குற்றால வளம்/உலக இயல்பு
உலக இயல்பு இன்னதென்பதை ஆராய்ந்தறிய வேண்டுவது இவ்வுலகிலுள்ளார்க்கு இன்றியமையாக் கடன். உலகம் மூன்றென்றும் ஏழு என்றும், ஈரேழு என்றும் பல படியாகப் பனுவல்கள் பகரா நிற்கும். அச்சங்கைகள் நமக்கு ஈண்டு வேண்டுவதின்று. நமது கண்ணுக்குக் காணப்படும் நாம் உறைகின்ற இப் பூவுலகத்தையே ஈண்டு நோக்குவோம்.
உலகம், பரந்து விரிந்து கிடக்கும் தன் நீர்மைக்கேற்ப எல்லா வகையையும் இணைத்துக் கொண்டிருக்கும் இயல்பு வாய்ந்ததாக விருக்கின்றது. உலகம், தீயவையெல்லாம் போக்கி நல்லவையே கொண்டு நிலவு என்றும் முடியாதென்பது உறுதி. உலகம், எந்தக்காலத்திலும் குறித்த எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு தான் பிறங்கி இருந்த கன்றி வேறு வகையாக இருந்ததாக உய்த்துணரக் கூடவில்லை.
இத்துணைப் பல பொருள்களை உலகம் உடைத்தாகவிருந்த போழ்தினும் உயர்ந்தோரை உடைத்தா யிருக்கும் ஒன்று கொண்டே உலகம் பெருமை பெறுகிறது. உலகத்தின் சிறப்பு உயர்ந்தோரையே பொறுத்து நிற்கின்றது. அதனாலன்றோ "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" என்றார் பெரியார். இழிந்தாரும் உயர்ந்தாரும் உலகத்தில் என்றுமுளர். இழிந்தார் இன்றேல் உயர்ந்தார் என்ற பெயரே வந்திருக்க முடியாது. உலகம் எல்லோரையும் எல்லாப் பொருள்களையும் என்றும் உடைத்தாகவே இருக்கும், அதுவே உலக இயல்பு. அதினின்றும் மாறு படுத்த ஒருநாளும் முடியாது.
ஒருநாளும் மறங்களை யெல்லாம் தொலை த்து அறங்களை நிலைநாட்ட முடியாதென்றால் பின்னைத் திருத்தங்கள் எதற்கு என்ற வினா எழலாம். திருத்தஞ்செய்யப் பெறாவிட்டால் மறங்களே பெருகிச் செல்லும். அவ்வாறு
செல்ல விடுதலும் உலக இயல்பிற்கு விரோதமாகும். உலகில் ஒருபுறம் அறவினையும் ஒரு புறம் மறவினையும் நிகழ்ந்துகொண்டே செல்லும். ஒரு காலத்தில் அறவினை மேலோங்கி யிருக்கும்; ஒரு காலத்தில் மறவினை மேலோங்கி, நிற்கும். உலகத்தில் அறவோருக்கும் மறவோருக்கும் என்றும் பூசல்தான். அறவோர் அறத்தை ஆக்கவும் மறவோர் மறத்தை வளர்க்கவும் முந்துதல் இயல்பு. இப்பூசலை அறவே தொலைக்க ஒருநாளும் ஒண்ணாது. ஆனால் அதன் பொருட்டு இச்சண்டையை விட்டொழித்து விடுதல் ஆகாது. எவர் ஒய்ந்தாரோ அவர் கொள்கை பெரிதும் தாழ்ந்துவிடும், மறவோர் ஓய்ந்தால் நல்லதுதான். அவர் ஒயப் போவதில்லே. அது செய்ய எவர் தூண்டுதலும் இன்றியே பல்லோர் புறப்படுதல் கண்கூடு. அறவினையாளரைப் பெருக்க அறவோர் பெரிதும் முயல வேண்டுவது கடமை.
அறப்போர் புரிவோர் சலித்தல் ஆகாது. உயர்ந்த மக்கட்கு அறப்போர் புரிதலைத் தவிர வேறு கடனில்லை. "என் கடன் பணி செய்து கிட்ப்பதே." என்ற உயர் சொற்றொடரின் பொருள் உற்று நோக்கத்தக்கது. பணி செய்து மறத்தைத் தொலைத்து அறத்தை என்றும் அழியாவாறு நிலை நாட்டிவிடக் கூடுமானால் பணிசெய்தே கிடத்தல் என்பது வேண்டுவ தில்லையன்றோ? என்றும் பணி செய்தே கிடத்தல் கடனெனப் பணிக்கும் பொழுது பணியாகிய அறவினை செய்தல் என்றும் நிகழவேண்டிய ஒன்றே என்பது கிடைக்கின்றதன்றோ? பணிசெய்தற்கு ஓர் கால வரையறை கிடையாது. பணிசெய்து கிடத்தலையே என்றும் கடனாகக் கொள்ளவேண்டுவதே அறவோர் செயல்.
எவ் உயர்ந்தோராலும் உலகில் இனிமேல் மறம் நிகழாவண்ணம் அறங்கோலி வைத்தல் முடியாத காரியம். உலகத்தில் எத்துணேயோ பெரியோர்கள் எத்துணேயோ அறங்களை ஆற்றியிருக்கக் காண்கின்றோம். முன்னே செய்தது இன்று அழிவதும் இன்று செய்வது நாளை அழிவதும் இயல்பு. இவ்வுண்மை ஒர்ந்து எவ்வெக்காலத்தில் எவ்வெவ்வாறு செய்தல் வேண்டுமோ அவ்வக்காலத்தில் அவ்வவ்வாறு ஆற்றுதல் வேண்டும், சந்தர்ப்பம் நோக்கி அவ்வக்காலங்கட் கேற்றவாறு ஆற்றாவிட்டால் மறத்தோடு அமராடி வெல்தல் அருமை,
இன்னதுதான் அறவினை என்று வரையறுத்துக் கூறிவிடமுடியாது. அது காலத்திற்கேற்றபடியாகவே இருக்கும். :முன்னவர் சொல்வழியே செல்லவேண்டும்; அதில் நின்றும் சிறிதும் பிறழ்ந்து போதல் ஆகாது” என்று கருதுவோர் கூற்று உலக இயல்புக்கு ஒவ்வாதது. மேலும் அது அறிவிலார் கொள்கையுமாகும். இவ்வுலகில் முன்னவர்க்கிருந்த உரிமை பின்னவர்க்கு ஏன் இல்லை?
"உலகம் பழைய காலத்தில் அறத்திற்கே உறையுளாக இருந்தது; வரவர அறங்குன்றி வருகிறது." என்று இயம்பும் கொள்கையுடையார் இங்கு ஒரு சாரார் இருக்கின்றார், இது பெருந்தவறுடைக் கொள்கை. அறமும் மறமும் மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும் வருதலே உலக இயல்பு. உலகத்தில் அறமில்லாத நாளும் இல்லை; மறம் இல்லாத நாளும் இல்லை. ஒரு காலத்தில் அறம் ஓங்கியிருக்கலாம். ஒரு காலத்தில் மறம் ஓங்கியிருக்கலாம். அடிக்கடி திரும்பத்திரும்ப இவை மாறி மாறி வரும். இதுவே உலக இயல்பு.
உலகத்தில் ஒவ்வொரு காலத்தினும் அறஞ் செப்பனிட்டார் பலர். அவையனைத்தும் இன்று நின்று நிலவுகின்றனவோ? இன்று செப்பனிடப்பெற்றது தேய்ந்து தேய்ந்துவந்து இன்னும் பன்னாளில் அற்றுவிடும். அது தேய்ந்து வருக்கால் விடாமல் கண்காணித்து வேண்டுவ
செய்துவந்தால் உரம்பெறும். தேய்வு மிகுதியேற்படுங்கால் அதனைப் புதுக்குதல் வேண்டும். என்றும் விடாது அறஞ்செய்து கிடத்தலை மேற்கொண்டாலன்றி அறம் ஓங்கிவளர்தல், அருமை. உயர் மக்கட்கு அறஞ்செய்து கிடத்தலே என்றும் கடனன்றி வேறு கடனின்று.ஒரு காலத்தில் முடிவு கட்டிய ஒன்று அப்படியே நிற்காது என்பதற்குச் சில சான்று காட்டுதும்.
இந் நாள் இந்நாட்டில் வகுப்புப்பற்றிப் பல திறப்பட்ட கருத்துக்கள் தோன்றியிருக்கின்றதன்றோ? கடவுள் மக்களைப் படைக்கும் பொழுது அந்தணர் என ஒரு கூட்டத்தாரையும் அரசர் என மற்றொரு பிரிவாரையும் வணிகர் எனவேறொரு சாராரையும் வேளாளர் என இன்னொரு பகுதியாரையும் படைத்தாரெனவும் அவர் வழித்தோன்றல்களெல்லாம். அவ்வவ் வகுப்புக்குரியாரெனவுங் கொள்ளும் கொள்கையைப் பெரும்பாலானவர்களிடம் காண்கின்றோம். இதனை ஆராய்ச்சியாளர் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை இதுபற்றி இக் கட்டுரையில் விரித்தெழுத விரும்பவில்லை. வகுப்பு நீர்மையை மற்றொரு கட்டுரையில் காணலாம். "முதலில் மக்களெல்லாம் ஜாதிப் பிரிவென்பது இல்லாமல் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்; இடைக்காலத்தில் சில நலங்கருதிக் தொழில்பற்றி வகுப்பாப் பிரிக்கப்பெற்றார்கள்" என்பதே அறிஞர் கொள்கை, இப்பிரிவு
தோன்றி நாட்கள் பலவாயினமையின் பிரிக்கப்பட்ட உண்மையை மறந்து வேறு வகையாகப் பொருள் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தொழில் வேறு செய்துகொண்டு, வேறு பிரிவில் சேர்ந்துகொள்ள விரும்புகின்றனர். இவ்வுண்மையை நிலைநாட்ட இப்பொழுது பல அறவோர் தோன்றியுள்ளார். தொடக்கத்தில் நன்னோக்கத்தோடு அறமெனக்கருதியே வகுப்புப் பிரிவை உண்டுபண்ணினார். இந்நாள் அது சங்கடத்தில் வந்து முடிந்துவிட்டது. இப் பொழுது அம்முறையைத் தொலைக்க வேண்டியதிருக்கிறது. இன்று தொலைத்துவிட்ட போதிலும் இனி அது என்றும் சரியாக நடந்து வரும் என்பதற்கில்லை. இன்னும் பன்னாட்கள் ஆனவுடன் இற்றை நிலையையே எய்தும். பிறகு இதில் சீர்திருத்தஞ்செய்ய வேண்டுவது தான்.
ஒவ்வொரு அறமும் நாள் ஆக ஆக நோக்கம் மறந்து அறத்தின் மாறுபட்டனவாக மாறி விடுவதை இவற்றுனும் இன்னும் பலவற்றானும் அறியக்கிடக்கின்றது. விரிவஞ்சி விடுக்கின்றேன். உலக இயல்பு இதுவேயாகும். அறிவோர். என்றும் அறக்கடனிறுத்தல்-அதாவது சீர்திருத்தம் செய்தல்-அரும்பணிசெய்து கிடத்தலிலேயே வாணாள் கழிப்பர். கடன் முடிந்த தென்று ஓய்வு பெறுநாள் அறவோர்க்கில்லை. அவ்வாறு ஓய்வு பெறவிடுதல் உலக இயல்பன்று. ஓயாமல் அறவோர்க்குப் பணி தந்து கொண்டிருத்தலே உலக இயல்பு.