உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன் திருவள்ளுவர்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து

அணிந்துரை

பேராசிரியர் மா.நன்னன்
புலவர், எம்.ஏ., பிஎச்.டி.


புலவர் என்.வி. கலைமணி யவர்கள் தாம் தொகுத்து வெளி யிடும் அய்யன் திருவள்ளுவர் என்னும் பெயரிய நூலொன் றுக்கு அணிந்துரை வேண்டினார். கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பிருந்தே அவரை யாமறிவோம். அவர் எரியீட்டி’யாயும், ‘சவுக்கடி'யாயும், பலரையும் மருட்டியும், அச்சுருத்தியும் துலங்கி வாழ்ந்த காலத்திலேயே எம்ம்ால் அறிந்து காமுறப் பட்டவர். அவரைப் பற்றி பலர் பல வகையில்,மதிப்பிட்ட காலமது.

அவர் தமிழ் எழுத்துலகில் மறகத்தக்கவரல்லர். அவர் நிலைப்பதற்கு இந் நூலும் உதவும். ஆயினும் அவர் நன்கு நிலை கொள்வதற்குத் தம் எழுதுகோலை மீண்டும் தேடி எடுத்து ஆள வேண்டும் என்பது எமது விருப்பம் மட்டுமன்று, வேண்டு கோளும் ஆகும். தூண்டுகோலுமாக யாம் பயன்பட்டாலும் சரியே.

இந்நூல் பகுதிகளுள் தரப்பட்டுள்ளவை பல என் பாராட்டுக் குரியவையாகின்றன. இனிப்புருண்டையில் முந்திரிப்பருப்பும், பொடி முந்திரி வற்றலும், தலைகாட்டி நம்மை ஈர்ப்பன போல் இவை அமைந்துள்ளன. சுருங்கக் கூறுவதாயின் தக்கவற்றைத் தக்கவற்றிலிருந்து தக்கவாறு தேர்ந்தெடுத்துத் தக்காங்கமைத்துள்ளார் கலைமணி என்னலாம்.

பற்பல இடங்களிலும் புலவர் கலைமணி அவர்கள் தமக்கு மட்டுமே உரிய நடையில் எழுதியுள்ளார். அத் தனித் தன்மை மாறாமல் அமைந்திருப்பதைக் காண்கிறோம். 171 ஆம் பக்கத்திலுள்ளவை போன்றன செய்யுட் டிறம் காட்டுகின்றன. ஓசை நயம் பொதுளிய பாத்திறம் வாய்ந்தவர் இவர் என்பதை அப்பாக்களில் கண்டு மகிழ்ந்து எம் நண்பர் கலைமணியைப் பாராட்டுகிறோம். இம்முயற்சியை நிறுத்திட வேண்டா எனவும் வேண்டுகிறோம்.

பக்கம் 130 முதலியவை இந் நூலில் காணப்படும் பொதுப்பகுதிகள் பகுதிகள். ஏனைய பல சிறப்புப் பகுதிகளாம்.

காந்தியடிகள் பற்றிய பகுதி எளிமையும், அருமையும் வாய்ந்த நல்ல பகுதி. குழந்தைகளும் காந்தியாரைப் பற்றிப் பொதுவாகவும், நன்றாகவும், போதுமான அளவிலும், எளிதாகத் தெரிந்து கொள்ள இது உதவும்.

பக்கம் 22 இல் வயிரம் உடையும் என்ற கருத்துடன் மர வயிரத்தின் உறுதியையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கலாம்.

பாவேந்தரைப் பற்றிய பகுதியில் கலைமணி ஒர் புரட்சிப் பாமணியாக மிளிர்வதைக் காண முடிகிறது.

கண்ணதாசனை வரவேற்று இவர் எழுதியுள்ள வரவேற்பு, சர். ஆர். கே. சண்முகத்தை வரவேற்று அண்ணா திராவிட நாட்டில் எழுதிய அரிய இலக்கியப் பகுதியை எமக்கு நினைவூட்டியது.

கலைமணியின் உள்ளத்தைப் பளிச்செனக் காட்டும் பகுதி கிருத்துவக் கலை இலக்கிய மன்றம் நடத்திய திருவள்ளுவர் கிருத்தவரா என்பது பற்றிய மாநாட்டு வரவேற்புரையாகும். தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு நிகழ்ச்சியே அது.

திருவள்ளுவரைக் கிருத்துவராகக் காட்ட முயன்ற முயற்சி முறியடிக்கப்பட்டுச் சாம்பலாகவும் ஆக்கப்பட்ட மாநாடே அது.

அதில் யாமும் கலந்து கொண்டோ மாதலால் இதன் மெய்ம்மையை எம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. பாவாணர், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் போன்ற பெருமக்களே வழுக்கியும், நழுவியும் தப்பிய அந் நிகழ்ச்சிக்கு எம் உரை திருப்புமுனையாக அமைந்து, அம் மாநாட்டின் முடிவை தலைகீழாக மாற்றியமைத்தது.

அந்த வரவேற்புரை, நம் கலைமணியை நம் கலைமணியாகக் காட்டும் மணியான உரை என்பதோடு இக்கால இளைஞர்களைச் சரியான திசை நோக்கி வருமாறு அழைக்கும் வரவேற்புரையாகவும் அமைந்துள்ளது. ஆதலால் அம்மாநாட்டு வரவேற்புரையும் ‘அய்யன் திருவள்ளுவர்’ பற்றிய கட்டுரையும் இந் நூலுக்குக் கோபுரங்கள் போல் இலங்குகின்றன.

இந் நூலை வெளியிடுவதன் வாயிலாகக் கலைமணி மீண்டும் தமிழ் ஞாயிற்றின் ஒளிப் பகுதிக்கு வருகிறார் எனக் கூறி அவரை யாம் அன்புடன் அங்கு வரவேற்கிறோம்.

-மா. நன்னன்
சென்னை
4, 1, 2000