அன்பு வெள்ளம்/அன்பு பணியாற்றுகிறது
அன்பு பணியாற்றுகிறது
இன்றையப் புது நாகரிகப் பண்பாட்டு வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுத்திடும் வல்லமை அன்புக்குண்டு.
அன்பில்லாரையும் கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் வெறுத்து ஒதுக்கத் தக்கவர்களையும் அன்புடன் விரும்பச் செய்யும் ஆற்றல் அன்புக்கே உண்டு.
பழி தீங்குக்கு அஞ்சாதவர்களையும் மானக் கேடானவர்களையும் அன்பு கொண்டிருந்தால் உயர்த்திவிடும் அன்பு.
மாந்தருக்காக வாழவும் அப்படி அவர்கள் வாழ்ந்திடத் தேவையானால், அம் மாந்தருக்காக உயிரிழக்கவும் கூடிய தன் மறுப்பினைப் பெற்றிருந்த சான்றோர்களின் வாழ்வியக்கம் நம்மை உயர்த்த வல்ல அன்பு இயக்கமே.
நம்மை எதிர்த்து அகத்தும் புறத்தும் ஊறு விளைக்கக் கூடிய கொடிய வரையும் அன்பு கொண்டு விரும்பத்தக்கவராக விளங்கச் செய்யும் பொறையுடைமையே அன்பு.
"தந்தையே! இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று மெல்லப் பிறர் அறியாதவாறு தாழ்.குரலிற் பேசினாரே இயேசு, அவர்தாம் அவ் அன்பு!
அதே அன்பு இதோ இங்கும் எங்கும் இருக்கிறது. நீங்கள் புதிய படைப்பினாரானால், புதிதான் அவ் அன்பினை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள்.
ஆம், இந்தப் புதிதான் அன்பு செயல்படுகிறது. நாம் செய்ய வேண்டுமென்று அறிவிக்கும் மன்பதைத் தொண்டினை அவ் அன்பினில் உறுதியான பற்றுமானம் - நம்பிக்கை - கொண்டால், அப் பணியினை அவ் அன்பே செய்து முடிக்கும்.
நம்முடைய வாழ்க்கையில் இறை இயல்பினைப் பெற்ற அன்பு மேம்பட்டு நிற்கிறது. எங்கே அவ் அன்பு மேம்பட்டு நிற்கிறதோ அங்கே அது அற்புதமாகச் செயல்படுகிறது.
கொடு மனம் கொண்டவரையும் வெறுப்புள்ளம் கொண்ட வரையும் கூட அவ் அன்பு பண்பாளரிடம் இலங்கிய மென் நயத்தை அளிக்கிறது.
அன்பில் ஆழ்ந்த செழிப்பு மிக்க அதிசயமான வாழ்க்கையினைப் பெற்று உய்ய உங்கள் உயிர் வேணவாக் கொண்டுள்ளது.
புலனறிவைப் பின்தொடர்ந்து செல்லாதீர்கள். உங்கள் உயிர்ப்பாற்றலைச் சரியான வழியில் நடக்கவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் அன்பினை ஆட்சிபுரிய விடுங்கள் அஃது உங்கள் வாழ்க்கையினை மேம்படச் செய்யும் உலகுக்கு உங்களை ஒர் ஒப்பற்ற அருட் கொடையாக்கும்.
ஒன்றுக்கும் உதவாது போன வாழ்க்கையினைக் கொண்டவர்களே! தாங்கொணாத் துன்பங்களின் உணர்வலைகளோடு துடிக்கும் நொறுங்கிய உங்கள் உள்ளங்களை அறைகூவல்விட்டு அழைக்கிறது அன்பு!
அந்த அறைகூவலை ஏற்றுப் புதிதான் அன்பினால் நம் வாழ்க்கை அன்பு வாழ்க்கையாக, புதிய படைப்பாக ஏற்றம் பெற்று வாழ்ந்திட முனைகின்றோம்.
மாந்தர் எல்லாம் துன்பங்களில் உழன்று வரும் நெருக்கடியான இந் நேரத்தில், அன்பின் நற்செய்தியை நாம் பெற்றுள்ளோம் என்று நம்புவோம்.