உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 195

கடல் போன்ற மராட்டியப் படைகள் மைசூர் முழுவதும் பறந்து ஆட்கொண்டன. பெங்களூர் நகரத்தையும் கோபால்ராவ் முற்றுகையிடத் தொடங்கினான். இச்சமயத்துக்கே காத்திருந்த ஹைதர், லத்ப் அலி பேக் என்ற படைத் தலைவனை அனுப்பி, மராட்டியரின் பின்னணியிலிருந்த மைசூர்ச் சென்னைப் பட்டணத்தைக் கைக்கொண்டான். இதனால், பெங்களூர் முற்றுகை கைவிடப்பட வேண்டியதாயிற்று. இதன் பின்னும் நேரடிக் களப்போரில் இறங்க ஹைதர் விரும்பவில்லை. ஏனெனில், மராட்டியப் படை ஹைதர்ப் படையைப் போலப் பதின் மடங்கு பெரிதாக இருந்தது. ஆயினும், பொறுக்கி எடுத்த குதிரைப் படை களை ஆங்காங்கு விரைந்து அனுப்பி, ஹைதர் மராட்டியப் படைத்தலைவனுக்குப் பெருந்தொல்லை விளைவித்தான்.இரண்டாண்டு பெரும்படையுடன் நாடெங்கும் சுற்றியும், கோபால்ராவினால் எதுவும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும் என்றாயிற்று அவனுக்கு.

இச்சமயம் பார்த்துக் காலம் ஹைதருக்கு ஒரு பேருதவி செய்தது. மராட்டியப் பேரரசும் தில்லியில் பெயரளவில் மேலாட்சி நடத்திய முகலாயப் பேரரசும் திடுமென 1761-இல் ஆப்கானிய வீரன் அகமதுஷா அப்துராணியின் தாக்குதலால் மூன்றாம் பானிபட்டுப் போரில் வீழ்ச்சியடைந்தன.கோபால்ராவ் திருப்பி அழைக்கப்பட்டான்.

போகும் அவசரத்தில், முப்பத்திரண்டு இலட்சம் வெள்ளிக்கீடாக வென்ற பகுதியையும் பிணையமாகக் கோரிய பகுதியையும் விட்டு விட்டு, கோபால்ராவ் பூனாவுக்கு மீண்டான். முப்பத்திரண்டு இலட்சத்தில் கூடப் பாதியே உடனடியாகக் கொடுக்கப்பட்டது. மறுபாதிக்கு ஹைதர் உறுதிமொழி தவிர வேறு பிணையம் கோரப்படவில்லை.

மைசூரைச் சூழ்ந்த காரிருள் இங்ஙனம் ஹைதர் விடா முயற்சிகளாலும் அறிவார்ந்த திட்டங்களாலும் விலகிற்று. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த மன்னன் ஹைதர் தலைமைப் பதவியை நிலவரமாக்கி அவன் மீது மேலும் விருதுகளைச் சொரிந்தான். ஃவதஃஹைதர் பகதூர் என்ற தனிச் சிறப்புப் பட்டம் இதுபோது அவனுக்கு அளிக்கப்பட்டது.