உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
172 ||

அப்பாத்துரையம் - 6



மரபுகளிடையேயும் அவர்கள் நட்புறவும் செல்வாக்கும் வளர்ந்து வந்தன. இந்நிலையினால் தம் வாணிகம் பங்கம் அடையுமே என்ற அச்சத்தினால், ஆங்கிலேயர் அவர்கள் வளர்ச்சியை எதிர்த்து நிறுத்த அரும்பாடு பட்டு வந்தனர்.

பிரஞ்சுக்காரருக்குத் தாயகத்திலிருந்து போதிய நல்லாதரவு கிடைக்கவில்லை. தமிழரைப்போல, பிரஞ்சுக் காரரும் போட்டி பொறாமை சூழ்ச்சிகளுக்கு இடம் தருபவராயிருந்தனர். இந்நிலை படிப்படியாக, பிரஞ்சு இனத்தின் பெருமை குலைத்து, ஆங்கிலேயர் சூழ்ச்சிகளுக்கு வலுத் தருவதாய் அமைந்தது.

தென்னக அரசியல் வாழ்வில் ஹைதர் புகுந்த சமயம் இதுவே.

தென்னகத்தில் அச்சமயம் வலிமை வாய்ந்த பேரரசர்கள் மராட்டியப் பேஷ்வா மரபினரும் நிஜாமுமே யாவர். அவர்களுக்கு அடுத்தபடியான வலிமை வாய்ந்த அரசன் ஆர்க்காட்டு நவாபு. ஆனால், இப்பேரரசுகளிடையேயும், அரசுகளிடையேயும் பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இந்த அரசியல் வேட்டைக்காரரின் வேட்டைக்கு, மைசூர் நடுநாயகமாக அமைந்திருந்தது. அதற்குத் தொல்லை கொடுத்து, அதன் வளர்ச்சியைத் தடை செய்யும் வேட்டை நாய்களாக, பேடனூர்,சித்தலதுருக்கத் தலைவர்கள் இருபுறமும் இருந்தனர். இவர்கள் தவிர வடக்கே இன்றைய தார்வார் பகுதியில், குத்தி என்ற இடத்தில் மொராரிராவ் என்ற ஒரு மராட்டியத் தலைவனும், கடப்பை, கர்நூல், சாவனூர் ஆகிய பகுதிகளில் தனித்தனி நவாப்புகளும் ஆட்சி செய்தனர்.

உள்நாட்டு வேற்றுமைப் பூசல் களமாகவும், வெளிநாட்டார் வேட்டைக் களமாகவும் விளங்கிய அந்நாளைய தென்னாட்டு அரசியல் வாழ்வில் ஹைதர் புகுந்து, அதை எவ்வாறு தன் வீர வெற்றிக் களமாக மாற்றினார் என்பதை இனிக் காண்போம்.