உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு உலகம்/பரப்பரப்புக்குப் பின்னால்!

விக்கிமூலம் இலிருந்து
பரபரப்புக்குப்
பின்னால்!

பந்தய மைதானத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அனைவரும், ஆனந்தத்துடன் எழுந்து ஆரவாரம் செய்தனர். வெற்றி வீரனாகப் பந்தய மைதானத்தை அவன் சுற்றி வருவதைக்கண்டு, வியப்பின் எல்லைக்கே சென்று, விந்தைமிகு வீரனை வாயார வாழ்த்தி வரவேற்றனர்.

26 மைல்களுக்குரிய அந்த மாரதான் ஓட்டத்தை எவ்வளவு சீக்கிரமாக ஓடிமுடித்து வந்துவிட்டான் என்பதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது. பாரீஸ் நகரத்தின் படுமோசமான பாதையில் அல்லவா ஓட்டக்காரர்களை ஓடவிட்டிருந்தார்கள்! அத்தனை மேடு பள்ளத்திலும் ஏறி இறங்கி, எதிர்ப்பினைத் தந்த இன்னல்களையும் மீறி, எத்தனை விரைவாக ஓடி வந்து விட்டான் என்பதிலே அவர்களுக்கு உற்சாகம்.

புகழாரம் சூட்டிக்கொள்ளப்போகும் பெருமதிப்பிற்குரிய அவ்வீரனை, புகைப்படக்காரர்கள் மின்னல் வேகத்தில் படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீரன் முகத்திலே ஓடிவந்த களைப்பும் இல்லை. எவ்வளவு வல்லமையும் பயிற்சியும் பெற்றிருந்தால் இவன் இப்படித் தோற்றமளிக்கமுடியும் என்றும் பலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வெற்றி வீரன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓட்டக்காரனை, பரிசு வழங்க இருக்கும் மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனும் பவ்யமாக பரிசு பெறச்சென்றான். அவன் முகத்திலே குறும்புத்தனமான குதுகலம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. வெற்றி பெற்றதால் ஏற்பட்ட செருக்கா? தன்னை மீறி எழுந்த தலைக்கனமா? அவனன்றி யார் அறிவார்?

அமெரிக்க நாட்டின் சார்பாக, ஜனாதிபதி ரூஸ்வெல்டின் மகளான ஆலிஸ் ரூஸ்வெல்ட் தான் அன்றைய தினம் பரிசினை வழங்கிக்கொண்டிருந்தாள். தன் நாட்டு வீரன் இம்மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறான் என்பதிலே ஆலிசுக்கும் மகிழ்ச்சியே! ஆன்ற புகழ் தரும் பரிசான ஆலிவ் மலர் வளையத்தை தலையில் சூட்டி, தங்கப்பதக்கத்தைத் தர இருக்கின்ற நேரத்தில், எங்கிருந்தோ ஒரு குரல்.

‘தராதீர்கள்’ என்ற குரல் தடுத்து நிறுத்தியது. பரிசு தரும் நிகழ்ச்சி பரபரப்புக்கிடையே பாதியில் நின்றது. காரணம்?

‘26 மைல் தூரத்தை அவன் ஓடி முடிக்கவில்லை. ஓடாமல் ஏமாற்றிவிட்டான்’ என்பதே அந்தக் குரல் கொடுத்த வாக்குமூலம். அப்படியா? எப்படி எல்லோரையும் ஏமாற்றமுடியும்? என்று கேட்டவர்கள் தங்களையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

விரும்பத்தகாத முறையிலே வெற்றியையும் பரிசையும் பெறவிருந்த வீரன், 'வேறு வழி இல்லை, இனிமேல் பேசுகின்ற பொய் சபையேறாது' என்று நினைத்து உண்மையைப் பேசத்தொடங்கி விட்டான். பந்தயத்திலே கலந்துகொண்டது உண்மை. 40 கிலோ மீட்டர் தூரத்திலே 15 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்ததும் உண்மை. அதற்குப் பிறகு?

பாதி தூரத்திலே அவனது காலின் தசைப்பகுதிகள் ஓட முடியாத அளவுக்கு இழுத்துக்கொள்ளவே, பந்தயத்தில் இருந்து விலகிக்கொள்வது என்ற முடிவுக்கு வந்து, நின்றும் விட்டான். பாதியிலே நின்று விட்டால் எப்படி? பந்தயம் நடக்கின்ற இடம்வரை போயாக வேண்டுமே? என்ன என்ன செய்வது? என்று யோசனை செய்துகொண்டிருக்கும்போது, கூடவே வந்து கொண்டிருந்த 'ஆட்டோ'வில் ஏறி உட்கார்ந்து கொண்டான். வண்டியில் ஏறி அமர்ந்ததும், வலியும் வேதனையும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.

பல ஓட்டக்காரர்கள் இவன் வண்டியில் ஏறி அமர்ந்ததைப் பார்த்திருக்கிறார்கள். இந்த வீரனின் அதிர்ஷ்டமோ அல்லது கெட்ட நேரமோ என்னமோ, அவன் ஏறிவந்த வண்டியும் பழுதடைந்துவிட்டது. அதுவும் ஓடாது என்ற நிலையில் இவன் இறங்கிக் கொண்டான். நடக்கத் தொடங்கியபோது, காலில் பிடிப்பு இல்லை என்று உணர்ந்ததும், ஓடத் தொடங்கினான். ஓட்டமும் தொடர்ந்து, பந்தய மைதானத்துக்குள்ளும் வந்துவிட்டான்.

எல்லோரும் எழுந்திருந்து இவனை வரவேற்று, கை தட்டியபொழுது, இவன் தன்னையே மறந்துவிட்டான். அவனுக்கு அது 'தமாஷாக' இருந்தது. இவனும் கையசைத்துத்கொண்டே ஓடியது மேலும் பார்வையாளர்களுக்கு உற்சாகமாக இருக்கவே, தவறு செய்தவன் அதை மறைக்க முயன்று, தன்னையே வெற்றி வீரனாகவும் நினைத்துவிட்டான். "தமாஷ்' என்று நினைத்து செய்தேன். நான் முழு தூரத்தையும் ஓடவில்லை. பந்தய மைதானத்திற்குள்ளே வைத்திருந்த என் ஆடைகளை எடுத்து வரவே ஓடிவந்தேன். எல்லோரும் பாராட்டவே, நான் பேசாமல் இருந்து விட்டேன்.” என்று அவன் ஒத்துக்கொண்டான்.

தோற்றிருந்தாலும் தலைநிமிர்ந்து நடக்கவேண்டிய அவன், தலைகுனிந்து நடந்தான். கேலிப் பார்வையும் கிண்டல் பேச்சும் அவனைக்கூடவே தொடர்ந்து வந்தன. சரித்திரலே அவன் சாகாத இடத்தைப் பெற்று விட்டான்.

ஆமாம்! குறுக்கு வழியில் புகழ்பெற முயன்றால், கேலிக்கும் கிண்டலுக்கும் அவமானத்திற்கும் ஆளாக நேரிடும். என்ற பொன்மொழிக்கு சான்றாக அல்லவா நின்று விட்டான்.

அவன் பெயர் பிரட்லார்ஸ்(FRED LORZ.) 1904ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸ் எனும் இடத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில்தான் இந்த அமெரிக்க வீரன் பிரட் தவறு செய்தான். தெரிந்தும் செய்த தவறுக்கு அவன் பெற்ற தண்டனை - காலமெல்லாம் அவன் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்பதுதான்.

சிறிது காலம் கழித்து அத்தண்டனை மாறிப் போனாலும், அவன் பெற்ற அவமானம் மாறுமா? மறையுமா? நேர்மை வழியில் செல்பவரே, எல்லோருடைய நெஞ்சிலும் நிலைத்து நிற்கமுடியும்!