உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்

விக்கிமூலம் இலிருந்து


ஊரும் பேரும்



1. தமிழகமும் நிலமும்

தமிழகம்

பழம் பெருமை வாய்ந்த பாரதநாட்டின் தென்பால் விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரால் தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர். பொதுவுற நோக்கும்பொழுது பழந் தமிழகத்தில் மேல்நாடு சேரனுக்கும், கீழ்நாடு சோழனுக்கும், தென்னாடு பாண்டியனுக்கும் உரியன வாயிருந்தன என்பது புலனாகும். இங்ஙனம் மூன்று கவடாய் முளைத்தெழுந்த தமிழகம் மூவேந்தரது ஆட்சியில் தழைத்தோங்கி வளர்ந்தது. 1

நிலவகை

நால் வகைப்பட்ட நிலங்கள். தமிழகத்தில் அமைந் திருக்கக் கண்டனர் பண்டைத் தமிழர். மலையும், மலைசார்ந்த இடமும் ஒரு வகை. காடும், காடு சார்ந்த இடமும் மற்றொரு வகை, வயலும், வயல் சார்ந்த இடமும் பிறிதொரு வகை. கடலும், கடல் சார்ந்த இடமும் இன்னொரு வகை. இந்நான்கும். முறையே, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பெயர்களாற் குறிக்கப் பட்டன. நால்வகை நிலங்களையுடைய காரணத்தால், நானிலம் என்ற பெயர் பூமிக்கு அமைவதாயிற்று.[1] ஆயினும் பிற்காலத்தில் பாலையும் ஒரு தனி நிலமாகக் கொள்ளப் பட்டது.

குறிஞ்சி நிலம்

தமிழ் நாட்டில் வளமார்ந்த மலைகள் பலவுண்டு. அவற்றைச் சார்ந்து எழுந்த ஊர்களிற் சிலவற்றை ஆராய்வோம். தமிழகத்தின் வடக்கெல்லையாக விளங்குவது திருவேங்கடமலை. தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஒருவர்,

"வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து”[2] என்று தமிழ்நாட்டின்

மலை

எல்லைகளை வரையறை செய்துள்ளார். இவ்வாறு வட சொற்கும், தென் சொற்கும் வரம்பாக நின்றமையால், தமிழ் நாட்டார், அம்மலையை வடமலை என்று வழங்கலாயினர்[3]. தொன்று தொட்டுத் தெய்வமணம் கமழ்தலால், அது திருமலை என்றும், திருப்பதி என்றும் பெயர் பெற்றது.[4]

பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையின் அருகே ஆனை மலையும் சிறு மலையும் பசுமலையும் அமைந்திருக் கின்றன. ஆனை மலையில் முற்காலத்தில் சமண முனிவர்கள் பெருந் தொகையினராய் வாழ்ந்தார்கள். இக் காலத்தில் இனிய வாழைக் கனி தரும் சிறுமலையும் பழம் பெருமை வாய்ந்த தாகும். அம் மலையின் செழுமையைச் சிலப்பதிகாரம் அழகுற எழுதிக் காட்டுகின்றது.[5]

சென்னைக்கு அருகேயுள்ள மலையொன்று பரங்கி மலை என்று பெயர் பெற்றுள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே, பரங்கியர் என்னும் போர்ச்சுகீசியர் அங்கே குடியிருப்புக் கொண்டமையால் அப்பெயர் அதற்கு அமைந்ததென்பர்.[6] திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் புதியதொரு நகரம் இக்காலத்தில் எழுந்துள்ளது. அதற்குப் பொன்மலை என்பது பெயர்.

தமிழகத்தில் முருகவேள், குறிஞ்சி நிலத் தெய்வமாக விளங்குகிறார். எந்த மலையும் அவர்தம் சொந்த மலையென்பது தமிழ் நாட்டார் கொள்கை.[7] ஆயினும், சில மலைகளில் முருகனருள் சிறந்து தோன்றுவதாகும். பாண்டி நாட்டுப் பழனி மலையும், சோழ நாட்டுச் சுவாமி மலையும், தொண்டை நாட்டுத் தணிகை மலையும், இவை போன்ற பிற மலைகளும் தமிழ் நாட்டில் முருகப் பதிகளாக விளங்குகின்றன.

கோடு

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும்.சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு - முருகனுக்குரிய பழம் பதிகளுள் கோடு ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்ற தென்பர்.

தமிழ் இலக்கிய மரபில், மலை என்னும் சொல், ஓங்கி உயர்ந்த பருவதத்தைக் குறிக்கும். மலையிற் குறைந்தது குன்று என்றும், குன்றிலும் குறைந்தது பாறை என்றும், அறை என்றும், கல் என்றும் பெயர் பெறும்.10

குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி நாட்டுத் திருப்பரங்குன்றமும்,11தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் குன்றுபாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்க்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங்குணம், பூங்குணம் என மருவி உள்ளன.12

குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும், குன்றக்குடி என்றும் பெயர் பெறும். அப்பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம் என மருவி வழங்கும்.13 நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும். இன்னும், தொண்டை நாட்டுக் குன்றத்தூரும், பாண்டி நாட்டுக் குன்றக்குடியும் இப்போது முறையே குன்னத்தூர் என்றும், குன்னக்குடி என்றும் குறிக்கப்படுகின்றன.

பாறை என்னும் பதம் பல ஊர்ப் பெயர்களிலே காணப்படும். பூம்பாறை, சிப்பிப்பாறை, தட்டைப்பாறை, பாறைகுட்டைப்பாறை முதலிய பெயருடைய ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

அறை

வைணவ உலகம் போற்றும் நூற்றெட்டுத் திருப்பதி களுள் ஒன்று திருவெள்ளறை என்பது. பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பாடிப் போற்றிய அறை அப் பழம்பதி ஒரு வெண்மையான பாறையின்மீது அமர்ந்திருக்கின்றது. அது சுவேதகிரி என்று வடமொழியில் வழங்கும். எனவே, வெண்பாறையின் பெயரே அப்பதியின் பெயராயிற்று என்பது தெளிவாகும்.

கல்

இனி, கல் என்னும் சொல்லும் சில ஊர்ப்பெயர்களில் உண்டு. பாண்டி நாட்டில் திண்டுக்கல் என்பது ஓர் ஊரின் பெயர். அவ்வூரின் மேல் பக்கத்திலுள்ள பாறையின் பெயரே ஊருக்கு அமைந்ததாகத் தெரிகின்றது. அது முன்னாளில் சிறந்ததோர் அரணாக விளங்கிற்று. பாண்டி நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையேயுள்ள கணவாய்களைப் பாதுகாப்பதற்குத் திண்டுக்கல் கோட்டை பெரிதும் பயன்பட்டதாகத் தெரிகின்றது. சேலம் நாட்டில் நாமக்கல் என்ற ஊர் உள்ளது. ஆரைக்கல் என்பது அதன் பழம் பெயராகும். ஆரை என்ற சொல் கோட்டையின் மதிலைக் குறிக்கும். ஆதலால், அவ்வூரிலுள்ள பாறையின் மீது முற்காலத்தில் ஒரு கோட்டை இருந்தது எனக் கொள்ளலாம்.16 .

கிரி,அசலம்

மலையைக் குறிக்கும் வட சொற்களும் சிறு பான்மையாக ஊர்ப் பெயர்களிலே காணப்படும். கிரி என்னும் சொல் சிவகிரி, புவனகிரி முதலிய ஊர்ப் பெயர்களிலே அமைந்துள்ளது. அசலம் என்ற வடசொல் விருத்தாசலம், வேதாசலம், வேங்கடாசலம், தணிகாசலம் முதலிய பெயர்களில் வழங்கும்.

சைலம்,அத்திரி

இன்னும் சைலம், அத்திரி என்னும் வடசொற்களையும் இரண்டோர் ஊர்ப்பெயர்களிலே கானலாம்.நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்திலுள்ள சின்னஞ் சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது. வானமாமலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

குறிச்சி

முன்னாளில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என்று பெயர் பெற்றனர். அன்னார் குடியிருந்த இடம் குறிச்சி என்று குறிக்கப்பட்டது. குறிச்சி எங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே’ என்று ஒரு குறவஞ்சி கூறுமாற்றால் இவ்வுண்மை இனிது விளங்கும். பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் குறிச்சி என்ற பெயருடைய ஊர்கள் பல உண்டு. ஆழ்வார் குறிச்சி முதலாகப் பல குறிச்சிப் பெயர்களைத் தொகுத்து வழங்கும் முறையும் நெல்லை நாட்டில் உள்ளது. ஆதியில் குறிச்சி என்பது குறவர் குடியிருப்பைக் குறித்ததாயினும்,பிற்காலத்தில் மற்றைய குலத்தார் வாழும் சிற்றூர்களும் அப்பெயர் பெற்றன. ஆர்க்காட்டு வட்டத்தில் கள்ளக்குறிச்சி என்பது ஓர் ஊரின் பெயர். இராமநாதபுரத்தில் பிராமணக் குறிச்சி என்னும் ஊர் உள்ளது.

முல்லை நிலம்

பழங்காலத்தில் தமிழ் நாட்டில் மரஞ் செறிந்த காடுகள் மலிந்திருந்தன. பண்டைத் தமிழரசர்களாகிய கரிகால் வளவன் முதலியோர் காடு கொன்று நாடாக்கினர் என்று கூறப்படுகின்றது.ஆயினும், அந் நாளில் இருந்து அழிபட்ட காடுகளின் தன்மையைச் சில ஊர்ப்பெயர்களால் உணரலாம். இக்காலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று போற்றப்படுகின்ற ஊர்கள் முற்காலத்தில் பெரும்பாலும் வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால் அறியப்படும். சிதம்பரம் ஆதியில் தில்லைவனம்,மதுரை கடம்பவனம்; திருநெல்வேலி வேணுவனம். இவ்வாறே இன்னும் பல வனங்கள் புராணங்களிற் கூறப்படும்.20

தமிழ் நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களக்காடும் பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணிச் சோழன் என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது.

அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.இக்காலத்தில் ஆர்க்காடு என்பது ஒரு நாட்டுக்கும் நகருக்கும் பெயராக வழங்குகின்றது. ஆர்க்காட்டுக்கு அணித்தாக ஆர்ப்பாக்கம் என்ற ஊர் உள்ளது. அன்றியும் சோழ நாட்டின் பழைய தலைநகரம் ஆரூர் ஆகும். அது பாடல் பெற்ற பின்பு திருவாரூர் ஆயிற்று. காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனுருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு.23 பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த யான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர்.24 சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும்.28 இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. ‘காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது. நெல்லை நாட்டில் பச்சையாற்றுப் போக்கிலுள்ள களக்காடு என்ற ஊர் மிகப் பழமை வாய்ந்தது. களாச் செடி நிறைந்திருந்த இடம் களக்காடு என்று பெயர் பெற்றது. தென்பாண்டி நாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையேயுள்ள நெடுஞ்சாலையில் பச்சையாற்றின் கரையில் பாங்குற அமைந்துள்ள களக்காடு என்னும் ஊர், மலை வளமும், நதி வளமும் உடையதாக விளங்குகின்றது.27

காவு

கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆயிரங் காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார். ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ் சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.

தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையு முடைய அக் காவில் நின்றருளும் பெருமானை,

“விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில்

வெஃகாவில் திருமாலை”

என்று திருமங்கை ஆழ்வார் போற்றினார். அவர் திருவாக்கின் பெருமையால் “விளக்கொளி கோயில்” என்பது திருத்தண்காவின் பெயராக இக்காலத்தில் வழங்குகின்றது. இன்னும், காவளம்பாடி என்பது சோழ நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்று. சோலை வளம் பொருந்திய இடத்தில் அமைந்த அப் பாடியைக் காவளம் பாடி மேய கண்ணனே என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.

பொழில்

மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, பொழில் அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத் தமிழர் அதற்குப் பைம்பொழில் என்று பெயரிட்டார்கள். அவ்வழகிய பெயர் இக்காலத்தில் பம்புளி என மருவி வழங்குகின்றது.

தண்டலை

சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் - எனவும் வழங்கும். திருச்சிராப் பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ்சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித் தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.

சோலை

சோலை என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. மதுரையின் அருகேயுள்ள அழகர் கோவில் பழங்காலத்தில் திருமால் இருஞ்சோலை என்று பெயர் பெற்றிருந்தது. பழமுதிர் சோலை முருகப் பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும். சேலம் நாட்டில் தலைச்சோலை என்பது ஓர் ஊரின் பெயர். திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும் ஊர் உள்ளது.

தோப்பு

மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும்.’ தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும்,மான்தோப்பு இராமநாத புரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வெளவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன.

சுரம்

சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்து விட்டது.

வனம்,ஆரண்யம்

காட்டைக் குறிக்கும் வடசொற்களில் வனம்,ஆரண்யம் ஆகிய இரண்டும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. புன்னைவனம், கடம்பவனம், திண்டிவனம் முதலிய ஊர்ப்பெயர்களில் வனம் அமைந்திருக்கக் காணலாம். வேதாரண்யம் என்ற பெயரில் ஆரண்யம் விளங்குகின்றது.

இன்னும், தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்ப் பெயர்கள் தனி மரங்களின் பெயராகக் காணப்படுகின்றன. கரவீரம் என்பது பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. பலவகை மரம்

கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல விருட்சமாகப் போற்றப்படுகின்றது. தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞ்லி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். மைஞ்ஞ்லி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞ்லி என்று பழந்தமிழர் அழைத்தனர்.

இன்னும், வாகையும் புன்னையும் வட ஆர்க்காட்டில் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும், கருங்காலியும் இரண்டு ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன. தமிழகத்தில் ஆலும் அரசும், அத்தியும் ஆத்தியும், புளியும் புன்னையும், பனையும் தென்னையும், மாவும் வேம்பும் மற்றும் பல மரங்களும் செழித்து வளர்தலால் அவற்றின் பெயர்கள் எல்லாம் ஊர்ப் பெயர்களாக ஆங்காங்கு வழங்கக் காணலாம்.

நாவல் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரர் அவ்வூரிலே பிறந்தருளினார். அருமறை நாவல் ஆதி சைவன் என்று பெரிய புராணம் கூறுமாற்றால் அவர் பிறந்த ஊரும் குலமும் விளங்கும். அந்நாவல், சுந்தரர் தோன்றிய பெருமையால் திருநாவல் ஆயிற்று. ஈசனால் ஆட்கொள்ளப்பெற்ற சுந்தரர் அவரடியவராகவும், தோழராகவும் சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார் அவர் பிறந்த ஊரைத் திருநாவல் நல்லூர் என்று அழைப்பாராயினர். நாளடைவில் அப்பெயர் திரிந்து திருநாமநல்லூர் ஆயிற்று.

கெடில நதியின் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர், திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது. விருத்தாசலத்துக்குத் தெற்கே மற்றொரு புலியூர் உண்டு. அதனை எருக்கத்தம்புலியூர் என்று தேவார ஆசிரியர்கள் போற்றியுள்ளார்கள். அத்தம் என்பது காடு. எனவே, எருக்கத்தம் என்பது எருக்கங்காடாகும். எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப் பெற்றது. சிவபெரு மானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும் அவ்வூர்க் கோவிலின் மூலஸ்தானத்தருகே விளங்குகின்றது. இக்காலத்தில் அவ்வூர் இராஜேந்திரப் பட்டணம் என வழங்கும்.

பாடி

முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்று பெயர் பெறும். திருத்தொண்டராகிய சண்டேசுரர் பசுக்களை மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் திருஆப்பாடி என்று தேவாரம் கூறுகின்றது. கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலத்தை ஆயர்பாடி என்று தமிழ் நூல்கள் குறிக்கின்றன. வட ஆர்க்காட்டில் ஆதியில் வேலப்பாடி என்னும் குடியிருப்பு உண்டாயிற்று. வேல மரங்கள் நிறைந்த காட்டில் எழுந்த காரணத்தால் அது வேலப்பாடி என்று பெயர் பெற்றதென்பர். நாளடைவில் காடு நாடாயிற்று. வேலப்பாடியின் அருகே வேலூர் தோன்றிற்று. கோட்டை கொத்தளங்களையுடையதாய் வேலூர் சிறப் புற்றபோது ஆதியில் உண்டாகிய வேலப்பாடி அதன் அங்கமாய் அமைந்துவிட்டது.தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற ஊராகிய திருவலிதாயம் இப்பொழுது பாடியென்றே அழைக்கப்படுகின்றது.

பட்டி

பட்டி என்னும் சொல்லும் முல்லை நிலத்து ஊர்களைக் குறிக்கும் என்பர். தமிழ்நாடு முழுதும் பட்டிகள் காணப்படினும் பாண்டி நாட்டிலேயே அவை மிகுதியாக உள்ளன. கோவிற்பட்டி முதலிய ஆயிரக் கணக்கான பட்டிகள் தென்னாட்டில் உண்டு.

மந்தை

ஆடு மாடுகள் கூட்டமாகத் தங்குமிடம் மந்தை எனப்படும். வட ஆர்க்காட்டில் வெண் மந்தை, புஞ்சை முதலிய ஊர்கள் உள்ளன. நீலகிரியில் தோடர் எனும் வகுப்பார் குடியிருக்கும் இடத்திற்கு மந்து என்பது பெயர். மாடு மேய்த்தலே தொழிலாகக் கொண்ட தோடர் உண்டாக்கிய ஊர்களிற் சிறந்தது ஒத்தக்க மந்து என்பதாகும். அப்பெயர் ஆங்கில மொழியில் ஒட்டகமண்டு எனத் திரிந்தும், ஊட்டி எனக் குறுகியும் வழங்கி வருகின்றது. ஒத்தைக்கல் மந்தை என்பதே இவ்வாறு சிதைந்து வழங்குவதாகத் தெரிகின்றது.

மருத நிலம்

ஆறு

நிலவளமும், நீர்வளமும் உடைய தமிழ் நாட்டில் நினைப்பிற்கு எட்டாத காலந் தொட்டுப் பயிர்த்தொழில் பண்புற நடந்து வருகின்றது. பண்டைத் தமிழர் ஆற்று நீர் பாயும் நிலப் பரப்பைப் பண்படுத்திப் பயிர் செய்து மருத நிலமாக்கினார்கள். அருமந்த பிள்ளையைப் பாலூட்டி வளர்க்கும் தாய் போல் மருத நிலத்தை நீருட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்; காவிரியாற்றைப் பொன்னியாரென்று புகழ்ந்தார்கள், வைகையாற்றைப் பொய்யாக் குலக்கொடி’ என்று போற்றினார்கள். சுருங்கச் சொல்லின் நதியே நாட்டின் உயிர் என்பது தமிழர் கொள்கை.

ஆற்றங் கரைகளிலே சிறந்த ஊர்கள் அமைந்தன. ஆறில்லா ஊருக்கு அழகில்லை என்ற பழமொழியும் எழுந்தது. முற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களும், துறைமுகங்களும் ஆற்றையடுத்தே உண்டாயின. உறையூர் என்பது சோழநாட்டின் பழைய தலைநகரம், அது காவிரிக் கரையில் அமைந்திருந்தது. பட்டினம் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சோழநாட்டுத் துறைமுகம் காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வீற்றிருந்தது.அக்காரணத்தால் புகார் என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் அந் நகரம் பெயர் பெறுவதாயிற்று. அவ்வாறே பாண்டி நாட்டுப் பெரு நதியாகிய வைகையின் கரையில் மதுரை என்னும் திருநகரம் அமைந்தது. பாண்டியர்க்குரிய மற்றொரு சிறந்த நதியாகிய பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் சிறந்து விளங்கிற்று. எனவே, பண்டைத் தமிழகத்தின் வேளாண்மைக்கும் வாணிப வளத்துக்கும் நதியே சிறந்த சாதனமாக அமைந் திருந்ததென்பது நன்கு விளங்கும்.

கங்கை, கோதாவரி போன்ற பெரிய ஆறுகள் தமிழ் நாட்டில் இல்லை. ஆயினும் சிறிய நதிகளைச் சிறந்த வகையிற் போற்றிய பெருமை தமிழ் நாட்டார்க்கு உரியது. ஆற்று நீரின் அருமை யறிந்த தமிழரது ஆர்வம் அன்னார் நதிகளுக்கு இட்டு வழங்கிய பெயர்களால் அறியப்படும். பாலாறு என்பது ஓர் ஆற்றின் பெயர். அது தொண்டை நாட்டின் வழியாகச் செல்கின்றது. அந்நதியில் தண்ணி சுரக்குமே யன்றிப் பெரும்பாலும் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. இன்னும், நீர்வளம் குறைந்த சேதுநாட்டின் வழியாகச் செல்லும் ஒரு சிறு நதி தேனாறு என்னும் அழகிய பெயர் பெற்றுள்ளது. அதனருகே உள்ள குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள ஈசனைத் தேனாற்று நாயகர் என்று சாசனம் கூறும். சுவையுடைய செழுந்தேனைச் சொட்டுச் சொட்டாக வடித்தெடுத்துப் பயன்படுத்துதல் போன்று இந் நதியின் நீரைத் துளித் துளியாக எடுத்து அந்நாட்டார் பயன் அடைகின்றார்கள். பாலாறு தொண்டை நாட்டிலும், தேனாறு பாண்டி நாட்டிலும் விளங்குதல் போலவே, சேர நாட்டில் நெய்யாறு என்னும் நதி உள்ளது. அந்நதியின் கரையில் அமைந்த ஊர் நெய்யாற்றங்கரை என்று வழங்குவதாகும்.

நெல்லை நாட்டில் உள்ள ஒரு சிறு நதியின் பெருமையை வியந்து கருணையாறு என்று அதற்குப் பெயரிட்டுள்ளார்கள். தென்னார்க்காட்டில் விருத்தாசலத்தின் வழியாகச் செல்லும் நதி மணிமுத்தாறு என்னும் பெயர் பெற்றுள்ளது.

இவ்வாறு நாட்டின் உயிரென விளங்கும் நதிகளின் பெயர்கள் சில ஊர்களுக்கு அமைந்துள்ளன. திரு.ஐயாறு என்பது சோழ நாட்டிலுள்ள ஒரு பழைமையான ஊரின் பெயர். காவிரி முதலிய ஐந்து ஆறுகள் பரந்து பாயும் வளநிலத்தில் அமைந்த நகரம் ஐயாறு என்று பெயர் பெற்றது போலும். பஞ்சநதம் என்று அதனை வட மொழியாளர் வழங்குவர்.

தொண்டை நாட்டில் சேயாறு என்னும் நதியொன்று உண்டு. அதன் கரையில் எழுந்த ஊரும் சேயாறு என்றே பெயர் பெற்றது. இன்னும் சென்னை மாநகரின் வழியாகச் செல்லும் ஆறு ஒன்று அடையாறாகும். அது செங்கற்பட்டிலுள்ள செம்பரம்பாக்கத்து ஏரியினின்றும் புறப்பட்டுச் சென்னையின் வழியாகச் சென்று கடலோடு கலக்கின்றது. அவ்வாற்றுப் பெயரே அடையாறு என்னும் பாக்கத்தின் பெயராயிற்று.

இக் காலத்தில் சில ஆற்றுப் பெயர்கள் மாறிவிட்டாலும் அவற்றை ஊர்ப் பெயர்களால் உணர்ந்து கொள்ளலாம். திருக்குற்றால மலையினின்று புறப்பட்டுச் செல்கின்ற சித்ரா நதியோடு ஒரு சிறு நதி வந்து சேர்கின்றது. புராணக் கதையில் அது கோதண்டராம நதியென்று கூறப்படுகிறது.சி வனவாசம் செய்த இராமர் சீதையின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டுத் தமது கோதண்டத்தைத் தரையில் ஊன்றி உண்டாக்கிய நதியாதலால் அப்பெயர் அதற்கமைந்த தென்று கூறுவர். ஆயினும், அவ்வாற்றின் பழம் பெயர் கயத்தாறு என்று தெரிகின்றது. கயம் என்பது ஆழமான நீர்நிலை. அத்தகைய நீர்நிலைக்கு ஆதாரமாய் ஓர் ஊற்றினின்றும் புறப்படுகின்ற ஆற்றைக் கயத்தாறு என்று அழைத்தார்கள். பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில் தன்னுற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.

ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றுார் எனப்படும். தமிழ் நாட்டில் ஆற்றூர் என்ற பெயருடைய ஊர்கள் பல உண்டு. சேலம் நாட்டில் ஆற்றூர் என்பது ஒரு பகுதியின் பெயராக வழங்குகின்றது. ஆற்றங்கரை யென்பது இராமநாதபுரத்திலுள்ள ஓர் ஊரின் பெயர். தஞ்சை நாட்டில்’ ஆற்றுப் பாக்கமும், திருச்சி நாட்டில் ஆற்றுக் குறிச்சியும், வட ஆர்க்காட்டில் ஆற்றுக் குப்பமும் உள்ளன.

துறை

ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடங்கள் துறை எனப்படும்.தமிழ் நாட்டில் ஆற்றை அடுத்துள்ள சில ஊர்கள் துறை என்னும் பெயரைத் தாங்கி நிற்கக் காணலாம். சில துறைகளின் இயற்கையழகு அவற்றின் பெயரால் விளங்குகின்றது. காவிரியாற்றின் இரு மருங்கும் அமைந்த செழுஞ் சோலைகளில் மயில்கள் தோகை விரித்தாடும்; மந்திகள் கொஞ்சிக் குலாவிக் கூத்தாடும். இங்ஙனம் மயில்கள் ஆடும் துறை மயிலாடு துறை என்றும், குரங்குகள் ஆடும் துறை குரங்காடு துறை என்றும் பெயர் பெற்றன. மயிலாடுதுறை இப்போது மாயவரமாக மாறியிருக்கிறது. காவிரியின் வடகரையில் ஒரு குரங்காடுதுறையும் தென் கரையில் மற்றொரு குரங்காடு துறையும் உண்டு. இக் காலத்தில் தென் குரங்காடு துறை ஆடுதுறை என்றே வழங்குகின்றது. இன்னும், காவிரியாற்றில் கடம்பந்துறை, மாந்துறை முதலிய பல துறைகள் பாடல் பெற்ற பதிகளாக விள்ங்குகின்றன. நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும் பொருநையாற்றில் பூந்துறை, குறுக்குத்துறை முதலிய துறைகள் உளளன.

அரங்கம்,துருத்தி

ஆற்றின் நடுவே அமைந்த இடைக்குறை வட

மொழியில் ரங்கம் என்றும், தமிழ் மொழியில் துருத்தியென்றும் குறிக்கப்பெறும். காவிரியாற்றில் திருச்சிராப்பள்ளிக்கு அருகே சிறந்த ரங்கம் ஒன்று உள்ளது. அங்கே கோவில் கொண்டருளும் பெருமாளை ஆழ்வார் பன்னிருவரும் பாடியுள்ளார்கள். அவர்கள் அருளிய திருப்பாசுரங் களில் அவ்வூர் திருவரங்கம் என்று போற்றப் பட்டுள்ளது. தஞ்சை நாட்டிலுள்ள குற்றாலத்தின் பழம்பெயர் திருத்துருத்தி என்பதாகும். காவிரியாற்றின் நடுவே அமைந்த திருத் துருத்தியின் சிறப்பினைத் திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

“பொன்னியின் நடுவு தன்னுள்

பூம்புனல் பொலிந்து தோன்றும்

துன்னிய துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே”

என்பது அவர் திருவாக்கு. சாசனங்களில் அவ்வூர் “வீங்கு நீர்த் துருத்தி” என்று குறிக்கப்படுகின்றது.’ தமிழ் நாட்டிலுள்ள மற்றொரு துருத்தி திருப்பூந் துருத்தியாகும்.

கூடல்

ஆறுகள் கூடுந் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைத் தமிழர் கொண்டாடினார்கள்; அவற்றைக் கூடல் என்று அழைத்தார்கள். தொண்டை நாட்டில் பாலாறும், சேயாறும், கம்பையாறும் சேருகின்ற இடத்தில் அமைந்த ஊர் திருமுக்கூடல் என்று கூடல் பெயர் பெற்றது. நெல்லை நாட்டில் தாமிரவருணியும், சித்திரா நதியும், கோதண்டராம நதி என்னும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற இடம் முக்கூடல் என முற்காலத்தில் சிறந்திருக்கிறது. முக்கூடற் பள்ளு என்னும் சிறந்த நாடகம் அவ்வூரைப்பற்றி எழுந்ததேயாகும். சோழ நாட்டில் கெடில நதியும் உப்பனாறும் கலக்கின்ற இடத்திற்கு அருகேயமைந்த ஊர் கூடலூர் என்று பெயர் பெற்றது. தென்னார்க்காட்டில் வெள்ளாறும், முத்தாறும் கூடுகின்ற இடத்தில் கூடலை யாற்றுர் என்ற ஊர் அமைந்திருக்கின்றது. அது தேவாரப் பாடல் பெற்றது.

அணை

முற்காலத்தில் தமிழ் மன்னர்கள் ஆற்று நீரை அணைக் கட்டுகளால் தடுத்துக் கால்வாய்களின் வழியாக ஏரிகளிலும், குளங்களிலும் நிரப்பினார்கள். இவ்விதம் பாசனத்திற்குப் பயன்பட்ட அணைகளின் அருகே சில ஊர்கள் எழுந்தன. தென்னார்க்காட்டில் கரடியனை என்பது ஓர் ஊரின் பெயர். கண்ணணை இராமநாதபுரத்திலும், வெள்ளியணை திருச்சிராப்பள்ளியிலும் காணப்படுகின்றன.

கால்

அணைகளைப் போலவே கால்வாய்களின் அருகே எழுந்த ஊர்களும் உண்டு. நெல்லை நாட்டில் வெள்ளக் கால், பள்ளக்கால் முதலிய ஊர்கள் உள்ளன. தலைக்கால் என்னும் ஊர் இராமநாதபுரத்தில் காணப்படுகின்றது. இன்னும், மணற்கால் திருச்சிராப்பள்ளியிலும், குவளைக்கால் தஞ்சை நாட்டிலும், மாங்கால் வட ஆர்க்காட்டிலும் விளங்குகின்றன. கால்வாய் என்னும் சொல்லே நெல்லை நாட்டின் ஓர் ஊரின் பேராக வழங்குகின்றது.

ஓடை

இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடை என்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும்,பாலோடை இராமநாதபுரத்திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.

மடை

கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடையென்று பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணி வயல்களிற் சென்று பாயும். இத்தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல் மடையும், பாலாமடையும், மதுரையிலுள்ள மேலமடை முதலிய ஊர்களும் இதற்குச் சான்றாகும்.

ஏரி

ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலுக்குப் பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிலையம் ஏரி எனப்படும். இத்தகைய ஏரியின் மருங்கே எழுந்த ஊர்கள் தமிழ் நாட்டிலே பலவாகும். சில ஏரிகள் பண்டையரசர் பெயரால் இன்றும் அழைக்கப் படுகின்றன. சித்துர் நாட்டில் பல்லவனேரி என்பது ஓர் ஊரின் பெயர். அது பல்லவ மன்னனால் ஆக்கப்பட்டதாகும். பாண்டி நாட்டில் மாறனேரி என்று பெயர் பெற்ற ஊர்கள் பல உண்டு. மாறன் என்னும் சொல் பாண்டியனைக் குறிக்கும். தொண்டை நாட்டிலுள்ள தென்னேரி என்னும் ஊரும் ஏரியின் அருகே எழுந்ததாகும். அது திரையன் என்னும் குறுநில மன்னனால் உண்டாக்கப்பட்டது. திரையனேரி என்பது சிதைந்து தென்னேரி ஆயிற்று. கொங்கு நாட்டில் வீரபாண்டியன் என்னும் அரசனால் ஓர் ஏரி உண்டாக்கப்பட்டது. அதனருகே எழுந்த ஊர் வீரபாண்டியப் பேர் ஏரி என்று பெயர் பெற்று, இப்பொழுது ஏரி என்றே வழங்குகின்றது.

தெய்வப் பெயர் தாங்கிய ஏரிகளும் தமிழ் நாட்டிலே பல உண்டு. திருச்செந்தூரிலுள்ள அறுமுகச் செவ்வேளின் பெயரால் அமைந்தது ஆறுமுகனேரி. நாங்குனேரி வட்டத்தில் மலையாள மன்னனால் வெட்டப்பட்ட ஏரியொன்று பத்மனாபன் ஏரி என்று பெயர் பெற்று, இப்பொழுது பதுமனேரி என வழங்குகின்றது.

பேரேரி

இன்னும், பேரி என்னும் சொல்லை இறுதியாக வுடைய ஊர்ப் பெயர்கள் சில உள்ளன. நெல்லை நாட்டில் சீவலப் பேரி, கண்டியப்பேரி, அலங்காரப்பேரி, விசுவநாதப்பேரி முதலிய பேரிகள் உண்டு. பேரி என்பது பேரேரி என்பதன் சிதைவாகும். பெரிய ஏரிகள் பேரேரி என்று பெயர் பெற்றன. இதற்குச் சான்று சாசனங்களிற் காணலாம். மதுராந்தகன் என்னும் மன்னன் ஆக்கிய பேரேரி மதுராந்தகப் பேரேரி என்றும், ஆர்க்காட்டில் சுந்தரசோழன் கட்டிய ஏரி சுந்தர சோழப் பேரரேரி என்றும் கல் வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியிலுள்ள சீவலப்பேரியின் பழம் பெயர் முக்கூடல் என்பதாகும். அஃது அவ்வூருக்கு இயற்கையாக அமைந்த பெயர். பிற்காலத்தில் ஸ்ரீ வல்லபன் என்னும் பாண்டியன் அவ்வூரில் பேரேரி ஒன்று உண்டாக்கி, சீவல்லபப் பேரேரி என்று அதற்குப் பெயரிட்டான். அப்பெயர் சிதைந்து சீவலப்பேரியாயிற்று. கன்னட நாட்டுச் செல்வன் ஒருவன் நெல்லை நாட்டிற்போந்து தாமிரபருணி ஆற்றில் ஓர் அணைகட்டி அதன் நீரைக் கால்வாய்களின் வழியாகக் கொண்டு சென்று பயிர்த் தொழிலைப் பேணினான் என்று பழங் கதையொன்று வழங்குகின்றது. அவ்வாற்றில் மூன்றாம் அணைக்கட்டு, கன்னடியன் அனை என்று இன்றும் வழங்குவது அதற்குச் சான்றாகும். அக் கன்னடியன் நெல்லை நகரத்தின் அருகே பெரியதோர் ஏரியும் கட்டி, அதற்குக் கன்னடியப் பேரேரி என்று பெயரிட்டான். நாளடைவில் அவ்வேரியும், அதைச் சார்ந்த ஊரும் கண்டியப் பேரி என்று மருவி வழங்கலாயின. அலங்காரப்பேரி என்பது மற்றோர் ஊரின் பெயர். தண்ணி பெருகி நிறைந்து, தெள்ளிய அலைகள் எழுந்து, அலைந்து வரும் அழகு அலங்காரப் பேரி என்னும் பெயரிலே விளங்குகின்றது.

கோட்டகம்

கோட்டகம் என்பதும் பெரிய ஏரியின் பெயர்.79 காவிரி நாட்டில் பல கோட்டகங்கள் உண்டு. கோட்டகம் தஞ்சை நாட்டில் உள்ள புதுக் கோட்டகம், மானங்காத்தான் கோட்டகம் முதலிய ஊர்கள் இதற்குச் சான்றாகும்.

குளம்

ஏரிக்கு அடுத்தபடியாக வேளாண்மைக்கு உதவுவது குளம். குளம் என்னும் முடிவுடைய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் காணப்படும். குளங்கள் நிறம் பற்றியும், அளவு பற்றியும், பல பெயர்களைப் பெற்று வழங்கும். நெல்லை நாட்டிலுள்ள கருங்குளமும், திருச்சி நாட்டிலுள்ள செங்குளமும் அவற்றிலுள்ள நீரின் நிறத்தைக் காட்டுகின்றன. மதுரையிலுள்ள பெருங்குளம் என்னும் ஊர் பெரியதொரு குளத்தின் அருகே எழுந்ததாகும். தஞ்சை நாட்டுப் பூங்குளமும், தென்னார்க்காட்டுப் புதுக்குளமும் அக்குளங்களின் தன்மையைப் புலப்படுத்துகின்றன.

சமுத்திரம்

சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன. இராஜராஜ சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை நாட்டில் அம்பா சமுத்திரம் முதலிய பல ஊர்கள் உள்ளன. அம்பாசமுத்திரத்தின் ஆதிப்பெயர் இளங்கோக்குடி என்பது.” அவ்வூரின் அருகே எழுந்த குளம் அம்பாள் சமுத்திரம் என்று பெயர் பெற்றது. அப்பெயர் சிதைந்து அம்பாசமுத்திரம் ஆயிற்று.

முன்னாளில் ஏரியென்று பெயர் பெற்றிருந்த சில நீர்நிலைகள் இக்காலத்தில் சமுத்திரம் என வழங்குவதற்குச் சான்று சாசனங்களிற் காணப்படும். தொண்டை நாட்டுத் தென்னேரி என்னும் ஊரில் உள்ள பழமையான ஏரியின் கரை ஒருகால் பெருமழையால் உடைந்து போயிற்று. அதனைக் கட்டிக் கொடுத்துப் புகழ்பெற்ற தாதாச்சாரி என்பவர், திரையனேரிக்குத் தாதா சமுத்திரம் என்று பெயரிட்டார் எனச் சாசனம் கூறுகிறது.

ஏந்தல்,தாங்கல்

இன்னும் சிற்றேரியைக் குறிக்கும் ஏந்தல், தாங்கல் என்னும் இரு சொற்களும் ஊர்ப்பெயர்களில் வழங்குகின்றன. இளவரசன் ஏந்தல், செம்பியன் ஏந்தல் முதலிய ஊர்கள் ஏரியினடியாகப் பிறந்தனவாகும். தாங்கல் என்ற பெயருக்குச் சான்றாக ஆலந்தாங்கல் வடஆர்க்காட்டிலும், வளவன் தாங்கல் செங்கற்பட்டிலும் உள்ளன.

ஆவி,வாவி

ஆவியும், வாவியும் குளத்தின் பெயர்களாகும். அவை சிறுபான்மையாக ஊர்ப்பெயர்களில் இடம் பெற்றிருக்கின்றன. இராமநாதபுரத்து நீராவி யென்ற - ஊரிலும், சேலம் நாட்டுக் கல்லாவி ஆவி, வாவி யிலும் ஆவியைக் காணலாம். மதுரையைச் சேர்ந்த கோடல் வாவி முதலிய ஊர்கள் வாவியின் அருகே எழுந்தனவாகத் தோற்றுகின்றன.

மடு

ஆழமான நீர் நிலை மடு வெனப்படும். அச்சொல்லைக் கொண்ட ஊர்ப் பெயர்களும் உண்டு. நெல்லை நாட்டுக் கல் மடுவும், தஞ்சை நாட்டு முதலை மடுவும், தென்ஆர்க்காட்டு ஆனை மடுவும், சேலம் நாட்டுச் செம் மடுவும் இத்தகையனவாகும்.

இலஞ்சி

இலஞ்சி என்னும் சொல்லும் ஏரியைக் குறிக்கும். நெல்லை நாட்டில் தென்காசிக்கு அருகே இலஞ்சி என்ற ஊர் சிறந்து விளங்குகின்றது. செல்வச் செழுமையால் பொன்னிலஞ்சியென்று புகழ்ந்துரைக்கப்பட்ட அவ்வூர், பயிர்த் தொழிலுக்குப் பயன்படுகின்ற குளத்தின் பெயரையே கொண்டுள்ளது.

பொய்கை

இயற்கையில் அமைந்த நீர்நிலை பொய்கை எனப்படும். பொய்கையார் என்பது ஒரு பழந்தமிழ்ப் புலவரின் பெயர். அவர் பொய்கை என்ற ஊரில் பிறந்தவர் என்பர். இன்னும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்ற மூவரில் ஒருவர் பொய்கை ஆழ்வார். காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா என்னும் திருமால் கோயிலை அடுத்துள்ள தாமரைப் பொய்கையிற் பிறந்தவராதலால் அவர் பொய்கை ஆழ்வார் என்னும் பெயர் பெற்றார் என்று குரு பரம்பரை கூறும். இன்னும், பொய்கை என்ற பெயருடைய ஊர் ஒன்று வட ஆர்க்காட்டில் உள்ளது. எனவே, குளத்தைக் குறிக்கும் பொய்கை என்னும் சொல்லும் ஊர்ப் பெயராக வழங்குதல் உண்டென்பது விளங்கும்.

ஊருணி

உண்பதற்குரிய தண்ணி நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர். ஊருணியின் பெயரால் வழங்கப்பெறும் ஊர்கள் தமிழ் நாட்டில் உண்டு. பேரூரணி என்ற ஊர் நெல்லை நாட்டிலுள்ளது. மயிலுரணி இராமநாத புரத்திலும், புரசூரணி தஞ்சை நாட்டிலும் காணப்படும்.

செறு

செறு என்பது குளத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். சித்துர் நாட்டில் ராயலு செறுவு என்ற சிற்றுர் உள்ளது. விஜய நகரப் பெரு மன்னராய் விளங்கிய கிருஷ்ண தேவராயர் அங்குப் பெரியதோர் ஏரி கட்டி, வேளாண்மையைப் பேணிய காரணத்தால் ராயர் செறு என்னும் பெயர் அதற்கு அமைந்த தென்று சொல்லப்படுகின்றது. முன்னாளில் அவ்வூர் காஞ்சியிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் பெருஞ்சாலையை அடுத்திருந்தமையால் சாலச் சிறப்புற்றிருந்தது. அங்கு விஜய நகர மன்னர் கட்டிய ஏரி இன்றும் காணப்படுகின்றது. அரை மைல் நீளமுள்ள அகன்ற கரையால் இரு பெருங் குன்றுகளை இணைத்து அக்குளம் ஆக்கப்பட்டுள்ளது.

ஊற்று

ஆற்று நீராலும் வானமாரியாலும் நிறைந்து பயிர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர் நிலைகளே பெரும்பாலும் தமிழகத்தில் உள்ளன. எனினும், ஊற்று நீரால் நிறைந்த கேணி, கிணறு முதலிய பல்வகைப்பட்ட நீர் நிலைகளும் அவற்றின் அடியாக எழுந்த ஊர்கள் நெல்லை நாட்டில் உள்ள தாழை யூற்றும், இராமநாதபுரத்தில் உள்ள அத்தியூற்றும், திருச்சி நாட்டிலுள்ள கண்ணுற்றும், சேலம் நாட்டில் உள்ள மாவூற்றும் ஆகும்.

கேணி,கிணறு

இன்னும் ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத் தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள திருவல்லிக்கேணியும், நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.

நிலம்

இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும் நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள் பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம் என்ற நிலம் ஊர்ப் பெயரிற் காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக் குறிப்ப தென்பர்.

புலம்

புலம் என்னும் சொல்லும் நிலத்தைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் தாமரைப் புலம், கருவப் புலம், செட்டி புலம் முதலிய ஊர்கள் உண்டு. பற்று

பற்று என்பது நன்செய் நிலமாகும். அது தென் னாட்டில் பத்து எனவும், வட நாட்டில் பட்டு எனவும் திரிந்து வழங்கும். திருக்கோவிலுக்கு நிவந்தமாக விடப்பட்ட நிலங்களையுடைய ஊர், கோவில் பற்று என்று பெயர் பெறும். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓர் ஊர் பெருங்கருனைப் பற்று என்று அழைக்கப்படுகின்றது.’ செங்கல்பட்டு என்பது, செங்கழுநீர்ப் பற்று என்னும் அழகிய சொல்லின் சிதைவேயாகும்.சித்துர் நாட்டில் பூத்தலைப் பற்று என்று ஆதியில் பெயர் பெற்றிருந்த ஊர் இப்பொழுது பூதலப்பட்டு என்று வழங்குகின்றது. வடஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்திலுள்ள ஓர் ஊர் தெள்ளாற்றுப்பற்று என்று பெயர் பெற்றது. இப்பொழுது அப்பெயர் தெள்ளாரப்பட்டு என மருவியுள்ளது.

பண்ணை

பண்ணை என்பது வயல்.அச்சொல் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றது. நெல்லை நாட்டில் செந்திலான் பண்ணை என்பது ஓர் ஊரின் பெயர். சாத்துருக்குத் தென் மேற்கே எட்டு மைல் தூரத்தில் ஏழாயிரம் பண்ணையென்னும் ஊர் உள்ளது.

பழனம்,கழனி

பழனம் என்ற சொல்லும் வயலைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் திருப்பழனம் என்பது பாடல் பெற்ற ஓர் ஊரின் பெயர். அஃது இப்பொழுது திருப்பயணமாயிற்று. இன்னும் வயலைக் குறிக்கும் கழனி என்னும் அழகிய சொல், ஆர்க்காட்டிலுள்ள தென்கழனி, புதுக் கழனி முதலிய ஊர்களின் பெயரிலும் தஞ்சை நாட்டுக்காக கழனியிலும் காணப்படும்.

வயல்,விளை

வயல் என்னும் சொல் புதுவயல், நெடுவயல் முதலிய ஊர்ப் பெயர்களில் வழங்கும். வயல்; தென்னாட்டில் விளை புலங்களையுடைய விளை ஊர்களை விளையென்னும் பெயரால் குறிப்பதுண்டு. வாகை விளை, திசையன் விளை முதலிய ஊர்கள் நெல்லை நாட்டில் உள்ளன.

நில அளவு

வேலியும் காணியும் நிலத்தின் அளவைக் குறிக்கும் சொற்களாகும். அவைகளும் ஊர்ப் பெயரிலே காணப்படும். தஞ்சை நாட்டு ஐவேலி, ஒன்பது வேலி முதலிய ஊர்களும், மதுராந்தக வட்டத்திலுள்ள பெரு வேலியும் நிலத்தின் அளவால் எழுந்த பெயர்கள் என்பது வெளிப்படை. அவ்வாறே நெல்லை நாட்டில் உள்ள முக்காணி, சங்காணி முதலிய ஊர்ப் பெயர்களில் காணி இடம் பெற்றுள்ளது. குறைந்த அளவினவாகிய குறுணியும் நாழியும், சிறுபான்மையாகிய ஊர்ப் பெயர்களிற் காணப்படும். மதுரை நாட்டில் சோழங்குறுணி என்றும்; எட்டு நாழி என்றும் பெயருடைய ஊர்கள் உண்டு.

புன்செய்

வளமிகுந்த நிலத்தை நன்செய்(நஞ்சை) என்றும், வளங்குறைந்த நிலத்தை புன்செய்(புஞ்சை) என்றும் கூறுவர். தஞ்சை நாட்டில் பாடல் பெற்ற நனி பள்ளி என்னும் தலம் இப்போது புஞ்சையென வழங்குகின்றது.

தோட்டம்

ஊற்று நீரை இறைத்துத் தோட்டப் பயிர் செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் உண்டு. ஆதலால் தோட்டத்தைக் குறிக்கும் சொற்கள் சிறு பான்மையாக ஊர்ப் பெயர்களில் வழங்கக் காணலாம். தஞ்சை நாட்டில் தோட்டம் பூந்தோட்டமும், தென்னார்க்காட்டில் இஞ்சிக் கொல்லையும், கருப்புக் கிளாரும் உள்ளன. தோட்டம், கொல்லை, கிளார் என்பன ஒரு பொருட்சொற்கள்.

ஊர்

நால் வகை நிலங்களிலும் பொதுவாகத் தமிழ் மக்கள் குடியிருந்து வாழ்ந்தாரேனும் மருத நிலமே சிறப்பாகக் குடியிருப்புக்கு ஏற்றதாகக் கொள்ளப்பட்டது. ஆதலால், ஊர் என்னும் பெயர் மருத நிலக்குடியிருப்பைக் குறிக்கும்.’ மரப் பெயர், மாப் பெயர் முதலிய எல்லா வகையான பெயர்களோடும் ஊர் என்னும் சொல் சேர்ந்து, தமிழ் நாட்டில் வழங்கக் காணலாம். மருத மரத்தின் அடியாகப் பிறந்த ஊர் மருதூர்; நாவலடியாகப் பிறந்த ஊர் நாவலூர். இன்னும் தேவாரப் பாடல் பெற்ற தெங்கூரும், பனையூரும் பாசூரும், கடம்பூரும் மரங்களாற் பெயர் பெற்ற பதிகளே யாகும்.

பறவையும் ஊரும்

அன்னமும், மயிலும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றன. நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர் ஆகும். குருகு என்பது அன்னத்தின் பெயர். சென்னையில் உள்ள மயிலாப்பூர் மயிலோடு தொடர்புடைய தென்பது தேற்றம். நாரையாற் பெயர் பெற்ற ஊர் திருநாரையூர். கோழியின் பெயர் கொண்டது கோழியூர். கொக்கைக் குறிக்கும் வண்டானம் என்பது ஓர் ஊரின் பெயர். புலியூர்


இன்னும், விலங்குகளுள் புலியின் வீரத்தைப் பண்டைத் தமிழர்கள் வியந்து பாராட்டியதாகத் தெரிகின்றது. அவ்விலங்கின் பெயர் கொண்ட ஊர்கள் பலவாகும். பாதிரிப் புலியூர், எருக்கத்தம் புலியூர் முதலிய ஊர்கள் பாடல்கள் பெற்றுள்ளன. இன்னும், திருச்சி நாட்டில் பெரும்புலியூர், குறும் புலியூர் என்னும் ஊர்கள் உண்டு. பெரும்புலியூர் என்பது பெரம்பலூர் என்றும், குறும் புலியூர் என்பது குறும்பலூர் என்றும் இக்காலத்தில் வழங்கப் படுகின்றன. மாயவரத்துக்குத் தெற்கே சிறு புலியூர் என்ற ஊர் உள்ளது.

நல்லூர்

தமிழ் நாட்டு ஊர்களை நல்லூர் என்றும் புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணை யாற்றங்கரையில் அமைந்தது திருவெண்ணெய் நல்லூர். அது சுந்தர மூர்த்தியைத் தடுத்தாட் கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம் .சைவ சமய ஞான நூலாகிய சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்ட தேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர் நீதி என்னும் அடியார் அவ்வூரில் தொண்டு செய்து சிவப் பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். மண்ணியாற்றங் கரையில் முருகவேளின் பெயரால் அமைந்த சேய் நல்லூர் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்கும். வட ஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய் நல்லூர் சேனூர் எனப்படும். தமிழ் நாட்டை ஆண்ட அரசர் பலர் தம் பெயர் விளங்குமாறு பல நல்லூர்களை உண்டாக்கினார்கள். பாண்டி நாட்டில் வீரபாண்டிய நல்லூர், அரிகேசரி நல்லூர், மானா பரண நல்லூர், செய்துங்க நல்லூர் முதலிய ஊர்கள், பாண்டிய குலத்தைச் சேர்ந்த மன்னர் பெயரை விளக்கி நிற்கின்றன. சோழ நாட்டில் பெருஞ் சோழ மன்னர்கள் உண்டாக்கிய நல்லூர்களைச் சாசனங்களிற் காணலாம். முடி கொண்ட நல்லூர், அநபாய நல்லூர், திருநீற்றுச் சோழ நல்லூர், திருத்தொண்டத் தொகை நல்லூர், சிவபாத சேகர நல்லூர், கலி கடிந்த சோழ நல்லூர் முதலிய நல்லூர்கள் சோழ மன்னருடைய விருதுப்பெயர் பெற்ற பதிகளாகும்.

புத்தூர்

புதியவாகத் தோன்றும் ஊர்கள் புத்தூர் என்று பெய்ர் பெறும். தேவாரப் பாடல் பெற்ற பாண்டி நாட்டுப் பதி யொன்று திருப்புத்தூர் என வழங்கி வருகின்றது. அரிசில் ஆற்றங்கரையில் எழுந்த புத்தூர் அரிசிக்கரைப் புத்துர் என்றும், கடுவாய் நதிக்கரையிலுள்ள கடுவாய்க்கரைப் புத்துர் என்றும் தேவாரப்பதிகம் குறிக்கின்றது. பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்துர் வைணவர் போற்றும் பெரும் பதியாகும். சுந்தரர் திருமணம் செய்யப் போந்த புத்தூர் மணம் வந்த புத்துர் ஆயிற்றென்று பெரிய புராணம் கூறுகின்றது. கொங்கு நாட்டில் பழைய பேரூருக்கு அருகே கோவன் என்னும் தலைவன் பெயரால் எழுந்த ஊர் கோவன்புத்துர் என்று பெயர் பெற்றது. அதுவே இப்பொழுது கோயம்புத்துராகச் சிறந்து விளங்குகின்றது.

நெய்தல் நிலம்

கரை

தமிழ் நாடு நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில் சோழ நாட்டுக் கடற்கரை, சோழ மண்டலக்கரை என வழங்கிற்று. அஃது ஐரோப்பியர் நாவில் சிதைந்து கோர மண்டல் கரையாயிற்று. பாண்டி நாட்டுக் கடலில் நினைப்பிற் கெட்டாத நெடுங்காலமாக நல் முத்து விளைந்தமையால் அக்கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால் குறிக்கப்பட்டது. சேர நாட்டுக் கடற்கரை, மேல் கரை என்று பெயர் பெற்றது.

கடற்கரையில் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களே காட்டும். பாண்டி நாட்டில் கீழக் கரை என்பது ஓர் ஊரின் பெயர்.அக்காலத்தில் முத்துச் சலாபம் அங்குச் சிறப்பாக அமைந்தது. பிற் காலத்தில் மரக்கல வணிக மன்னராய் விளங்கிய சீதக்காதி என்னும் மகமதிய வள்ளல் அவ்வூரில் சிறந்து வாழ்ந்தார்.இன்னும் வைகையாறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்த ஊருக்கு ஆற்றங்கரை என்பது பெயர். முன்னாளில் சங்கு வாணிபம் அவ்வூரில் நன்கு நடைபெற்றது. இராமேசு வரத்துக்கு அண்மையில் கோடிக்கரை என்னும் ஊர் உண்டு.அது தாலமி முதலியயவன ஆசிரியர்களாலும் குறிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் தென்னிந்தியா வினின்று இலங்கை நாட்டுக்குச் செல்வதற்குக் கோடிக்கரை மார்க்கமே குறுக்கு வழியாக இருந்தது.

துறை

கடல் வாணிபத்திற்குச் சாதனமாகிய இடம் துறை என்று பெயர் பெறும். இக்காலத்தில் அதனைத் துறைமுகம் என்பர். பண்டைத் துறைமுகங்கள் பெரும்பாலும் ஆற்று முகங்களில் அமைந்திருந்தன. குமரியாறு கடலொடு கலந்த இடத்தில் குமரித்துறை இருந்ததாக இலக்கியம் கூறுகின்றது. அத்துறையில் விளைந்த முத்துச்சலாபத்தின் செம்மையைக் குமரகுருபர அடிகள் பாராட்டுகின்றார். குமரித்துறை கடலாற் கொள்ளப்பட்டு அழிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கொற்கைத் துறை தென்னாட்டுப் பெருந் துறையாக இருந்தது. அத்துறையில் விளைந்த முத்து, கடல் கடந்து, பிற நாடுகளிற் போந்து பெரு மதிப்புப் பெற்றது. கொற்கைத்துறை செல்வச் செழுந்துறையாய் இலங்கிய தன்மையால் பாண்டிய மன்னன் கொற்கைத் துறைவன் என்றும், கொற்கைக் கோமான் என்றும் குறிக்கப்பட்டான்.

தாமிரபருணி யாற்று முகத்தில் வீற்றிருந்த கொற்கைத் துறை நாளடைவில் தூர்ந்து போயிற்று. அந் நிலையில் கடற்கரையில் அமைந்த காயல் என்ற ஊர் சிறந்த துறைமுக மாயிற்று. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில், காயல் சிறந்ததொரு நகரமாக விளங்கிற்று. இத்தாலிய அறிஞராகிய மார்க்கோ போலோ என்பவர், தமிழ்நாட்டிற் போந்தபோது காயல் துறையின் செழுமையைக் கண் களிப்பக் கண்டார். அத்துறைமுகத்தில் இடையறாது நடந்த ஏற்றுமதியையும் இறக்குமதியையும் அவர் குறித்துள்ளார்; முத்துக் குளிக்கும் முறையினை விரிவாக விளக்கியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த காயல் துறையும் காலகதியில் தூர்ந்து போயிற்று. இன்று அவ்வூர் புன்னைக் காயல் என்னும் பேர் கொண்டு, சின்னஞ்சிறிய செம்படவர் ஊராகக் கடற்கரையினின்று மூன்று மைல் உள்ளடங்கியிருக் கின்றது.

பட்டினம்

கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது. இந்நாளில் பட்டணம் என்னும் சொல் சிறப்பு வகையில் சென்ன பட்டணத்தைக் குறித்தல் போன்று, அந்நாளில் பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினத்தையே குறித்தது. அந்நகரத்தைப் பற்றிப் பண்டைக் கவிஞர் ஒருவர் இயற்றிய பாட்டு பட்டினப் பாலை என்று பெயர் பெற்றது. அப்பட்டினத்தில் வணிகர் குலமணியாய்த் தோன்றிப் பின்பு முற்றும் துறந்து சிறப்புற்ற பெரியார் பட்டினத்தார் என்றே இன்றும் பாராட்டப் படுகின்றார். எனவே, முன்னாளில் பட்டினம் என்று பெயர் பெற்றிருந்தது காவிரிப்பூம் பட்டினமே என்பது இனிது விளங்குவதாகும். காவிரிப் பூம்பட்டினம் பூம்புகார் நகரம் என்றும் புலவர்களாற் புகழ்ந்துரைக்கப்பட்டது. பூம்பட்டினம் எனவும், பூம்புகார் எனவும் அந்நகர்க்கு அமைந்துள்ள பெயர்களை ஆராய்வோமானால், ஓர் அழகிய கடற்கரை நகரமாக அது விளங்கிற் றென்பது புலனாகும்.

அக் காலத்தில் சிறந்திருந்த கடற்கரை நகரங்களின் அமைப்பைப் பண்டை இலக்கியங்கள் ஒருவாறு காட்டுகின்றன. ஒவ்வொரு பெரிய கடற்கரை நகரமும் இரு பாகங்களை யுடையதாய் இருந்தது. அவற்றுள், ஒரு பாகம் ஊர் என்றும், மற்றொரு பாகம் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டன. பூம்புகார் நகரத்தின் ஒரு பாகம் மருவூர்ப் பாக்கம் என்றும், மற்றொரு பாகம் பட்டினப்பாக்கம் என்றும் பெயர் பெற்றன. இரண்டும் சேர்ந்தது காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது. அவ்வாறே சோழ மண்டலக் கரையிலுள்ள நாகை என்னும் நகரமும் இரு பாகங்களையுடையதாய் இருந்தது. இக்காலத்தில் நாகூர் என்றும், நாகப்பட்டினம் என்றும் வழங்குகின்ற பகுதிகள் முற்காலத்தில் ஒரு நகரின் இரண்டு கூறுகளாகவே கருதப்பட்டன. திருவாரூர் சோழ நாட்டின் தலைநகரமாய்த் திகழ்ந்த காலத்தில், நாகை சிறந்த துறைமுகமாகச் செழித்திருந்தது. கடுவாய் என்னும் ஆற்றுமுகத்தில் அமைந்த அத்துறைமுகத்தைக் கடல் நாகை என்று திருப்பாசுரம் போற்றுகின்றது. அந்நகரில் சைவமும் வைணவமும் பெளத்தமும் சிறந்தோங்கி இருந்தன என்று தெரிகின்றது. நாகையிலுள்ள திருமால் கோவிலைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். காரோணம் என்று புகழ் பெற்ற சிவன் கோவிலைக் குறித்து எழுபது திருப்பாசுரங்கள் தேவாரத்தில் காணப்படுகின்றன. இராஜராஜ சோழன் காலத்து அந் நகரில் பெளத்த சமயத்தார்க்குரிய பெரும் பள்ளிகள் அமைந்திருந்தன என்று சாசனங்களால் அறிகின்றோம். எனவே, கடல் நாகை நானாவித மக்களும் கலந்து வாழ்ந்த சிறந்த நகரமாகக் காட்சி அளித்தது.

இன்னும், சேர நாட்டில் சிறந்திருந்த முசிரி என்னும் பட்டினமும் இரு பாகங்களாகவே அமைந்திருந்தது. அவற்றுள் ஊர் என்னும் பெயருடைய பாகம் கொடுங் கோளுர் எனவும், மற்றொரு பாகம் மகோதைப் பட்டினம் எனவும் வழங்கலாயின.

பாண்டி நாட்டில் காயல் பட்டினம், குலசேகர. பட்டினம் முதலிய கடற்கரைப் பட்டினங்கள் உள்ளன. காயல் பட்டினத்தில் இந் நாளில் மகமதியரே பெரும்பாலும் வாழ்ந்து வருவதால் சோனகர் பட்டினம் என்றும் அதனைச் சொல்வதுண்டு. உப்பு வாணிபம் அவ்வூரில் சிறப்பாக நடைபெறுகின்றது. குலசேகர பாண்டியன் பெயரைக் கொண்டு விளங்கும் ஊர்களில் ஒன்று குலசேகரப் பட்டினமாகும். சோழ மண்டலக் கரையில் சதுரங்கப் பட்டினம் என்னும் சிறிய துறைமுகம் உள்ளது. அது பாலாறு கடலிற் சேருமிடத்திற்குச் சிறிது வடக்கே அமைந்திருக் கின்றது. சதுரை என்பது அவ்வூர்ப் பெயரின் குறுக்கம். அதனை ஐரோப்பிய நாட்டார் சதுராஸ் என்று வழங்கினார்கள்.

பாக்கம்

கடற்கரைச் சிற்றுார்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம் பாக்கம், மீனம் பாக்கம், வில்லி பாக்கம் முதலிய ஊர்கள் நெய்தல் நிலத்தில் எழுந்த பாக்கம் குடியிருப்பேயாகும். சில காலத்திற்கு முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச் சென்னையின் அண்மையிலிருந்த சிற்றுார்கள் இப்போது அந்நகரின் அங்கங்க ளாய்விட்டன. புதுப் பாக்கம், புரசை பாக்கம், சேப் பாக்கம், நுங்கம் பாக்கம் முதலிய ஊர்கள் சென்னை மாநகரோடு சேர்ந்திருக்கின்றன. களர்,அளம்

நெய்தல் நிலம் பெரும்பாலும் உப்புத் தரையாகும். உப்பு நிலத்தைக் களர் நிலம் என்றும் கூறுவர்.களர் என்னும் சொல் ஒரு சில ஊர்ப் பெயர்களிற் காணப்படுகின்றது. திருக்களர் என்பது தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். உப்பு விளையும் இடம் அளம் எனப்படும். தஞ்சை நாட்டில் நன்னிலத்துக்கு அண்மையில் பேரளம் என்னும் உப்பளம் உண்டு. அப்பெயரே அந் நிலத்தின் தன்மையை உணர்த்து கின்றது.

குப்பம்

நெய்தல் நிலத்தில் வாழ்பவர் வலையர் என்றும், செம்படவர் என்றும், பரதவர் என்றும் வழங்கப் பெறுவர். அன்னார் வசிக்கும் இடம் குப்பம் என்னும் பெயரால் குறிக்கப்படும். சென்னையைச் சேர்ந்த குப்பம் கடற்கரையில் பல குப்பங்கள் உண்டு. காட்டுக் குப்பம், கருங்குடிக் குப்பம், நொச்சிக் குப்பம், சோலைக் குப்பம் முதலிய குப்பங்கள் பரதவர் வாழும் இடங்களே யாகும்.

பாலை நிலம்

பழங்காலத்தில் பாலை ஒரு தனி நிலமாகக் கருதப்பட வில்லை. கடு வேனிற் காலத்தில் முல்லையும் குறிஞ்சியும் வறண்டு கருகிப் பாலை என்னும் படிவம் கொள்ளுமென்று சிலப்பதிகாரம் கூறுமாற்றால் இவ்வுண்மை விளங்கும். ஆயினும், கால கதியில் பாலையும் ஒரு தனி நிலமாகக் கொள்ளப்பட்டது. நீரும் நிழலு மற்ற நிலத்தில் கொடுந்தொழில் புரியும் கள்வர்கள் குடியிருப்பார்கள் என்றும், அன்னார் வணங்கும் தெய்வம் கொற்றவை என்றும் தமிழ் இலக்கியம் கூறும். பாலை என்னும் பெயருடைய சில ஊர்கள் தமிழ்நாட்டில் உண்டு. கொங்கு நாட்டின் வட வெல்லையாகப் பெரும் பாலை என்னும் இடம் குறிக்கப்படுகிறது. சேலம் நாட்டில் பெரும் பாலை என்பது இன்றும் ஓர் ஊரின் பெயராக வழங்குகின்றது. சிதம்பரத்திற்கு அருகே திருக்கழிப் பாலை என்னும் சிவஸ்தலம் இருந்தது. அதனைத் தேவாரம் பாடிய மூவரும் போற்றியுள்ளார்கள். இடைக் காலத்தில் கொள்ளிட நதியிலே பெருகி வந்த வெள்ளம் அக்கோவிலை அழித்துவிட்டது. பாண்டி நாட்டில் பாலவனத்தம் என்ற ஊர் உண்டு. அதன் பழம் பெயர் பாலைவன நத்தம் என்பது. ஆதியில் பாலை வனமாயிருந்த இடம், குடியிருப்புக் கேற்ற நத்தமாகிப் பின்பு ஊராகி, வளர்ந்தோங்கிய வரலாறு அவ்வூர்ப் பெயரால் அறியப்படுகின்றது. தொண்டை நாட்டு ஊற்றுக் காட்டுக் கோட்டத்தில் பண்டை நாளில் பாலையூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் இக் காலத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் பாலூராக விளங்குகின்றது. திருப்பாலை வனம் என்னும் பதியும் அந்நாட்டில் உண்டு.

நெல்லை நாட்டில் செக்கச் சிவந்த மணற் பாங்கான சில இடங்கள் தேரி என்று பெயர் பெற்றுள்ளன. கோடைக் காற்றால் தேரியின் தோற்றம் மாற்ற மடையும். இடையன் குடித் தேரியும், குதிரை மொழித் தேரியும், சாத்தான் குளத் தேரியும் நூறடிக்கு மேல் இருநூறடி வரை உயர்ந்து அகன்ற மணல் மேடுகளாகும்.

அடிக் குறிப்பு

1. குடபுலம், குணபுலம், தென்புலம் என்பன முறையே சேர சோழ பாண்டியர் நாடுகளைக் குறித்தலைச் சிறுபாணாற்றுப் படையிற் காண்க. 2. தொல்காப்பியம், பொருள், அகம் .

3. “நளன் என்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்" நளவெண்பா.

4. பனம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரம்.

5. “வட சொற்கும் தென் சொற்கும் வரம்பாகி......... உடை சுற்றும் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் - கம்பராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்.

6. “செம்மையைக் கருமை தன்னைத் திருமலையொருமை யானை” -திருமங்கையாழ்வார், திருக்குறுந்தாண்டகம்.

7. “வாழையும் கமுகும், தாழ்குலைத் தெங்கும், மாவும் பலாவும் சூழடுத்தோங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” - சிலப்பதிகாரம், காடுகாண் காதை.

8. M. M. Vol. III, p 718.

9. “சேயோன் மேய மைவரை உலகம்” என்னும் தொல்காப்பியத்தாலும், “குன்றுதோறாடலும் நின்றதன்பண்பே” என்னும் திரு முருகாற்றுப் படையாலும் இக்கொள்கை விளங்கும்.

10. “அறையே பாறை” - பிங்கல நிகண்டு.

11. திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே உள்ள தென்பது “கூடற்குடவயின்....அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று” என்னும் திருமுருகாற்றுப்படையால் தெரியலாகும்.

12. குன்றம் என்பது குன்னம் எனவும், குணம் எனவும் தமிழ்நாட்டில் மருவி வழங்கும். ஒன்று என்னும் சொல் ஒன்னு என்றும், ஒண்ணு என்றும் பேச்சுத் தமிழில் வழங்குதல் காண்க. குன்றம், குண்ணம் என்றாகிப் பின்பு குணம் எனக் குறுகிற்று. நெற் குன்றம் என்பது வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் உள்ளது. அது நெற்குன்றம் என வழங்குகின்றது. 86 of 1908, அவ் வண்ணமே தென்ஆர்க்காட்டுத் திருக்கோயிலூர் (திருக்கோவலூர்) வட்டத்திலுள்ள நெற்குன்றமும் நெற்குணம் என வழங்கும்.M.E. R 1934-35. பூங்குன்றம் என்பது பூங்குணம் என மருவியுள்ளது. M. E. R. 1922-23.

13. வட ஆர்க்காட்டில் குன்றம், குண்ணம் என வழங்கும், குண்ணத்தூர் ஆர்க்கோண வட்டத்திலும், குண்னவாக்கம் செய்யாற்று வட்டத்திலும் உள்ளன.

14. தென் ஆர்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் ஒரு பாறையின் அருகே எழுந்த நல்லூர் ‘அறையணி நல்லூர், என்று பெயர் பெற்றது. அறையின் அணித்தாக உள்ள நல்லூர் என்பது அப்பெயரின் பொருள். தேவாரப் பாடல் பெற்ற அவ்வூர் இப்பொழுது அரகண்டநல்லூர் என்று வழங்குகின்றது.

15. சுமார் ஆயிரத்து இருநூற்று இருபதடி உயரமும், நானுறடி நீளமும் முந்நூறடி அகலமும் உள்ள அப்பாறையின் மீது ஒரு கோட்டை கட்டப்பட்டுள்ளது. பாறையுச்சியில் பழுதுற்ற கோயிலொன்று காணப்படுகின்றது. M.M. Vol. 1. D,277.

16. இவ்வூரின் நடுவே ஒரு பாறை யுள்ளது. அதன் மேற்புறத்தில் நரசிங்கப் பெருமாளும், கீழ்ப்புறத்தில் அரங்கநாதரும் கோயில் கொண்டுள்ளார்கள். நாமக்கல் என்ற பெயருக்குப் பொருத்தமாக ஒரு பெரிய நாமம் அப்பாறையிலே சாத்தப்பட்டுள்ளது.

17. விருத்தாசலத்தின் பழம் பெயர் முதுகுன்றம் என்பதாகும்; அது பழமலை யென்றும் வழங்கியதாகத் தெரிகின்றது. வேதாசலம் என்பது திருக்கழுக்குன்றத்தின் பெயர் வேங்கடாசலம் என்பது திருப்பதி மலை.

18. மதுரை மீனாட்சியம்மை குறம், குறிஞ்சிநிலத் தலை வனாகிய கண்ணப்பரின் தந்தையை “இருங்குறவர் பெருங் குறிச்சிக் கிறைவன் என்று சேக்கிழார் கூறுதல் காண்க -கண்ணப்ப நாயனார் புராணம், 43.

19. “காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” - பட்டினப்பாலை, 283.

20. தில்லை என்பது ஒரு வகை மரம், “தில்லை யன்ன புல்லென் சடை” - புறநானூறு, 252. திருநெல்வேலியின் வரலாற்றைக் கூறும் புராதனமாயுள்ள புராணம் வேணுவ புராணம் எனப்படும். அது நானுற்று ஐம்பத்து நான்கு திருவிருத்தங்களால் ஆயது. திருநெல்வேலிக் கோவிலில் பள்ளமான இடத்திலிலுள்ள சுயம்பு வடிவம் இன்றும் வேணுவன லிங்கம் என்று அழைக்கப்படுகின்றது.

21. “ஆரே தாதகி சல்லகி ஆத்தி - பிங்கல நிகண்டு. 22. இதனை ஆற்காடு என்று கொண்டு, ஆறு காடு அங்கிருந்தனவென்று புராணம் கூறும்; வடமொழியில் ஷடாரண்யம் என்பர். அது குறித்து டாக்டர் கால்டுவெல் கூறும் குறிப்பை அவரது ‘ஒப்பிலக்கண முகவுரையிற் காண்க.

23. தேவாரத்தில் பழையனுர் ஆலங்காடு என்று இவ்வூர் குறிக்கப்படுகின்றது.

24. ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் Pulicat என்பதாகும்.

25. தலையாலங்கானம் எனவும் வழங்கும். அங்கு நிகழ்ந்த போரில் வெற்றி பெற்ற பாண்டியன், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எனச் சங்க இலக்கியத்திற் பாராட்டப்படுகின்றான்.

26. M. M. Vol. III. p. 1032.

27. மேற்குத் தொடர் மலையின் அடிவாரத்தில் பச்சை யாற்றங்கரையில் உள்ளது இவ்வூர்.

28. தமிழ்நாட்டில் ஐயனார், அரிகரபுத்திரன், சாஸ்தா முதலிய பெயர்கள் ஆரியனைக் குறிக்கும்-கந்த புராணம், மகா சாத்தாப் படலம் பார்க்க. 29. தேவாரப் பாடல் பெற்ற காவுகள் பின்னர்க் கூறப்படும்.

30. S. I. I. Vol. iv. p. 326

31. 169 of 1914. 32. மதுரை நாட்டு மேலுர் வட்டத்திலுள்ள அழகர் கோயிலே திருமால் இருஞ்சோலை. M. E. R. 1928-29. தென் திருமால் இருஞ்சோலை என்பது திருநெல்வேலி நாட்டிலுள்ள சீவலப்பேரியின் பெயர் என்று சாசனம் கூறும். 408 of 1906.

33. “பழமுதிர்ச்சோலை மலைகிழவோனே” திருமுருகாற்றுப்படை.

34. தொகுப்பு என்பது தோப்பு என்றாயிற்று. “செய்குன்று சேர்ந்த சோலை தோப்பாகும்” - பிங்கல நிகண்டு.

35. 312 of 1901, 355 of 1908. திருவிடைச் சுரத்தைத் தொண்டை நாட்டுக் குறிஞ்சி நிலத் தலமாக குறித்துள்ளார் சேக்கிழார் -திருக்குறிப்புத் தொண்டர் புராணம், 13.

36. “ஊரொடு சேர்ந்த சோலை, வனம் என்ப” - பிங்கல நிகண்டு.

37. திந்திருணி என்பது புளிய மரத்தைக் குறிக்கும் வடசொல். திந்திருணி வனம் (புளியங்காடு) திண்டிவனம் என மருவிற் றென்பர். 143 of 1900.

38. மறைக்காடு என்பதற்கு நேரான வடசொல் வேதாரண்யம்.

39. கரைய புரம் என்பது இப்பொழுது வழங்கும் பெயர். கரவீரம், கரையபுரம் என மருவியுள்ளது. கரவீரம் அலரியென்பது, “கவீரம் கணவீரம் கரவீரம் அலரி என்னும் பிங்கல நிகண்டால் அறியப்படும் .

40. இவ்வூர் திருப்பங்கிலி என்ற பெயரோடு திருச்சி நாட்டு லால்குடி வட்டத்தில் உள்ளது.

41. திருநாம நல்லூர் பழைய திருநாவலுரே யென்பது சாசனத்தால் விளங்கும். 360 of 1902. 42. “புறவம் புறம்பணை புறவணி முல்லை, அந்நிலத் துர்ப்பெயர் பாடி யென்ப” -பிங்கல நிகண்டு

43. “சண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியா ரே என்பது திருநாவுக்கரசர் தேவாரம் - திருவாபாடிப் பதிகம், 4.

44. “ஆயர்பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ - சிலப்பதிகாரம், கொலைக்களக் காதை, 46-47.

45. வேலப்பாடி வேலூர்க் கோட்டைக்குத் தென் கிழக்கே இரண்டு மைல் துரத்தில் உள்ளது.

46. 221 of 1910.


47. மாட்டுக் கொட்டிலைக் குறிக்கும் தொழு என்னும் சொல் சில ஊர்ப்பெயர்களில் அமைந்துள்ளது. மூங்கில் தொழு, வெட்டியான் தொழு முதலிய ஊர்ப்பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

48. எருமை மாடுகளே தோடரது செல்வம். ஆதலால், மந்தை என்பது அவர் வசிக்கும் ஊருக்குப் பொருத்தமான பெயராகும். இலக்கியத்தில் மன்று என்னும் சொல் பசு மந்தையைக் குறிக்கும். அச் சொல் மந்து எனத் தோடர் மொழியிலும், மந்தையெனப் பேச்சுத் தமிழிலும் மருவி வழங்குவதாகத் தெரிகின்றது.

49. “வாழி யவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி” - சிலப்பதிகாரம், கானல் வரி, 27.

50. சிலப்பதிகாரம், புறஞ்சேரி யிறுத்த காதை, 169-170.

51. “அதோமுகம் புகாரோடு அழிவு கூடல் கழிமுகம் என்றனர் காயலுமாகும்” - பிங்கல நிகண்டு.

52. கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” - ஐங்குறுநூறு, 188. 53. சேதுநாடு என்பது இராமநாதபுரம் ஜில்லா,

54, 25 of 1909.

55.இல் வாற்றுப் பெயர்களை நோக்கும்பொழுது பெண்ணை யாறும் முற்காலத்தில் வெண்ணெயாறாக இருந்திருக்குமோ எண்ணம் எழுகின்றது. பகர வகரங்கள் தம்முள் மயங்கும என்பது தமிழ் ஒலியிலக்கணத்தால் அறியப்படும். அன்றியும் பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ள நல்லூர் திருவெண்ணெய் நல்லூர் என்று பெயர் பெற்றுள்ளது.

56. “முத்தாறு வலஞ்செய்யும் முதுகுன்றமே” என்பது தேவாரம்.

57. சேயாறு, செய்யார் என மருவி வழங்குகின்றது.

58. சென்னையின் வழியாக மூன்று மைல் சென்று கடலிற் கலக்கும் அடையாற்றின் முகத்தில் அமைந்த ஊர் அடையாறு என்னும் பெயர் பெற்றது.

59. முக்கூடற் பள்ளு நாடகம்-51.

60. இப்போது கயத்தார் என வழங்கும் கயத்தாறு, கல்வெட்டில், கசத்த லாறு என்று குறிக்கப்படுகின்றது - 19 of 1912. கசத்தினின்று எழுந்த ஆறென்பது அப்பெயராலும் அறியப்படும். கசத்தி லாறு என்பது கசத்த லாறு என மருவியது போலும்.

61. ஆற்றில் எளிதாக இறங்கி ஏறுவதற்குப் படிக்கட்டு அமைந்துள்ள இடம் இன்றும் படித்துறை என மருவியது வழங்கும்.

62. 357 of 1907.

63. பாடல் பெற்ற துறைகளைத் துறையும் நெறியும் என்ற தலைப்பின் கீழ்க் காண்க.

64. 486 of 1907.

65. இரு நதிகள் சேரும் இடம் கூடல் என்றும், மூன்று நதிகள் சேரும் இடம் முக்கூடல் என்றும் வழங்கும், காவேரியும் பவானியும் கூடும் இடம் பவானி கூடல் என்று இக் காலத்தில் வழங்கும். துங்கையும் பத்திரையும் சேர்ந்து துங்கபத்திரையென்று பெயர் பெறும் இடத்தில் அமைந்த ஊருக்குக் கூடலி என்று பெயர். Mysore, Vol. 1 p. 459.

66. இக்காலத்தில் சீவலப்பேரி யென்பது அதன் பெயர். முன்னாளில் இராமேச்சுரத்திற்குத் தீர்த்த யாத்திரை செய்வோர் சீவலப்பேரி யென்னும் முக் கூடலில் நீராடுவர். அவர்களுக்கு நாள்தோறும் உணவளித்தற் பொருட்டுத் தளவாய் முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட தர்மசாலை (சத்திரம்) இன்றும் அவ்வூரில் உள்ளது. T.G p. 485.

67. கடலருகே யமைந்த காரணத்தால் கடலூர் எனப்பட்டது என்று கொள்வர் சிலர். கூடலூர் என்னும் பெயரே கடலூர் என மருவி வழங்குவதால் அக்கொள்கை பொருத்தமுடையதன்று. South Arcot District Gaz., 296.

68. பத்தல்மடை என்ற பெயர் சாசனத்திற் காணப்படுகின்றது. M. E. R. 1916–17.

69. பல்லவ னேரி என்பது சிதைந்து பல்மனேர் என வழங்குகின்றது. சித்துர் நாட்டில் உள்ளது. அங்குக் குன்று சூழ்ந்த ஒரு தடாகம் உண்டு. North Arcot Manual. Vol. p. II 391.

70, 199 of 1901: 224 of 1922.

71. 569 of 1905 records that the king renamed a ruined tank (at Vagaiputtur) Virapandiyappereri and granted all lands irrigated by it to the Villagers-1. M. P. p. 542.

72. M. E. R. 1929-30,

73, 192 of 1919.

74. ஸ்ரீவல்லபனால் முன்னேற்றமடைந்த ஊராதலின் ஸ்ரீவல்லபமங்கலம் என்னும் பெயரும் அதற்குண்டு, 160 of 1895. அப்பெயர் சீவலனாடு எனவும், சீவல மங்கையெனவும் முக்கூடற் பள்ளு நாடகத்தில் வழங்கும் - முக்கூடற்பள்ளு, 5, 18. 75. “குட்டம் தாங்கல் கோட்டகம் ஏரி” - பிங்கல நிகண்டு.

76. பாண்டி நாட்டின் சில பாகங்களில் கம்மாய் என்பது குளத்தின் பெயராக வழங்குகின்றது. கம்வாய் என்ற சொல் சிதைந்து கம்மாய் ஆயிற் றென்பர். கம்மாய் என்னும் சொல்லும் ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கிறது. பாண்டுக் கம்மாய், மூவர் கம்மாய் முதலிய ஊர்கள் பாண்டி நாட்டில் உண்டு.

77. வட ஆர்க்காட்டில் சோழிங்கர் என்ற ஊரிலுள்ள ஏரியின் பெயர் சோழ வாரிதி என்று சாசனம் கூறும். 9 of 1896.

78. இன்றும் மைசூர் தேசத்தில் சிவ சமுத்திரம் என்பது ஓர் ஏரியின் பெயராக வழங்குகின்றது. திருக்குற்றாலத்தில் வட அருவி விழுந்து பொங்கி எழுகின்ற வட்டச்சுனை பொங்குமா கடல் என்று அழைக்கப்படுகின்றது. சோழசமுத்திரம் சாசனத்திற். குறிக்கப்பட்டுள்ளது. 238 of 1931.

79. வரகுண பாண்டியனது வட்டெழுத்துச் சாசனத்தில் இவ்வூர் முள்ளி நாட்டைச் சேர்ந்த இளங் கோக்குடி என்று குறிக்கப்படுகின்றது. 105 of 1905.

80. M. E. R. 1922, 221.

81. “கோமுகியென்னும் கொழுநீர் இலஞ்சி’ - மணிமேகலை.

82. குற்றாலக் குறவஞ்சி, 85.

83. கச்சியை சூழ்ந்த நாட்டுக்குப் பொய்கை நாடு என்ற பெயர் இருத்தலால், பொய்கையார் என்று அவர் சொல்லப்பட்டார் என்பாரும் உண்டு. அவர் வரலாற்றை ஆழ்வார்கள் கால நிலை என்ற நூலின் இரண்டாம் அதிகாரத்திலும், தமிழ் வரலாறு 176-ஆம் பக்கத்தும் காண்க.

84. ஊரணி யென்பது ஊருணியின் திரிபாகும். ‘ஊருணி நீர்நிறைந் தற்றே” என்னும் திருக்குறளால் அச்சொல்லின் பழமை விளங்கும். ஊருக்கு அணித்தாக உள்ள நீர்நிலை ஊரணி யெனப்படும் என்றும் கூறுவர்.

85. North Arcot Manual, Vol. II p. 384. 86. எழுபதடி உயரமும், நூற்றிருபதடி அகலமும் உடையது அக்குளத்தின் கரை.

87. வான மாரியால் நிறையும் குளத்தை வானமளிக்குளம் என்பர். அப் பெயர் மானா மாரிக் குளம் என மருவி வழங்கும்.

88. 403 of 1907.

89. 337 of 1908; M. E. R. 1933-34.

90. 53 of 1907.

91. 73 of 1908; I. M. P., p. 122.

92. பெரு நிலம் உடையாரைப் பண்ணையார் என்பர்.

93. 187 of 1925.

94. சங்க இலக்கியத்தில் ஊரன் என்ற சொல் மருத நிலத் தலைவனைக் குறிக்கும். ‘தண்டுறை ஊரனை’ ஐங்குறுநூறு, 88.

95. கோழியூர் என்பது சோழ நாட்டின் பழைய தலைநகராகிய உறையூரின் பெயர், “கோழி உறையூர்” - பிங்கல நிகண்டு.

96. இவ்வூர் இராமநாதபுர நாட்டில் உள்ளது.

97. “பெண்ணைத்தென்பால் வெண்ணெய் நல்லூர்” சுந்தரர் தேவாரம்.

98. “சேயடைந்த சேய்ஞலூர்” என்பது தேவாரம். சூரனோடு போர் செய்யக் கருதி எழுந்த முருகவேள். சிவபெருமானை வழிபட்டுச் சர்வ சங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம் சேய்நல்லூர் (சேய்ஞலூர்) என்று கந்த புராணம் கூறும் -குமாரபுரிப் படலம், 14-15, 75-76.

99. “அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆமால்” - தடுத்தாட்கொண்ட புராணம், 23.

100. (yp#553.507 – The Fishery Coast.

101. The Pandyan Kingdom, p. 191. 102. பூம்பட்டினம் – The City beautiful.

103. இதனைச் சிலப்பதிகாரம் இந்திரவிழாவூரெடுத்த காதை யிற் காண்க.

104. நாகப்பட்டினத்திற்கு வடக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது நாகூர்.

105. “கடல் நாகைக் காரோணம் கருதினானை” திருநாவுக் கரசர் தேவாரம்.

106.“கோவீற் றிருந்து முற்ை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளுர் - சேரமான் பெருமாள் நாயனார் புராணம், 1.மகோதைப் பட்டினத்தை “ஆர்க்கும் கடலங் கரை மேல் மகோதை” என்று தேவாரத்தில் சுந்தரர் பாடினார்.

107. சென்ன பட்டணத்திற்குத் தெற்கே இருபது மைல் துரத்தில் செங்கற்பட்டைச் சேர்ந்த கோவளம் என்ற ஊர் உள்ளது. கடலுக்குள் நீண்ட தரைமுனை (cape)கோவளம் எனப்படும். இவ்வூர்ப் பெயர் covelong எனச் சிதைந்து வழங்குகின்றது. M. E. R., 1934-35.

108. “6Ti நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்” நாலடியார், 133.

109. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 60-67.

110. மதுரையில் இப்பொழுது தமிழ் வளர்க்கும் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவர் பாலைவன நத்தத்தின் ஜமீன்தார்.

111. M. E. R. 1928-29.

112. செங்கற்பட்டுப் பொன்னேரி வட்டத்தில் உள்ளது.

113. Journal of the Madras Geographical Association, Vol. 15, pp. 322-24.

  1. 3
  2. 4
  3. 5
  4. 6
  5. 7
  6. 8
  7. 9