உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றால வளம்/கல்வியும் அறிவும்

விக்கிமூலம் இலிருந்து

கல்வியும் அறிவும்


கல்வி என்பது கற்றுத் தெரிந்து கொள்வது, அறிவு என்பது இயல்பாக அமைவது. கல்வி என்றால் நூல்களைப் படித்தல் என்று யாரும் எளிதிற் பொருள் கொண்டு விடுகிறார். அது மட்டும் கல்வியாகாது. உலகத்தில் எந்தெந்தப் பொருளை அறிந்துகொள்கிறோமோ அவ்வனைத்தும் கல்வியேயாம். கற்பனவெல்லாம் கல்வியின்பாற் பட்டனவே. நூல் கற்றல் ஒன்றுதான் கல்வியெனக் கோடல் பொருத்த முடைத்தன்று. நூல் கல்லாமல் பல பொருள்களைக் கற்றுக்கொண்டிருப்போர் பலரை இவ்வுலகில் காண்கின்றோம்.


அறிவு பலவகைப்படும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் அறிவு மிகுதியாக விருக்கும். ஒவ்வொருவர் மதி ஒவ்வொன்றை அறிவதில் நுட்பமாகச் செல்லும். எதைக் கற்பதாயினும் அறிவு கொண்டுதான் கற்க வேண்டும். எனவே அறிவுக்கும் கல்விக்கும் மிகுதியும் தொடர்பு உண்டு. ஆனால் உலக நீர்மையை நோக்குங்கால் அறிவுக்கும் கல்விக்கும் தொடர்பு இல்லாமலேயே இருக்கின்றது. தொடர்பிருக்கவேண்டிய ஒன்றைத் தொடர் பில்லாததாக உலகில் பல்லோர் ஆக்கிக் கொண்டுவிட்டார். காரணம் , அறிவைக் கையாள்வார் எண் மிகக் குறைவே. பற்பலர்  அறிவை ஆளும் ஆற்றலற்று ஒருவகையாகக் கற்பதில் காலங்கழித்து வருகிறார்.


அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமலேயே கல்வி பயில்வார் கணக்கு மிகப் பெருக்கம். நூல்கள் நுவல்வனவற்றை அவை கூறுமாறு கற்றுக்கொள்கிறார்; பிறர் கூறும் பிற பொருள்களையும் பிறர் செய்யுஞ் செயல்களையும் அப்படியப்படியே படித்துக்கொள்கிறார், அவைகளை அறிவதில் தம் அறிவைப் பெரிதும் உபயேர்கிட் பதில்லை. "தனக்கென அனைவர்க்கும் தனித்தனியே அறிவு உண்டு; எந்த நூல் என்ன கூறினும் எவர் எது இயம்பினும் எல்லாவற்றையும் எடுத்து ஆராய, அவர் எவருக்கும் குறையாத உரிமை எல்லோர்க்கும் உண்டு" என்ற எண்ணம் பலர்க்கு இன்மையினாலேயே கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது, என இயம்புகின்றேனன்றி வேறன்று.


அறிவை இயற்கையறிவு செயற்கையறிவு எனவும் இரண்டாகப் பிரிக்கலாம். அவற்றுள் இயற்கையறிவு என்பது இயல்பாக இருப்பது; செயற்கையறிவு என்பது சேகரித்துக் கொள்வது. இரண்டு அறிவும் கொள்ளத் தக்கனவே. இயற்கையறிவு இல்லாதார் எவருமில்லை. அது 'எல்லோர்க்கும் உண்டு. அதில் குறைவு மிகுதியிருக்கிறது. ஆனால் பலர் அடியோடு அவ்வறிவு இல்லா நிலையில் கருமம் ஆற்றுகின்றனர். அதனை ஆள வகையறிகின்றாரில்லை. செயற்கையறிவுதான் கல்வியாற் பெறுவது. கல்வி யென்று கூறுமிடத்தெல்லாம் நூல் கற்றிலை மட்டுமன்று என்பதை அன்பர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். செயற்கையறிவை இயற்கையறிவு கொண்டு அறிவதில்லையானால் அவ்வறிவைப் பெறுவதில் நலனுமுண்டு; தீங்குமுண்டு. கிளிப்பிள்ளைக்கும் அவருக்கும் வேறுபாடு இல்லை.


உலகில் நல்லவருமுண்டு; தீயவருமுண்டு. நூல்களுள்ளும் நல்லவை தீயவையுள. இயற்கையறிவை விடுத்துச் செயற்கையறிவை மட்டும் பெறுபவர் நல்லவரைப் படித்தால் நற்செயலிற்றலைப்படுவர்; தீயவரைப் படித்தால் அவர் வழியே போவார். நல்ல நூலைப் படித்தால் நல்ல வழி சேர்வர் தீய நூலைப் படித்தால் அவ் வழி ஆவர். எவ்வெப்பொருளைத் தாங்கள் அறிந்து கொள்கின்றாரோ அவ்வவற்றிற்கு அவர் அடிமையாகிவிடுவர். இது சிறிதும் புனைத்துரையன்று. இன்று கண்கூடாகக் காண்கின்றோம். இவருள்ளும் ஒவ்வொன்றைப் பிடித்துக்கொண்டு அதற்கு மாறான மற்றவற்றை மறுக்கின்றாரே என்றால், அது வழி வழியாக ஒன்றிற்கொண்ட பற்றினாலன்றி இயற்கையறிவை ஆண்டமையாலன்று.


இயற்கையறிவை ஆளாதவர்களேயே மாக்கள் என்று தொல்காப்பியர் முதலிய தொல்லாசிரியர்கள் சொன்னார்கள். தன்மைகொண்டு நோக்குங்கால் அவர் கூற்று முற்றும்  உண்மையாகும். இயற்கையறிவே பகுத்தறிவு என்று கூறுகின்ற ஆறாதறிவு எனக் கொள்ளலாம். கல்வியும் அறிவும் என்று இக் கட்டுரைத் தலைப்பில் நான் குறித்தது அவ்வியற்கை யறிவையேயாகும். அறிவு என்ற சிறப்பிற்குரியது அவ்வறிவே என்பதை எவரே மறுக்க வல்லார்? அவ்வறிவிற்கும் கல்விக்குமே தொடர்பு இல்லாமல் இருக்கிறது இந்நாள் என்பது பலர் கருத்து. அவ்வுண்மையைச் சில சான்றுகளோடு விளக்குவேன்.


அறிவை, ஆளுவதைக் கைவிட்ட நாள் முதல் நம் நாடு இத் துணைத் தாழ்ந்த நிலைக்கு வந்தது என்று இயம்புதல் தவறாகாது. இந் நாள் நம் நாட்டைவிடப் பிற பல நாடுகள் இதில் மேம்பாடுற்றிருக்கின்றன. நம் நாட்டில் அறிவுக்குச் சம்ப்ந்தமில்லாத பெரு மூடக் கொள்கைகளே. பெருகிவிட்டன. கல்லாது வாளா நீண்டவர் மட்டும் அறிவை ஆளவில்லை என்று கூறமுடியவில்லை. கற்றாருள்ளும் அறிவை ஆளாதாரே பலர். சிறிது கூர்ந்து நோக்கின் இவ்வுண்மையை எவரே உணரார்?


தமிழ் நூல்களில் ஒன்று பாக்கிவிடாது ஒருவர் உருப்போட்டிருக்கிறார். எந்தப் பாட்டுக் கேட்டாலும் பாராமல் ஒப்பிப்பார். நீண்ட பெரிய உரை நடைகளைக் கூட முற்றும் ஒரு எழுத்துக்கூட மாறாமல் மனப்பாடமாகக் கூறுகிறார். அந்தாதிகள், கலம்பகங்கள், கோவைகள் எல்லாம் அடுக்கடுக்காக அறைகிறார். தலபுராணங்களெல்லாம் சாற்றுகிறார். மிடுக்குகள், திரிபுகள், யமகங்களையெல்லாம் கேட்டபடி உடைத்தெறிகிறார். அந்த நூல்களைப்பற்றி நாட்கணக்காகச் சொற்பெருக்கிடுகிறார். இத்துணை மூட்டைகளைக் கற்றிருந்தும் என்பயன்? இது நல்லது இது கெட்டது என்ற மெய்யை உண்மையாக அறிந்துகொள்ளத் தெரியவில்லை. ஒன்றும் கல்லாத ஒருவர் அறிவைப் பயன் படுத்தித் தக்க தகாதன அறிந்துகொள்கிறார்.


ஒருவர் வடமொழியிலோ, ஆங்கிலத்திலோ, பிறமொழியிலோ உள்ள பலப்பல நூல்களைப் படித்திருக்கிறார், பட்டங்களெல்லாம் பெற்று விடுகிறார், எந்த மொழியில் எத்துணை நூல்களை எத்துணை ஆண்டுகள் உருப்போட்டாலும் நன்மை, தீமை அறிந்துகொள்கின்றாரில்லை; ஒன்றும் கல்லாத சர்வ சாதாரணமான மக்கட்குள்ள பகுத்தறிவில் ஒரு சிறு பகுதியும் கூட இல்லாதுறைகின்றார் ஆனால் அறிவு உண்டோ இல்லையோ நூல் பல கற்றிருக்கின்றோம் என்ற மமதை இவர்களிற் பலருக்கு மிகுதியும் இருக்கக்காண்கின்றோம்.


சமய சாத்திரத்தில் மிக வல்லுநரென ஒரு சாரார் சாற்றித்திரிகிறார். இவருள் பெரும் பாலார் மிக்க குறுகிய புத்தியுடையவராகவே இருக்கின்றார். தத்தம் சமயங்களைப் பற்றியும் சமயாச்சாரியார்களைப் பற்றியும் இவர்கள் கூறும் புனைந்துரைகட்கும் பொய்யுரைகட்கும்  எல்லை கூறமுடியாது. இவர்கள் கூற்றுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் லவலேசமும் இராதென்பதை ஆராயும் எவர்க்கும் நான் கூறவேண்டுவதில்லை. அகங்காரத்தில் இவருக்கு எவரையும் ஈடு சொல்தல் முடியாது.


நூல் ஒன்றும் கல்லாமலேயே உலக வழக்குகள் கற்றவருள்ளும் பலர் அறிவு வழியே செல்லக் காண்கின்றோமில்லை. இவர்கட்கும் எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புக் குறை வில்லை. இவரனைவரும் அறிவை முக்கியமாக ஆண்டு எவர்கூற்று எவ்வாறு இருப்பினும் எல்லாவற்றையும் தம் அறிவால் கண்டு மெய் கொண்டு பொய் தொலைப்பாரானால் நாடு இன்று இருக்கும் இழிவான நிலையிலா இருக்கும்? சிறிது கற்றாலும் செருக்குறுவதில் பின்னடைகின்றனரில்லை. அறிவை ஆளுமிடத்து முதலில் அச்செருக்குப்படும். அறிவின்மையினாலேயே அன்னவற்றிற்காட்பட்டழிய நேர்கிறது.


அன்றி, கற்றவர் பலர் தங்கள் கொள்கை கட்கெல்லாம் ஒரே ஒரு பற்றுக்கோடு வைத்துக்கொண்டிருக்கிறர் தாம் கூறும் ஒன்றைத் தம்மதி நுட்பங்கொண்டு காரணத்தோடு உலகம் ஒப்புக்கொள்ளக் கூற அறிவதில்லை. "அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார், அந்த நூல்சொல்லுகிறது; இந்த நூல் சொல்லுகிறது. ஆகையினாலே ஏற்றுக்கொள்" என்கிறார், இப் பொருளற்ற உரைகளைச் சொந்த அறிவுள்ள அறிஞர் எவரே ஏற்பர். எவர் சொன்னாலென்? ஏன் சொன்னாரென்பதை யன்றோ உணர்தல் வேண்டும்?


"திருநீறு ஏன் பூசுகின்றாய்" என்றால் "மந்திரமாவது நீறு" என்று கூறுகிறவன் எவ்வளவு மூடன்! "திருமண் ஏன் தீட்டுகின்றாய்" என்றால் "என் தகப்பனைப் பின்பற்றி" எனச் சாற்றுகின்றவனுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லையென்பதில் என்னே பிழை! கற்றார் மற்றார் ஆகிய பலரும் இப்படியே அறிவை ஆளாமல் எல்லாச் செயளையும் செய்கின்றார்.


இதனால் கற்றவராகக் கருதிக்கொள்ளும் எவரும் என்மீது சினத்துகொள்ள வேண்டுவதில்லை; மற்றவரும் வருந்தவேண்டுவதில்லை. கற்றவரனைவரும் அறிவில்லாதவர் என்று நான் கழறியதாக எவரும் பிறழ உணர்கல் ஆகாது. கற்றவருள்ளும் அறிஞர் உண்டு. மற்றவருள்ளும் அறிஞர் உண்டு. கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டாக்கினால் மிக நல்லது. மற்றவரைக் காட்டினும் கற்றவர் அறிவைக் கையாண்டால் பயன் மிகுதியாக உண்டு. அறிவுக்குக் கல்வி பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை. ஆகலின் எல்லோரும் அதிற் சிறப்பாகக் கற்றோரும் அறிவைக் கையாள வேண்டுமென்பதே எனது பெரு விருப்பம்.