உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு உலகம்/வெற்றி மேல் வெற்றி!

விக்கிமூலம் இலிருந்து

வெற்றி மேல்
வெற்றி!

1500 ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதிய ஒலிம்பிக் பந்தயம் பிறந்துவிட்டது. 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரத்தில் முதல் பந்தய விழா நடைபெற இருக்கிறது. யார் வேண்டுமானலும் வந்து போட்டியில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறலாம்’ என்ற அறிவிப்பு உலகெங்கும் பரவியது.

அமெரிக்க இளைஞன் ஒருவன். பெயர் ஜேம்ஸ் கன்னோலிண. ஆர்வம் உள்ள வீரன். ஆனால், அந்த அளவுக்குப் பணவசதி இல்லாதவன். கிரேக்கம் நோக்கிப் போக விரும்பினான். போனால் வெற்றிபெற முடியும். போகமுடியுமா?

பாஸ்டன் விளையாட்டுக் கழகம் என்று அமெரிக்காவில் ஒன்று இருந்தது. பணக்கார இளைஞர்களாக எட்டு பேர்களைத் தேர்ந்தெடுத்து, ஏதென்சுக்குப் போய் வருவதற்கு ஆகும் செலவை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஜேம்சுக்கு வாய்ப்பில்லை. அவனுக்கு அது முதல் ஏமாற்றம் இருந்தாலும், ஜேம்ஸ் ஆர்வத்தை இழக்கவில்லை.

தான் பணியாற்றிய இடத்தின் மேல் அதிகாரிகளிடம், பந்தயத்திற்குப் போக வேண்டுமென்று விடுமுறை கேட்டான். அவர்கள் அனுமதி தரவில்லை. விடுமுறையும் தரவில்லை. அதிலும் ஏமாற்றம்தான். வேலையை உதறிவிட்டு, பயணத்தைத் தொடங்கினான். முயற்சி அவனை முன்னோக்கித் தள்ளியது. புறப்பட்டுவிட்டான்.

பணவசதியில்லாததால், அவனது பயணம் ஆடு மாடுகளை ஏற்றிச் செல்லும் சிறு படகிலே நடந்தது. அதற்காக அவன் களைக்கவில்லை. சளைக்கவில்லை. கவலைப்படவும் இல்லை. நேப்பிள்ஸ் என்ற நகரம் . வந்தடைந்தபோது,வழிப்பயணத்தால் அவன் உடலால் வாடவில்லை. ஆனால், உள்ளத்தை வாட்டிக் கலக்கும் நிகழ்ச்சி ஒன்று அங்கே நடந்தது.

அவன் கொண்டுவந்த பயணப்பை தொலைந்து விட்டது. பணம், உடை மட்டும் அல்லாமல், ஏதென்சுக்குப் போக எடுத்திருந்த ரயில் டிக்கெட்டும் சேர்ந்துதான் போய்விட்டது! யாரும் தெரியாத இடத்தில் அது மோசமான நிலைதான். அப்பொழுதும் அவன் நிலை குலையவில்லை.

எப்படியோ டிக்கெட்மட்டும் கிடைத்தது.போனதை நினைத்துப் புலம்பாமல், வந்ததை நினைத்து, மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏதென்ஸ் நகரத்தை அடைந்தான். பயணம் வெற்றிதான்.

‘இன்னும் ஒருவாரம் இருக்கிறது போட்டி நடக்க. அதற்குள் நன்றாகப் பயிற்சி செய்து கொள்ளலாம்’ என்று இருந்த ஜேம்சுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி அங்கே காத்திருந்தது.

மிகச் சாதாரண ஓட்டலில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டிருக்கும் பொழுது, அவசரமாக ஓடிவந்த ஒலிம்பிக் அதிகாரி ஒருவர், ‘மும்முறைத் தாண்டும் போட்டி தான் (Hop Step and Jump) முதல் நிகழ்ச்சி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவசர அவசரமாக ஓடினான் ஜேம்ஸ். மைதானத்தில் 75,000க்கு மேல் மக்கள் கூட்டம்.கிரேக்க மன்னன் முதலாம் ஜேம்ஸ் வந்து காத்திருக்கிறார். போட்டி தொடங்க இருக்கிறது. ஜேம்ஸ் உள்ளே நுழைகிறான். யார் நீ? என்கின்றனர் அதிகாரிகள். தன்னை அமெரிக்கன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். எப்படியோ அனுமதி பெற்றுவிடுகிறான்.

உடலைப் பதப்படுத்திக் கொள்கிறான். இருந்தாலும் மனப்பதட்டம் போகவில்லை. முதலில் தாண்டுகின்ற முயற்சியில் தோல்வி, ஆனாலும் மனம் தளரவில்லை. இரண்டாவது முயற்சியில் 45அடி தாண்டினான்.ஆனால் அதுவே சிறந்த சாதனையாக அமைந்துவிடுகிறது.

புதிய ஒலிம்பிக் பந்தயத்தில், முதலாவதாகப் பரிசு பெறும் பாக்கியத்தைப் பெறுகிறான் ஜேம்ஸ். ஆரம்பத்திலிருந்தே தோல்வி அடிமேல் அடியாக வந்து விழுந்து தாக்கினாலும், அயராமல், ஆர்வத்துடன் முன் நடந்தான் வீரனாக. பயப்படாமல் பங்குபெற்றான் தீரனாக. அத்தகைய ஆர்வமும் முயற்சியும், நம்பிக்கையும் நல்லுழைப்பும் அவனுக்கு வெற்றிமேல் வெற்றி அல்லவா தந்திருக்கிறது! நமக்கெல்லாம் அவன் ஒரு முன்னோடியல்லவா?