உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
240 ||

அப்பாத்துரையம் - 6



திட்டவட்டமாக வகுக்கப்பட்டிருந்தன. சென்னை அரசியலார் நிலை அன்று இவ்வெல்லா வகையிலும் ஹைதருக்குப் பலவகையில் பிற்பட்டதாகவே இருந்தது. உண்மையில் ஹைதர் படைகள் சென்னைக்கு ஒன்பது கல் அருகில் பறங்கிமலை வருவதுவரை அவன் திட்டம், நிஜாம், மராட்டிய ஒப்பந்தம் ஆகிய எதையும் ஆங்கிலேயர் அறிந்துகொள்ளவில்லை. இந்த ஒரு வகையில் ஆர்க்காட்டு நவாப் முகமதலி முன்கூட்டி எச்சரிக்கை தந்தும் போர் முறைகள் அறியாத ஆங்கில அரசியலார் செவியில் அது ஏறவில்லை.

ஆங்கிலேயர்கள் விழித்ததும், ஆணைகள் எங்கும் பறந்தன. திருச்சிராப்பள்ளியிலிருந்து ஒரு படை ஹைதர் படைக்குப் பின்னின்று உதவி வருவதைத் தடுக்கும்படி ஆணையிடப்பட்டது. பாண்டிச்சேரியருகிலிருந்த ஒரு படை சென்னை வரும்படி கட்டளையிடப்பட்டது.குண்டூரிலுள்ள ஒரு படை தெற்கு நோக்கி வரும்படி கோரப்பட்டது. தவிர உடையார்பாளையம், செஞ்சி, கருநாடகக் கரை, வந்தவாசி ஆகிய முகமதலியின் கோட்டைகளுக்கு ஆங்கிலப் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. ஆனால், குண்டூர் படை ஒன்று தவிர எதுவும் முன்னேற முடியவில்லை. அப்படையும் வந்தவாசியில் வந்து தங்கிற்று. அதன் தலைமையை இங்கே ஏற்ற கர்னல் பேய்லி கூத்தலாற்றை ஆகஸ்டு 25-இல் அடைந்தும், உடனே கடக்காமல் காலம் தாழ்த்தியதால் மாதக்கணக்கில் தடைபட வேண்டி வந்தது. ஏனெனில், அன்றிரவே ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.இறுதியில் ஆறு கடந்தபின், பேரம்பாக்கம் செல்லும் வழியில் ஹைதர் படைகள் அப்படைகளை மடக்கின. 700 வெள்ளையர்கள், 5,000 ஆங்கிலேயரின் நாட்டுப் படைவீரர்கள் அப்போரில் கொல்லப்பட்டனர். 2,000 வெள்ளையர்கள் சிறைப்பட்டனர். சிறைப்பட்டவர்களில் புகழ்மிக்க வீரரான பேயர்டு ஒருவர். இவர் மூன்றாண்டுகளுக்கு மேல் சீரங்கப்பட்டணம் சிறையில் அவதியுற்றுப் பின் விடுதலை பெற்றுத் தாய்நாட்டுக்கே அனுப்பப்பட்டார்.

சென்னையில் ஆங்கிலேயர் நிலை மோசமாவதை அறிந்து, வங்காளத்திலிருந்து பழைய சென்னை ஆட்சியாளர் வாரன் ஹேஸ்டிங்ஸ், ஸர்அயர்கூட் என்ற அனுபவமிக்க