உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 229

ஆகவே, அதன் செல்வ வளம் பெரிதாயிருந்தது. வெறிகொண்ட மராட்டியர் அச்செல்வத்தை நாடி ஒருவர் மீதொருவர் விழுந்தடித்துச் சென்று அதைக் கொள்ளையிட்டனர். கிடைத்த உணவுப் பண்டங்களை உண்டு குடித்து ஆடினர். தேர்களையும் விதானங்களையும் கொளுத்தினர். இச்செயல் ஹைதருக்குத் தலைநகரின் காவல் ஏற்பாடுகளுக்குரிய போதிய கால வாய்ப்புத் தந்தது. தவிர, வைணவர் கோயிலைக் கொளுத்திய இந்துமதக் கொடியோர்களை எதிர்க்க மக்கள் திரள் திரளாக முசல்மான் வேந்தன் கொடிக்கீழ் திரண்டனர். ஆகவே, தலைநகரை திரியம்பகராவினால் என்றும் முற்றுகையிட்டுப் பிடிக்க முடியாமலே போய்விட்டது.

நாட்டின் பெரும்பகுதியைக் கைவசப்படுத்திக் கொண்டு மராட்டியர் மாதக் கணக்காகச் சீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டனர். இறுதியில் 1772-ல் 15 இலட்சம் வெள்ளி உடனடியாகப் பெற்று, இன்னொரு 15 இலட்சத்துக்குச் சில மாவட்டங்களை ஈடாக ஏற்றுக் கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

சிறையிலிருந்த பதவியிழந்த அரசச் சிறுவன் நஞ்சிராஜன் மராட்டியருடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிந்ததால், அவன் கொலைத் தண்டனைக்கு ஆளானான். அவன் தம்பி சாமராஜ் அவனிடத்தில் மன்னுரிமையாளனானான்.

1772-இல் பேஷ்வா மாதவராவ் மாண்டான். அவனுக்கடுத்த தம்பியாகிய நாராயணராவ் பேஷ்வாவானான். அவனைக் கொன்றொழித்து அவன் சிற்றப்பன் ரகோபா பேஷ்வாவாக முயன்றான். ஆனால், மராட்டியரில் பெரும்பாலார் இறந்த நாராயணராவின் சிறுவன் மாதுராவையே பேஷ்வாவாக ஏற்க விரும்பினர். அரசுரிமைப் போர் ஒன்று தொடங்கிற்று. இத்தறுவாயைப் பயன்படுத்திக்கொண்டு, மராட்டியருக்குப் பிணையாகக் கொடுத்த பகுதிகளை மீட்கும்படி ஹைதர் திப்புவை அனுப்பினான். அத்துடன் தானே சென்று மராட்டியப் போர்க் காலத்தில் கிளர்ந்தெழ முயன்ற மலபார்த் தலைவர்களைக் கீழடக்கினான்.