பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். அதுவும் கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் என்று சொல்வாரும் உண்டு--கரூரைத் தலைநகராக்கினான் என்று இயம்புவாரும் உண்டு என்று எழுதியிருக்கும்.

இப்படிப்பட்டவற்றையெல்லாம் நீக்கி வரலாற்று ஆசிரியர்களை உள்ளடக்கி கல்வெட்டு மூலமாகவும்--ஏடுகள் மூலமாகவும் உள்ள கருத்துக்களை ஒன்று திரட்டி வரலாற்றை உருவாக்கி தமிழ் நாட்டாருக்கு வழங்கவேண்டும். வெளிநாட்டுக்காரர்கள் யாராவது கேட்டால் இதோ எங்கள் தமிழக வரலாறு என்று கொடுக்க நம்மால் முடியாது.

இங்கிலாந்து நாட்டில் இதேபோல் ஒரு மாநாடு நடந்தால் இதோ எங்கள் வரலாறு என்று காட்ட அவர்களால் முடியும். ஜெர்மன் நாட்டிலே நடந்தால் அவர்களால் காட்ட முடியும். அப்படிப்பட்ட வரலாற்றை நாமும் காட்ட அப்பாதுரையார் போன்றவர்களை வைத்துச் செயல்பட வேண்டும்.

இன்று இந்தி எதிர்ப்பு என்பது எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. இன்று இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது போலவே அன்றும் தீவிரமாக ஈடுபட்டவர் அலமேலு அம்மையார் ஆவார்கள்.

இந்தி எதிர்ப்பு மறியலைத் தொண்டை மண்டலத்துளுவ வேளாளர் பள்ளிக்கூடத்திற்கு எதிரில், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க மறியலில் ஈடுபட்ட தியாகியென்று அலமேலு அம்மையாரைக் குறிப்பிட்டால் மிகையாகாது.

எவ்வளவு அலைவீசினாலும் மேல் தளத்திலே நிற்கும் கப்பல் தலைவன் போல அவர் கொளுத்தும் வெயிலையும் பாராது எரிக்கும் சூட்டிலே நின்றுகொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவர்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ்த்து தமிழுக்கும்--தமிழ்நாட்டுக்கும் தொண்டாற்ற வேண்டும்.