின்றது.
ஆரை
ஆரை என்னும் சொல்லும் கோட்டையின் மதிலைக் குறிப்பதாகும். சேலம் நாட்டில் ஆரைக்கல் என்னும் கோட்டை உண்டு. அங்குள்ள பாறையின் மீது பெருமாள் கோவில் எழுந்து சிறந்தது. பெருமாளுடைய திருநாமம் ஆரைக்கற் பாறையில் போடப்பட்டது. அக்காரணத்தால் ஆரைக்கல் என்னும் பழம் பெயர் மாறி நாமக்கல் என்னும் பெயர் அவ்வூருக்கு அமைவதாயிற்று. அஃது இரு பகுதிகளையுடையதாய் விளங்குகின்றது. ஒன்று கோட்டை மற்றொன்று பேட்டை கோட்டை இரு நூறடி உயரமுள்ள பாறையின் உச்சியில் உள்ளது. அரைமைல் சுற்றளவுடைய கோட்டையின் மதில்கள் இன்றும் காணப்படுகின்றன. பேட்டையே ஊராக விளங்குகின்றது.
கிடங்கில்
அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும். பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன் என்ற சிற்றரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண் செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும் துர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில் திண்டிவனம் இப்போது சிறந்து திகழ்கின்றது.
படைவீடு
அரசனுக்குரிய படைகள் அமைந்த இடம் படைவீடு எனப்படும். தமிழ் நாட்டார் வீரத்தெய்வமாக வழிபடும் முருகன் ஆறு சிறந்த படை வீடுகளில் அமர்ந்து அருள் புரிகின்றான் என்பர். நெல்லை நாட்டில் பாண்டியனுக்குரிய படை வீடு ஒன்று பொருநை யாற்றின் கரையில் இருந்தது. மணப்படை வீடு என்பது அதன் பெயர். இப்பொழுது மணப்படை என்று வழங்கும் அவ்வூரின் அருகேயுள்ள கொட்டாரம், செப்பறை என்னும் சிற்றுர்கள் அதன் பழம் பெருமைக்குச் சான்று பகர்கின்றன. பாண்டி நாட்டின் பண்டைத் துறைமுக நகரமாகிய கொற்கைக்கு மணப்படை வீடு ஒரு சிறந்த பாதுகாப்பாக அமைந்திருந்ததென்று கருதலாகும்.
வட ஆர்க்காட்டில் ஆரணி என்னும் ஊருக்கு மேற்கே ஆறு மைல் தூரத்தில் படைவீடு என்ற பெயருடைய சிறந்த நகரம் ஒன்று இருந்தது. குறும்பர் குலத்தைச் சேர்ந்த அரசர்கள் அதனைத் தலைநகராகக் கொண்டு நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர்; அந்நாளில் அப் படைவீடு பதினாறு மைல் சுற்றளவுடையதாய், கோட்டை கொத்தளங்களோடு விளங்கிற்று. சோழ மன்னர் குறும்பரை வென்று அவர் படைவீட்டை அழித்தனர் என்று சரித்திரம் கூறும். இன்று அந் நகரின் பண்டைப் பெருமையொன்றும் காணப்பட வில்லை. இடிந்து விழுந்த மதில்களும், எருக்கும் குருக்கும் அடர்ந்த காடுகளும் பழைய படைவீட்டின் எல்லை காட்டி நிற்கின்றன. மண் மாரியால் அவ்வூர் அழிந்து விட்டதென்று அங்குள்ளார் கூறுவர்.
பாளையம்
படைவீரருக்குரிய ஊர் பாளையம் எனப்படும். தமிழகம் முழுமையும் பல பாளையங்கள் காணப்படினும் சிறப்பாகக் கொங்கு நாடே பாளையத்திற்குப் பேர் பெற்ற நாடாகும். பாளையத்தின் தலைவன் பாளையக்காரன் என்று அழைக்கப்படுவான். மேட்டுப்பாளையம், கோபிச்செட்டி பாளையம், உத்தம பாளையம், உடையார் பாளையம், இராஜ பாளையம் முதலிய பாளையங்கள் தமிழ் நாட்டில் உண்டு. திருநெல்வேலிக்கருகே பாளையங் கோட்டை என்னும் ஊர் உள்ளது. அதற்கு மேற்கேயுள்ள பாளையம் மேலப் பாளையம் என்று பெயர் பெற்றது.
வல்லம்
வல்லம் என்ற சொல்லும் அரணுடைய ஊரைக் குறிப்பதாகத் தெரிகின்றது. வட ஆர்க்காட்டிலுள்ள திருவல்லம் என்னும் ஊர் பாண மன்னர்களுக்குரிய கோட்டைகளில் ஒன்றாக விளங்கிற்று. அஃது ஒரு சிறந்த படை வீடாகப் பத்தாம் நூற்றாண்டில் விளங்கிய பான்மை சாசனங்களால் அறியப்படும்.
தஞ்சாவூருக்குத் தென் மேற்கே ஏழு மைல் தூரத்தில் மற்றொரு வல்லம் உண்டு. இக் காலத்தில் அழிந்த அகழிகளே யன்றி, அதன் பழம் பெருமையை அறிதற்குரிய அடையாளம் ஒன்றும் அங்கு இல்லை. தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. வல்லத்தில் அரசு புரிந்த குடியினர் வல்லத்தரசு என்னும் பட்டம் பெற்றனர். வல்லம் சீரிழந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்து விட்டார்கள்.
கோட்டை
கோட்டை என்பது அரணைக் குறிப்பதற்கு பெரும் பான்மையாக எங்கும் வழங்கும் சொல்லாகும். முற்காலத்தில் மண்ணால் அமைந்திருந்த கோட்டைகளும், பிற்காலத்தில் கல்லாற் கட்டப்பட்ட கோட்டைகளும் இன்றும் பல இடங்களிற் காணப்படுகின்றன. பாண்டி நாட்டில் நிலக்கோட்டை என்பது ஓர் ஊரின் பெயர்.அங்குப் பாளையக்காரன் ஒருவன் கட்டிய மட்கோட்டை இன்றும் உள்ளது. நிலக்கோட்டையின் அருகே சிறு மலையின் சாரலில் குலசேகரன் கோட்டை என்னும் ஊர் உண்டு. பாண்டி மன்னனாகிய குலசேகரன் பெயரை அக்கோட்டை தாங்கி நிற்கின்றது. இன்னும், நிலக் கோட்டைக்கு அண்மையிலுள்ள மற்றொரு கோட்டை தொடியன் கோட்டை என்று பெயர் பெற்றுள்ளது. வடுகர் இனத்தைச் சேர்ந்த தொட்டியத்தலைவன் ஒருவன் அக்கோட்டையைக் கட்டுவித்தான் என்பர்.
மதுரையைச் சேர்ந்த திருமங்கலத்துக்கு அண்மையில் கீழக் கோட்டை, மேலக் கோட்டை, நடுக் கோட்டை என மூன்று கோட்டைகள் அமைந்துள்ளன. தொண்டைமான் குலத்தினர் ஆளும் நாடு புதுக்கோட்டை என்று அழைக்கப்படுகின்றது. தொண்டைமான் ஆட்சியைத் தோற்றுவித்த இரகுநாதன் என்பவர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,புதிதாக ஒரு கோட்டை கட்டி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயரிட்டார். அவர் காலத்தில் அது தலைநகரமாகச் சிறந்திருந் தமையால், அக்கோட்டையின் பெயரே நாட்டின் பெயராயிற்று. இன்னும், பட்டுக் கோட்டை, தலைவன் கோட்டை, உக்கிரன் கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களில் கோட்டை என்னும் சொல் அமைந்திருக்கக் காணலாம்.
துர்க்கம்
மலைகளில் அமைந்த கோட்டை, துர்க்கம் என்று பெயர் பெறும். தமிழ் நாட்டில் சில துர்க்கங்கள் உண்டு. ஆர்க்காட்டு வள்ளிமலைக்கருகேயுள்ள நெடிய குன்றத்தில் அமைந்த கோட்டை மகி மண்டல துர்க்கம் என்று குறிக்கப்படுகின்றது. அம்மலை மூன்று திசைகளில் செங்குத்தாக ஓங்கி நிற்கின்றது. மற்றைய திசையும் மதிற் சுவர்களால் செப்பமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
காவல்
இன்னும், பெருங் கோட்டைகளைப் பாதுகாப்பதற்கும், பகைவர் வருகையை அறிந்து தெரிவித்தற்கும் சில அமைப்புகள் முற்காலத்தில் இருந்தன. அவை கோட்டையின் பாதுகாப்புக்காக ஏற்பட்டமையால் காவல் என்று பெயர் பெற்றன. கோயம்புத்துரைச் சேர்ந்த நடுக் காவல் என்னும் ஊரும், செங்கற்பட்டிலுள்ள கோட்டைக் காவலும், உத்தர கெடிக்காவலும் இத்தன்மை வாய்ந்தன என்பது தெரிகின்றது. வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஆம்பூர் என்பது சாசனங்களில் ஆண்மையூர் என்று பெயர் பெற்றுள்ளது. அங்குள்ள நடுகல்லில், வில்லும் வாளும் தாங்கிய வீரன் ஒருவன், மாற்றார் அம்புகள் உடலிற் பாய்ந்தும் முனைந்து நிற்கும் நிலை காட்டப்படுகின்றது: பகைவர்க்குப் புறங்கொடாது விழுப்புண் பட்டு வீழ்ந்த அவ்வீரனது பெருமைக்கு அறிகுறியாக ஆண்மையூர் என்று அதற்குப் பெயரிட்டனர் போலும்!
வீர விருதுகள்
வீரம் செறிந்த தமிழ் நாட்டில் வாழ்ந்த சில பெருநில மன்னரும், குறுநில மன்னரும் அரிய வீரச் செயல்களால் அழியாப் புகழ் பெற்றனர். அவர் பெற்றிருந்த பட்டங்கள் வெற்றி விருதுகளாக விளங்கின. செய்யாற்றங்கரையில் நிகழ்ந்த கடும் போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவன், செய்யாற்று வென்றான் என்ற பட்டம் பெற்றான். அவ்வாறே பாலாற்றங் கரையில் நிகழ்ந்த பெரும் போரில் மாற்றாரை வென்ற வீரன் ஒருவன், பாலாற்று வென்றான் என்று பாராட்டப் பெற்றான். செய்யாற்று வென்றான் என்பதும், பாலாற்று வென்றான் என்பதும், ஆர்க்காட்டு வட்டத்தில் ஊர்ப் பெயர்களாக விளங்குகின்றன. நெல்லை நாட்டில் சென்றவிடமெல்லாம் செருவென்ற சிறந்த படைத் தலைவன் ஒருவன் எப்போதும் வென்றான் என்னும் உயரிய பட்டம் பெற்றான். அப்பட்டம் இன்றும் ஓர் ஊரின் பெயராக நின்று நிலவுகின்றது.
போர்க்களத்தில் தனித்தனியே வீரம் விளைத்துப் புகழ் பெற்ற ஆண்மையாளரும் தமிழ்நாட்டில் உண்டு. ஒரு வீரன் மாற்றார் விடுத்த அம்புகளைத் தன் நெடுங் கரத்தால் பிடித்து முரித்தான். அச்செயல் கண்டு வியந்த படைத் தலைவன், அவ்வீரனுக்குக் கணை முரித்தான் என்ற பட்டம் அளித்தான். மற்றொரு வீரன் மாற்றார் பொழிந்த சரமாரியைக் கண்டும் அச்சமென்பது சிறிதுமின்றி மலை போன்ற மார்பில் அம்புகளைத் தாங்கி நின்றான். அவ்வீரச் செயலை வியந்து அவனைச் சரந்தாங்கி என்று சீராட்டினார்கள். இவ்விரு பட்டங்களும் பாண்டி நாட்டில் ஊர்ப் பெயராக வழங்கு கின்றன. மலை தாங்கி என்னும் பெயருடைய ஊர் ஒன்று சேலம் நாட்டிலே காணப்படுகின்றது.
நாட்டில் அவ்வப்போது தலைகாட்டிய கலகங் களையும், குழப்பங்களையும் அடக்கி, அரசருக்கும் குடிகளுக்கும் நலம் புரிந்த வீரர்களும் உயரிய பட்டம் பெற்று விளங்கினர். உள் நாட்டுக் கலகத்தை ஒடுக்கிய ஒரு வீரனை அமர் அடக்கி என்றும், கொடுமை விளைத்த ஒரு கூட்டத்தாரின் கொட்டத்தை ஒடுக்கிய மற்றொரு வீரனை மறம் அடக்கி என்றும் தமிழ் நாடு பாராட்டுவதாயிற்று. இவ்விரண்டு பட்டங்களும் தஞ்சை நாட்டில் ஊர்ப் பெயர்களாக இன்றும் வழங்குகின்றன.
தென்னார்க்காட்டில் உலகங் காத்தான் என்பது ஓர் ஊரின் பெயர். கானாடு காத்தான் என்பதும், மானங்காத்தான் என்பதும் பாண்டி நாட்டிலுள்ள ஊர்கள்.
போர்க்களத்திலும் அவைக்களத்திலும் சிறந்த சேவை செய்தவர்க்குப் பழந் தமிழ் மன்னர் ஏனாதி என்ற பட்டம் வழங்கினர். நாட்டுக்கும் அரசுக்கும் நற்றொண்டு செய்து பண்டைப் பெருமக்கள் பெற்ற அப்பட்டம் சில ஊர்ப் பெயர்களில் இன்றளவும் நின்று நிலவுகின்றது. ஏனாதி மங்கலம் என்ற ஊர் தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் ட்டத்தில் உள்ளது. ஏனாதிமேடு என்பது விருத்தாசல வட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்.
இன்னும், வீரப் பரிசாகவும், வெற்றிச் சின்னமாகவும் விளங்கும் சில ஊர்கள் தமிழ் நாட்டில் உண்டு. தஞ்சை நாட்டிலுள்ள வீர மங்கலம், பரி வீர மங்கலம், கொற்ற மங்கலம், செருமங்கலம் முதலிய ஊர்கள் அத்தன்மை வாய்ந்தனவாகத் தோற்று கின்றன.
வெண்ணி
சோழ நாட்டை ஆண்ட ஆதி அரசருள் தலை சிறந்தவன் திருமாவளவன் என்னும் கரிகாற் சோழன். அம் மன்னனது கொற்றத்திற்குக் கால்கோள் செய்த இடம் வெண்ணிப் போர்க்களம். சேரனும் பாண்டியனும் சேர்ந்து கரிகாலனை அழிக்கக் கருதினர்; பெரும் படை எடுத்தனர், சோழ நாட்டில் நேசச் சேனை வெள்ளம் பரந்து பாய்ந்தது. அது கண்ட சோழன் படை உருத்தெழுந்து மாற்றாரை எதிர்த்தது. வெண்ணி என்னும் ஊரில் இரு திறத்தார்க்கும் நிகழ்ந்த கடும் போரில் பாண்டியன் விழுந்து உயிர் துறந்தான். நேசப் படை நிலை குலைந்து ஓடிற்று. அந்நிலையில் கரிகாலன் விட்ட அம்பு, சேர மன்னன் முதுகில் தைத்தது. மான மழிந்த சேரன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான். வெற்றி மாலை சூடிய கரிகாலன் அன்று முதல் மூன்று தமிழ் நாட்டையும் ஒரு குடைக் கீழ் ஆளத் தொடங்கினான். இங்ஙனம் கரிகாலச் சோழன் வெண்ணியிற் பெற்ற வெற்றியைப் பாட்டில் அமைத்தனர் தமிழ்ப் பாவலர்.
தலையாலங்கானம்
தலையாலங்கானமும் பண்டை நாளில் ஒரு பெரும் போரைக் கண்டது. பாண்டியன் நெடுஞ்செழியன் பகையர சரை வென்று அழியாப் புகழ் பெற்ற களம் தலையாலங் கானம். இளையன் என்றும், சிறியன் என்றும் என்னை இகழ்ந்துரைத்த சேர சோழ மன்னரைத் தலையாலங் தாக்கித் தகர்த்துச் சிறை பிடித்து மீள்வேன் கானம் என்று செழியன் கூறிய வஞ்சினப் பாட்டு புறநானூற்றிலே காணப் படுகின்றது. சேர சோழ மன்னர்க்குக் குறுநில மன்னர் ஐவர் துணைபுரிந்தனர். இரு திறத்தார்க்கும் தலையாலங்கானத்தில் நிகழ்ந்த கடும் போரில் செழியன் வென்றான். எழுவரும் தோற்றனர். புவிச் செல்வமும், புலமைச் செல்வமும் வாய்ந்த நெடுஞ் செழியனைப் புலவர்கள் பாமாலை சூட்டிப் புகழ்ந்தனர். செழியனது ஆன்ற மதிப்பிற்குரிய ராயிருந்த மாங்குடி மருதனார் அம்மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து மதுரைக் காஞ்சி பாடினார். நற்றமிழ் வல்ல நக்கீரர் அவன்மீது நெடுநல்வாடை பாடினார். இங்ஙனம் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் தமிழ் இலக்கிய உலகத்தில் அழியாப் புகழ் பெற்றான்.
இமய மலையில் புலிக்கொடி யேற்றிய கரிகாலன் வழி வந்த சோழர்கள் பல்லவ மன்னர்க்கு ஆறு நூற்றாண்டுகளாக அடங்கியிருந்தார்கள்.அந்த நிலையில் பல்லவ மன்னன் அபராசிதன் என்பவன் கங்கவாணனைத் துணைக் கொண்டு பாண்டி நாட்டின்மீது படையெடுத்தான். கும்பகோணத்திற்கு வட மேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றங்கரையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பல்லவன் படைக்கும்,பாண்டியன் சேனைக்கும் பெரும் போர் நிகழ்ந்தது.கங்க அரசன் வரகுண பாண்டியனாற் கொல்லப்பட்டான்.இங்ஙனம் வீரப் போர் புரிந்து வீழ்ந்த கங்கவாணனுக்குத் தமிழ் நாட்டார் நாட்டிய வீரக்கல்,இன்று திருப்புறம்பயத்தில் ஒரு கோவிலாக விளங்குகின்றது. அப்போரில் பல்லவன் வெற்றி பெற்றான்.ஆயினும்,அது பெயரளவில் அமைந்ததேயன்றிப் பயன் அளித்ததாகத் தோன்றவில்லை.பல்லவர் ஆட்சி நிலை குலைவதற்கும், சோழரது ஆட்சி மீண்டும் சோழ மண்டலத்தில் நிலை பெறுவதற்கும், காரணமாயிருந்த திருப்புறம்பயப் போர் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்ச்சியாகும்.அப்போரின் விளைவாகத் தஞ்சை மாநகரில் ஆதித்த சோழன் மணி முடி சூடி அரசாளும் பெருமை எய்தினான். அவன் வந்த பெரு மன்னர் தஞ்சைச் சோழர் என்று பெயர் பெற்றுத் தமிழ் நாட்டுக்கு ஏற்றமும் தோற்றமும் அளிப்பாராயினர்.
அடிக் குறிப்பு
1. “படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” - திருக்குறள்:
- இறைமாட்சி, 1
2. “அன்பிலானை அம்மானை அள்ளூறிய அன்பினால் நினைத்தார் அறிந்தார்களே
- திருநாவுக்கரசர், அன்பில் ஆலந்துறைப் பதிகம், 3.
3. சாசனங்களில் மயிலார்ப்பில் எனவும், மயிலாப்பில் எனவும் இவ்வூர்ப் பெயர் காணப்படுகின்றது. 333 of 1911; 355 of 1911.
4. புதுக்கோட்டை நாட்டிலுள்ள அழும்பில் என்னும் ஊர் அம்புக் கோயிலெனவும், சோழ நாட்டிலுள்ள வெண்ணில், கோயில் வெண்ணி யெனவும் இக்காலத்தில் வழங்கும். 223 of 1914; H. M. P. P. 1294.
5. சிலப்பதிகாரம், 1, அடியார்க்கு நல்லார் உரை,
6. 363 of 1908.
7. குறிஞ்சி நிலத்துருக்கும் சிறுகுடி யென்ற பெயர் உண்டு. “குறும்பொறை, சீறுர், சிறுகுடி, குறிஞ்சியூர் : - பிங்கல நிகண்டு
8. 17 of 1893. -
9. 547 of 1920.
10. இந்திர விழஆரெடுத்த காதை 16 - 17.
11. History of Madras - C. S. Srinivasachariar, P. 149
12. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கர்நாடகத்தின் நவாபாக இருந்த முகமது அலி, வாலாஜா என்றும் வழங்கப்பெற்றார். 1bid, p. 180.
13, 165 of 1903.
14. குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையுள் இருந்தமிழ் - நன்னூல்.
15. சிறுகாக்கை பாடினியார் : பெருந்தொகை - 1997.
16. மணற்பாங்கான இடத்திலமைந்த ஊர் மணலி எனப்படும்.
17. மேலப்பெரும்பள்ளம் என்பது பாடல் பெற்ற திருவலம் புரத்துக்கு இப்பொழுது வழங்கும் பெயர். M. E. R 1924-25.
18.தூங்கு எயில் = Flying Fortress. தூங்கெயிலை அழித்த சோழன் “தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்று பெயர் பெற்றான்; புறநானூறு, 39. சிலப்பதிகாரம், 27, 164.
19. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், 5.
20. பெருஞ்சித்தினர் பாட்டு - பெருந்தொகை : 2129.
21. புறநானூறு, 71. .
22. செம்பியர் வாழ்பதி திருவாரூர் என்றார். சேக்கிழார் திருநகரச் சிறப்பு, 12.
23. ஒகைப் பேரையூர் எனவும் வழங்கும், இது பாடல் பெற்ற சிவஸ்தலம்.
24. அக்கோட்டையின் ஆழ்ந்த அகழியும், உயர்ந்த மதிலும், அதன் மீதமைந்த ஞாயிலும், காவற்காடும் ஐயூர் மூலங்கிழார் பாடிய செய்யுளில் குறிக்கப்பட்டுள்ளன; புறநானூறு, 21.
25. “தென்திருப்பேரெயில் மாநகரே - திருவாய்மொழி : 7, 3, 9
26. 415 of 1919; 418 of 1913.
27. 5 of 1906.
28. திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் முதலாகக் குன்றுதோறாடல் ஈறாகக் கூறப்படும் தலங்கள் முருகன் படைவீடுகள் எனப்படும்.
29. இப்போது அது மணப்படையென்று வழங்கும். அதனருகேயுள்ள கொட்டாரம், செப்பறை என்னும் ஊர்கள் அரசனுக்குரிய சிறந்த படைவீடாக அஃது இருந்ததற்கு அறிகுறி யாகும். சாசனங்களில் அம்பலத்தாடி நல்லூர் என்ற மறு பெயரும் அதற்குரியதாகக் கூறப்படுகின்றது. 442 of 1909,
30. Padavedu - 18 miles south of Vellore; a deserted and ruined city of great size; it was 16 miles in circumference and full of temples, choultries and fine private ference and full of temples, choultries and fine private residences - Sewell’s Antiquities. P - 169.
31. I. M. P. pp. 72-76.
32. 7 of 1896.
33. வெண்ணிக் குயத்தியார் கரிகாற்சோழனது வெற்றியை வியந்து பாடிய செய்யுளைப் புறநானூறு, 66 - ல் காண்க.
34. புறநானூறு, 72.