உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 243

உடலடக்கம் செய்து ஆட்சி ஒழுங்கமைந்த பின்னரே, ஹைதரின் முடிவு வெளியே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மக்கள் குடியிலே, போர் வீரர் மரபிலே பிறந்த ஹைதர், மக்கள் அழைப்பாலும் மாநிலத்தின் அவாவாலும் மன்னனானான். ஆகியும், மக்கட் பண்போ, போர்வீரப் பண்போ மாறாமல் வாழ்ந்து, போர் வீரனாகப் போர்க் களத்திலேயே மடிந்தான். அவனைப்போல நேரடித் தனியாட்சி செய்த எந்த மன்னரும் தலைநகரிலில்லாமல் பாசறைகளிலிருந்து அவன் ஆண்டதுபோல ஆட்சி செய்ததில்லை. அவன் மறைந்த பின்னும் அவன் ஆணையால் அவனில்லாமலே திப்பு வந்து ஆட்சியேற்கும் வரை எல்லாம் அவனிருந்து நடப்பது போல் நடந்தன. இது ஒன்றே அவன் ஆட்சித் திறமைக்கு ஓர் உயரிய சான்று ஆகும்.

கன்னடத்தின் போர்வாள்' கன்னடத்தைத் தென்னாட்டின் தலைநாயகமாக்கிவிட்டு உறையில் புகுந்தது.

தென்னகம் அன்று தன் எதிரியை உணரவில்லை; எதிரியின் ஆற்றலை உணரவில்லை. ஆனால், ஹைதரின் வாழ்க்கைப் பணியால் தென்னகம் தன்னை உணர்ந்தது.

ஹைதரின் மைந்தன் திப்பு தவிசேறி இவ்வுணர்வைப் பயன்படுத்தி வெற்றி பெற முயன்றான். ஹைதர் விட்ட டத்திலிருந்து அவன் கன்னடத்தின் புகழை நெடுந்தொலை வளர்த்தான். ஆனால், ஹைதர் காலத்திய தென்னகத்தின் உட்பகை நோய்கள் தென்னகத்தின் உரத்தை அரித்து விட்டன. தென்னகம் தற்காலிகமாகச் சரிந்தது.

எனினும்,ஹைதர் நட்ட விடுதலைப்பாறை, திப்பு அதன்மீது அமைத்த விடுதலைப் பீடம்,நீடித்து நின்று பயன் தந்தன இன்னும் பயன் தரும்!

ஹைதர் குரலும் திப்புவின் குரலும் அப்பயன் நோக்கி இன்னும் நம்மை அழைக்கின்றன.

-